அத்தியாயம் 55
கோயிலில் வைத்துச் சாந்தகுமாரி அம்மாவைக் கண்டதுமே சிவசுந்தரி அம்மாவுக்குள் அடக்கி வைத்திருந்த ஆத்திரமும் ஆதங்கமும் பொங்கியெழுந்தன. ஆனாலும், கோயில் போன்ற பொது இடத்தில் அதையெல்லாம் வெளிப்படுத்திப் பேசும் பழக்கம் அவருக்கு இல்லை. அதனால் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்துவிடவே முயன்றார்.
ஆனால், சாந்தகுமாரி அம்மாதான் அவரை இடைநிறுத்தினார்.
முதலில் நடந்தவற்றுக்காக மன்னிப்புக் கேட்டார். அதைக் கேட்டுச் சிவசுந்தரி அம்மாவுக்கு வெறுப்புதான் உண்டாயிற்று.
யார் எத்தனை மன்னிப்புக் கேட்டாலும் அவர் மகளின் வாழ்க்கையில் நடந்தவற்றை மாற்றிவிட முடியுமா? அவள் அனுபவித்த வேதனைகளுக்கு யாரால் பதில் சொல்ல முடியும்? இல்லை, இந்த மன்னிப்பு இனியாவது அவளுக்கு நிம்மதியான அமைதியான வாழ்க்கையைக் கொடுத்துவிடப் போகிறதா என்ன?
அந்த ஆதங்கத்துடன் அவரைப் பார்க்கக்கூட விரும்பாமல் நின்றவரிடம், அதன் பின்னர்தான் சாந்தகுமாரி அம்மா நடந்தவற்றைச் சொன்னார்.
அந்த உண்மைகள் ஒவ்வொன்றும் சிவசுந்தரியம்மாவின் காலடியில் இருந்த நிலத்தையே நழுவச் செய்தன. சூர்யா, நிலாவினி, கலிங்கன் மூவரும் சிறுவயது முதலே ஒன்றாக வளர்ந்தது, ஒரே வீட்டில் வசித்தது, ஒருவருக்கொருவர் உறவாகவும் துணையாகவும் வாழ்ந்தது, நிலாவினியையே கலிங்கராயன் திருமணம் செய்துகொள்ள விரும்பியிருந்தது என்று எதையும் விடவில்லை அவர்.
அதுமட்டுமல்லாது வரதன் கலிங்கனை அழிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் சூர்யாவைத் தன் பக்கம் இழுத்தது, கூடவே நிலாவினியோடு தவறான உறவை ஏற்படுத்திக்கொண்டு, அவளைக் கலிங்கனிடமிருந்து அபகரித்தது, சூர்யா வரதனுடன் கைகோர்த்துக்கொண்டு கலிங்கனின் முதுகிலும் வயிற்றிலும் கத்தியால் குத்தியது, அந்தத் துரோகங்களாலும், இழப்புகளாலும் ஆத்திரமடைந்த நிலையில் கலிங்கன் வருணாவின் கழுத்தில் தாலி காட்டியது எல்லாம் சொன்னார்.
சிவசுந்தரியம்மாவுக்கு அப்போதே தலையைச் சுற்றுவது போலிருந்தது. அவரால் சாந்தகுமாரி அம்மா சொல்கிறவற்றை முழுமையாகக் கிரகித்து உள்வாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
உண்மையைச் சொல்லப்போனால் விஜயராஜனை விடவும் வரதன் மீதான நல்லபிப்பிராயத்தில்தான் தம் மகளைக் கொடுக்க அவர்கள் முன்வந்ததே. இப்படியான ஒரு குடும்பத்தில் தம் பெண் வாழ்க்கை இன்னும் சீரும் சிறப்பாகவும் இருக்கும் என்று நம்பினார்கள். அது பார்த்தால் அவன் அழுக்கின் மொத்த உருவமாக இருந்திருக்கிறான்.
ஒரு சாதாரணக் குடும்பத்தில் வாழ்ந்து, குடும்ப உறவுகளையும் நம்பிக்கையையும் நேர்மை நீதியையும் மட்டுமே தெரிந்து வளர்ந்தவருக்கு, இப்படியான பழிவாங்கல்களும் துரோகங்களும் எப்படிப் புரியும்?
அதற்கெல்லாம் மேலாக, வரதனின் உண்மையான கோர முகத்தை அறிந்தபோது அவருக்குள் ஏற்பட்ட அச்சத்தை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.
தம் மகளின் வாழ்க்கையைச் சுற்றி இப்படியொரு ஆபத்தான மனிதனும் அவனுடைய வன்மங்களும் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதை நம்ப மிகவுமே சிரமப்பட்டார்.
அவர் நெஞ்சைப் பற்றிக்கொண்டு நிற்க, சாந்தகுமாரி அம்மா அடுத்துச் சொன்னவை அவருக்குப் பேரதிர்ச்சியின் உச்சமாக இருந்தது.
அவர் மகள் மீது கொண்ட ஆத்திரத்தில் மாறன் அவளைக் கொலை செய்யத் துணிந்துவிட்டானாம் என்றதும் சிவசுந்தரியம்மாவின் மூச்சே நின்றுபோயிற்று.
நம்ப முடியாமல் எதிரில் நின்ற பெண்மணியை வெறித்தார். இவர்கள் எல்லாம் மனித வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தானா என்கிற சந்தேகமே உண்டாயிற்று.
இதில் அவர் மகனைத் தவறாக நினைக்க வேண்டாமாம். அவன் செய்த தவறுக்காக தண்டனையைக் கலிங்கன் கொடுத்துவிட்டானாம் என்று கப்பலில் அவன் அனுபவித்தவைகளையும் காவல்துறையில் அனுபவித்ததையும் சொன்னது அவரை ஆற்றுப்படுத்தவே இல்லை.
அவளுக்கு மிகவும் பொருத்தமானவன் என்று அவர்கள் பார்த்த மாப்பிள்ளை, அவளைக் கொலை செய்யும் அளவுக்குப் போயிருக்கிறான் என்பதிலிருந்து அவரால் மீளவே முடியவில்லை.
இத்தனை காலமும் தவறான இடத்தில் மகள் வாழ்க்கை அமைந்துபோயிற்றே என்று அழுதுகொண்டிருந்தாள். அது பார்த்தால் அவர்கள் அதைவிட மோசமான இடத்தில் தம் பெண்ணைக் கொடுக்க இருந்திருக்கிறார்கள்.
எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டபோது, அவருடைய கால்கள் தானாக நடந்தனவே தவிர, மனம் மட்டும் இன்னமும் கோயிலிலேயே உறைந்துபோயிருந்தது.
வீட்டுக்குத் திரும்பும் வழியில் எதையும் அவரால் யோசிக்க முடியவில்லை.
சாந்தகுமாரி அம்மா சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் துண்டு துண்டாக நினைவில் வந்து மோதின. அவற்றை ஒன்றாக இணைத்துப் புரிந்துகொள்ள முயன்றபோதெல்லாம் தலைக்குள் ஏதோ பாரம் ஏறிக்கொண்டது.
வீடு வந்து சேர்ந்த பிறகும் அவர் நிலை மாறவில்லை.
வழக்கமாக வீட்டுக்குள் நுழைந்ததும் ஏதாவது ஒரு வேலையைப் பார்க்கத் தொடங்குபவர் அன்றைக்கு எதுவுமே செய்யாமல் அப்படியே அமர்ந்துவிட்டார். முகத்தில் இரத்த ஓட்டமே இல்லாததுபோல் வெளிறியிருந்தது. பார்வை எங்கோ வெறித்திருந்தது.
பேயறைந்தவரைப் போல அமர்ந்திருந்த சிவசுந்தரியம்மாவைக் கண்டு புருவங்களை சுருக்கினார் மதியழகன்.
*****
சிவசுந்தரி அம்மாவிடம் அத்தனையையும் சொல்லிவிட்டு வந்த பிறகுதான் சாந்தகுமாரி அம்மாவுக்குத் தான் செய்த காரியத்தின் வீரியம் புரியத் தொடங்கியது.
அந்தத் துணிச்சல் தனக்கு எங்கிருந்து வந்ததென்று அவருக்குத் தெரியவில்லை. இதையெல்லாம் சொல்ல வேண்டும் என்றோ, அவரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றோ அவர் யோசித்திருக்கவில்லை.
ஏதோ ஒரு புள்ளியில் ஆரம்பித்த அவர் பேச்சு, ஒன்றைத் தொட்டு ஒன்று என்று இத்தனை காலமாக அவர் மனத்துக்குள் அழுத்திக்கொண்டிருந்த எல்லாவற்றையும் சொல்ல வைத்திருந்தது.
ஆனால் இப்போது தவறு செய்துவிட்டோமோ, அவசரப்பட்டுவிட்டோமோ, இருக்கிற பிரச்சனைகள் போதாது என்று தானும் புதிதாக ஒன்றை இழுத்துவிட்டுவிட்டோமோ என்று அவருக்கும் பெரும் போராட்டம் ஒன்று நடக்க ஆரம்பித்திருந்தது.
ஆனால், அந்த நேரத்தில் அவரால் வேறுவிதமாக நடந்துகொள்ள முடியவில்லை.
எத்தனையோ நாட்களாக மனத்துக்குள் பெரும் துயரத்தையும் வேதனையையும் சுமந்துகொண்டிருந்தார். தன் மகன் செய்தவற்றையும், அவன் வாழ்க்கையில் நடந்தவற்றையும் தெரிந்திருந்தும் யாரிடமும் மனம்விட்டுப் பேச முடியாமல் தவித்திருந்தார்.
அப்படியொரு இறுக்கத்திற்குள் சிக்கியிருந்தவருக்கு, கோயிலில் சிவசுந்தரி அம்மாவைச் சந்தித்த அந்தத் தருணம் ஏதோ ஒரு வடிகாலாக அமைந்துவிட்டது.
இவரைப் போலவே அவரும் ஒரு தாய்தானே! இவரைப் போலவே தன் மகளின் வாழ்க்கைக்காக மிகுந்த வேதனையுடனும் ஆதங்கத்துடனும் தவித்துக்கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் முன்னால் நின்றுகொண்டு, தனக்குத் தெரிந்த உண்மைகளை மறைத்துப் பேச அவரால் முடியவில்லை. பாதி உண்மைகளை மட்டும் சொல்லிவிட்டு, மற்றவற்றை மனதுக்குள் புதைத்துக்கொள்ளவும் தெரியவில்லை.
ஆனால், அதைச் சொன்ன பிறகு சிவசுந்தரியம்மாவின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை அவரால் மறக்கவே முடியவில்லை.
இப்போது என்ன செய்வது? சிவசுந்தரியம்மா இதையெல்லாம் வருணாவிடம் சொல்லிவிடுவாரா? கலிங்கனுக்குத் தெரியவந்தால் என்ன நடக்கும்? அவர் மகனுக்குத் தெரிந்தால் அவன் எப்படி நடந்துகொள்வான்? கணவர்?
ஒன்றன்பின் ஒன்றாகக் கேள்விகள் மனதுக்குள் எழுந்தன.
கோயிலில் நின்றபோது இருந்த அந்தத் தைரியம் இப்போது கொஞ்சமும் இல்லை.
மனதுக்குள் இருந்த பாரத்தைக் கொட்டியதால் கிடைத்திருக்க வேண்டிய நிம்மதிக்குப் பதிலாக, இப்போது இன்னொரு புதிய பாரத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார் சாந்தகுமாரி அம்மா.

