அத்தியாயம் 56
மனைவியின் முகத்தைப் பார்த்ததுமே மதியழகனுக்கு ஏதோ பெரிதாக நடந்திருக்கிறது என்று புரிந்துவிட்டது. வழக்கமாக கோயிலுக்குச் சென்று வந்தால் சாந்தமாக இருப்பவர் இன்று கண்ணில் நீரைத் தேக்கி நிற்கவும் காரணம் கேட்டார்.
அதற்கு அவர் சொன்னவற்றைக் கேட்டபோது அப்படியே உறைந்துபோனார்.
கிட்டத்தட்ட ஒரு வருடமாக அவர்களைப் பற்றி அவர்களுக்கே தெரியாமல் விசாரித்து, அனைத்து விவரங்களையும் தெளிவுபடுத்திக்கொண்ட பின்னர்தான் அந்த வீட்டுக்கு மகளைத் திருமணம் செய்து கொடுப்பதற்குச் சம்மதித்திருந்தார்.
அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தின் பின்னால் இத்தனை ஆபத்துகளும், இத்தனை பொல்லாத மனிதர்களும், இருப்பார்கள் என்பதை அவரால் நம்பவே முடியவில்லை.
அதிலும், மகளுக்கு மாப்பிள்ளையாகப் பார்த்த மாறனே அவளைக் கொல்லும் அளவுக்குத் துணிந்திருக்கிறான் என்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தார்.
வரதன் இந்தளவுக்குக் கேவலமான மனிதனாக இருப்பான் என்பதையும் அவரால் நம்ப முடியவில்லை.
அதேநேரம், தங்களையும் மகளையும் கலிங்கன் தன் கட்டுப்பாட்டிலும் பாதுகாப்பிலும் வைத்திருப்பதற்குப் பின்னால், வரதனால் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்கிற எண்ணமாக இருக்குமோ என்று இன்றுதான் யோசித்தார்.
அப்படியானால் சமீபத்தில் வரதனைப் பற்றி வெளிவந்த அத்தனை மோசமான தகவல்களும் பொய்யில்லை.
தான் கேள்விகள் கேட்ட பொழுதுகளிலெல்லாம் கலிங்கன் விளக்கம் சொல்லாமல் இருந்ததற்குப் பின்னால், வரதனைப் பற்றி அவன் சொன்னால் அவர் நம்பப்போவதில்லை என்று எண்ணியது காரணமாக இருக்கலாம்.
என்ன சொன்னாலும் நம்பப்போவதில்லை என்கையில் எதற்குச் சொல்லவேண்டும் என்று நினைத்தானோ?
அவரால் எதையும் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை. எந்தவொரு முடிவுக்கும் வரவும் முடியவில்லை. அடுத்து என்ன செய்வது என்றும் புரியவில்லை.
தன்னால் மனிதர்களை படிக்க முடியும், கணிக்க முடியும் என்று இருந்த நம்பிக்கை மொத்தமும் நொடியில் அர்த்தமற்றதாகப் போய்விட்டதைப்போல் உணர்ந்தார்.
மதிப்பும் மரியாதையாக அவர்கள் வாழ்வதைக் கண்முன்னால் பார்த்து, நல்லவர்கள் என்று விசாரித்து நம்பிய குடும்பமே இத்தனை மோசமானதாக இருக்கிறது என்றால், ரவுடியான கலிங்கன் எப்படியானவனாக இருப்பானோ என்கிற பயம் இன்னும் அதிகமாய் அவரைக் கவ்விக் பிடித்தது.
தான் திருமணம் செய்யவிருந்த பெண்ணை வரதன் அபகரித்துக்கொண்டான் என்பதற்காகவே இத்தனை சாதுரியமாகத் திட்டமிட்டு, திருமண மண்டபத்துக்கே வந்து, வருணாவின் கழுத்தில் தாலி கட்டியவனாயிற்றே அவன்.
கலிங்கனைப் பற்றிய தனது பழைய எண்ணங்களை முழுமையாக மாற்றிக்கொள்ளவும் முடியவில்லை. அதேநேரம், அவனைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோமோ என்று ஓடிய எண்ணத்தை ஒதுக்கவும் முடியவில்லை.
இவற்றையெல்லாம் மகளிடம் சொல்வதா, வேண்டாமா என்கிற குழப்பம் வேறு. மறைப்பது சரியாக இருக்காது என்று புரிந்தாலும், இத்தனை விஷயங்களையும் அவளிடம் எப்படிச் சொல்வது என்பதுதான் அவருக்குப் பெரிய கேள்வியாக இருந்தது.
*****
சாந்தகுமாரி அம்மா கோயிலிலிருந்து வீடு திரும்பியதிலிருந்தே ஒருவிதப் பதற்றத்துடனேயே இருந்தார். நடந்தவற்றை மறைப்பது தவறு என்று மனசாட்சி உறுத்திக்கொண்டிருந்ததில், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கோயிலில் நடந்தவற்றைக் கணவரிடம் தெரிவித்தார்.
அதைக் கேட்ட விஜயராஜனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“ஏற்கனவே ஓராயிரம் பிரச்சினைகளோட போராடுறம். இப்ப இது வேறயா? எதுக்குத் தேவையில்லாத வேலையெல்லாம் செய்யிறாய்? உனக்கென்ன விசர் பிடிச்சிருக்கா?” என்று அவர் சத்தம் போட்டார்.
அவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்டுக்கொண்டிருந்த மாறன் வெளியே வந்தான்.
“விடுங்கப்பா. எப்பிடியும் ஒரு நாள் எல்லா உண்மையும் தெரியத்தான் போகுது. அது இண்டைக்கே தெரிஞ்சிட்டுப் போகட்டும். செய்த பிழைக்கு அனுபவிச்சது காணாது எண்டா இன்னும் பட்டுட்டுப் போறன்” என்றான் கசப்புடன்.
மிகுந்த வேதனையுடன் மகனைப் பார்த்தார் விஜயராஜன். அதே நேரத்தில் இனி இந்த விடயம் குறித்த எதுவும் தன் கையில் இல்லை என்பதும் அவருக்குப் புரிந்தது.
“இதெல்லாம் போலீஸுக்கு எப்பிடித் தெரிய வந்தது எண்டு இன்னும் தெரியவே இல்லை தம்பி. நானும் என்னால முடிஞ்சவரைக்கும் விசாரிச்சுக்கொண்டுதான் இருக்கிறன். கண்டுபிடிக்கவே முடியேல்ல.”
மாறன் அவரைப் பார்த்துக் கசப்பாகச் சிரித்தான்.
“உங்களுக்கு இதில சந்தேகம் வேறயாப்பா? ஆரை எங்க அடிச்சா அடங்குவினம் எண்டு தெரிஞ்சவன் உங்கட தம்பி. உங்கட பலவீனம் நான். என்னை மாட்டிவிட்டு, உங்களை அவனிட்ட வரவச்சு, சொத்துப் பிரச்சினையைப் பற்றி வாயே திறக்கேலாத அளவுக்கு உங்களை மாத்தியிருக்கிறான்.”
இதுதானே விஜயராஜனின் சந்தேகமும். செய்த தப்பும், பட்ட அடிகளுமாகச் சேர்ந்து மகன் மனிதர்களைப் படிக்க ஆரம்பித்துவிட்டான் என்பதை வேதனையோடு உணர்ந்தார்.
“கலிங்கன் எல்லாம் போலீஸுக்குப் போறவன் இல்ல அப்பா. குள்ளநரியான உங்கட தம்பின்ர கண்ணுக்குள்ளையே விரலை விட்டு ஆட்டுறவன். என்னை ஒண்டும் செய்யேலாம போலீஸில சொல்லிக்குடுப்பானா? நான் எல்லாம் அவனுக்கு ஒண்டுமே இல்ல.” என்றான் மாறன்.
தன் தேவைக்காகச் சொந்த அண்ணனையும், அண்ணன் மகனையும் பணயம் வைக்கத் தயங்காத அளவுக்கு வரதனுக்குள் சுயநலமும் குரூரமும் ஊறிப்போயிருக்கிறது என்பதை மிகுந்த வலியோடு உணர்ந்தார் விஜயராஜன்.
சரியாக அந்த நேரத்தில் மதியழகன் விஜயராஜனுக்கு அழைத்தார். மனைவியையும் மகனையும் ஒருமுறை பார்த்துவிட்டு அழைப்பை ஏற்றார் விஜயராஜன்.
மதியழகன் அவரை ஒரு வார்த்தைகூடப் பேசவிடவில்லை. இத்தனை நேரம் மனத்துக்குள் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் அத்தனையையும் வார்த்தைகளாகக் கொட்டித் தீர்த்தார்.
“உங்களை எல்லாம் நம்பி என்ர மகளைத் தர நினச்சதுக்கு நல்ல பாடம் படிப்பிச்சிருக்கிறீங்க என்ன? உங்கட மகனுக்கு எவ்வளவு தைரியம்? என்ர பிள்ளைய கொல்லுற அளவுக்குப் போயிருக்கிறானே. வாற ஆத்திரத்துக்கு ஊரைக் கூட்டி உங்கட கேடு கேட்ட குணங்களை அம்பலப்படுத்தட்டோ எண்டு இருக்கு.
நீங்க எல்லாம் சாக்கடைகள். ஒரு ரவுடிட்ட என்ர பிள்ளை மாட்டிட்டாவே எண்டு இவ்வளவு நாளும் அழுதுகொண்டிருந்தன. இப்பதானே தெரியுது, என்ர பிள்ளை இந்த கேடுகெட்ட குடும்பத்திட்ட இருந்து தப்பிட்டா எண்டு. என்ர பிள்ளைய கொல்ல பாத்தா உங்கட மகன் நல்லாவே இருக்க மாட்டான்!”
அடக்கி வைத்திருந்த ஆத்திரம் முழுவதையும் கொட்டித் தீர்த்துவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தார் மதியழகன்.
*****
அதிர்ச்சி என்பதெல்லாம் சாதாரண வார்த்தை என்று சொல்லுமளவுக்கு உறைந்துபோயிருந்தாள் வருணா.
உயிராக நம்பிய நண்பனாலும், எதிர்காலத் துணையாக நினைத்த பெண்ணாலும் அவன் சந்தித்த துரோகங்களை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.
அதையறிந்த நேரம் எப்படி நிலைகுலைந்து போயிருப்பான்? அதற்குப் பிறகும் அவன் உயிரைப் பறிக்கத் துணிந்திருக்கிறார்கள் என்றால் எப்படியானவர்கள் அவர்கள்? இப்படியுமா மனிதர்கள் இருப்பார்கள்? இது எல்லாம் அவள் கற்பனைக்கும் அப்பாற்றப்பட்டதாக இருந்தது.
அன்று, தன்னில் யாராவது கை வைக்க முடியுமா என்று கேட்டானே. சாதாரணமாக வைக்க முடியாது என்றுதான் இத்தனை பெரிய துரோகங்களைச் செய்து, அவனை நிலைகுலைய வைத்து, அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உயிரையும் பறிக்கப் பார்த்திருக்கிறார்கள்.
அந்த நேரத்தில் உடலாலும் மனத்தாலும் எத்தனை வேதனைகளை அனுபவித்திருப்பான்? அதையெல்லாம் தன் வலியாக உணர்ந்து கண்ணீர் வடித்தாள் வருணா.
அதே நேரத்தில் அவன் ஏன் இதையெல்லாம் அவளிடம் மறைத்தான் என்பதும் சேர்ந்து வாட்டியது.

