அத்தியாயம் 52
தன்னுடைய அலுவலக அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தான் வரதன். அவன் உறக்கம், நிம்மதி, மகிழ்ச்சி அத்தனையும் கெட்டுப் பல நாட்களாயிற்று. அத்தனைக்கும் காரணமானவன் கலிங்கராயன் மட்டுமே!
தன் மேசையின் மீதிருந்த கோப்புகளைப் புரட்டினான். கைப்பேசியை எடுத்துப் பார்த்தான். மீண்டும் அதைத் தூக்கி எறிவதுபோல மேசையில் போட்டான். எதிலும் அவனால் நிலைகொள்ள முடியவில்லை.
ஆள்பலம் இருக்கிறது. பணபலம் இருக்கிறது. அரசியல் செல்வாக்கு, அதிகாரம், வசதி என்று எல்லாவற்றிலும் கலிங்கனைவிட ஒருபடி மேலேதான் இருக்கிறான். இத்தனைக்கும் ஒரு காலத்தில் கலிங்கனின் வலது கரமாக இருந்த சூர்யாவே இன்று இவன் ஆள்.
இத்தனை சாதகமான சூழ்நிலைகள் இருந்தும் ஒரு மனிதனைத் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்கிற எண்ணம், அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக மனத்தளவில் சிதைத்துக்கொண்டிருந்தது.
கலிங்கன் கொடுத்த ஒவ்வொரு அடியையும் தன்னுடைய பணத்தாலும் அதிகாரத்தாலும் செல்வாக்காலும் ஓரளவுக்கு மூடி மறைத்திருந்தான். இழந்தவற்றை மீட்டெடுக்கவும், வெளியே தெரியாமல் பிரச்சனைகளைச் சரிசெய்யவும் பெரும் தொகையைச் செலவழித்திருந்தான். ஆனால், அவை எல்லாமே தற்காலிகமான தீர்வுகள்தான் என்று அவனுக்குத் தெரியும்.
பெருங்காட்டையே தீக்கிரையாக்க ஒரு சிறு பொறி போதும். அப்படித்தான் அவனுடைய நிலைமையும் இருந்தது. இன்னொரு சிறிய தவறு நடந்தால்கூட இதுவரை கட்டியெழுப்பியிருந்த மொத்த சாம்ராஜ்யமும் சரிந்து விழுந்துவிடும். மானம், மரியாதை, கௌரவம், இத்தனை வருட உழைப்பு என்று எல்லாமே ஒரே அடியில் காணாமல் போகும்.
அதை நினைக்கும்போதே அவனுடைய முகம் இறுகியது.
கலிங்கனை அழிக்க வேண்டும். அதுவும் இனி அவனால் மீண்டெழ முடியாதபடி மொத்தமாக அழிக்க வேண்டும். முடிந்தால் அவனையே ஒழிக்க வேண்டும்! அந்த எண்ணம் இப்போது வெறும் பழிவாங்கும் உணர்வாக இல்லாமல், பெரும் வெறியாக மாறியிருந்தது.
அந்த நேரத்தில் கதவு திறக்கப்பட, சூர்யா உள்ளே வந்தான்.
வரதனுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தான். சில நொடிகள் இருவருக்குமிடையில் அமைதி நிலவியது.
வரதன் மீண்டும் மேசையைச் சுற்றி நடந்தான். ஏதோ சொல்ல நினைத்தவன் வார்த்தைகளை விழுங்கினான். கடைசியில் சூர்யாவுக்கு முன்னால் வந்து நின்றான்.
“என்ன செய்யலாம்?”
சூர்யா உடனடியாகப் பதிலளிக்கவில்லை. வரதனின் ஆத்திரத்தையும் கொந்தளிப்பையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்குமே கலிங்கராயனை அழிக்க வேண்டும் என்கிற வெறி உண்டுதான். அதில் எந்த மாற்றமும் இல்லை.
அதேநேரம், உறக்கத்தைத் தொலைத்து, நிம்மதியை இழந்து, எதைச் செய்தால் கலிங்கனை வீழ்த்தலாம் என்று வழி தெரியாமல், கூண்டுக்குள் அடைபட்ட புலியைப் போன்று வரதன் தவித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கையில் குரூரமான மகிழ்ச்சி உண்டாயிற்று.
இதே வரதன்தானே நிலாவினியைத் திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி, அவனைத் தன் பக்கம் இழுத்தான். அப்போது அவனுக்கு இவன் துணையும், இவன் தங்கையும், கலிங்கனைப் பற்றிய அத்தனை ரகசியங்களும் தேவையாய் இருந்தன. காரியம் முடிந்ததும் தூக்கி எறிந்துவிடலாம் என்று நினைத்தவன்தானே!
இப்போது மீண்டும் அவனுக்கு இவன் உதவி தேவைப்படுகிறது.
“கல்யாணம் எப்ப?” என்றான் சூர்யா நிதானமாக.
அந்தக் கேள்வி வரதன் இருந்த மனநிலைக்குச் சற்றும் பொருத்தமற்றதாக இருந்தது. ஒரு கணம் சூர்யா என்ன கேட்கிறான் என்றே புரியாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தவன், அடுத்த நொடியே முகம் இறுகினான்.
“எந்த நேரத்தில என்ன கதைக்கிறாய் சூர்யா?” என்று அதட்டினான்.
சூர்யா அசையவில்லை. அவனுடைய முகத்திலும் பெரிய மாற்றமில்லை.
“ஏன்? நீயும் சந்தர்ப்பம் பார்த்துக் கழுத்தறுக்கிறவன்தானே?”
வரதனின் முகம் சட்டென்று மாறியது.
“என்ன சொல்லுறாய்?”
“ஆரம்பத்தில என்ன சொன்னனி? பிறகு நிலாவிட்ட என்ன சொல்லி அனுப்பினனி? என்ன பிளான்ல இருக்கிறாய்? உன்ர காரியத்தை எல்லாம் சாதிச்சுப்போட்டு எங்களை தூக்கி எறியலாம் எண்டா?”
வரதன் உள்ளுக்குள் கொந்தளித்தான். கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. இருந்தாலும் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.
இது ஆத்திரப்பட்டு வார்த்தைகளை விடுவதற்கான நேரமல்ல. இப்போது சூர்யாவின் உதவி அவனுக்குத் தேவை. அதில், “இப்ப அது பிரச்சினை இல்ல சூர்யா.” என்றான்.
“எனக்கு அதுதான் பிரச்சினை.”
“சூர்யா!”
“முதல் நிலா கழுத்தில தாலியக் கட்டு. அதை நீ வெளி உலகத்துக்குச் சொல்லோணும் எண்டு இல்ல. ஆனா கட்டோணும். சட்டப்படி அவள்தான் உன்ர மனுசி எண்டு இருக்கோணும். அதுக்குப் பிறகு வா, கதைப்பம்.” என்றுவிட்டு எழுந்து வாசலுக்குப் போனவன் நின்று திரும்பினான்.
“எனக்கும் அவனை அழிக்கோணும்தான். அதில எந்த மாற்றமும் இல்லை. ஆனா, அதுக்கு முதல் எனக்கும் உனக்குமான இந்தக் கணக்க முடி.” என்றுவிட்டுப் போய்விட்டான் அவன்.
வரதனால் பல்லைக் கடிக்க மட்டுமே முடிந்தது.
*****
உடலளவில் மாறன் இப்போது முழுமையாகத் தேறியிருந்தான். காயங்கள் ஆறியிருந்தன. நடமாடுவதற்கோ, வேலைகளைச் செய்வதற்கோ எந்தச் சிரமமும் இல்லை. ஆனால், அவனுக்குள் ஏற்பட்டிருந்த காயங்கள் மட்டும் இன்னமும் ஆறாமல் ரணமாகிக்கொண்டிருந்தன.
கலிங்கராயன் கொடுத்த அடிகள் அவன் உடலை மட்டுமல்ல, அவன் தன்னைக் குறித்துத் தனக்குள் கட்டியிருந்த ஆளுமையையும் நம்பிக்கையையும் உடைத்திருந்தன.
காவல்துறையில் எதிர்கொண்ட அவமானம் அவனுடைய எஞ்சியிருந்த சுயமரியாதையைச் சிதைத்திருந்தது. அதற்கிடையில் வரதனைப் பற்றித் தெரிந்த உண்மைகள் அவனுடைய குடும்பப் பெருமிதத்தைக் குலைத்திருந்தன.
இத்தனைக்கும் நடுவில் வருணாவைப் பற்றிய குற்றவுணர்வு வேறு அவனைத் துரத்திக்கொண்டிருந்தது.
தன்னுடைய தவறுகளுக்குத் தண்டனை கிடைத்துவிட்டது என்று ஒருபுறம் தோன்றினாலும், அந்தத் தண்டனையால் நடந்தவை எதுவுமே சரியாகிவிடப் போவதில்லை என்பதும் புரிந்தது.
வருணாவுக்கு இழைத்த அநியாயத்தையும், அவளைக் கொல்லத் துணிந்த தன்னுடைய வெறித்தனத்தையும் நினைக்கும்போது தன்னையே மன்னிக்க முடியாதவனாக உணர்ந்தான்.
தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனின் செயல்களால் இன்று அவள் ஒரு ரௌடியின் மனைவியாக வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாளே என்கிற எண்ணம் அவனை உறுத்தியது. வலுக்கட்டாயத்தினால்தான் அவனை நேசித்ததாகவும் சொல்லியிருக்கிறாள். அது தெரியாமல் வீடு தேடிப்போய் அவன் பேசியவை?
அது போதாது என்று அவளைக் கொன்றுவிடும் அளவுக்குச் சென்றிருந்த அவனது வெறித்தனத்தை நினைக்கும்போது அவனுக்கே அவன் மீது அருவருப்பு உண்டாயிற்று.
சில நேரங்களில் வருணாவைச் சந்தித்து நடந்த அத்தனை உண்மைகளையும் சொல்லிவிடலாமா என்று நினைப்பான். அடுத்த கணமே அந்த எண்ணத்திலிருந்து பின்வாங்கிவிடுவான்.
எந்த முகத்தை வைத்துக்கொண்டு சொல்வான்? இல்லை, எப்படிச் சொல்வான்? அதை யோசிக்கையிலேயே குன்றிப்போனான்.

