கலிங்கனின் காவியம் 6.1

அத்தியாயம் 6

திருகோணமலைத் துறைமுகத்தின் கட்டுப்பாட்டை முதலில் வரதனின் தந்தைதான் வைத்திருந்தார். அதன் பிறகு அது அவன் கைக்கு வந்திருந்தது. பரம்பரைப் பணக்காரன் என்பதில் பிறந்ததிலிருந்தே செல்வம், செல்வாக்கு, அதிகாரம், ஆணவம் என்று வளர்ந்தவன் வரதன். ஊருக்கு ஒரு முகமும் உள்ளுக்குள் இன்னொரு முகமும் காட்டுவது என்பது அவர்கள் குடும்பத்துக்கே கைவந்த காலை.

அதே நேரத்தில் உணவு தராமல் வாட விடுவது, சொன்ன வேலைகளைச் செய்யாதபோது அடிப்பது, சித்திரவதைகள் செய்வது என்று அவன் வளர்ந்த சிறுவர் இல்லத்தில் நடந்த கொடுமைகள் தாங்க முடியாமல், தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் தப்பித்து ஓடி வந்தவன்தான் கலிங்கராயன்.

எங்கெங்கோ திரிந்து, பசிக்களையோடு அலைந்து, எப்படியோ துறைமுகப் பகுதிக்கு வந்து சேர்ந்திருந்தான். அங்கேதான் ஆதரவற்றவனாய்த் தங்கையோடு பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சூர்யாவோடு அறிமுகம் கிடைத்தது.

இவர்கள் மூவருமாக அன்றாடச் சோற்றுக்காக அலைந்தபோது, துறைமுகத்தில் இருக்கும் கன்டெய்னர்களில் பாரம் தூக்கும் கூலித் தொழிலாளராக இருந்த ஒருவர்தான் இவர்களை அங்கே அழைத்துக்கொண்டு போனார். அந்த நேரம் இவர்களால் அந்தளவில் பாரம் தூக்க முடியவில்லை.

எடுபிடியாகவும் சில நேரங்களில் இடி வாங்குகிறவர்களாகவும் ஒரு பிடி சோற்றுக்காய் அவர்கள் பட்ட சிரமம் நிறைய. அங்கிருந்தவர்களிடம் வாங்கிய பேச்சுகளும், அடியும், பசியின் கொடுமைகளும் அவர்களைச் சாதாரணமாக இருக்க விடவில்லை.

கடைசியில் பசியைப் போக்குவதற்காகத் தொடங்கிய சின்ன சின்னத் திருட்டுகள், பின்னர் அவர்களின் துணிச்சலால் பெரிய வியாபாரமாக மாறியது.

துறைமுகத்தில் பாதுகாப்பற்றுக் கிடக்கும் சிறிய இரும்புப் பொருட்கள், செம்புத் துண்டுகள் என்று கிடைக்கிறவற்றை எல்லாம் இரவோடு இரவாகத் திருடி விற்றுப் பணம் பார்த்தனர்.

அதன் பிறகுதான் மூன்று நேரமும் உண்பதற்கு மூவருக்கும் ஏதோ கிடைத்தது. நாளடைவில் இவர்களை வேலைக்குச் சேர்த்த அந்த அய்யாவின் காணிக்குள்ளேயே தமக்கென்று சிறு குடிசை, அங்கே சாப்பிட உணவுப் பொருட்கள், மாற்றுடைகள் என்று அவர்கள் தம் கூட்டை அமைத்துக்கொள்ள ஆரம்பித்தனர்.

ஒரு கட்டத்தில் அங்கே வேலை செய்கிற அதிகாரிகளின் பார்வையில் பட்டு, நாள் முழுக்கக் கட்டி வைத்து அடித்தது கூட நடந்திருக்கிறது. சூர்யா பயத்தில் தங்கையோடு குடிசையிலேயே இருந்துவிட, ராயன் அடங்கவில்லை. அவனால் அடங்கி இருக்க முடியவில்லை. அவனுக்குத் தெரிந்த பிழைப்புக்கான ஒரே வழி அதுதான்.

இரவுகளில் திருடுவதும், மாட்டுகிற தருணங்களில் அடி வாங்கி எழவே முடியாமல் கிடப்பதும் வாடிக்கையாயிற்று.

ஆனாலும் அவன் அடங்கவில்லை. அப்படி மற்றவர்களைப் போலப் பயந்து ஓடாமல், தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், ராயன் காட்டிய அந்த ஆக்ரோசம்தான் அவனுக்கு அந்தத் துறைமுகப் பகுதிக்குள் அவனுக்குப் பெயரைப் பெற்றுத் தந்தது.

அதன் பிறகு துறைமுகத்தில் இருக்கும் பெரிய புள்ளிகள் அவனுக்கு வேலை கொடுக்க ஆரம்பித்தார்கள். அவர்களின் தொழிலுக்கு அவனை ஒரு ஆளாகப் பயன்படுத்திக்கொண்டார். அவனுடைய புத்தி கூர்மையும், எதற்கும் பதட்டப்படாமல், பயப்படாமல் அவன் ஆற்றும் துணிச்சலான காரியங்களும், அவனிடம் கொடுத்தால் இது நடக்கும் என்று நம்புகிற இடத்திற்கு அவனைக் கொண்டுவந்தது.

ஆனால், அவமானப்பட்டு, அடிபட்டே வளர்ந்தவன் அவன். தனக்கான பாதையைத் தானே உருவாக்க ஆரம்பித்தான். அவர்கள் தருகிற வேலைகளைச் செய்துகொண்டே, இதையெல்லாம் அவர்கள் எப்படிச் செய்கிறார்கள் என்று கவனிக்க ஆரம்பித்தான்.

அதன்படி, துறைமுகத்திற்குள் நடக்கும் சட்டவிரோதக் கடத்தல்களைக் கவனித்து, சுங்க அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி, தனக்கென ஒரு சிறிய கூட்டத்தை உருவாக்க ஆரம்பித்தான். அதற்குப் பெரிதளவில் கைகொடுத்தவன் சூர்யா.

ராயனைப் போன்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு முன்னால் போக மாட்டானே தவிர்த்து, பின்னால் நின்று ராயன் சொல்கிற காரியங்களைக் கச்சிதமாகச் செய்து முடிப்பதில் வல்லவன்.

தனக்குக் கீழ் வேலை செய்யத் துணிந்தவர்களை அரவணைத்து, வேலை கொடுத்து, தன்னுடைய ஆட்களாக அவர்களை மாற்றினான் ராயன்.

ஆரம்பத்தில் சிறிய சரக்குகளைக் கைமாற்றிக் கொடுத்தவன் பிறகு பிறகு பெரிதாக ஈடுபடத் தொடங்கினர்.

ஒரு காலத்தில் தங்களை அடிமைகளாக நடத்திய அதே துறைமுகத்தின் பெரும் புள்ளிகளையும், லஞ்ச அதிகாரிகளையும் பணத்தால் வாங்கினான்.
போதைப்பொருள் கைமாற்றுதல், கறுப்புப் பணப் பரிமாற்றம் என்று அடுத்து வந்த வருடங்களில் ராயன் கோடிகளில் புரள ஆரம்பித்தான். அவர்கள் வாழ்ந்த ஊரிலேயே நிலம் வணங்கி, மாளிகை கட்டி, நல்ல வாகனங்கள், தமக்கென்று ஒரு மக்கள் கூட்டம், தொழில் நிறுவனம் என்று அவன் உலகம் பெருகிக்கொண்டே போயிற்று.

ஒருமுறை அவன் வாழும் அந்த ஊரிலேயே போதைக்கு அடிமையான இளைஞர்கள் மிக மோசமான நிலைக்குச் சென்று, வாள் வெட்டில் ஈடுபட்டு இறந்துபோனதைக் கண்டபோதுதான், இத்தனை காலமும் என்ன செய்துகொண்டிருந்தோம் என்கிற விழிப்புணர்வே அவனுக்கு உண்டாயிற்று.

அதுவும் அவர்களைப் பெற்றவர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதபோது, யாருமற்று அனாதையாகத் தான் நின்ற நிலையும், இன்று அந்தப் பெற்றோர்களைத்அதே நிலைக்கு தான் ஆளாக்கியிருக்கிறோம் என்கிற உண்மையும் முகத்தில் அறைந்திருந்தது.

நேரடியாக அவன் காரணமில்லைதான். ஆனால், அவன் இறக்கிக்கொடுத்த போதை பொருள்கள்தானே அவர்களை இன்று இப்படியாக்கிற்று என்று நினைத்தான்.

அதன் பிறகு கணக்கில் வராத கறுப்புப் பணங்களைக் கை மாற்றுவது, பெரு நிறுவனங்கள் வரி செலுத்த விரும்பாமல் கறுப்பாக இறக்குமதி செய்யும் பொருள்களை பாதுகாத்து, கொண்டுபோய்க் கொடுப்பது என்று அவற்றில் பணம் பார்க்க ஆரம்பித்தவன் போதை பொருள், ஆயுதக் கடத்தல்கள் போன்றவற்றில் அதன் பிறகு ஈடுபடவில்லை.

அதைவிட முக்கியமாக அந்தத் துறைமுகத்தின் வாயிலாக வேறு யாரையும் அதைச் செய்ய அவன் விடவுமில்லை. கூடவே, இதுவரை கைமாற்றும் வேலையைப் பார்த்து, அதற்குக் கூலி வாங்கியவன் அதன் பிறகு அதை அங்கிருந்து நகர்த்துவதற்கு இவ்வளவு வேண்டும் என்று தானே நிர்ணயித்து பணம் வாங்க ஆரம்பித்தான்.

அப்போதுதான் ராயனுக்கும் வரதனுக்கும் முட்ட ஆரம்பித்தது.

ராயன் சூர்யாவைப் பற்றி முதலே வரதன் காதுக்கு வந்திருந்ததுதான். விலாசமில்லாதவர்களால் தன்னை என்ன செய்துவிட முடியும் என்கிற இறுமாப்பும், அதுவரையில் தன் தொழிலுக்கு எந்த இடைஞ்சலும் வராததிலும் அவன் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. அதைவிடவும் அவனைக் கண்டால் பணிவாக நிற்கிற அவர்களைக் கண்டு அவனுக்குள் ஒரு ஆனந்தம். இவர்களால் தன்னை என்ன செய்துவிட முடியும் என்று இறுமாப்பு.

அப்படி இருக்கையில்தான் வரதன் பல ஆண்டுகளாகத் துறைமுகத்தில் நடத்தி வந்த ஆயுதக் கடத்தல், போதைப்பொருள் விற்பனை, சட்டவிரோதப் பரிமாற்றங்கள் அனைத்தையும் ராயன் தடுக்க ஆரம்பித்தான்.

வரதனுக்காக வேலை செய்த பலர், மதிப்பு மரியாதையோடு சேர்த்து நல்ல சம்பளமும் கிடைத்ததில் மெல்ல மெல்ல ராயனின் பக்கம் மாறினர்.

ஒரு நாள் இரவு அவனுடைய சரக்குகள் அவன் உத்தரவிட்டும் துறைமுகத்தை விட்டு வெளியே வரவில்லை. இன்னும் சொல்லப்போனால் வந்த வழியே திருப்பி அனுப்பப்பட்டிருந்தது.

அப்போதுதான் வரதனுக்கு ஆத்திரம் வந்தது. அவனை ஒருவன் துறைமுகத்தில் எதிர்ப்பதா என்று கொதித்தெழுந்தான். ராயனை அடக்க முயன்றான். முயல மட்டுமே செய்தான். அவனால் சிறு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை. அவன் பார்த்துக்கொண்டிருக்க ராயனின் உயரம் கிடுகிடு என்று உயர்ந்துகொண்டே போயிற்று.

மெல்ல மெல்ல துறைமுகத்தை மொத்தமாகத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தாமன் ராயன்.

பலமுறை பல வழிகளில் மோதிப் பார்த்துத் தோல்வியையே தழுவியிருந்தான் வரதன். அது அந்த இருண்ட உலகத்தில் அவனது மரியாதையைக் கேள்விக்குறியாக்கிற்று. அதை வரதனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

ராயனை அழிக்கத் திட்டம் தீட்டினான். நேரடி மோதலில் ராயனை வெல்ல முடியாது என்று இத்தனை வருட அனுபவத்தில் அறிந்திருந்தான். அப்போதுதான் அவனது பலவீனத்தைத் தேடினான். அது சூர்யாவும் நிலாவினியும்.

வேண்டுமென்றே சூர்யா போகுமிடங்களுக்குத் தானும் போனான். அங்கே சூர்யாவோடு நல்ல முறையில் பழக முயன்றான். அவன் இடம் கொடுக்கவேயில்லை.

யோசித்துவிட்டுத் தன் பாதையை மாற்றினான். அவனாக சூர்யாவை அணுகாமல், அவனுடைய ஆட்களை வைத்து, அதுவும் சமூகத்தில் மதிப்பும் மரியாதையோடும் இருக்கிறவர்களை வைத்துப் பேச ஆரம்பித்தான்.

என்னதான் நீயும் ராயனும் உயிர் நண்பர்கள் என்றாலும், அங்கே அவனும் நீயும் சம அதிகாரம் கொண்டவர்கள் என்றாலும் ராயனுக்குப் பிறகுதான் நீ. யார் தலைவன் என்று கேட்டால் அது ராயந்தான். நட்பு என்கிற பெயரில் நீ அவனோடு இருந்தாலும், நீயும் அவனுக்கு ஒரு அடியாள்தான். அவனுக்கு அடுத்ததாகத்தான் நீ. முதலாவதாகக் கூட வேண்டாம். அவனுக்குச் சமமாகக் கூட நீ இல்லை. இப்படியே வாழ்ந்துவிட்டுப் போகப்போகிறாயா? அதிகாரம் உனக்கு வேண்டாமா, நீ தலைவனாக வேண்டாமா என்று அவனுக்கு ஆசையை ஊட்டினான்.

பேராசை என்பது எப்போது வேண்டுமானாலும் மனிதனை மாற்றிவிடும். மெல்ல மெல்ல சூர்யாவின் மனத்தில் நஞ்சு படர ஆரம்பித்தது. அவனும் மாறினான். அது போதாது என்று நிலாவையும் மாற்றினான்.

error: Alert: Content selection is disabled!!