கலிங்கனின் காவியம் 57.2

ஏறியதை விடவும் வேகமாக இறங்கி வந்தவள் அவன் வாயிலிருந்த சிகரெட்டைப் பறித்துத் தூர எறிந்துவிட்டு, பளார் என்று அவன் கன்னத்தில் ஓர் அறை விட்டாள்.

அவனோ நிமிர்ந்து அவளைப் பார்க்கக் கூட இல்லை. அடுத்த சிகரெட்டை எடுத்து வாயில் வைத்து, மீண்டும் கிளிக் என்ற ஓசையுடன் தீயைப் பற்ற வைத்தான்.

மறுகன்னத்திலும் பளார் என்று அறைந்தாள் வருணா. அவன் வாயிலிருந்த சிகரெட் பறந்து தூரத்தில் விழுந்தது.

அப்போதும் அவன் அடங்கவில்லை. அடுத்த சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தான்.

மீண்டும் ஒரு அறை!

அதற்கும் அவன் அசரவில்லை. இன்னொன்றை எடுத்துப் பற்ற வைக்க முயன்றான்.

வருணாவுக்குப் பொறுமையே போய்விட்டது. இரண்டு கைகளாலும் அவன் கன்னங்களில் மாறி மாறிப் பளார் பளார் பளார் என்று அறைந்தாள்.

அவளுக்கு அத்தனை கோபம்! அவன் புகைப்பதைவிடவும் அவளுடைய மனதைப் போட்டு வருத்திக்கொண்டிருந்ததும், அவளை உள்ளுக்குள் ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்ததும் வேறொன்று.

அந்த ஆத்திரத்தை மொத்தமாய் அறைந்து தீர்த்தாள்.

ஆனால், அவள் அறைகிற வரைக்கும் வாங்கிக்கொண்டு நின்றவன் அவள் நிறுத்தியதும் மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் பொருத்தினான்.

இதை வருணாவே எதிர்பார்க்கவில்லை. அவள் கைகள் இரண்டும் பச்சைப் புண்ணாக எரிந்தன. அப்படியிருக்க அவனுக்கு எப்படி இருக்கும்? அவன் வாயில் பொருத்திய சிகரெட்டை ஆத்திரத்துடன் பறித்து எறிந்தாள்.

அவன் அடங்குவதாக இல்லை. மறுபடியும் எடுத்து வாயில் பொருத்தினான். மீண்டும் அவள் பறித்து எறிந்தாள். அவன் அடுத்ததை பொருத்தினால்.

வருணாவுக்கு மறுபடியும் ஆத்திரமும் அகங்காரமும் கட்டுக்கடங்காமல் பெருகியது. பளார் பளார் என்று திரும்பவும் அவனுக்குக் கன்னம் கன்னமாக அறைந்தாள்.

அவளால் முடியவேயில்லை. அவள் ஓய்ந்தபோது அவன் மீண்டும் சிகரெட்டை எடுக்கப்போனான்.

வருணாவினால் அதற்குமேல் முடியவேயில்லை. அவன் சட்டையைப் பற்றி, “என்னடா வேணும் உனக்கு? என்ன வேணும்? இல்ல, நீ என்ன சொல்லுறது, நான் என்ன கேக்கிறது எண்டு காட்டுறியா எனக்கு? நல்லா பத்து! நாசமா போ! எனக்கு என்ன வந்தது? ஆனா ஒண்டு, இனி ஒவ்வொரு முறையும் நீ எரிக்கப்போறது அந்த சிகரெட்டை இல்ல. என்னை. என்னைத்தான் எரிக்கிறாய். நல்லா எரி! எரிச்சப்போட்டு நல்லா இரு!” என்று அவள் கத்தியபோது அவன் கைகளில் இருந்த சிகரெட் பேட்டியும் லைட்டரும் தரையில் விழுந்தன.

ஒரு கணம் அவனை அதிர்ந்து பார்த்த வருணா, “போடா!” என்றுவிட்டு வேகமாய் மாடியேறினாள்.

அவள் நிதானத்திலேயே இல்லை. கைகள் இரண்டும் என்னவோ நெருப்பிலேயே வைத்ததை போன்று நன்றாக எரிந்தன. என்ன செய்வதென்றே தெரியாமல் குளியலறைக்குள் புகுந்து, நீர்க்குழாயைத் திறந்துவிட்டு அதன் கீழே நின்றாள்.

எவ்வளவு நேரம் அப்படியே நின்றாளோ தெரியாது. வெளியே வந்து அங்கிருந்த நைட்டியை அணிந்துகொண்டு அறைக்குள் வந்தபோது, அவள் கட்டிலில் அமர்ந்திருந்தான் அவன்.

முழங்கால்களில் கைகளை ஊன்றி, விரல்களைக் கோர்த்தபடி தரையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

வருணா அப்படியே நின்றாள். அவனையே பார்த்தாள்.
அவன் கன்னத்தில் சிவந்து தடித்திருந்த பகுதியைக் கண்டதும் அவளுடைய நெஞ்சுக்குள் சுளீரென்று வலித்தது. கண்கள் கலங்கின. இதழ்கள் துடித்தன.

அதேநேரம், இத்தனைக்கும் காரணம் அவன்தானே என்ற ஆத்திரமும் மீண்டும் தலைதூக்கியது. தன்னை ஏமாற்றிவிட்டானே என்ற வலியும் சேர்ந்து அவளை அலைக்கழித்தது.

இங்கேயே இருந்தால் இன்னும் இன்னும் அவனைக் காயப்படுத்திவிடுவோம் என்பது அவளுக்குப் புரிந்தது. எதையும் நிதானமாக அணுக வேண்டும் என்று அறிவு எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால், உணர்வுகளோ கட்டுக்கடங்காமல் கொந்தளித்துக்கொண்டிருந்தன. அவளால் அந்த நிதானத்தைக் கடைப்பிடிக்க முடியவில்லை.

“எனக்கு எங்கட வீட்டை போகோணும்! என்னைக் கொண்டு போய் விடுங்க.”

அவளுடைய அறிவிப்பைத் தொடர்ந்து அந்த அறையில் பலத்த அமைதி நிலவியது. சில கணங்களுக்குப் பிறகு, “நீ எங்கையும் போகேலாது” என்றான் அவன்.

அவனைப் பார்த்தாள் வருணா. அவனிடம் எந்த அசைவும் இல்லை. இன்னமும் தரையையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய பார்வையில் கூட மாற்றம் தெரியவில்லை. ஆனாலும், அவளுடைய வார்த்தைக்குப் பதில் சொல்லியிருந்தான்.

அவளுக்குள் மீண்டும் ஆத்திரம் சுருசுருவென ஏறியது.
விறுவிறுவென்று அவனுக்கு முன்னால் போய் நின்றவள், அவனுடைய தாடையைப் பற்றித் தன் பக்கம் திருப்பினாள்.

“ஏன் போகேலாது? நான் போவன். போகத்தான் போறன். இப்ப உடுப்ப மாத்திக்கொண்டு வருவன். என்னைக் கூட்டிக்கொண்டு போய் விட்டுட்டு வாறீங்க. அவ்வளவுதான் கதை! விளங்கினதா?”
என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு விறுவிறுவென்று உடையை மாற்றினாள்.

அவன் எழுந்தானா, அவளைப் பார்த்துக்கொண்டிருந்தானா என்றெல்லாம் திரும்பிப் பார்க்கவில்லை. தலைக்குக் குளித்த ஈரத்தைக் கூட ஒழுங்காகத் துவட்டிக்கொள்ளவில்லை. அப்படியே சொட்டிக்கொண்டிருந்த கூந்தலுடன் கைப்பேசியையும் பர்ஸையும் மட்டும் எடுத்துக்கொண்டு வந்து அவன் முன்னால் நின்றாள்.

அவன் இப்போதுதான் தலையை உயர்த்தி அவளைப் பார்த்தான்.

“வாங்க. மரியாதையா.” என்றுவிட்டு, அவனுடைய பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் அறையைவிட்டு வெளியேறி, படிகளில் வேகமாக இறங்கிச் சென்றாள்.
சில கணங்கள் அசையாமல் இருந்த கலிங்கன் நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு எழுந்து அவளைப் பின்தொடர்ந்து சென்றான்.

அவள் வீட்டின் முன்னால் கொண்டுபோய் காரை நிறுத்தினான் அவன். கதவைத் திறந்து இறங்கப்போனவள், ஏதோ நினைத்தவளாக ஒரு கணம் அப்படியே இருந்தாள். பின் அவன் பக்கம் திரும்பி, “என்னைத் தேடிக்கொண்டு இஞ்ச வரக்கூடாது. என்னைத் தொந்தரவு செய்யவும் கூடாது. இதையெல்லாம் மீறி என்னைத் தேடி வந்தீங்களோ, பிறகு தெரியும் சொல்லிட்டன்.” என்றுவிட்டு இறங்கி, கதவை ஓங்கி அறைந்து சாத்திவிட்டு வீட்டை நோக்கி நடந்தாள்.

அவன் அசையவில்லை. ஏதோ சிலைபோல் ஸ்டியரிங்கைப் பற்றியபடி அமர்ந்திருந்தான். அவன் பார்வை வட்டத்துக்குள் அவள் வீட்டின் வாசலை அடைவதும், அழைப்பு மணியை அழுத்திவிட்டு நிற்பதும் தெளிவாகத் தெரிந்தன.

வீட்டுக்குள் இருந்தவர்கள் கதவைத் திறக்க, அவள் உள்ளே நுழைந்தாள். கதவைத் திறந்தவர்கள் ஒரு கணம் அவளையும், வெளியே நின்றிருந்த அவன் காரையும் பார்த்தார்கள். அவளிடம் என்னவோ கேட்பதும் அவள் பதில் சொல்வதையும்
கவனித்துவிட்டு, அடுத்த கணமே காரைச் சீறிக்கொண்டு அங்கிருந்து செலுத்தினான்.

error: Alert: Content selection is disabled!!