யாராவது காவல்துறை, விசாரணை, கைது போன்ற வார்த்தைகளைப் பேசினால் கூட அவன் முகம் இறுகிவிடும். அந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தும் எதுவாக இருந்தாலும் அதைத் தவிர்க்கவே விரும்பினான்.
வேலைக்குள் தன்னை முழுமையாகப் புதைத்துக்கொள்ள முயன்றான். காலையில் வீட்டை விட்டுக் கிளம்பினால் இரவு திரும்பும் வரை வேலையிலேயே மூழ்கியிருப்பான். வேலை முடிந்ததும் நேராக வீட்டுக்கு வந்துவிடுவான்.
நண்பர்களைச் சந்திப்பதில்லை. தேவையற்ற பேச்சுகளைத் தவிர்த்தான். பெற்றவர்கள் ஏதாவது கேட்டால் கூட ஒன்றிரண்டு வார்த்தைகளில் பதிலை முடித்துக்கொண்டு அறைக்குள் சென்றுவிடுவான்.
ஆனால், தனிமையில் இருக்கும்போது மாற்றியிருக்கக்கூடிய தருணங்கள், தவிர்த்திருக்கக்கூடிய தவறுகள், தான் நடந்துகொண்ட விதம், கலிங்கராயனிடம் எதிர்கொண்ட அவமானம், காவல்துறையில் அனுபவித்த கொடுமைகள் என்று எல்லாமே ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வந்து அவனை அலைக்கழித்தன.
முன்பிருந்த மாறன் இப்போது இல்லை. அவனுடைய தைரியமும் தன்னம்பிக்கையும் மட்டுமல்ல, தன்னைப் பற்றிய அவனுடைய மதிப்பீடும் கூட உடைந்துபோயிருந்தது.
எல்லோருக்கும் நடுவில் நடமாடிக்கொண்டிருந்தாலும் மனத்தளவில் முற்றிலும் தனித்துவிடப்பட்ட ஒருவனாக மாறிப்போனான்.
*****
சொத்துக்களைப் பிரித்துக்கொண்டு மொத்தமாக வரதனிடமிருந்து ஒதுக்கிவிட வேண்டும் என்கிற விஜயராஜனின் முடிவில் இன்னுமே மாற்றமில்லாதபோதிலும் அன்றைக்குப் பிறகு சொத்துகளைப் பிரிப்பது பற்றி அவர் வரதனிடம் பேசவில்லை.
அவருக்கு ஒரு கேள்விக்குத் தெளிவான பதில் வேண்டியிருந்தது.
வருணாவைக் கொலை செய்ய முயன்றதற்காகக் கலிங்கன் ஏற்கெனவே மாறனைத் தண்டித்துவிட்டான். அந்தத் தண்டனை போதாது என்று நினைத்திருந்தால் இன்னும் அவனைக் கப்பலில் தடுத்துவைத்துச் சித்திரவதை செய்து அனுப்பியிருப்பான். இல்லையா, வேறு ஏதாவது வழியை அவனே பார்த்திருப்பான்.
அப்படிப்பட்டவன் எதற்காகக் காவல்துறையை நாடி, மாறனைப் பற்றிய தகவல்களைச் சொல்ல வேண்டும்? அவன் என்ன நேர்மை, நியாயம் என்று நடப்பவனா? அவனுக்கென்று ஒரு பாதை வகுத்து, அதில் நடப்பவனாயிற்றே.
அப்படியே அதைச் செய்தது அவனாக இருந்திருந்தால் மாறனை வெளியே எடுத்த பிறகு பேசாமல் இருப்பானா? அடுத்த வழியை யோசித்திருப்பான். அதன் மூலம் மாறனுக்கு ஏதாவது நடந்திருக்கும்.
இங்கே அப்படி எதுவுமே நடக்கக் காணோம். சுவிட்சைத் தட்டியதும் ஒளிரும் விளக்குப் போன்று, அவர் வரதனிடம் சென்றதும் அத்தனை பிரச்சனைகளும் முடிந்துபோயிற்று.
அப்படியானால் காவல்துறைக்கு அந்தத் தகவலைக் கொடுத்தது யார்?
அந்தக் கேள்வி எழுந்ததிலிருந்து அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவர் அறிவு வரதன்தான் என்று அடித்துச் சொல்லிக்கொண்டேயிருந்தது.
இத்தனை காலமும் வரதன் வெளி உலகத்துக்கு எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அவர்களுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை. அல்லது அப்படி ஒரு சூழ்நிலை அதுவரை வரவில்லை என்று சொல்ல வேண்டுமோ. இப்போதுதானே அவர் அவனுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்.
அதில் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி காவல்துறையில் அந்தச் சம்பவம் தொடர்பான தகவல்களைத் திரட்ட ஆரம்பித்தார். மாறன் கைது செய்யப்பட்டதற்குப் பின்னால் யார் இருந்தார்கள், அந்தத் தகவல் எங்கிருந்து வந்தது, யாருடைய அழுத்தம் செயல்பட்டது என்பதையெல்லாம் தெளிவாக அறிந்துகொள்ள விரும்பினார்.
யாவருமே சமூகத்தில் சாதாரண மனிதர் இல்லை. அப்படியிருக்க அவரின் செல்வாக்கையும் மீறிய அந்த அதிகாரம் யாருடையது என்று அவருக்குத் தெரிந்தேயாகவேண்டியிருந்தது.
வரதனைப் பற்றிய உண்மை தெரிந்த பிறகுதான் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்க வேண்டும். அதுவரை அவனிடம் தன் சந்தேகத்தைக் காட்டிக்கொள்ளக் கூடாது என்பதில் மட்டும் மிகவும் கவனமாக இருந்தார்.
ஒருபுறம் மகனின் நிலை அவரை வேதனைப்படுத்திக்கொண்டிருக்க, மறுபுறம் சொந்தத் தம்பியே தன் குடும்பத்துக்கு எதிராகச் செயல்பட்டிருக்கக் கூடும் என்கிற சந்தேகம் அவரை நிம்மதியிழக்கச் செய்துகொண்டிருந்தது.
*****
அவனிடம் இருந்த வரதனின் லொறியை வைத்தே அவனுக்கு ஏதாவது பதிலடி கொடுக்கலாமா என்றுதான் கலிங்கராயன் முதலில் யோசித்தான்.
ஆனால், அந்த லொறியில் அவன் வவுனியாவுக்குச் சென்றது, அங்கே சரக்குகளைப் பாதுகாப்பாக இறக்கியது, பின்னர் அந்த லொறியிலேயே மீண்டும் திருகோணமலைக்குத் திரும்பியது என்று, அந்த லொறியை இறுதியாகப் பயன்படுத்தியது கலிங்கராயன்தான் என்று இலகுவாக நிரூபிக்க முடியும்.
அப்படியிருக்க, அந்த லொறியை வைத்து ஏதாவது விபரீதம் செய்தால், அதன் பின்னணியில் இருந்தது கலிங்கராயன்தான் என்பதற்கான ஆதாரங்களை வரதனோ காவல்துறையோ திரட்டுவது பெரிய காரியமாக இருக்காது.
அதனால் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டு லொறியை அப்படியே விட்டுவிட்டான். வரதனின் ஆட்களே வந்து அதனை எடுத்துச் சென்றிருந்தார்கள்.
இரண்டு நாட்கள் ஓடிப்போயிருந்தது. கலிங்கனுக்கு காய்ச்சலும் மாறியிருந்தது. கையின் வீக்கம் அப்படியே இருந்தாலும் நடமாடும் நிலைக்கு வந்திருந்தான்.
கலிங்கராயன் காயமடைந்ததை வருணா உடனடியாகத் தன் பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. அன்று அவர்களுக்குள் நடந்த சண்டை, அழுது வீங்கிப்போயிருந்த அவளது முகம், கலிங்கராயனின் நிலைமை என எல்லாமே அவளை மனத்தளவில் மிகவும் பாதித்திருந்தன.
இரண்டு நாட்களுக்குப் பிறகு மதியழகன் அழைத்தபோதுதான் நடந்தவற்றை மெதுவாகத் தெரிவித்தாள்.
வரதன் இத்தனைக்கும் பின்னால் இருக்கிறார் என்கிற செய்தியை மதியழகனால் உடனடியாக நம்ப முடியவில்லை. மாறனுக்கு வருணாவைத் திருமணம் செய்து கொடுக்க முடிவெடுப்பதற்கு முன்னர், அந்தக் குடும்பத்தைப் பற்றி அவர் பலரிடமும் விசாரித்து, நிதானமாகவே முடிவெடுத்திருந்தார்.
அப்படியிருக்க, தான் அறிந்துகொண்ட வரதனுக்கும் மகள் இப்போது சொல்கிற வரதனுக்கும் இடையில் இத்தனை பெரிய வித்தியாசம் இருப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆனாலும், மகள் சொல்வதை அவர் கண்ணை மூடிக்கொண்டு மறுக்கவும் தயாராக இல்லை. கடந்த சில மாதங்களாக நடந்தவற்றை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தார்.
திருமண மண்டபத்தில் கலிங்கராயன் தாலி கட்டிய சம்பவம், அவன் வெளிப்படுத்திய உண்மைகள், ஹோட்டல் விருந்தின் காணொளி வெளியானது, அவனது கார் தீக்கிரையாக்கப்பட்டது, அவன் மீதான கத்திக்குத்துத் தாக்குதல்கள், வருணாவையே கொலை செய்ய முயன்ற சம்பவம் என எல்லாமே ஒன்றோடொன்று தொடர்புடையவையாகத் தோன்றின.
வரதனைப் பற்றிய சந்தேகம் ஒருபுறம் அவரை அரித்துக்கொண்டிருக்க, மகளின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழும் ஆபத்துகள் மறுபுறம் பெரும் கவலையை ஏற்படுத்தின.
அதேநேரம் கலிங்கராயன் மீதும் அவருக்குக் கோபம் எழுந்தது. தனிமனிதனாக இருந்தவரை அவனுடைய வாழ்க்கை முறை அவனது விருப்பம் என்று ஒதுக்கியிருக்கலாம். ஆனால் இப்போது வருணாவைத் திருமணம் செய்து, அவளுடன் இணக்கமாகக் குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்துவிட்ட பிறகும், அவன் இன்னும் அதே ஆபத்துகளுக்கு நடுவில் வாழ்ந்துகொண்டிருப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?
இடைப்பட்ட நாட்களில் இருவரும் அவர்கள் வீட்டுக்கு வந்து சென்றபோது, கணவன் மனைவியாக அவர்களுக்கிடையில் வளர்ந்திருந்த நெருக்கத்தையும் இணக்கத்தையும் மதியழகனும் சிவசுந்தரியும் உணர்ந்திருந்தார்கள்.
மகள் அவனுடன் மனத்தளவில் நெருங்கியிருப்பதைப் பார்த்து ஒருவிதத்தில் ஆறுதலடைந்திருந்தார்கள். ஆனால் அந்த நெருக்கம் மட்டுமே அவளுக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தைத் தந்துவிடுமா?
கலிங்கராயன் வருணாவின் கழுத்தில் தாலி கட்டிய நாளிலிருந்தே அவர்களுடைய நிம்மதி பறிபோயிருந்தது. இப்போது அவளும் அவனுடைய வாழ்க்கையின் ஆபத்துகளுக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறாள். இனியும் இப்படியே தொடர்ந்தால் அவர்களுடைய எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி மதியழகனைப் பெரிதும் வாட்டியது.
வரதன் மீதான சந்தேகம், கலிங்கராயன் மீதான கோபம், மகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் எனப் பலவிதமான உணர்வுகளுடன் சிவசுந்தரியையும் அழைத்துக்கொண்டு மகளின் வீட்டுக்குப் புறப்பட்டார்.

