நட்சத்திரா 7 -1

மறுநாள், பத்து மணி போல் பபிதாவின் சினேகிதியின் தாய் வந்திருந்தார். பிள்ளைகளாகச் சேர்ந்து தம் வீட்டிலிருந்து  விளையாடப் போகிறார்கள் என்று, இவளையும் அழைத்தார். அவளும் குதூகலமாகக் கிளம்பிச் சென்றுவிட்டாள். எல்லாம் டேமியனின் ஏற்பாடுதான். அந்த நேரத்தில் வீட்டில் அனைத்து ஆயத்தங்களையும் செய்துவிடலாம் என்று கதைத்திருந்தார்கள்.

கல்யாணியும் விடுமுறை எடுத்திருந்தாள்.

கட்லெட், ரோல்ஸ், பருப்பு வடை  பொரித்தெடுக்க வேண்டும்.  கரட் கேக், மேலே கிரீம் சீஸ் சோஸ் போட்டும்  சொக்லட் பிரௌணியும் தயாரித்திருந்தாள். பேக்கரிகளில் கொடுப்பதுபோல் வடிவான சதுர வடிவிலான  பெட்டிகளில் உறங்கிக்கொண்டிருந்தன.

இனிப்புச் சுருள் பான்கேக், வட்டிலப்பம் கூடத்  தயார்.

  புரூட் சாலட் மட்டும் மாலையில் போட்டுக்கொள்ளலாம் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள்.

 என்ன என்ன பிளேவர் என்று சொல்லி,  ஐஸ் கிரீம் வாங்கி வைத்தாகிற்று.

விருந்தினராக வருகிற பிள்ளைகளுக்கு வழங்கவென்று இனிப்புகளும் சிறு உருவங்களும் குக்கிகளும் பேனை பென்சில்களுக்குமாக இட்ட பைகள் என்று, ஒன்று ஒன்றையும் பார்த்துத் தயாராக்கி வைத்தாள்.

 பிள்ளைகளுக்கான ஆடைத் தெரிவும்  அவள் பொறுப்பாக இருந்தது. வாங்கி வைத்திருந்தவள் அதையும் எடுத்துக்கொண்டு,  பெரியவள் சென்ற கையோடு வரவேற்பறையைச் சோடிப்போம் என்று வந்தாள். சிறியவர்கள் இருவரும் உதவிக்குத் தயாராக நின்றார்கள்.

அந்நேரம், பெரிய பெட்டி ஒன்றை எடுத்து வந்து வைத்தான், டேமியன். முகம் இறுகிப் போயிருந்தது. 

“சோடனைக்குத் தேவையான எல்லாமே  இதில இருக்கு .” என்று, முகம் பாராது, அந்தப் பெட்டியைப் பார்த்துக்கொண்டு அவன் கதைத்த விதம் கல்யாணிக்கு  வித்தியாசமாக இருந்தது.  

 பிள்ளைகள் இருவரையும் பார்த்தாள். பெரிய மனிதத்  தோரணையில், தமக்கு எதுவும் தெரியாதென்று தோள்களை ஏற்றியிறக்கி, உதட்டைப் பிதுக்கினார்கள்.  

“பியங்கா… எல்லாத்தையும் எப்பவுமே தயாரா வச்சிருப்பாள்.” மெல்லச் சொன்னவன் கரம் அந்தப் பெட்டியை மென்மையாக வருடியது. மறுநொடியே அவ்விடம் விட்டு அகன்று விட்டான்.

 அப்போதுதான் மனைவியின் நினைவில் அப்படி இருந்தான் என்று விளங்கியது. ஆறுதல் சொல்ல இயலுமா என்று தெரியவில்லை. ஆனாலும் “போய் பப்பாவையும் கூட்டிக்கொண்டு வாங்கோ, சோடிப்பம்.” என்று பிள்ளைகளை அனுப்பி வைத்தாள். 

சிறிது நேரத்தால் வருவதாகச் சொன்னானாம்.

பிள்ளைகள் பலூன்களை ஊத , கேக் வெட்டும் மேசைக்குப் பின்னால் சோடனையைச் செய்தாள், கல்யாணி. சிறிது நேரத்தால் வந்து இணைந்து கொண்ட டேமியன், ஆங்காங்கே பலூன்களைக் கட்டி மின்னிக் கடதாசிகளைத்  தொங்க விட்டான்.

நிமிடங்கள் உருள உருள, பிள்ளைகளோடு கதை சிரிப்பென்று ஆழ்ந்துவிட்டாலும் அண்மைய நாட்களில் மீண்டிருந்த இளக்கம் காணாமல் போயிருந்தது. மனத்தில் இருந்து சிரிக்கிறானா என்றால் அப்பட்டமாக இல்லையென்று தெரிந்தது.

இடையில் சமையலறைக்குள் புகுந்துகொண்டவன், வெளிவருகையில் இரு கோப்பிக்கோப்பைகளும் இரு மில்க்க்ஷேக்குகளும் தட்டில் இருந்தன.

ஆளும் சற்றே தேறியிருந்தான். 

கல்யாணியின் பார்வையில் ஆராய்ச்சியைக் கண்டவன், “என்ன அப்பிடிப் பார்க்கிறீங்க?” என்று கேட்டுத் தடுமாற வைத்தான். 

“நினைவுகள் நாங்க போற வேகத்துக்குக் கூடவே வரும் என்ன? தட்டிக்கழிச்சிட்டுப் போறது எண்டுறது அவ்வளவு சுலபம் இல்ல. என்ன சொல்லுறீங்க?” என்று கேட்டு, பதிலே சொல்லாதவளின் வாயைத் திறக்க வைக்க நினைத்தான், டேமியன். அது எங்கே?

“ம்ம்” என்றவள் நினைவு மீண்டும் யாழ்ப்பாணம் செல்ல தலையை உலுக்கிக்கொண்டாள். டேமியன் பதிலுக்குக்  காத்திருக்கிறானோ? அவனைப் பார்த்தாள். புருவம் உயர்த்தினான். காத்துத்கொண்டுதான் இருக்கிறான்.

“அந்த நினைவுகளால எங்கட அன்றாட வாழ்க்க பாதிக்குது எண்டா, அதுபாட்டில இருந்திட்டுப் போகட்டும் எண்டு இலகுவில கடக்க நினைக்கக் கூடாது டேமியன். எங்கள அந்த நினைவுகள் ஆழாமல் பார்த்துக்கொள்ளோணும். அப்பத்தான் மிச்சம் இருக்கிற வாழ்க்கைய அமைதியா வாழேலும் .” என்று, தத்துவம் கதைத்தவளை,   கூர்ந்து  பார்த்தான் , அவன். சிறுமுறுவலோடுதான். அதில் சிறு நக்கல் கூடக் கலந்துவிட்டிருந்தது. 

ஊருக்குத்தான் உபதேசமோ என்று கேட்க உன்னிவிட்டு, “அதும் சரிதான். முயற்சி செய்யிறன் கல்யாணி.” என்றவன், அவள் விழிகளைப் பார்த்து,  கடந்தகாலத்தை மறக்க, அதன் ஆட்சியிலிருந்து மீண்டிட நீயும் முயல்கிறாயோ என்று கேட்க விரும்பினான். எதுவோ ஒன்று தடுத்தது.  

உன் கதை எனக்குத் தெரியும் கல்யாணி என்றவகையில் அவளோடு கதைக்க நினைத்தாலும் முடிவதில்லை. என்னதான் நட்போடு பழகினாலும் தன் தனிப்பட்ட விடயமென்று எதையுமே, இதுவரை அவள் கதைக்க முனைந்ததில்லையே! அதுவே, ஒரு தடித்த எல்லைக்கோட்டின் அப்பால் அவனை நிறுத்திவிட்டிருந்தது. 

அந்தப் பெரிய வரவேற்பறை, எளிமையான சோடனையில் இன்னமும் நேர்த்தியும் வடிவுமாகக் காட்சி தந்தது. டேமியன் வாங்கிவந்த மலர்களை, நீர் நிறைத்த கூசாக்களில் அழகுற அடுக்கி அங்கங்கே வைத்துவிட்டு, ஒரு கையை இடுப்பில்  ஊன்றியபடி நின்று விழிகளைச்  சுழற்றி ரசித்தாள், கல்யாணி.

 டேமியன் பார்வையில் அது விழுந்தது. அவள் முகத்தில் இருக்கும் இச்சிறு மகிழ்வு, இன்னும் இன்னும் அதிகரித்து அவள் மகிழ்வோடு வாழ வேண்டும் என்று எண்ணிக்கொண்டான், அவன். அக்கணம் அவள் பற்றி இப்படி யோசித்தது…அது ஒரு பெயரிடப்படாத பாசத்தின் வெளிப்பாடு! அதையும் அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது. பிள்ளைகளோடு கதைத்துக்கொண்டே அவள் பார்வை இவன் புறம் திரும்புவது போலிருந்தது. 

டேமியனோ,  மீண்டும் சமையலறைக்குள் உள்ளிட்டுவிட்டான். பிள்ளைகள் இருவரும் கல்யாணியுமாக வரவேற்பறையைச்  சுத்தப்படுத்திவிட்டார்கள். தட்டுகள்,கரண்டி, கத்தி என்று எடுத்துவைத்துவிட்டு வர, மதியத்துக்கு ‘சூப்’ செய்திருந்தான், டேமியன் . 

ஒன்றாக அமர்ந்திருந்து கலகலத்தபடி குடித்தார்கள்.

டேமியனுள் புதியதொரு இதம், சுட சுட உறிஞ்சிய சூப்போடு கலந்து உள்ளே சென்றது.  நண்பியாக இருந்த கல்யாணியை அவனையும் மீறி அடிக்கடி  நாடின, விழிகள். நீண்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு, அந்த வீட்டில் இதத்தின் மென் வாசமுணர்ந்தான், அவன்.

பிள்ளைகள் சற்றே ஓய்வுக்குச் செல்ல, பொரிக்க வேண்டியவற்றை வெளியே பிரைஸ் பானில் இட்டுப்  பொரித்தெடுத்து, வெதுவெதுப்பாக இருந்த ஓவனில் வைத்தாள், கல்யாணி.

கடைசியாக ரோல்ஸ் பொரித்துக்கொண்டிருக்கையில் டேமியனின் நண்பர்கள் ஐந்து பேர் வந்துவிட்டார்கள். நால்வர் இத்தாலி நாட்டினர், ஒருவன் சிங்களம். 

சுனிமல். சிலோன் டேஸ்ட்டில் தான் உணவு உண்பானாம். காலை,மதியம் தங்கள் உணவை இரசித்து உண்பவன் என்று சுமதி வாயில் அப்பப்போ இவன் பெயர் அடிபட்டுக்கொண்டிருக்கும். 

சற்றே தள்ளி நின்று, சிரிப்பும் கதை பேச்சுமாக அவர்கள் கலகலக்க, விறுவிறுவென்று வேலையை முடித்துவிட்டு உள்ளே ஓடும் அவசரம் கல்யாணிக்கு.

அது ஏனோ, வேலையிடத்தில் எவரென்றாலும் நிமிர்வாக எதிர்கொள்பவளுக்கு, இப்படியான வேளைகளில் ஒரு தயக்கம். குறிப்பாக, நட்போடும் சுவாரசியத்தோடும்  அணுகுபவர்களிடம் எவ்விதமான கதை பேச்சுகளையும் வளர்க்க அவள் விரும்புவதில்லை. விதிவிலக்கு என்றால் டேமியன் மட்டுமே!

அப்படியிருக்க, வந்த நண்பர்கள் இவளைக்காட்டிக்  கதைத்ததைக் கண்டவள் தன் வேலையைத் துரிதப்படுத்தினாள்.

அந்நேரம், “பொரிச்சு முடியுதா கல்யாணி?” என்று வந்த டேமியன்,  “என்னோட ஒருக்கா வாங்கவன்.” என்று சொல்லி, அவள் கரம் பற்றியபடி நண்பர்களை நோக்கி நடந்தான்.

 அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முதல், தன் கரம் பற்றி நடக்க, உண்மையில் கல்யாணி அதிர்ந்துதான் போனாள். சிலகணங்கள் தான், “வாறன், கைய முதல் விடுங்க டேமியன்.” சிடுசிடுத்திருந்தாள். உதறி விடுவிக்க எவ்வளவு நேரமெடுக்கும்? அவன் நண்பர்கள் பார்வையில் அதைச் செய்ய முடியவில்லை.

அவனுக்கோ, கையை விடு என்றது  செவிகளுள்  நுழையவில்லை போலும். அவள் சிடுசிடுப்பும்  கருத்தில் பதியவில்லை.  பற்றிய கரத்தை நண்பர்களின் முன்னால் சென்றுதான் விடுவித்தான்.

மறுநொடியே, கல்யாணி தன்னுடைய நல்ல நண்பி என்று அறிமுகம் செய்து வைத்தான். அவன் செய்கையில் சினமூற வந்து நின்ற கல்யாணியின்  பார்வை அவன் முகத்தில்தான்.

 

error: Alert: Content selection is disabled!!