கலிங்கனின் காவியம் 50.1

அத்தியாயம் 50

காயத்துக்குக் கட்டுப் போட்டு முடித்து, பயன்படுத்திய மருத்துவ உபகரணங்களை ஒழுங்குபடுத்திவிட்டு, வருணா புறப்படத் தயாராக, “நான் வீட்டுக்குப் போகோணும்.” என்று இடையிட்டது அவன் குரல்.

வருணா ஒரு கணம் நின்றாள். வீடு என்கிற சொல்லே சற்று முன்னர் போக்கிடமற்றவள் போன்று தான் உணர்ந்த நிலையை மீண்டும் நினைவூட்டிச் சுருக்கென்று தைத்தது.

அதைத் தனக்குள்ளேயே விழுங்கிக்கொண்டு, “தாராளமா போகலாம். ஆனா குறைஞ்சது ஒரு கிழமைக்காவது கையை அசைக்காதீங்க. ரெண்டு மூண்டு நாளைக்குக் காய்ச்சல் இருக்கும். ரெஸ்ட் எடுங்க, நித்திரை கொள்ளுங்க. எழுதித் தந்திருக்கிற மருந்துகளை எடுக்க மறந்திறாதீங்க.” என்று வைத்தியருக்குரிய நிதானத்துடன் அறிவுறுத்திவிட்டு வாசலை நோக்கி நடந்தாள்.

“உனக்கும் டியூட்டி முடிஞ்சுதுதானே. நீயும் வா!” என்று மீண்டும் நிறுத்தினான் அவன்.

“எங்க?” என்றாள் அவள் நின்று திரும்பி நிதானமாக.

அவன் பதிலிறுக்காமல் அவளையே பார்க்க, “உங்கட வீட்டுக்கா?” என்றாள் குரலில் கசப்புடன்.

“இந்த ஹொஸ்ப்பிட்டல் ரூம்ல இருந்தே ஆளை விட்டு அடிச்சு விரட்டின ஆள் நீங்க. அது உங்கட வீடு. அங்க நான் வர, எந்த நேரத்தில எப்பிடி வெளில அனுப்புவீங்க எண்டு பயந்துகொண்டு இருக்க என்னால ஏலாது. நான் எங்கட வீட்டுக்கே போறன்.” அதைச் சொல்லும்போதே குரல் கரகரத்து, நாசி சிவந்து, கண்களில் நீர் திரண்டது.

இப்படி நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல் சொல்வாள் என்று கலிங்கன் எதிர்பார்க்கவில்லை. முகம் இறுக அவளையே பார்த்தான். அவளும் அவன் பார்வையைத் தவிர்க்கவில்லை. அவன் தாடை இறுகிற்று. காயமடைந்த கையைப் பொருட்படுத்தாமல், அங்கே கழற்றி வைத்திருந்த சேர்ட்டை எடுத்து அணிய ஆரம்பித்தான்.

வருணா பயந்துபோனாள். சும்மாவே அந்தத் தோள்பட்டை முழுவதும் வீங்கிச் சிவந்துபோயிருக்கிறது. அது போதாது என்று என்னவோ அதில் சிறு காயம் கூட இல்லை என்பது போன்று அவன் அசைக்கவும் அவளுக்கு நெஞ்செல்லாம் ஆடிப்போயிற்று.

“விசரா உங்களுக்கு?” என்று ஓடி வந்து அவனைத் தடுக்க முயன்றாள்.

“நீ விடு!” என்று உறுமினான் அவன்.

கண்ணில் திரண்டுவிட்ட நீருடன் அவனைப் பார்த்தவள் அடுத்த நொடியே அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டு மார்பில் முகம் புதைத்தாள்.

அப்படியே நின்றுவிட்டான் கலிங்கன். அவனுக்கு அவ்வளவு ஆத்திரம். அவன் பேசியதும் நடந்துகொண்ட முறையும் தவறு என்று அவனுக்கே உறைக்காமல் இல்லை. அதற்கென்று இப்படியெல்லாம் பேசுவாளா என்ன? இப்போது அவள் கண்ணீரும் சேர்ந்து உலுக்க, “அது என்ர வீடா உனக்கு?” என்று அடக்கப்பட்ட குரலில் சீறினான் அவன்.

“அப்ப நீ ஆரு? நீ எனக்குச் சொந்தம் இல்லையா?”

சொந்தம் என்று நினைத்திருந்தால் அப்படி நடந்திருப்பானா? உள்ளம் குமுறினாலும் அவனுக்குப் பதில் சொல்லாமல் அவன் சேர்ட்டை தானே அவனுக்கு அணிவித்து, பட்டன்களை பூட்டினாள் அவள்.

அவளையே பார்த்து நின்றவனின் சினம் அடங்கவேயில்லை. கையோடு அவளையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.

ஆதிதான் காரை எடுத்தான். அவனைக் கண்டதும் அவள் முகம் இன்னும் கன்றிப்போயிற்று. பின்னிருக்கையில் கலிங்கனை விட்டுத் தள்ளிக் கதவோரமாக அமர்ந்துகொண்டவள், வீடு வரும் வரைக்கும் உட்புறம் பார்வையைத் திருப்பவில்லை.

அந்தக் கோபமும் சேர்ந்துகொள்ள வீட்டுக்குள் வந்த பிறகும் அவன் விடுவிடுவென்று சென்று தன் அறைக்குள் புகுந்துகொண்டான். வருணாவுக்குக் குமுறிக்கொண்டு வந்தது. கொதிக்கவேண்டியவள் அவள். இங்கே அத்தனையும் தலைகீழாக நடந்துகொண்டிருந்தது.

ஆத்திரத்தில் போய் அறைக்குள் அடைந்துகொண்டாலும் மனம் அடங்கவேயில்லை. தன்னை ஒரு துரோகியைப் போலப் பார்த்த அந்தப் பார்வையும், இரண்டு விரல்களைக் காட்டி வெளியே போகச் சொன்ன அந்தச் சைகையும் மீண்டும் மீண்டும் நினைவில் வந்தன. துரோகி என்று வேறு சொன்னானே. சொல்லிவிட்டு இப்போது அவன் கோபத்தைக் காட்டுவானா?

ஒரு கட்டத்துக்கு மேல் இந்த மனக்கொந்தளிப்புகளை அவளால் சமாளிக்க முடியவில்லை. அப்படி அவள் என்ன தவறு செய்தாள் என்று தெரிந்தேயாக வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவன் அறைக்கு நடந்தாள்.

அங்கே அவன் அறைக்குள் நிலவிய சூழல் ஒருவித அச்சத்தை உண்டாக்கிற்று. இதுவரை அவனை அவள் இப்படிப் பார்த்ததே இல்லை. மேசையில் ஒரு மதுப் போத்தலும், அருந்தி முடித்த கிளாசும் இருக்க, அவன் தன் வெற்று முதுகைக் காட்டியபடி அமர்ந்திருந்தான். அவன் விரல்களுக்கிடையே சிகரெட்.

பின்னால் அவள் நிற்பதை அவன் உணராமல் இருக்கப்போவதில்லை. ஆனாலும், அவளைத் திரும்பிப் பார்க்கவோ, உள்ளே வா என்று அழைக்கவோ இல்லை.

மெல்ல உள்ளே நுழைந்து, பின்னால் கதவைச் சாத்தினாள். அப்படியே நடந்து வந்து அவன் எதிரே நின்றாள்.

அப்போதும் கலிங்கன் நிமிர்ந்து பார்க்கவில்லை. ஆனால், அவனது புறக்கணிப்பைக் காட்டிலும் அவளை வேதனையுறச் செய்தது, அவனது தோள் பட்டையில் சுற்றப்பட்டிருந்த அந்தப் பெரிய கட்டுத்தான்.

அவள்தான் சற்று முன்னர் போட்டுவிட்டாள். ஆனாலும் அப்போது ஆத்திரம் கண்ணை மறைத்திருந்தது. இப்போது இதழ்கள் அழுகையில் துடிக்க, கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. அந்தளவில் காயத்தைச் சுற்றியிருந்த மொத்த இடமும் வீங்கிச் சிவந்திருந்தது.

அந்த உடம்பு இன்னும் எத்தனை காயங்களைத் தாங்கப்போகிறது?

பேச வந்தவை மறக்க முழங்காலில் அமர்ந்து, நடுங்கும் விரல்களால் அந்த இடத்தைத் தடவிப் பார்த்தாள். நெஞ்செல்லாம் புண்ணாக வலித்தது. அவனுக்கு எப்படி வலிக்கும் என்று யோசிக்கவே முடியவில்லை.

எத்தனையோ காயங்களைப் பரிசோதித்துக் கட்டுப்போட்டவள்தான் அவள். ஏன், இதே அவன் இரண்டு கத்திக்குத்துகளை வாங்கிக்கொண்டு வந்து உயிருக்குப் போராடியபோது, எந்தவித மனத் தடுமாற்றமும் இல்லாமல் வைத்தியம் பார்த்தவள் அவள்.

அதோடு ஒப்பிடுகையில் இதெல்லாம் ஒன்றுமே இல்லை. ஆனாலும் கூட அவன் வலியில் துடிப்பானே என்று இவள் துடித்தாள். நடுங்கும் விரல்களால் வருடியவள், என்ன தவறு செய்தோம் என்று அறியாதபோதும் மன்னிப்புக் கேட்கிறவள் போன்று, தன் தலையை அவன் காயம் பட்ட கையில் லேசாக முட்டி குழுங்கி அழுதாள்.

அவன் கோபத்தை, புறக்கணிப்பை, இத்தனை அழுதும் நீங்காத அவன் ஒதுக்கத்தை, ஏன் அழுகிறாய் என்று கேட்காததை, இவ்வளவு நேரமாகியும் அவளை வாரிச் சுருட்டிக் கொள்ளாததை எல்லாம் எண்ணி அவள் அழுகை இன்னும் இன்னும் பெருகிற்று

அவனோடு சண்டை பிடிக்க, அவனிடம் கோபப்பட்டுக் கத்த, அவனிடம் நியாயம் கேட்க வந்தவள், கன்னத்தில் வழிந்த கண்ணீரும், கண்ணீரில் நனைந்த விழிகளும், துடிக்கும் இதழ்களுமாகப் பரிதவிப்புடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

சிவந்து பளபளத்த விழிகள், அழுந்தி மூடியிருந்த உதடுகள், விடைத்த நாசி, இறுகிக் கிடந்த தாடை அத்தனையும் அவன் கோபத்தைச் சொன்னாலும் அவனும் இமைக்காது அவளையேதான் பார்த்திருந்தான்.

“நான்… நான் என்ன பிழை செய்தனான்? எனக்குத் தெரியேல்லயே!” என்றாள் தவிப்பாய்.

எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் அவளையே ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தவன், தன் இறுக்கமான இதழ்களைப் பிரித்து ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னான்.

“வரதன்!”

error: Alert: Content selection is disabled!!