கலிங்கனின் காவியம் 59.2

வாகனங்கள் கொடவுனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வந்து நின்றன. அவற்றிலிருந்து கைகளில் தடித்த மரக்கட்டைகள், இரும்புக் கொட்டான்கள், கம்பிகள் எனப் பலவிதமான ஆயுதங்களுடன் அவர்கள் இறங்கினர்.

அதுவே இந்தமுறை வரதன் அள்ளுகொள்ளையாக ஆட்களை இறக்கியிருக்கிறான் என்று சொல்லிற்று. கூடவே முடிந்தால் அவனையே போட்டுத்தள்ளும் முடிவுடன் வந்திருக்கிறார்கள் என்று கலிங்கனுக்குப் புரிந்துபோயிற்று.

உடனேயே காதில் கொழுவியிருந்த ப்ளூடூத் வழியாக ஆதிக்கு அழைத்தான்.

“ஆதி, நாங்க நினச்சமாதிரி வந்திருக்கிறாங்கள். நீ அங்கேயே இரு. ஒரே நேரத்தில ரெண்டு இடத்திலேயும் தாக்க பிளான் பண்ணியிருக்கலாம். கவனமடா!” எனும்போதே அவனுக்கு குரல் கரகாரத்துப்போயிற்று.

அவன் வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்கள் வந்துபோயிருக்கிறார்கள். ஆனால், அவன் வாழ்க்கையையே தனக்குள் அடக்கிக்கொண்டவள் அவளாயிற்றே. அந்த அவள் அவன் உயிராயிற்றே.

“அண்ணா நானும் வரவா?” ஆதி அவசரமாகக் கேட்டான்.

“ஆதி!” என்றவனின் ஒற்றை அதட்டல் அவனை அடக்கியது. “இஞ்ச நானே போதும் இவங்களுக்கு. அங்கதான் நீ நிக்கோணும். அவள் உனக்கு அண்ணி இல்ல. அம்மாக்குச் சமன். தப்பித்தவறி எனக்கு ஒண்டு நடந்தா, நீ இருக்கிறாய் எண்டுற நம்பிக்கைலதான் என்ர உடம்பு இந்த மண்ணில விழும்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான் அவன்.

ஆதி துடித்துப்போனான். அப்படி ஒன்று நடக்குமா இருந்தால் அதற்கு முதல் அவன் உடல் மண்ணில் விழுந்திருக்க வேண்டும். தோள்பட்டையால் கண்களைத் துடைத்துக்கொண்டு, அங்கே போடப்பட்டிருந்த காவலை இன்னும் பலப்படுத்தினான்.

அத்தனை பேரையும் மிகுந்த கவனத்தோடு இருக்கச் சொன்னான். அவனுக்கு நம்பிக்கையானவனை அழைத்து, மரமொன்றில் ஏறச் சொன்னான். தப்பித்தவறி எந்தத் திசையிலிருந்தாவது வாகனங்கள் வருணா வீட்டை நோக்கி வேகமாக வருவதைக் கண்டால், தன்னிடம் தெரிவிக்கும்படி சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டிருந்தான்.

காரணம் கலிங்கன் அதிகமான பாதுகாப்பை வருணாவுக்குத்தான் போட்டிருந்தான். இன்னும் சொல்லப்போனால் அது ஆதிக்குமான பாதுகாப்பு.

வருணா அவனுக்கு எந்தளவுக்கு இன்றியமையாதவள் என்பது வரதனுக்குத் தெரிந்திருக்குமா தெரியாது. ஆனால், ஆதி அவன் பெரும் சொத்து என்று நன்றாகவே தெரியும். அதனால்தான் வருணாவுக்கு ஆதியைப் பாதுகாபபுக்குப் போட்டு, ஆதிக்கு அவன் ஆட்களை போட்டிருந்தான்.

கோடவுனில் முதல் தாக்குதல் எதிர்பார்த்ததைவிட வேகமாகத் தொடங்கியது.

ஆனால் அவர்கள் எதிர்பார்த்த காட்சி அங்கே இருக்கவில்லை.
நான்கைந்து காவலாளிகளுடன் வெறுமையாகக் கிடக்கும் கொடவுன் என்று எண்ணிக்கொண்டு வந்தவர்களுக்கு, அங்கே ஒரு படையே அணிவகுத்து நிற்பதைக் கண்டதும் ஒரு கணம் தயக்கம் ஏற்பட்டது.

அவர்கள் நினைத்ததுபோல எளிதில் உள்ளே நுழைய முடியவில்லை. இருபுறமும் கடுமையான மோதல் வெடித்தது.
கூச்சல்களும், ஆயுதங்கள் மோதும் சத்தங்களும், ஓடிவரும் காலடிகளும் கொடவுன் முழுவதையும் ஆக்கிரமித்தன.

இது கலிங்கன் எதிர்பார்த்த தாக்குதல்தான் என்றாலும், வரதன் இத்தனை பெரிய எண்ணிக்கையில் ஆட்களைக் கொண்டுவந்திருப்பது அவன் கணிப்பைத் தாண்டியிருந்தது.

குறிப்பாக வெளியிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்தவர்கள் பயிற்சி பெற்றவர்கள் என்பது அவர்களுடைய தாக்குதல் முறையிலேயே தெரிந்தது.

ஆனால் கலிங்கன் பின்வாங்கவில்லை. அவனுக்குப் பின்னால் இருந்தது வெறும் தொழில் அல்ல. அவன் உழைப்பு, அவனை நம்பி நிற்கும் மனிதர்களின் வாழ்க்கை, அவன் உருவாக்கிய உலகம். அதனைச் சிதைக்க வருபவர்களிடம் தோற்றுவிட்டுப் பின்வாங்கும் எண்ணம் அவனுக்கு இல்லை.

எதிரிகளின் கூட்டத்திலிருந்த ஒருவன் மட்டும் மற்றவர்களை விடப் பெரும் மூர்க்கத்துடன் போரிட்டுக்கொண்டிருந்தான். மற்றவர்கள் அவனைப் பின்தொடர்ந்து நகர்வதைக் கவனித்த கலிங்கன், அவன்தான் அந்தக் குழுவின் தலைவன் என்பதைப் புரிந்துகொண்டான்.

அதுவரை பலரை எதிர்கொண்டு போரிட்டுக்கொண்டிருந்தவன், தனது கவனத்தை முழுவதுமாக அவன் மீது திருப்பினான்.
இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர்.

அவன் கலிங்கனின் தோளைக் குறிவைத்துத் தாக்கியபோது, அவன் சற்றே விலகி அந்தத் தாக்குதலைத் தவிர்த்தான். அடுத்த கணமே அவனது கையைப் பிடித்து இழுத்து நிலைதடுமாறச் செய்தவன், பலமாகத் தாக்கி அவனைப் பின்னால் தள்ளினான்.

மீண்டும் எழுந்து பாய்ந்தவனை இம்முறை முழு பலத்துடன் எதிர்கொண்டான். சில கணங்கள் இருவரும் மாறிமாறித் தாக்கிக்கொண்டனர். இறுதியில் கலிங்கனின் பலமான தாக்குதலைத் தாங்க முடியாமல் அந்த ஆள் நிலைகுலைந்து தரையில் விழுந்தான்.

அவன் எழுவதற்குள் கலிங்கன் அவனைத் தொடர்ந்து தாக்கி, மீண்டும் எழுந்து நிற்க முடியாதபடி வீழ்த்தினான். தங்களது தலைவன் வீழ்ந்ததைக் கண்டதும் வெளியூரிலிருந்து வந்திருந்த ஆட்களின் வேகம் தளர்ந்தது. அதுவரை ஒருங்கிணைந்து தாக்கிக்கொண்டிருந்தவர்கள் திசைதெரியாமல் சிதறினர்.

அவர்களை வழிநடத்த யாருமில்லாத நிலையில், கலிங்கனின் ஆட்கள் இன்னும் மூர்க்கமாக எதிர்த்தாக்குதல் நடத்தினர். இதற்குள் ஆதியும் வந்து சேர்ந்திருந்தான்.

பிறகென்ன? ஒரு மலையையே அசைக்க முடியாமல் அல்லாடியவர்கள் இன்னொரு மழையும் சேர்த்துக்கொண்டால்?

கொடவுனைச் சிதைக்க வேண்டும் என்கிற வெறியுடன் வந்தவர்கள், இப்போது தங்களைக் காப்பாற்றிக்கொண்டு அங்கிருந்து வெளியேறுவதிலேயே குறியாக இருந்தனர். அவர்களை மொத்தமாக விரட்டியடித்துவிட்டே ஓய்ந்தான் கலிங்கன்.

கொடவுன் பெரும் சேதத்தைச் சந்தித்திருந்தது. ஆனாலும் வந்தவர்களைத் தோற்று ஓட வைத்திருந்தான் கலிங்கன்.

error: Alert: Content selection is disabled!!