கலிங்கனின் காவியம் 7.1

அத்தியாயம் 7

அத்தனைக்கும் தயாராகித்தான் அனைத்தையும் செய்தார்கள். ஆனாலும் கூட, மண்ணில் சரிந்து விழுந்த ராயன், கலங்கிய விழிகளோடு அவளைப் பார்த்த பார்வை நிலாவினியின் நெஞ்சை அறுத்துக்கொண்டிருந்தது.

இதை யாரிடமும் அவளால் சொல்லிவிட முடியாது. அதுவும் காயம்பட்ட புலியைப்போன்று சீறிக்கொண்டு நிற்கும் வரதனிடம் வாயைத் திறக்கவே முடியாது. அடுத்து என்ன நடக்குமோ என்கிற பயத்துடன் ஒரு பக்கமாக ஒடுங்கி நின்றாள்.

தப்பித்தவறி ராயன் தப்பிவிட்டால்? அவளால் அதைக் குறித்து மேலே யோசிக்கக் கூட முடியவில்லை. இரத்தப் பசையற்று முகம் வெளுக்க, தேகம் ஒருமுறை தூக்கிப்போட்டது.

அதற்குச் சந்தர்ப்பமே வரக்கூடாது என்றுதான் வரதனுக்கும் அவளுக்குமான நெருக்கத்தைக் காட்டி, அவனை நிலைகுலையச் செய்தார்கள். அதிலிருந்து சுதாரித்துக்கொள்ள நேரமே கொடுக்காமல் வீழ்த்த வேண்டும் என்று திட்டம் போட்டார்கள். அது பார்த்தால்… அந்த நேரத்திலும் அவளுக்கு வியர்த்தது. வரதன் அறியாமல் முகத்தை அழுத்தித் துடைத்தாள்.

சற்று நேரத்தில் சூர்யா திரும்பி வந்தான். அவன் முகத்தைப் பார்த்தே போன காரியம் தோல்வி என்று கண்டுகொண்டான் வரதன்.

அவனுடைய ஆத்திரம், அகங்காரம், ஆவேசம் அத்தனையும் உச்சியைத் தொட்டன. “என்னடா? என்னையே சுத்தப் பாக்கிறியா? அண்ணனையும் தங்கச்சியையும் உருத் தெரியாம அழிச்சிருவன்!” என்று அவன் சட்டையைப் பற்றினான் அவன்.

சூர்யா ஒரு கணம் திகைத்துப்போனான். அவனே ராயனின் கார் அதற்குள் எங்கே போனது, அவன் என்னானான் என்று அலைந்து திரிந்துவிட்டு வந்திருக்கிறான். இதில் இவன் புதிதாக ஒன்றைச் சொல்கிறான். “என்ன சொல்லுறீங்க?” என்றபடி அவன் கையைத் தட்டிவிட்டான்.

“நடிக்காதயடா. ஒருத்தருக்கும் தெரியாது எண்டு நீதானே சொன்னனீ. பிறகு எப்பிடி அத்தனை பேர் வந்தவங்கள்?”

அவனுக்கும் அதே கேள்விதான்! ஆதி எப்படி வந்தான்? அவர்களுடைய திட்டத்தை எப்படிக் கணித்தான்? யாருக்கும் சந்தேகம் வராதபடி, ஒவ்வொரு நகர்வையும் கவனமாகத் திட்டமிட்டு, அத்தனை கச்சிதமாகக் காய் நகர்த்தினான். அனைத்தையும் ஒரு நொடியில் கெடுத்துவிட்டானே.

ராயன் தப்பித்தவறித் தப்பிவிட்டால் என்கிற கேள்வி உண்டாக்கிய பதற்றத்தில் அவனால் எதையும் தெளிவாக சிந்திக்கக் கூட முடியவில்லை.

அதேநேரம், ராயனின் உடலில் கத்தியை எவ்வளவு ஆழமாக இறக்கினான் என்று அவனுக்குத் தெரியும். ஒரு முறை அல்ல இரண்டு முறை. அத்தனை ஆழமான காயங்களுடன் ஒருவன் உயிர் பிழைப்பது சாதாரண விடயமே இல்லை.

அவர்களுடைய போராட்ட வாழ்க்கையில், உயிருக்கும் மரணத்துக்கும் இடையிலான பல தருணங்களைச் சந்தித்தவர்கள். அந்த அனுபவம் ராயன் பிழைக்க வாய்ப்பே இல்லை என்றுதான் சொன்னது.

“அவன் தப்ப மாட்டான்!” என்றான் யோசித்துவிட்டு.

“தப்பிட்டா?”

“அந்தளவு மோசமா நான் கத்திய இறக்கேல்ல.”

“தப்பி…ட்டா?”

“ராயன் என்ன அந்தளவுக்குச் சோடை போனவனா? ஒரு கத்திக் குத்து அவனச் சோர்ந்துபோக வைக்கும் எண்டு நினைக்கிறீங்களா? ரெண்டு குத்தையும் வாங்கிக்கொண்டு அவன் என்னைத் திருப்பி அடிச்சிருந்தா அந்தக் குத்து ஒழுங்கா விழேல்ல எண்டு அர்த்தம். மலையே சரிஞ்சு விழுந்த மாதிரி விழுந்தவன். தப்பமாட்டான்.” அவன் வீழ்ந்தது நம்பிக்கைத் துரோகத்தினால் என்று அறியாதவன் உறுதியாகச் சொன்னான்.

“தப்பித்தவறித் தப்பினான் எண்டு வை!” என்றவனின் கையில் நிலாவினியின் இடை கன்றி சிவந்தது.

“அம்மா!” அதை எதிர்பாராதவள் வலியில் துடித்துப்போனாள். அவளுக்கு முகமெல்லாம் சிவந்து கண்கள் கலங்கிற்று.

“அவன் உன்னை இப்பிடிச் பிடிச்சதே இல்லையா?” என்று அதற்கும் சீறினான் வரதன். இல்லையே. பக்கத்தில் கூட வரமாட்டானே. அவன் அறைக்கு இவளாகப் போனால் கூட விரட்டுவதில்தான் குறியாக இருப்பான். இதையெல்லாம் அவனிடம் சொல்ல முடியாமல் நின்றாள் அவள்.

முகம் இறுக நிலாவையும் அவனையும் பார்த்த சூர்யா, நிலாவினிய இழுத்துத் தன் பக்கம் நிறுத்திக்கொண்டு, “கவனமா இரு வரதா! உன்ர பக்கம் வந்து நிக்கிறன் எண்டுறதுக்காக நீ என்னவும் செய்யலாம் எண்டு நினைக்காத. அவன் தப்பினா உன்னை விட எங்களுக்குத்தான் ஆபத்து. அப்பிடி இருந்தும் ரிஸ்க் எடுத்தது நாங்க. சோ, உன்னை விட இந்த விசயத்தில பதற வேண்டிய ஆக்கள் நாங்கதன. அதால பாத்து நட!” என்றுவிட்டு நிலாவினியோடு அந்த இடத்தை விட்டு அகன்றான்.

*****

கனத்த அமைதி வியாப்பித்திருந்த அந்த நடுராத்திரியில் வைத்தியசாலையின் முகப்பில் ஆதியின் கார் அதிவேகமாக வந்து கிரீச்சிட்டபடி நின்றது.

கதவைத் திறந்துகொண்டு குதித்த நொடியில், “ஹெல்ப்… ஆராவது ஓடி வாங்க! கத்திக்குத்து. எமர்ஜென்சி!” என்று ஆதி கத்திய கத்தலில் அந்த இடமே நொடியில் பரபரப்பாயிற்று.

வைத்தியசாலையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு ஊழியர்கள் ஸ்ட்ரெச்சருடன் ஓடிவந்தனர். காரின் பின் சீட்டில் குருதி வெள்ளத்தில் சுயநினைவின்றிக் கிடந்த ராயனை
மிகப் பத்திரமாக ஸ்ட்ரெச்சரில் தூக்கிக் கிடத்தினார். அந்த நொடியே அவனை அவர்கள் உள்ளே கொண்டு ஓட முயல்கையில் ஆதியின் கையை யாரோ பற்றினார்கள்.

பெரும் பதற்றத்தில் இருந்தவன் ழிணிந்து தன் கையைப் பார்த்தான். அது ராயனின் கை. விலுக்கென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தான். “நீ… கவனம். சூ…ர்யா உன்ன பா…த்திருப்பான்.” பெரும் சிரமத்துக்கு மத்தியில் முணுமுணுத்துவிட்டு மொத்தமாக மயங்கிப்போனான் ராயன்.

அசையக்கூட முடியாமல் அப்படியே நின்றுவிட்டான் ஆதி. அவன் கண்கள் நொடியில் நிறைந்துபோயின. வைத்தியசாலை ஊழியர்கள் அதையெல்லாம் கவனிக்கவில்லை. சக்கரங்கள் தடதடவெனச் சத்தமிட, அவசர அறுவைச் சிகிச்சைப் பிரிவை நோக்கி அவனைத் தள்ளிக்கொண்டு ஓடினர். வேகமாகத் தன் கண்களைத் தோள் பட்டையில் துடைத்துக்கொண்டு ஆதியும் அவர்களுடனே பதற்றத்துடன் ஓடினான்.

உடனேயே அந்த நேரம் டியூட்டியில் இருந்த சத்திர சிகிச்சை வைத்தியருக்குச் செய்தி பறந்தது. அடுத்த சில நிமிடங்களில், பச்சை நிற அறுவை சிகிச்சை உடையும் கையுறைகளுமாக அவசரச் சிகிச்சைப் பகுதிக்குள் நுழைந்தாள், சத்திர சிகிச்சை வைத்தியர் வருணா மதியழகன்.

error: Alert: Content selection is disabled!!