“அங்கிள், அவருக்கு என்ன?” என்று கேட்க வந்தவள் விக்கித்துப்போனாள். அவர்தான் அவளோடு அன்று கைப்பேசியில் பேசியவர். அப்படிப் பேசினாலும்தான் என்ன என்று ஓடும்போதுதான், அன்று அவன் வவுனியாவுக்கு லோட் கொண்டுபோகப் போகிறான் என்று சொன்ன நினைவு வந்தது. அதனால்தான் இத்தனையுமா? அவள் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தே போயின. நம்பமாட்டாமல் அவனையே பார்த்தாள்.
அவளுக்குப் புரிந்துவிட்டது என்று உணர்ந்து அவன் உதடுகள் அலட்சியமாக வளைந்தன.
சுருக்கென்று பாய்ந்தது அந்தச் சிரிப்பு. என்ன நினைக்கிறான்? வேண்டுமென்றே அவருக்கு அவள் தகவல் சொன்னதாகவா? அதனால்தான் துரோகி என்றானா?
“இல்ல இல்ல!” என்று முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.
“இப்ப ஏன் அழுறாய்? எனக்கு இதெல்லாம் பழக்கம்தான்.” கசந்த குரலில் சொன்னான் அவன்.
“அப்பிடிச் சொல்லாதீங்க ப்ளீஸ்!” அவள் தளிர் விரல்கள் அவசரமாக அவனைப் பேச விடாமல் அவன் உதடுகளை மூடின.
அதன் பிறகு அவன் பேசவில்லை. அதற்கு மாறாகக் கண்கள் பளபளக்க அவள் விரல்கள் மீது உதடுகளைக் குவித்து மீட்டான்.
அவள் பிரமித்துப் போனாள். கண்ணீர் நிறைந்திருந்த அவள் விழிகள் விரிந்துபோயின. சற்று முன் அவன் இருந்த மனநிலை என்ன? இப்போது மீசைக்குள் சிரிப்பை ஒளித்தபடி அவளையே பார்க்கும் அழகு என்ன?
அவள் கரம் பற்றி எழுப்பி, மடியில் அமர்த்திக்கொண்டான். அவளுக்குக் கண்களில் கண்ணீர் இன்னும் பெருகிற்று. “நான் உங்களுக்கு துரோகம் செய்திருப்பன் எண்டு நினைக்கிறீங்களா கலிங்கா?”
நியாயமே இல்லாமல் தண்டிக்கப்பட்ட குழந்தையொன்றின் ஆதங்கத்தோடு அவள் கேட்டபோது, அவன் கீழுதடு பற்களுக்குள் சிக்கிக் கொண்டது. அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் அவள் முகத்தையே பார்த்தான்.
அவளுக்கோ இன்னுமே அவன் விரல் இடுக்கில் இருந்த சிகரெட்டைப் பார்த்ததும் கோபம் வந்தது.
“எத்தினை தரம் சொன்னாலும் இந்தக் கண்ராவியை எல்லாம் விடமாட்டீங்க என்ன? இதுல குடி வேற. இன்னும் என்ன பழக்கமெல்லாம் இருக்கு உங்களுக்கு?”
முதல் வேலையாக எழுந்து அந்த மேசையில் இருந்த அத்தனையையும் கொண்டுபோய் எறிந்தாள். அவன் விரல்களுக்குள் இருந்த சிகரெட்டையும் விடவில்லை.
அறையின் ஜன்னல்களை விரியத் திறந்து வைத்துவிட்டு வந்து மீண்டும் பழையபடியே அவனது மடியிலேயே ஏறி அமர்ந்துகொண்டாள்.
திறந்துவிட்ட ஜன்னல்கள் வழி நுழைந்த காற்று, அவள் கூந்தல் கலைத்துப்போனது. அதை ஒதுக்கி விட்டுவிட்டு அவள் நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தவன் அவள் முகத்தோடு தன் முகத்தை ஒட்டிக்கொண்டான்.
அவர்களுக்குள் இத்தனை நடந்தும் அவள் காட்டும் இந்த அன்பு, அதிகாரம் கலந்த அந்த அக்கறை, அவள் நெருக்கம் அனைத்தும் அன்றைய நாள் முழுக்க கொதித்துக் கொந்தளித்துக்கொண்டிருந்த அவன் உள்ளத்திற்குப் பெரும் மருந்தாகிப்போயிற்று. அவளை அணைத்துக்கொண்டு கழுத்து வழியில் முகம் புதைத்தன.
அவன் கை வலித்துவிடாதபடிக்கு அவன் அணைப்பில் அடங்கி, கேசத்தினுள் விரல்களை நுழைத்துக் கோதிக் கொடுத்தாலும் அவள் உள்ளத்தில் அமைதி இல்லை.
“எனக்கு இது கொஞ்சம் கூடப் பழக்கம் இல்லாத உலகம் கலிங்கா. அவரோட கதைச்சதை மறைக்க நினைக்கேல்ல. எனக்கு அவர் நல்லவர். நீங்க கெட்டவர் எண்டு சொல்லுறீங்க. என்னால அத நம்பேலாம இருக்கு? அப்பிடி இருக்க, அவரைப் பற்றித் திரும்பக் கதைச்சா எங்களுக்க சண்டை வருமோ எண்டுதான் சொல்லாம விட்டனான்.
அதே மாதிரி நீங்க சரியில்ல, பிழையான தொழில் செய்றீங்க எண்டு சொன்னார். எனக்கு அவர் அப்பிடி உங்களைப் பிழையா சொன்னதை ஏற்கேலாம இருந்தது. அந்த அவசரத்தில, நீங்க அப்பிடி இல்லை எண்டு சொல்லுற வேகத்திலதான் நீங்க வவுனியாக்குப் போறதைப் பற்றிச் சொன்னனான். ஆனா அதுக்காக நீங்க செய்தது…” என்றவள், அவன் செய்தது கொஞ்சமில்லை என்பதுபோல் தலையைக் குறுக்காக அசைத்தாள்.
“ஏன் கலிங்கா என்னைச் சந்தேகப்பட்டீங்க? ஏன் அப்பிடி நடந்தீங்க? ஒரு வார்த்த என்னட்டக் கேட்டிருக்கலாமே. நான் சொல்லியிருப்பேனே.”
அவன் உதடுகள் அழுந்தின. அவள் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் அவள் நெற்றியில் இதழ் பதித்தான். அவள் முகத்தைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டான். அவள் விலக முயலவில்லை. மாறாக, அவன் மார்பில் இன்னும் நெருக்கமாகப் புதைந்துகொண்டாள்.
அவன் விரல்கள் அவள் முதுகை மெதுவாக வருடின. இடையிடையே அவள் தலையை வருடி, நெற்றியில் முத்தமிட்டான். அவள் குமுறல் மெல்லத் தணியும் வரை அவன் அணைப்பு தளரவே இல்லை.
சற்று நேரத்தில் அவள் அழுகை தணிந்ததும், முகத்தைப் பற்றித் தன்னை நோக்கி நிமிர்த்தினான். அழுது சிவந்திருந்த அவள் விழிகளையே ஆழமாகப் பார்த்து, “என்னில கை வைக்கிறது ஈஸி எண்டு நினைக்கிறியா?” என்றான்.
அவள் தலை இல்லை என்று ஆடியது.
“எனக்கு அந்தக் கத்தி குத்து எப்பிடி விழுந்தது எண்டு தெரியுமா உனக்கு?”
பதில் சொல்லாமல் அவனையே பார்த்தாள் அவள்.
“நம்பிக்கைத் துரோகத்தின்ர உச்சம்.”
அவள் விழிகள் சட்டென்று விரிந்தன. அவன் முகத்தைப் பதற்றத்துடன் பார்த்தாள்.
“சொல்லோணும் வரு. எல்லாத்தையும் ஒரு நாள் உனக்குச் சொல்லோணும். அதுக்கு முதல் என்ர நெஞ்சில ஏரியிற ஆத்திரமும் ஆவேசமும் அடங்கோணும்.” எனும்போதே அவன் கண்கள் ஆவேசமாய் மாறின.
வருணா பயந்துபோனாள். “கலிங்கா!” என்றாள் நடுக்கத்துடன்.
சட்டென்று அவன் நிதானித்தான். அவளையே பார்த்தான். அவள் தன்னை அச்சத்துடன் நோக்குவதைக் கண்டதும் அவன் ஆவேசங்கள் மொத்தமாய் அடங்கின. குரலில் இருந்த இறுக்கம் மெல்லத் தளர்ந்தது.
“ஆழமா அடி வாங்கினதாலயோ என்னவோ அவசரப்பட்டுட்டன். உன்னட்ட அப்பிடி கதைச்சிருக்கக் கூடாது.”
அவள் விழிகள் இன்னும் ஈரமாயின. ஆனால் அவற்றில் இப்போது கோபமோ ஆதங்கமோ இல்லை. “போதும் கலிங்கா.”
என்று அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
“ம்ஹூம் எனக்குப் போதாது!” என்றுவிட்டு அவள் இதழ்களை முற்றுகையிடப் போனவன் நிதானித்தான். இடத்தை மாற்றி, அவள் கன்னத்தில் புதைந்துகொண்டு, “குடிச்சிருக்கிறன்.” என்று முணுமுணுத்தான்.
அவள் உதட்டில் மெல்லிய முறுவல். அவன் முகத்தை இரு கைகளாலும் ஏந்தினாள். நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்துவிட்டு, கன்னத்தில் இதழ் பதித்தாள். அங்கிருந்து அவன் உதடுகளை நெருங்கியவள், ஒரு கணம் அவன் விழிகளைப் பார்த்தாள். அவன் பார்வையில் தெரிந்த தவிப்பைப் புரிந்துகொண்டவள், தயக்கமின்றி இதழ் பதித்தாள்.
அவ்வளவுதான்.
அடுத்த கணம் அவள் இதழ்களைத் தன்வசமாக்கிக்கொண்டான் கலிங்கன்.
அவளிடம் சொல்ல முடியாமல் தேங்கியிருந்த அத்தனை உணர்வுகளையும் அவளுக்குள் இறக்கிவைக்க முயல்வதுபோன்ற ஆழமான முத்தம். அவன் காயம்பட்ட தோளை அசைக்காமல் அவளை அணைத்திருந்தான். அவளும் அவன் கழுத்தைச் சுற்றிக் கைகளைக் கோர்த்து, அவன் நெருக்கத்துக்குள் தன்னை முழுமையாக ஒப்படைத்தாள்.
நீண்ட நேரத்துக்குப் பிறகே அவள் இதழ்களிலிருந்து விலகினான். நெற்றியோடு நெற்றி சேர்த்து, அவள் நிதானப்படும் வரை தன் அணைப்பிலேயே வைத்திருந்தவனின் உள்ளம், அன்றைய நாள் முழுக்கச் சுமந்திருந்த ஆத்திரம், ஆவேசம், கொந்தளிப்பு அத்தனையும் அடங்கி அமைதியாகியிருந்தது.

