அத்தியாயம் 57
முதல் நாள் இரவு எப்போது உறங்கினாள் என்று வருணாவுக்கு நினைவே இல்லை. ஆனால், அன்று காலையில் அவள் விழித்தபோது அவளைத் தன் கையணைப்பில் வைத்தபடி படுத்திருந்தான் அவன்.
முதலில் இயல்பாகவே சின்ன முறுவலோடு அவனோடு தானும் ஒன்ற முயன்றவள், அடுத்த கணமே முதல் நாள் நினைவுகள் மனத்தில் எழுந்ததும் அப்படியே சிலையானாள்.
திரும்பி அவனைப் பார்த்தாள். அதுவரை அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், அவள் தன்னை நோக்குவதைக் கண்டதும் அவளை இறுகக் கட்டிக்கொண்டு, அவள் மார்பில் முகம் புதைத்தான்.
அவள் உள்ளத்திலும் ஏதோ ஒன்று உடைந்தது. அவன் மீது கொண்டிருந்த உயிர்நேசம் அவனுக்காகவும் சேர்ந்து பரிதவித்தது. தன்னை மறந்து அவனுடைய பிடரிக் கேசத்துக்குள் விரல்களை நுழைத்து, அவனை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று சொல்வதைப் போன்று தன்னோடு சேர்த்து இறுக அணைத்துக்கொண்டாள். அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
அவளால் அவனை வெறுக்கவே முடியாது. அதேநேரம் முன்புபோல நேசத்தோடு நெருங்கவும் முடியவில்லை. தன்னை இப்படி ஒரு நரகத்துக்குள் தள்ளிவிட்டானே என்கிற ஆற்றாமை தாங்காமல் கண்ணீரை உகுத்தாள்.
அவள் அழுகை மெல்ல மெல்ல ஆத்திரமாக மாறியது.
அவன் பிடரிமுடியைப் பற்றி, அவன் முகத்தைத் தன்னிடமிருந்து விலக்கி, அவன் விழிகளுக்குள் பார்த்தாள்.
“இதே மாதிரி அவளோடயும் இருந்திருப்பீங்கதானே?”
அவன் அப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவேயில்லை போலும். அதிர்ந்து அவளைப் பார்த்தான்.
அவள் இதழ்கள் நடுங்கின. கண்ணீர் கரகரவென்று வழிந்தது. “ஒரே வீட்டுல ஒண்டா இருந்திருக்கிறீங்க. என்னோட இருந்த மாதிரியே எல்லா விதத்திலயும் அவளோடயும் இருந்திருப்பீங்கதானே?” என்றாள் கண்ணீரோடு.
“சொல்லுங்க கலிங்கா. அப்பிடி எதுவுமே நடக்கேல்ல எண்டு சொல்லுங்க ப்ளீஸ்!” அவள் உடைந்து அழுதாள்.
அவனோ விழிகளைச் சிமிட்டக்கூட விரும்பாதவனைப் போல அவளையே பார்த்திருந்தான்.
அவனுடைய அந்த மௌனம் அவளுக்குள் எண்ணற்ற மோசமான கற்பனைகளை விரித்துவிட்டது. ஒவ்வொரு கற்பனையும் அவள் நெஞ்சைக் கிழிப்பதுபோல இருந்தது. அவளுக்குள் இருந்த காதலும் உரிமையும் பொறாமையும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.
ஆனால், அவன் எதுவுமே பேசவில்லை. அவள் பார்வையை எதிர்கொண்டபடியே மௌனமாக இருந்தான்.
அவனுடைய அந்த மௌனம் அவளின் ஆத்திரத்தை மேலும் அதிகரித்தது. அவள் கேட்ட கேள்விகளுக்கான பதிலை அவனின் அந்த அமைதியே சொல்லிவிடுவது போலத் தோன்றியதில்
மனம் கோபத்தில் கொந்தளித்தது.
அப்படியெல்லாம் அந்தப் பெண்ணோடு வாழ்ந்துவிட்டு இப்போது அவளை நெருங்கவும், கொஞ்சவும் இவனுக்கு எப்படி மனம் வந்தது? என்ன தைரியம் இருந்தால் அவளைத் தொட்டிருப்பான்?
“சீ… போங்க! என்ர முகத்தில கூட முழிக்காதீங்க. எனக்கு உங்கட முகத்தைப் பார்க்கவே விருப்பமில்லை. போங்க! என்னை விடுங்க!” என்று அவனை உதறித் தள்ளிவிட்டு எழுந்து, அடுத்த கணமே குளியலறைக்குள் ஓடினாள்.
கதவைச் சாத்திக்கொண்டு விம்மி விம்மி அழுதாள். அவளால் எதையுமே ஜீரணிக்க முடியவில்லை. இந்தக் காலத்தில் காதல் முறிவதும், இன்னொருவருடன் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதும் சாதாரணமான விஷயங்கள்தான். இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றெல்லாம் அவள் அறிவுக்குப் புரியாமலில்லை. இரவு முழுக்க அதற்குத்தான் போராடிக்கொண்டிருந்தாள்.
ஆனால், உணர்வுகள்… அவனோடு இரண்டறக் கலந்துவிட்ட அந்த உணர்வுகள் துடியாய்த் துடித்தன. அவற்றை அப்படியே ஒதுக்கிவிட்டு, எதுவுமே நடக்காததுபோல இருக்க அவளால் முடியவில்லை.
அவன் வேறு அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சொல்லவில்லையே! முகத்தைக் கழுவித் துடைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
அப்போது அவன் எழுந்து அமர்ந்திருந்தான். அவள் வெளியே வருவதைக் கண்டதும் அவன் பார்வை உடனே அவளிடம் பதிந்தது. அவளின் சிவந்த கண்களும், அழுததால் வீங்கிய முகமும் அவனுக்குள் வலியை ஏற்படுத்தின.
அவளை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் முதன்முறையாக அவன் மனத்தை இறுக்கிப் பிடித்தது.
அவன் பார்வை தன்னைத் தொடர்வதை வருணா உணராமல் இல்லை. மீண்டும் கண்கள் கலங்கி, முகம் சிவந்துகொண்டு வந்தது. ஆனாலும் அவனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் கீழே இறங்கிச் சென்றாள்.
இப்போதெல்லாம் அவனுக்கும் அவளுக்குமான தனிமையை இருவருமே விரும்புவதால், வருணா அழைக்காமல் ராசம்மா அங்கே வருவதில்லை. அதனால் வீட்டில் அவர்கள் இருவரையும் தவிர வேறு யாரும் இல்லை.
சமையலறைக்குள் சென்று தேநீர் தயாரிப்பதற்கான பாத்திரங்களை எடுத்தாள். அவள் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர்தான் முதலில் வழிந்தது. இத்தனை நாள்களும் அவனுக்கும் சேர்த்து ஊற்றி எடுத்துக்கொண்டு மேலே போவாள். இன்றைக்கு அவளுக்கு மட்டும் தேநீர் ஊற்றிக்கொள்ள மனம் வரவில்லை.
சமையல் மேடையைப் பற்றிக்கொண்டு அப்படியே நின்றாள். அவளால் அவள் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டுவரவே முடியவில்லை. அப்போது இரண்டு கைகள் அவளை பின்னிருந்து வேகமாக அணைத்தன. அவன் முகம் அவள் கழுத்து வளைவில் புதைந்தது.
ஒரு கணம் மொத்தமாய் நொறுங்கினாள் வருணா. அவள் உணர்வுகள் அத்தனையும் அவன் புறமாய் வெடித்துச் சிதறின. அவன் கைகளுக்குள் அடங்கி, ஏன் இப்படி எல்லாம் செய்தாய் என்று கேட்டு, வெடித்து அழவேண்டும் போலாயிற்று.
ஆனாலும் அடக்கிக்கொண்டாள். எடுத்த பாத்திரத்தை அப்படியே வைத்துவிட்டு, அவன் கைகளையும் உதறிவிட்டு வெளியே வந்தாள்.
வேகமாகப் படிகளில் ஏறினாள்.
க்ளிக்!
அந்தச் சத்தத்தில் சட்டென்று நின்று திரும்பிப் பார்த்தாள் வருணா.
அங்கே கீழே விறாந்தையில் நின்று சிகரெட்டை உதடுகளுக்கிடையில் வைத்திருந்த கலிங்கன், லைட்டரால் அதற்குத் தீ மூட்டிக்கொண்டிருந்தான்.
அதைப் பார்த்ததும் அவளுக்குள் அத்தனை ஆத்திரம் பொங்கியது. செய்வதையெல்லாம் செய்துவிட்டு, அவள் மனத்தை இத்தனை தூரம் காயப்படுத்திவிட்டு, இப்போது அவள் முன்னாலேயே சிகரெட்டையும் பிடிப்பானா? அவனுக்கு அத்தனை திமிரா? அவள் கண்ணீரும் வேதனையும் அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று சொல்கிறானா?
அவன் இதற்குள் புகையை ஆழமாய் இழுத்து மூக்காலும் வாயாலும் வெளியேற்ற ஆரம்பித்திருந்தான். அதைப் பார்த்து நின்றவள் முகம் ஆத்திரத்தில் சிவந்தது. அதுவரை அடக்கி வைத்திருந்த கோபம் மொத்தமாக வெளிப்படத் தயாரானது.

