அத்தியாயம் 60
அன்றைக்குக் கலிங்கனோடு பேசிவிட்டு வந்ததிலிருந்து மதியழகனின் பெரும்பாலான சிந்தனைகளை ஆக்கிரமித்திருந்தவன் கலிங்கன்தான்.
நல்லவன் என்று நினைத்திருந்த வரதன் இத்தனை மோசமானவனாக இருப்பான் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அதேநேரம், ரௌடி, பொல்லாதவன், சட்டத்துக்குப் புறம்பான வேலைகளைச் செய்பவன் என்று நினைத்திருந்த கலிங்கனின் இன்னொரு பக்கம் வியப்புக்குரியதாகவும் நம்ப முடியாததாகவும் இருந்தது.
அன்று அவன் அழைத்துப் பேசிய பிறகும் அவர்களுக்கிடையிலான இடைவெளி அப்படியே இருந்தாலும் ஒருவிதமான சுமுகமான நிலையும் உருவாகியிருந்தது.
எதுவாக இருந்தாலும் அவரால் கலிங்கனோடு பேச முடிந்தது. அவனாலும் தயக்கமின்றி அவரிடம் பேச முடிந்தது. அதுவும் அவ்வப்போது அழைத்து வருணாவைப் பற்றி விசாரிப்பதும், அவளைத் தனியாக எங்கும் வெளியே அனுப்ப வேண்டாம் என்று எச்சரிப்பதும், அவளுடைய பாதுகாப்பில் அவன் காட்டிய அக்கறையும் மதியழகனின் மனத்தில் அவனைப் பற்றிய மதிப்பை மெல்ல மெல்ல உயர்த்திக்கொண்டிருந்தன.
மகளின் வாழ்க்கை நன்றாக அமைந்துவிட வேண்டும். எல்லாப் பிரச்சினைகளும் சுமுகமாக முடிந்துவிட வேண்டும் என்ற பிரார்த்தனையோடுதான் அன்றிரவும் படுக்கையில் சரிந்திருந்தார். ஆனால், உறக்கம் மட்டும் அவரை நெருங்க மறுத்தது.
பலவிதமான சிந்தனைகளுடன் புரண்டு படுத்துக்கொண்டிருந்தவரின் கவனத்தை வீட்டுக்கு முன்னால் கேட்ட மெல்லிய பரபரப்புச் சத்தம் கலைத்தது. எழுந்து வந்து என்னவென்று எட்டிப் பார்த்தார்.
ஆதி அங்கே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தான். வீட்டுக்கு முன்னால் நின்றிருந்த சிலரிடம் ஏதோ அவசரமாகச் சொல்லிக்கொண்டிருந்தான். அங்கே நின்ற ஆட்களைக் கண்டதுமே மதியழகனுக்கு ஒரு கணம் பகீரென்றது.
தங்களைச் சுற்றி கலிங்கனின் பாதுகாப்பு வளையம் இருப்பது அவருக்குத் தெரியாமல் இல்லை. ஆரம்ப நாட்களில் அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் சற்றுக் கெடுபிடியாக இருந்தாலும் பின்னர் இவர்கள் கண்ணுக்குத் தெரியாதபடி தங்களுடைய பணிகளைச் செய்யத் தொடங்கியிருந்தனர்.
எங்கே நிற்கிறார்கள், எப்படிப் பாதுகாக்கிறார்கள் என்பதெல்லாம் அவருக்குத் தெரியாது. ஆனால், தாங்கள் கலிங்கனின் கண்காணிப்புக்குள் இருக்கிறோம் என்பது மட்டும் அவருக்குத் தெளிவாகப் புரிந்திருந்தது.
இன்றைக்கு அப்படியில்லை. வீட்டுக்கு முன்னாலும் காணிக்குள்ளும் ஆட்களின் நடமாட்டம் வெளிப்படையாகவே தெரிந்தது. ஏதோ பெரிய பிரச்சனை என்று சொல்லும் விதமாய் அவர்களின் உடல்மொழியில் மிகுந்த பரபரப்பு.
அதையெல்லாம் கவனித்தவருக்குக் காரணமறியாமலேயே உடலிலும் உள்ளத்திலும் நடுக்கம் பிடித்தது. என்னவோ தாமும் கொள்ளைக் கூட்டத்தில் இணைந்துவிட்டது போன்ற ஒரு மாயை. அவருக்கே இப்படி இருக்கிறதே. இனி அவர் மகளுக்கு இதுதான் வாழ்க்கையா என்கிற கேள்வியும் சேர்ந்து உலுக்கிற்று
அங்கே ஆதி ஒவ்வொருவரிடமும் அவசரமாக ஏதோ அறிவுறுத்திவிட்டு, வேகமாகக் காரை எடுத்துக்கொண்டு பறந்தான். கலிங்கனின் ரேஞ்ச் ரோவர் மட்டும் வாசலில் நின்றிருந்தது. அதுவே இந்த வீடு அவன் பாதுகாப்புக்கு உட்பட்டது என்று அவரிடமே சொல்வது போலிருந்தது.
மதியழகனின் மனத்தில் பயம் கவியத் தொடங்கிற்று.
கலிங்கனுக்கு அழைத்துக் கேட்டுவிடலாமா என்று கைப்பேசியை எடுக்கத் திரும்பியபோதுதான் அவருக்குப் பின்னால் நின்றிருந்த வருணாவைக் கவனித்தார்.
அவள் முகத்திலும் அதே பதற்றமும் பயமும் படர்ந்திருந்தன. அவளும் அவ்வளவு நேரமும் உறங்க முடியாமல் அல்லாடிக்கொண்டிருந்தாள். அவனோடு கோபித்துக்கொண்டு வந்தது அவ்ளதான். ஆனால், அவள் உணர்வுகள் மொத்தமும் அவனோடு பின்னிப் பிணைந்தவையாயிற்றே.
இத்தனை நாள்கள் அவனைப் பாராமல் இருந்ததிலேயே மழையற்று வாடிப்போன செடியாகத் துவண்டுபோயிருந்தாள். அவன் அணைப்பும், அது தருகிற கதகதஹ்ப்பும், அவன் கைகளுக்குள் இறுக்கியில் கிடைக்கிற நிம்மதியும், அவன் பாதிக்கிற உச்சி முத்தங்கள் தருகிற முழுமையும் இல்லாமல் அவள் எப்படி உறங்குவாள்.
அப்படி இருக்கையில்தான் வீட்டுக்கு வெளியே தெரிந்த பரபரப்பு அவள் காதையும் எட்டியிருந்தது. எழுந்து வெளியே வந்து எட்டிப் பார்த்தவள் உள்ளத்திலும் கலக்கம்.
மதியழகன் கைப்பேசியை எடுத்துக் கலிங்கனுக்கு அழைக்கப்போவதைப் புரிந்துகொண்டவள் உடனே தடுத்தாள்.
“இப்பிடியான நேரத்தில என்னட்ட இருந்து கோல் வந்தா நான் ஏதோ ஆபத்தில இருக்கிறன் எண்டுதான் அப்பா அவர் எடுப்பார். உடன நான் இருக்கிற இடத்துக்கு வருவன் எண்டு சொல்லியிருக்கிறார். அதால அப்பிடி எதுவும் இல்லாட்டி கோல் பண்ண வேண்டாம் எண்டு சொல்லித் தந்திருக்கார்.”
அவள் சொன்னதைக் கேட்ட மதியழகனுக்கு வியப்பாக இருந்தது.
“இப்ப அவருக்குப் பிரச்சினை எண்டு உனக்கு எப்பிடித் தெரியும்?”
“இல்லாம ஆதி என்னை இஞ்ச விட்டுட்டுப் போக மாட்டான்.”
அவள் பதிலில் இருந்த உறுதியில் மலைத்துப்போனார் மதியழகன். அதைவிடத் தன் மகளை அவன் பாதுகாக்கும் விதம் அவரைப் பெரும் வியப்பிலாற்றியது.
“இப்ப என்னம்மா செய்யிறது?” என்று அவளிடமே கேட்டார்.
“நாங்க கவனமா இருந்துகொண்டு அவரிட்ட இருந்து ஏதாவது மெசேஜ் வாற வரைக்கும் வெய்ட் பண்ணுறது மட்டும்தான் அப்பா.” என்றவள் கையிலும் கைப்பேசி இறுகப் பற்றப்பட்டிருந்தது.
அவள் முகத்திலும் பயமும் பதற்றமும் அப்பட்டமாகத் தெரிந்தன. உள்ளே அவனைக் குறித்த பயம் இருந்தாலும் அவன் சொல்லித் தந்ததை மகள் கடைப்பிடிக்கிறாள் என்று புரிந்துவிட, மகள் மனத்தில் அவன் எந்தளவில் ஊடுருவியிருக்கிறான் என்பதும் அவருக்கு இன்னும் சற்று ஆழமாகப் புரிந்துபோயிற்று.
அவள் சொன்னதுபோன்று கைப்பேசியைக் கையில் வைத்துக்கொண்டு அவனிடமிருந்து வரப்போகிற தகவலுக்காக அவரும் காத்திருக்க ஆரம்பித்தார்.
தாய் தந்தையரிடம் காட்டிக்கொள்ளாதபோதும் ஆதி அவசரமாகப் புறப்பட்டுப்போனது வருணனை மிகுந்த கலக்கத்தில் ஆழ்த்திற்று. எந்தக் காரணம் கொண்டும் அவள் பாதுகாப்பை விட்டு விலகக்கூடாது என்பதுதான் கலிங்கனின் உத்தரவு.
அப்படி இருந்தும் அவளை விட்டுவிட்டு ஆதி போகிறான் என்றால் அவனுக்கு ஏதுமோ என்று நினைத்த மாத்திரத்திலேயே அவள் இதயம் தன் துடிப்பை நிறுத்தியிருந்தது.
அவள் விழிகள் கலங்கின. உதடுகள் தன்னையறியாமலேயே இறைவனிடம் வேண்டத் தொடங்கின. அவனுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது. அவன் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதிலிருந்து மீண்டு அவளிடம் வந்துவிட வேண்டும் என்று இடைவிடாது வேண்டிக்கொண்டேயிருந்தாள்.

