அத்தியாயம் 53
கலிங்கராயனின் தோள்பட்டையில் இருந்த கட்டைக் கண்ட மதியழகனுக்கு மனம் பொறுக்கவே இல்லை. அவன் வாழ்க்கையோடு மகளின் வாழ்க்கையும் பின்னிப் பிணைந்து கிடக்கையில் அவன் ஒரு ரவுடி, அவன் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கும் என்று விட்டுவிட முடியவில்லை.
அதுவும் ஒரு பார்வையிலேயே இருவருக்குமிடையிலான நெருக்கத்தையும் நேசத்தையும் உணர்ந்தவரால், மகள் கணவனோடு மனமொத்து வாழ்கிறாள் என்று மகிழ முடியவில்லை.
அவளது இந்த மகிழ்ச்சி இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்குமோ என்கிற பயமே மேலோங்கிற்று. இனி என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ என்கிற கலக்கமும், கலிங்கராயன் ஏன் இப்படித் தன் வாழ்க்கையை ஆபத்துகளுக்கு நடுவில் வைத்திருக்கிறான் என்கிற ஆதங்கமும் அவருக்குள் பெருகின.
அவனிடம் கோபப்படவும் முடியவில்லை. இனிமேல் இப்படியெல்லாம் நடக்கக்கூடாது என்று அழுத்தமாகச் சொல்லவும் வழியில்லை. ஆனாலும் மனத்தில் இருப்பதைச் சொல்லாமல் இருக்க முடியாமல், “இனி இதுதான் எங்கட மகளின்ர வாழ்க்கை என்ன?” என்றார் ஆதங்கத்துடன்.
ஒருகணம் அவரைப் பார்த்த கலிங்கராயன், வருணாவிடம் திரும்பி, “சாப்பிடக் குடிக்க ஏதாவது கொண்டுவந்து குடு வரு.” என்றான்.
மதியழகனின் முகம் சட்டென்று இறுகிற்று. வருணாவுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. தந்தையின் கலக்கமும், அந்தக் கேள்வியின் பின்னாலிருந்த கவலையும் அவளுக்குப் புரிந்தன. அவளுக்குள்ளும் அதே ஆதங்கம் உண்டு. அதில் கலக்கத்துடன் கலிங்கனைப் பார்த்தாள்.
அவனோ எதுவும் பேசாமல், அவள் பெற்றோரை உபசரிக்குமாறு விழிகளால் சைகை செய்தான்.
அவளும் அவர்களுக்கான உபசரிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை. என்ன, நால்வருக்குமிடையில் கனத்த அமைதி நிலவிற்று. வருணா ஒற்றை ஆளாக நின்று மற்ற மூவரையும் சமாளிக்க முயன்றாலும், அவர்களுக்கிடையில் நிலவிய கனமான அமைதியை அவளால உடைக்கவே முடியவில்லை.
கலிங்கராயனுக்கும் தேநீர் கொண்டுவந்து கொடுத்தாள். அவள் முகத்திலிருந்த கலக்கத்தைக் கவனித்த கலிங்கன், கோப்பையை வாங்கும்போது அவள் விரல்களை மெதுவாகப் பற்றி விடுவித்தான். நிமிர்ந்து பார்த்தவளிடம் விழிகளை மூடித் திறந்து ஆறுதல் சொன்னான்.
என்ன மாய மந்திரமோ தெரியவில்லை. அவள் உள்ளம் அமைதியாயிற்று. அவன் பார்த்துக்கொள்வான் என்கிற நம்பிக்கை பிறக்க, அவனைப் பார்த்து அழகாய் முறுவலித்துவிட்டுப் பெற்றவர்களிடம் போனாள்.
தேநீர் அருந்தி முடித்ததும் அவர்களைப் பேசிக்கொண்டிருக்கச் சொல்லிவிட்டுக் கலிங்கராயன் மாடிக்குச் சென்றான்.
அதற்காகவே காத்திருந்தவர்களைப் போன்று சிவசுந்தரியும் மதியழகனும் வருணாவிடம் நடந்தவற்றை விரிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள்.
அன்றைக்கு கலிங்கராயன் வவுனியாவுக்குச் செல்லவிருந்தது வருணா, ஆதி, கலிங்கராயன் மூவருக்கு மட்டுமே தெரியும் என்று வருணாவுக்குமே தெரியும். கூடவே, அதைப் பற்றி அவள்தான் வரதனிடம் சொல்லியிருந்தாள்.
அப்படியிருக்க, அந்தத் தகவலைப் பயன்படுத்தி கலிங்கராயனுக்கு ஆபத்தை உண்டாக்கியவர் வரனாக மட்டுமே இருக்க முடியும் என்கிற முடிவுக்கு அவளும் வந்திருந்தாள்.
அதுமட்டுமல்லாமல், இன்றைய நிலையில் கலிங்கராயன் சொல்வதை அவள் முழுமையாக நம்பினாள். அவன் தன்னிடம் பொய் சொல்லமாட்டான் என்பதில் அவளுக்கு மிகுந்த உறுதி.
மதியழகன் பாடசாலையின் அதிபராக இருந்தாலும் அவர்களுடையது மிகவும் சாதாரணமான வாழ்க்கை. இத்தகைய பெரிய பிரச்சனைகள் குறித்த அனுபவமோ, அவற்றின் பின்னணியில் இயங்கக்கூடிய அதிகாரப் பலம் பற்றிய புரிதலோ அவர்களுக்கு இல்லை.
இப்படியொரு சம்பவம் நடந்தால் காவல்துறை தீவிரமாக விசாரித்து, குற்றவாளியைக் கண்டுபிடித்துத் தண்டனை பெற்றுக்கொடுக்கும் என்பதுதான் அவர்களுக்குத் தெரிந்தது.
ஆனால் இங்கே அப்படியொன்றும் நடக்கவில்லை. அடுத்தடுத்து இத்தனை சம்பவங்கள் நடந்தும் காவல்துறை எதுவுமே நடக்காததுபோல் அமைதியாக இருப்பது, அவர்களுக்குள் பலத்த சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
சற்று நேரத்தில் வெளியே செல்வதற்கு ஏதுவாகத் தயாராகி, படிகளில் இறங்கி வந்துகொண்டிருந்தான் கலிங்கராயன்.
அவனைப் பார்த்ததும் வருணாவின் முகம் மாறியது. காய்ச்சல் விட்டிருந்தது உண்மைதான். ஆனால், காயம் இன்னும் ஆறவில்லை. அந்த நிலையில் அவன் எதற்காக வெளியே புறப்படுகிறான் என்கிற கேள்வியோடு அவனை ஏறிட்டாள்.
அவள் பார்வையில் இருந்த கேள்வியைப் படித்த கலிங்கன், “வெளில கொஞ்சம் வேலை இருக்கு. போயிற்று வாறன்.” என்றான் பொதுவாக.
வருணாவுக்குக் கோபம் வந்தது. பெற்றவர்கள் முன்னால் அவனை அதட்டவும் பிடிக்கவில்லை. ‘போறேல்ல!’ என்று கண்ணாலேயே அவனை அதட்டி உருட்டினாள்.
அரும்பிய முறுவலை உதட்டுக்குள்ளேயே அடக்கிக்கொண்டு, “கெதியில வந்திடுவன் வரு.” எண்றுவிட்டுப் புறப்பட்டான் அவன்.
“12க்கு நீங்க மருந்து போடோணும்.”
அதற்குள் நீ இங்கே நிற்க வேண்டும் என்கிறாள். அவன் புன்னகை விரியப்பார்த்தது. அதை மீசைக்குள் ஒளித்துக்கொண்டு, சரியென்று அவளிடம் தலையசைத்துவிட்டுப் புறப்பட்டான் அவன்.
*****
வரதனை அத்தனை எளிதாக விட்டுவிடும் எண்ணம் கலிங்கனுக்கு இல்லை. அதில் உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் திருகோணமலை வந்திருப்பதை அறிந்து சந்திக்க வந்திருந்தான். அவரிடமெல்லாம் ஆதியை அனுப்ப முடியாது. அது மரியாதையற்ற செயல். அவனேதான் நேரில் சந்தித்துப் பேச வேண்டும்.
ஒரு காலத்தில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டத்துக்குப் புறம்பான தொழில்களில் ஈடுபட்டிருந்த கலிங்கன், அவற்றிலிருந்து முற்றாக விலகிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்ததற்குப் பின்னால் அந்த அதிகாரிக்கும் ஒரு முக்கிய பங்கிருந்தது.
ஒருமுறை கலிங்கனைச் சுற்றிவளைத்துப் பிடிப்பதற்காகத் தனது படையுடன் அவர் முயன்றபோது, அவன் தப்பித்திருந்தான்.
அதனால் அதிகாரிக்கு அவன்மீது ஆத்திரமும் ஆதங்கமும் இருந்தது. கையில் அதிகாரமும் பதவியும் இருந்தும், ஒரு ரவுடியைக் கட்டுப்படுத்த முடியவில்லையே என்கிற கோபத்தில் ஒருநாள் அவனைப் பிடித்துச் சென்று, போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லமொன்றைக் காட்டியிருந்தார்.
அங்கே இருந்தவர்களில் பெரும்பாலானோர் பதினெட்டு வயதைக்கூட எட்டாத சிறார்கள். போதைப்பொருட்களின் பிடியில் சிக்கி, உடலாலும் மனத்தாலும் சிதைந்து, வாழ்வின் மீதான நம்பிக்கையையே இழந்திருந்தார்கள்.
அவர்களைச் சுட்டிக்காட்டி அந்த அதிகாரி கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் கலிங்கனுக்குள் ஆழமாக இறங்கியிருந்தன.
“நீ எப்பிடி அனாதையானாய் எண்டு எனக்குத் தெரியாது. ஆனா, நீ செய்ற தொழிலால, உன்ர வியாபாரத்தால அம்மா அப்பா இருந்தும், நல்ல எதிர்காலம் இருந்தும், வசதியான வாழ்க்கை வாழ வாய்ப்பிருந்தும் எத்தினையோ பிள்ளைகளின்ர வாழ்க்கையச் சீரழிச்சுக்கொண்டிருக்கிறாய் எண்டு பார். உனக்குக் கொஞ்சமாவது மனச்சாட்சி இருந்தா, நீ அனுபவிச்ச வலியும் வேதனையும் இன்னும் உன்ர நினைவில இருந்தா, இனிமேலாவது யோசிகிச்சு நட.” என்று சொல்லியிருந்தார்.
அந்த வார்த்தைகள் கலிங்கனுக்குள் ஏற்படுத்திய தாக்கம் சாதாரணமானதல்ல. துப்பாக்கி முனையாலும், அதிகாரத்தின் மிரட்டலாலும் அசைக்க முடியாதிருந்த அவன் மனத்தை, அந்த மறுவாழ்வு இல்லத்தில் அவன் கண்ட சிறார்களின் நிலையும் அந்த அதிகாரியின் வார்த்தைகளும் அசைத்திருந்தன.

