அத்தியாயம் 51
வரதனின் ஆத்திரம் எல்லை கடந்திருந்தது.
அறைக்குள் நுழைந்ததிலிருந்து அவனால் ஓரிடத்தில் நிற்க முடியவில்லை. மேசையின் மீதிருந்த கோப்புகளை விசிறி அடித்தான். அங்கிருந்த கண்ணாடிப் பொருட்களை ஓங்கி அடித்து நொறுக்கினான்.
அவன் முகம் இறுகியிருந்தது. கண்கள் இரத்தச் சிவப்பில் கனன்றன. கழுத்து நரம்புகள் புடைத்துத் தெரிந்தன.
என்னதான் செய்வதென்று அவனுக்கே புரியவில்லை.
உயிர் நண்பன் என்கிறு நம்பிய சூர்யாவை கலிங்கராயனிடமிருந்து பிரித்தான். அவன் எதிர்காலம் என்று நினைத்த பெண்ணை அவனிடமிருந்து பறித்தான். அவன் தொழிலை அழிக்க முயன்றான். இறுதியில் அவனையே கொன்றுவிடத் துணிந்தான். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வழியில் முயற்சித்துப் பார்த்தான். ஆனால் ஒன்றில்கூட முழுமையான வெற்றியைப் பெற முடியவில்லை.
வெட்ட வெட்டத் தழைக்கும் மரம்போல, ஒவ்வொரு தாக்குதலுக்குப் பிறகும் இன்னும் வீரியத்துடன் எழுந்து நின்று கர்ஜித்துக்கொண்டிருந்தான் கலிங்கராயன்.
அவனை வீழ்த்திவிட்டதாக நினைக்கும் ஒவ்வொரு கணத்திலும், தன்னுடைய முகத்தில் கரியைப் பூசிவிட்டு மீண்டும் நிமிர்ந்து நிற்பவனைப் பார்க்கப் பார்க்க வரதனுக்குள் கொலைவெறி பெருகியது.
மேசையை ஓங்கி அறைந்தான். அதன் மீதிருந்த பொருட்கள் தரையில் விழுந்து சிதறின.
எதிரில் தலைகுனிந்து நின்ற அவன் ஆட்களைப் பார்த்ததும் அவன் கோபம் இன்னும் பலமடங்கு அதிகரித்தது. ஒருவனைச் சட்டையைப் பிடித்து இழுத்து முன்னால் கொண்டுவந்து முகத்தில் ஓங்கி அறைந்தான். நிலைகுலைந்து கீழே விழுந்தவனைத் தொடர்ந்து காலால் உதைத்தான். மற்றவர்கள் அவனைத் தடுக்க முயன்றபோது, அவர்களையும் ஆவேசத்துடன் தள்ளிவிட்டான்.
“நீங்களெல்லாம் ஆம்பிளைகளாடா? ஒருத்தனை ஓடவிட துப்பில்லை. நெஞ்சை நிமித்திக்கொண்டு வந்து நிக்கிறீங்க!”
அருகிலிருந்த நாற்காலியைத் தூக்கி வீசிவிட்டு மூச்சிரைக்க நின்றான். அவன் கைகள் ஆத்திரத்தில் நடுங்கின. இப்போது இவன் லொறியும் அவனிடம்.
*****
அடுத்த நாள் காலை கலிங்கராயனுக்கு இன்னும் அதிகமாகக் காய்ச்சல் காய்ந்தது. கண்களைத் திறக்கவே முடியாமல் கிடந்தான். ஒரு வைத்தியராக இப்படித்தான் இருக்கும் என்று புரிந்தாலும் மிகுந்த வருத்தமாகிப் போயிற்று அவளுக்கு.
ஏன் இப்படித் தன் உடலை வருத்தி, காயப்படுத்தி, நோகடித்துக்கொண்டேயிருக்கிறான் என்று கவலைப்பட்டாள்.
சூப் தயாரித்து எடுத்து வந்து, தானே அருகில் அமர்ந்து பருகச் செய்தாள். அவனுக்கான மருந்துகளைக் கவனித்துக் கொடுத்தாள். தன்னைச் சிறு குழந்தை போன்று கவனித்துக்கொள்ளும் அவளிலேயே அவன் பார்வை தங்கியிருந்தது.
“இப்பிடிப் பாக்காதீங்க கலிங்கா. செய்றதை எல்லாம் செய்றது. பிறகு பச்சைப் பிள்ளை மாதிரிப் பாக்கிறது!” ஆற்றாமையுடன் பொங்கினாள் அவள். அவன் காய்ந்த உதடுகளில் மெல்லிய சிரிப்பு.
அவள் வைத்தியசாலைக்குப் போயே ஆகவேண்டும். அங்கே மிக நெருக்கடியான நிலை. அதே நேரத்தில் இந்த நிலையில் அவனைத் தனியே விட்டுச் செல்ல மனமும் இல்லை. அவனருகில் அமர்ந்து கேசத்தைக் கோதிவிட்டுக் கன்னத்தை மென்மையாக வருடினாள்.
அவள் கரத்தைப் பற்றி, உள்ளங்கையில் முத்தமிட்டு, அதைத் தன் கன்னத்தோடு அழுத்திக்கொண்டான் கலிங்கன்.
வருணாவும் எதுவும் பேசவில்லை. அவன் அருகிலேயே அமர்ந்திருந்தாள். அவன் உறங்கி, பிடி மெல்லத் தளர்ந்து, சீரான மூச்சுடன் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டதை உறுதிப்படுத்திய பின்னரே மெதுவாகத் தன் கரத்தை விடுவித்துக்கொண்டாள்.
வைத்தியசாலைக்குப் புறப்பட்டு அவள் வெளியே வந்தபோது, வழக்கம் போன்று காரின் பின்பக்கக் கதவைத் திறந்துவிடுவதற்குத் தயாராக அதனருகில் நின்றிருந்தான் ஆதி.
அவனைக் கண்டதும் முதல் நாள் அவன் நடந்துகொண்ட விதம் வருணாவின் நினைவில் வந்து நின்றது. “இந்த மரியாதையெல்லாம் உன்ர அண்ணா என்னை நல்லா நடத்துற வரைதான் என்ன? அவர் ஒண்டு சொன்னா அதுக்கு மேலால நீ நடப்பதை. பிறகு என்னத்துக்கு பெரிய நல்லவன் மாதிரி இதையெல்லாம் செய்றாய்?”
அவள் குரலில் இருந்த கடுமை ஆதியை ஒரு கணம் தடுமாறச் செய்தது.
இலேசாகத் தயங்கினாலும், “அண்ணா நம்பின ஆக்கள் அவருக்குச் செய்தது நிறைய அண்ணி. இப்ப கடைசியா என்னை நம்பிறார். அதாலேயே சரியோ பிழையோ அவர் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு செய்திடுவன். நாளைக்கு அவர் கடல்ல போய்க் குதி எண்டு சொன்னாலும் போய்க் குதிப்பன். நான் சாகிற வரைக்கும் அவருக்குச் சின்னதா கூட நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டன். அவர் சொல்றதை மீறி நடக்கவும் மாட்டன். அதாலதான்… ஆனாலும் சொறி அண்ணி.” என்றவனின் பேச்சில் வருணா ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டாள்.
அவன் கலிங்கன் மீது கொண்டிருக்கும் பக்தியும் விசுவாசமும் அவளை அசைத்துப் பார்த்தன. ஆனாலும் விடாமல், “அவரோட சேந்து நீயும் நல்லாருக்கிற வழியப் பாக்கிறத விட்டு அரை லூசு மாதிரி எதையாவது கதைக்கிறேல்ல ஆதி. அவர் செய்றது பிழை எண்டு தெரிஞ்சா அதை எடுத்துச் சொல்லுறதும்தான் உண்மையான அக்கறை.” என்று எடுத்துச் சொன்னாள்.
“அண்ணா பிழை செய்ய மாட்டார் அண்ணி.” என்றவன், “அண்ணா நல்லாருப்பார். அதான் அண்ணாக்கு நீங்க கிடைச்சிருக்கிறீங்களே.” என்றுவிட்டு அவளுக்கு கதவை திறந்து பிடித்தான் அவன்.
அதைச் சாற்றியவள், “இதை எனக்கு உங்கட அண்ணா மட்டும் செய்யட்டும். நீ போய்க் காரை எடு!” எண்றுவிட்டுத் தானே திறந்துகொண்டு ஏறி அமர்ந்தாள் அவள்.
கலிங்கனுக்குத் துணையாக ஆதி இருக்கிறான் என்கிற மெல்லிய ஆறுதல் உண்டானாலும் முதல் நாள் கலிங்கராயனும் இப்படித்தானே ஏதோ சொன்னான் என்று ஓடிற்று அவளுக்கு.
அன்றைய அவனது கத்திக்குத்துகள், ஆதியின் அவசரமும் பதற்றமுமாக அவனை வைத்தியசாலைக்குக் கொண்டுவந்த விதம், அங்கிருந்தவர்களை மிரட்டி அடக்கியது, அவன் உயிருடன் இருப்பதை வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டது எல்லாம் சாதாரணமானவை இல்லை என்று அவளுக்கு முதலே தெரியும்.
அந்தச் சம்பவத்துக்குப் பின்னால் ஏதோ பெரிய துரோகம் இருந்திருக்கிறது, அதில் வரதனின் பங்கும் இருக்கிறது என்று இப்போது புரிய ஆரம்பித்தது. இன்னுமே அவளால் அந்த மனிதனை அப்படி நம்ப முடியவில்லை.
என்ன நடந்தது என்று அப்போதே கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் போலிருந்தது. ஆனால், கலிங்கராயனாக மனம் திறந்து சொல்லாமல், அவனிடமிருந்து எதையும் வற்புறுத்திப் பெற்றுவிட முடியாது என்றுதான் அவளுக்குத் தெரியுமே.
ஆனாலும் கலிங்கராயனைச் சுற்றி நடக்கும் சம்பவங்களின் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை என்னவென்று அறிந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணம் அவளுக்குள் துளிர்விட ஆரம்பித்திருந்தது.
வைத்தியசாலைக்குச் சென்ற வேகத்திலேயே திரும்பி வந்தாள் வருணா. வந்தவள் நேராகக் கலிங்கராயனின் முன்னால் வந்து நின்றாள்.
நன்றாக உறங்கி எழுத்து, கட்டிலில் ஓய்வாக அமர்ந்திருந்தவனுக்கு அவள் எதற்காக வந்திருக்கிறாள் என்பது நன்றாகத் தெரியுமே! ஆனாலும், ஒன்றுமே அறியாதவன் போன்று “என்ன இவ்வளவு நேரத்துக்கே வந்துட்டே?” புருவங்களை உயர்த்தினான்.
“ஏன் இப்பிடி வந்தனான் எண்டு உங்களுக்குத் தெரியாதா?”
“இந்தக் கை ஏன் இந்தளவுக்கு வீங்கியிருக்கு? ஏன் போட்ட தையல்ல இருந்து ரத்தம் கசிஞ்சது? அப்பவே யோசிச்சனான். ஹொஸ்பிடல்லயே இருந்த மனுசனுக்கு அப்பிடி என்ன நடந்திருக்கும் எண்டு. ஆனா நீங்க என்ன செய்திருக்கிறீங்க என்ன?”
அவள் கோபம், அந்தக் கோபத்தில் சிவந்திருந்த விழிகள், எதையும் மறைக்காமல் வெளிப்படுத்தும் முகபாவம், கேள்வி கேட்கும் விதம் என்று அவளையே பார்த்திருந்தவனின் உதடுகள் மெல்ல வளைந்தன.
அவளின் அந்தச் சீற்றமும், முகத்தில் வந்து போகும் பாவனைகளும் அவனுக்குள் சொல்லொண்ணா உணர்வுகளைக் கிளப்பின. அப்படியே வாரியணைத்து அள்ளி முத்தமிடத் தோன்றிய உணர்வைக் கீழுதட்டைக் கடித்து அடக்கியபடி அவளையே விழியகற்றாமல் ரசித்துக் கொண்டிருந்தான் கலிங்கராயன்.
அவனுக்கு கை நன்றாகவில்லையே. இல்லையானால் காரியத்தில் இறங்கியிருப்பான்.

