கலிங்கனின் காவியம் 9.1

அத்தியாயம் 9

ஆதிக்கு கலிங்கராயன் முழுமையாகக் குணமடைந்து வரும்வரை சூர்யாவை அடக்கி வைக்க வேண்டும். அதற்காகத்தான் ராயனின் காரை எரித்து, அவனைக் காணவில்லை என்கிற செய்தியைப் பகிரங்கப்படுத்தினான்.

வரதனின் செல்வாக்கைப் பயன்படுத்தி காவல்துறையின் விசாரணையை முடக்க சூர்யா முயன்றாலும் அது முடியாதிருக்க வேண்டும். காவல்துறையும் யாருடைய அதிகாரத்துக்கும் அடிபணியாமல் ராயனைத் தேட வேண்டும். அதுவரை சூர்யாவும் அடங்கியிருக்க வேண்டியிருக்கும்.

இந்த இடைவெளிக்குள் ராயன் குணமடைந்துவிடுவான் என்பதுதான் ஆதியின் கணக்கு.

வைத்தியசாலையிலேயே தவம் கிடந்தாலும் தான் நினைத்தபடியே அனைத்தும் நடப்பதை ஆதி அறிந்துகொண்டுதான் இருந்தான். காவல்துறை அவனை விசாரணைக்கு அழைக்கும் என்று அவனுக்கே அதெரியும். அதே போன்று காவல்துறையும் அழைத்தது.

அவனுக்கு அங்கிருந்து போக மனமேயில்லை. தான் இல்லாத நேரத்தில் கலிங்கராயனுக்கு எதுவும் நடந்துவிடுமோ என்று மிகவுமே பயந்தான். அவனுடைய நண்பர்கள் இருக்கிறார்கள்தான். உற்ற நண்பனாக நின்றவன் முதுகில் குத்திவிட்டதில் தன்னைத் தாண்டி இன்னொருவரை நம்ப மிகவுமே பயந்தான்.

தன் நண்பர்களை அழைத்தான். “மச்சான்ஸ், இப்பிடி சொல்லுறன் எண்டு கோவிச்சிடாதீங்க. நீங்க எல்லாம் அப்பிடி இல்லை எண்டு அறிவு சொன்னாலும் கிடைச்ச அனுபவம் நம்ப விடுதில்லை. எந்த காரணத்துக்காகவும் அண்ணாக்கு ஒண்டு நடக்க விட்டுடாதீங்கடா. நாங்களாவது அவருக்கு இருக்கோணும் என்று அவர்களின் கைகளை பிடித்துக்கொண்டு அவன் பரிதவித்தபோது அவர்களுக்கு அவன் மீது கோபப்பட முடியவில்லை.

அவனுக்கு கலிங்கராயனை எந்தளவுக்குப் பிடிக்கும் என்று முதலே தெரியுமே. அதில், “ஒண்டும் நடக்காது. நாங்க இருக்கிறம். நீ போயிற்று வா!” என்று அவன் தொழில் தட்டி தைரியம் கொடுத்தார்கள்.

அப்போதும் அப்படியே போகாமல் வருணாவிடம் சொல்லிவிட்டுச் செல்லலாம் என்று அவளுடைய அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றான்.

வருணா கேள்வியுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“டொக்டர், ப்ளீஸ்! நீங்க என்னில கோவமா இருக்கிறீங்க எண்டு தெரியும். ஆனா, அதையெல்லாம் இதில காட்டிப்போடாதீங்க. நான் ஒருக்கா வெளியில போயிட்டு வரோணும். ஆர் வந்து எப்பிடிக் கேட்டாலும் அண்ணாவைக் காட்டிக்குடுத்திடாதீங்க!”
என்றவனின் குரலில் இறைஞ்சல் நிறைந்திருந்தது.

“நீ கழுத்தில கத்தியை வச்சுக் கேட்டியே, அதே மாதிரி இன்னொருத்தன் வந்து எங்கட கழுத்தைச் சீவினாலும் சொல்லக் கூடாதோ?” என்று கேட்டாள் அவள்.

தான் செய்ததை வைத்தே தன்னை மடக்குவாள் என்று எதிர்பாராதவன் பேச்சற்று நின்றான். அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, கதவை நோக்கி விரல்களை மட்டும் அசைத்து, ‘இங்கிருந்து போ!’ என்று சைகை செய்தாள்.

ராயனுக்கு உள்ளே சத்திரசிகிச்சை நடந்துகொண்டிருந்தபோது, நிர்வாகத்தினர் காவல்துறைக்குத் தகவல் கொடுப்பதைத் தடுத்திருந்தான். ஆனால், அவர்கள் தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமானால் அதற்கு அவனுக்கு வேறு வழி தேவைப்பட்டது.

அதற்காகவே வைத்தியசாலையின் நிர்வாகி யார் என்று அறிந்துகொண்டு, தன் ஆட்கள் மூலம் அவரைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்கச் சொல்லியிருந்தான்.

அப்போது, வைத்தியசாலையின் நற்பெயரையும் வருமானத்தையும் பாதுகாப்பதற்காக அவர் மறைத்திருந்த சில முறைகேடுகள் ஆதியின் காதுக்கு வந்துசேர்ந்தன.

தேவையற்ற பரிசோதனைகள் மூலம் வருமானத்தை அதிகரிக்க முயன்றது, நோயாளிகளுக்குச் சிகிச்சையில் ஏற்பட்ட சில சிக்கல்கள் வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டது எனப் பல விசயங்கள் அவனுக்குத் தெரியவந்திருந்தன.
அந்த விவரங்களைக் கொண்டே நிர்வாகியை அடக்கி வைத்திருந்தான் ஆதி.

அந்தக் கோபம்தான் அவளுக்கு என்று புரிந்து அமைதியாக வெளியே வந்து, காவல்நிலையம் சென்றான். முக்கியமாக அணிந்திருந்த உடைகளை மாற்றிக்கொண்டு போனான்.

ராயனைப் பற்றி விசாரித்த காவல்துறை அதிகாரிகளிடம், “சூர்யா அண்ணாக்கே தெரியேல்ல எண்டேக்க எங்களுக்கு எப்பிடி சேர் தெரிய வரும்?” என்று கேட்டான் ஆதி.

அந்தக் கேள்வியில் நியாயம் இருந்தாலும் கடைசியாக அவன் ராயனை எப்போது பார்த்தான், என்ன நடந்தது, அவனுக்கு வேறு யாருடனும் முட்டல் மோதல்கள் இருந்தனவா என்று பல கேள்விகளைக் கேட்டுப் பதில்களை பெற்றுக்கொண்டுவிட்டு, அவர்கள் கூப்பிடுகிற ஒவ்வொரு பொழுதுகளிலும் வரவேண்டும் என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

“அண்ணாக்கு என்னடா ஆகியிருக்கும்?” அதுவரை காவல் நிலையத்திற்கு வெளியே காத்திருந்த அவர்களின் ஆட்கள், உண்மையான கவலையோடு அவனைச் சுற்றி வளைத்தார்கள்.

“அப்பிடி என்னடா ஆக இருக்கு? ஒண்டும் ஆகாது. அண்ணா வருவார். கட்டாயம் வருவார்!” உள்ளம் கொதிக்க சூளுரைப்பது போல் சொன்னான் ஆதி.

அவர்களுக்காவது ஒன்றும் தெரியாது. அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொண்டு, உள்ளத்தில் எரியும் பெரும் கோபத்தீயை வெளியில் காட்டாமல், அந்தத் துரோகிக்கு இணையாக நடித்துக்கொண்டிருக்கும் தன் நிலையும் சேர்ந்து அவனுக்குக் கோபமூட்டியது.

எல்லா இடமும் அண்ணாவத் தேடியாச்சு மச்சான். அண்ணா வீட்டு சிசிடிவி வயர் கனெக்ஷனை ஆரோ அறுத்திருக்கிறாங்கள். அப்ப இது ஏதோ பிளானோட நடந்த மாதிரி இல்லையா?”

சாதாரண திட்டமில்லை. பெரும் திட்டம். அதை வாயைத் திறந்து சொல்ல முடியாமல் நின்றான் அவன்.

அதைவிட அவனுக்கு ராயனை விட்டுவிட்டு இங்கே நிற்பது ஏதோ போன்று அழுத்திக்கொண்டிருந்தது. அதில், “சரி கவனமாக இருங்கடா. எங்க என்ன நடந்தாலும் எனக்கு சொல்ல மறக்காதீங்க. நானும் அண்ணாவத் தேடிப் பாக்கிறன்.” எண்றுவிட்டுப் புறப்பட்டவனின் முன்னே வந்து நின்றான் சூர்யா.

இப்படித் தன் முன்னே வந்து நிற்க இவனுக்கு எவ்வளவு தைரியம் என்று மனம் கொதித்தது அவனுக்கு.

“ராயன் எங்க?” அவனை நெருங்கி நின்று மற்றவர்களுக்குக் கேட்காத குரலில் கேட்டான் சூர்யா.

“என்னைக் கேட்டா?” அலட்சியமாகப் பதில் சொன்னான் ஆதி.

“ஆதி! என்னோட விளையாடாத! ராயனுக்கு ஸ்கெட்ச் போட்டவன் நான்!”

“செஞ்சது பச்சைத் துரோகம். நெஞ்சில குத்தத் தைரியம் இல்லாம முதுகில குத்தின கோழை நீ. இதுல அதப் பெருமையா வேற சொல்லுவியா?” என்றவனின் சீற்றத்தில் முகம் சிவந்து கொதிக்க, பல்லைக் கடித்தான் சூர்யா.

ஆனால், காரியம் ஆகவேண்டியிருக்கிறதே. “ஆதி, நீயெல்லாம் எனக்கு ஒரு தூசு. தேவை இல்லாம கதைக்காம உண்மையச் சொல்லு. ராயன் எங்க? உயிரோடதான் இருக்கிறானா? எங்க வச்சிருக்கிறாய்?” என்று கேள்விகளை அடுக்கினான்.

ஆதி மெல்லச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் பயம் இருக்கவில்லை. சூர்யாவின் கேவலமான குணத்தை அறிந்துகொண்ட அருவருப்பே இருந்தது.

“உனக்கு நான் ஒரு தூசாக இருக்கலாம். ஆனா, நான் வாய மூடிக்கொண்டு இருக்கிற வரைக்கும்தான் நீ எனக்கு முன்னால நிண்டு கதைச்சுக்கொண்டிருப்பாய். என்னைச் சுத்தி நிக்கிறவங்களைப் பார். அவங்களுக்கு இப்ப வரைக்கும் அண்ணாவுக்கு என்ன நடந்தது எண்டு தெரியாது. ஆனா, ஒரு வார்த்த… ஒரே ஒரு வார்த்த நான் சொன்னா போதும். உன்னை உருத்தெரியாமல் அழிச்சிடுவாங்கள்!”

அவன் குரலில் இப்போது ஆத்திரம் கொப்பளித்தது. சூர்யா அதிர்ந்து நின்றான்.

error: Alert: Content selection is disabled!!