அத்தியாயம் 19
தன் மனதின் பரிதவிப்புகளில் இருந்து சற்றே வெளியே வந்திருந்தாள் பல்லவி. உண்மையிலேயே சுதா வந்து கதைத்தது மிகுந்த ஆறுதலையும் தெளிவையும் தந்திருந்தன. விதுரனுக்கு அவள் அவனைப் பெறாத அன்னை. மற்ற அன்னையர்களை விடவும் சற்றே அதிகமாகக் கவனம் எடுத்து அவனைக் கையாண்டிருக்க வேண்டும். அந்தத் தவறை அவள் விட்டதில்தான் இவ்வளவும்.
அந்தத் தெளிவுடன் இடியப்பமும் அவித்து, கூடவே நிறையச் சின்ன வெங்காயம் போட்டு வதக்கி, உடைத்த செத்தல் மிளகாயும் சேர்த்து, அதற்குள் நெத்தலி மீன்களையும் போட்டுப் பிரட்டி எடுத்தாள். இந்த நெத்தலிமீன் பிரட்டல் என்றால் பாலமுரளி இரண்டு வாய் அதிகமாகச் சாப்பிடுவான். அதோடு கூடவே, விதுரனுக்காகப் பருப்புப் போட்டுத் தேங்காய்ப்பால் சொதியும் செய்து வைத்துவிட்டுக் காத்திருக்க, அப்பாவும் மகனும் வந்து சேர்ந்தனர்.
சமாதானத்துக்கான முதல் காலடியைத் தானே எடுத்து வைக்கிறவளாக வாசலிலேயே காத்திருந்தாள் பல்லவி. கவனியாதவன் போன்று மகனோடு அவளைக் கடந்தான் பாலமுரளி. சுருக்கென்று தைத்தது அவளுக்கு.
வீட்டுக்குள் வந்தவன் தையல் மெஷினைப் பார்த்துவிட்டுப் புருவங்களைச் சுருக்கினான். “அது… எனக்குத் தைக்கத் தெரியும். அதுதான் சும்மா இருக்கிற நேரம் தைக்கலாமே எண்டு…” என்றவள் அவன் மறுத்துவிடும் முதல் சொல்லிவிடும் அவசரத்துடன், “உங்கட மகனைப் பாத்து, வீட்டு வேலையெல்லாம் முடிச்ச பிறகுதான் தைப்பன். உங்களுக்கு எந்தத் தொந்தரவும் தரமாட்டன். வேண்டாம் எண்டு மட்டும் சொல்லிப்போடாதீங்கோ, பிளீஸ்.” என்றாள் கெஞ்சலாக.
“இவ்வளவு நாளும் இல்லாம இப்ப என்ன புதுசா?”
“இல்ல… அது ரேகாவும் கேட்டவா. அதுதான்…” உண்மை வேறொன்றாக இருந்ததில் அவள் பேச்சில் தடுமாற்றம் தானாக உண்டாயிற்று.
அதற்கு ஒன்றும் சொல்லாமல் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனான் அவன். ஏன் அப்படிப் பார்த்தான் என்று மனம் படபடத்தாலும், அவன் அமைதியாகப் போனதே போதுமாக இருந்தது அவளுக்கு.
அப்பாவும் மகனும் சாப்பிட வந்தனர். “தம்பிக்கு நான் குடுக்கவா?” தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மெல்ல வினவினாள்.
அவள் கேட்டது காதில் விழுந்ததாகவே காட்டிக்கொள்ளாமல் மகனுக்குத் தானே கொடுத்தான் பாலமுரளி. பல்லவியின் முகம் சுருங்கிப் போயிற்று. இருந்தாலும், அவனுக்குப் பிடித்த உணவாயிற்றே என்று ஆவலோடு இரண்டாம் முறை போட வந்தபோது, ஒற்றைக் கையை நீட்டித் தடுத்து நிறுத்தினான் அவன்.
நெஞ்சுக்குள் பொங்கிக்கொண்டு வந்த வேதனையை உதட்டைக் கடித்து அடக்கிக்கொண்டாள். அவள் செய்தது பிழைதான். அதற்கு அவன் பேசியது மிக அதிகம். அப்படியிருந்தும், அதைப் பிடித்துக்கொண்டு தொங்காமல் அவர்களுக்குள் உண்டாகியிருக்கும் இந்தப் பிணக்கைத் தீர்க்கலாம் என்றால் இறங்கி வருகிறானே இல்லையே.
இரவு அவர்கள் உறங்கச் சென்ற பிறகு, அறையின் கதவைச் சாற்றிவிட்டு, பேப்பரில் வெட்டி வைத்திருந்த தன்னுடைய அளவு கட்டிங்குகளை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
இதைத் தொழிலாகச் செய்தது இல்லையே தவிர, அங்கே பெரியப்பா வீட்டில் அயலட்டையில் இருக்கிறவர்களுக்குத் தைத்துக் கொடுத்திருக்கிறாள். அவளுக்கு, பானுமதிக்கு, தாரணிக்கு எல்லாம் அவள்தான் தைப்பது. ஆனால், பிரத்தியேகமாக வகுப்புகளுக்குப் போய்க் கற்றது இல்லை. அனைத்தும் அன்னையிடம் பழகியவை.
அது இன்றைய நாளில் தொழிலாகச் செய்ய நினைக்கிறவளுக்குப் போதாது. பெயிண்டிங், ஆரி வேர்க், எம்பிராய்டரி, விதம் விதமான கழுத்து டிசைன்கள் என்று நிறைய உண்டே. அதை முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.
என்ன செய்யலாம் என்று யோசித்தவள், யூ டியூபில் வீடியோக்களை எடுத்துப் பார்த்தாள். அங்கே நிறையத் தகவல்கள் கிடைத்தன. அங்குப் பார்த்த வரையில் ஆரி வேர்க் பழகுவதற்குச் சற்றே அதிகமாகக் காசு தேவைப்பட்டது.
செலவு குறைவாக எது என்று யோசித்து, எம்பிராய்டரி, பெயிண்டிங் பழகுவதற்குத் தேவையான துணி முதற்கொண்டு நூல்கள், நிறக்கலவைகள் போன்றவற்றைக் குறித்துக்கொள்ள ஆரம்பித்தாள். ஆரம்ப கட்ட சின்ன சின்ன ஆரி வேர்க்குக்கு தேவையானவற்றையும் குறித்தாள். அவளுக்குக் கட்டுப்படியாகி வந்தால் அவற்றையும் வாங்கலாமே.
திடீரென்று கதவைத் திறந்துகொண்டு வந்தான் பாலமுரளி.
ஒரு காலை மடக்கியும், மற்றக் காலை நீட்டியும் தரையில் அமர்ந்திருந்து, ஒரு தலையணையில் கைப்பேசியை நிறுத்தி வைத்து வீடியோ பார்த்தபடி, ஒற்றை ஒன்றில் தேவையானவற்றை எழுதிக்கொண்டிருந்தாள் அவள்.
இப்படி வருவான் என்று எதிர்பாராத பல்லவி வேகமாக நிமிர்ந்து பார்த்தாள். “சத்தம் போட்டு எழுப்பி விட்டுட்டனா?” என்றவளுக்குக் குழப்பம். கைப்பேசியில் சத்தத்தை முற்றாக நிறுத்தியிருந்தாளே. பிறகும் எப்படி?
“என்ன செய்றாய்?” அவளின் கேள்விக்குப் பதிலிறுக்காமல் வினவினான் அவன்.
“அது சின்ன சின்ன டிசைன்ஸ் போட்டுத் தைக்கத்தான் எனக்குத் தெரியும். ஆனா இப்ப நிறையப் பேட்டன்ஸ் வந்திட்டுது. அதெல்லாம் எப்பிடிச் செய்றது எண்டு வீடியோஸ் பாக்கிறன்.”
“ஏன் இதெல்லாம் திடீர் எண்டு?”
அவள் என்னவோ சொல்ல வரவும், “அப்போத சொன்ன கதையை இப்பவும் சொல்லாத! எனக்கு உண்மை வேணும்!” என்றான் அழுத்தமாக.
“அது…” என்று ஆரம்பித்தவளுக்குத் தன் மனத்திலிருப்பதைச் சொல்லலாமா இல்லையா என்று தெரியவில்லை. சொல்லாமல் விடமாட்டான் என்று அவன் பிடிவாதமாக நின்ற விதமே சொல்லிற்று. சொன்னால் இன்னொரு சண்டை வருமோ என்றும் பயமாயிருந்தது.
நடப்பது நடக்கட்டும் என்கிற முடிவுடன், “எனக்கு எண்டு ஆரும் இல்ல. போறதுக்கு இடமும் இல்ல. இனியும் பெரியப்பாக்குப் பாரமா இருக்கேலாது. இதுல வேலையும் இல்லாம, கையில காசும் இல்லாம இருக்கிறது பயமா இருக்கு. அதுதான்…” அதற்குமேல் பேசமுடியாமல் நிறுத்திவிட்டாள். தொண்டையில் எதுவோ அடைத்துக்கொண்டு வந்தது.
பாலமுரளிக்குப் பேச்சற்றுப் போனது. இதை அவன் எதிர்பார்க்கவில்லை. அன்றைக்கு அவன் அப்படிக் கதைத்திருக்கக் கூடாதோ? ஆனால், அதற்குக் காரணம் அவள்தானே. இதில், அவனும் மகனும் இருக்கையில் தனக்கென்று யாரும் இல்லை என்றுவிட்டாளே. காசும் இல்லையாம். பிறகு எதற்கு அவன் மாடு மாதிரி உழைக்கிறான்? சுர் என்று ஒரு கோபம் தலைக்கு ஏறியது. அது அவனிலா அவளிலா என்றுதான் தெரியவில்லை.
“பாத்தது எல்லாம் காணும். எழும்பிப் படு!” என்றான் சினத்துடன்.
அவளும் கட்டிங்குகள் எல்லாவற்றையும் ஒரு பெட்டிக்குள் எடுத்து வைத்து, அதை ஒரு கரையாகத் தள்ளிவிட்டு, பாயை விரித்துத் தலையணையைப் போட்டாள். அதுவரையிலும் கூட அவன் அங்கேயே நின்றது கேள்வியை எழுப்பினாலும், அவன் பக்கம் திரும்பவில்லை அவள். பெட்ஷீட்டை எடுத்துக்கொண்டு சரிய, “தள்ளிப் படு!” என்றான் அவன்.
இதை எதிர்பார்க்கவில்லை அவள். வேகமாகத் திரும்பி அவனைப் பார்த்தாள்.
“என்ன?” என்றான் அதற்கும் சீறலாக.
“இல்ல… ஒண்டும் இல்ல.” என்றுவிட்டு அவனுக்கு இடம் விட்டுச் சரிந்துகொண்டாள். அவனும் அவளருகிலேயே சரிந்தான். அவ்வளவுதான். நெற்றியின் மீது ஒரு கரத்தைப் போட்டுகொண்டு கண்களை மூடிக்கொண்டான்.
பல்லவிக்கு விழிகள் கரிக்க ஆரம்பித்தன. அவன் அப்படி வார்த்தைகளால் நோகடித்த பின்பும், தன்னை அவன் கையணைப்புக்குள் இழுத்துக்கொள்ள மாட்டானா என்று ஏங்கினாள்.
எப்போதிருந்து இந்த மாற்றம் என்று தெரியவில்லை. ஆனால், மனம் அவன் துணையை நாடிற்று. எனக்கென்று யாருமே இல்லை என்கிற எண்ணம் ஆழமாகப் பதிந்து போயிருந்ததாலோ என்னவோ, அவன் இலகுவாகவே அவளுக்குள் நுழைந்திருந்தான்.
உறக்கம் வராமல் தவிக்கிறாள் என்று அவளின் அசைவுகளிலேயே கண்டுகொண்டான் பாலமுரளி. ஆனாலும், ஆற்றுப்படுத்தப் போகவில்லை. ‘உனக்குத்தான் ஒருத்தரும் இல்லையே. பிறகு என்ன? தனியாவே படடி!’ கடுப்புடன் விழிகளை மூடியே கிடந்தான். மனம் மட்டும் காரணமற்றுக் கொதித்துக்கொண்டிருந்தது.
காலையில் மகனுடன் நேசரிக்கு புறப்பட்டான் பாலமுரளி. வேகமாக ஓடி வந்து, “நான் ஒருக்கா டவுனுக்குப் போயிட்டு வரட்டா?” என்று வினவினாள்.
பதில் சொல்லாமல் புல்லட்டை கிளப்பிக்கொண்டு போனான் அவன். முகம் பார்த்துப் பேசுகிறானே இல்லையே என்று போகிறவனையே மனத்தில் பாரத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள் பல்லவி.
கடைக்குப் போய்விட்டு நடந்து வந்துகொண்டிருந்தாள் சுதா. எதிரில் பாலமுரளி விதுரனோடு வருவது தெரிந்தது. “நிப்பாட்டுங்க நிப்பாட்டுங்க!” என்று வேகமாகக் கையை நீட்டித் தடுத்தாள்.
“என்ன?” அவளருகில் சென்று புல்லட்டை நிறுத்திவிட்டு வினவினான் பாலமுரளி.
அவனுக்குப் பதில் சொல்லாமல் புல்லட்டின் முன்னால் அமர்ந்திருந்த விதுரனிடம், “மணி மாமாக்குக் குளிக்க சோப் இல்லையாம். முதலே பாத்து வாங்கி வைக்க மாட்டியா எண்டு கத்திக்கொண்டு இருக்கிறார். ஓடிப்போய் இதக் குடுத்திட்டு வாய்யா.” என்று பைக்குள் இருந்த சோப்பை எடுத்து நீட்டினாள்.
அவனும் வாங்கிக்கொண்டு ஓடினான்.
விதுரன் வருவதற்கு முதல் பேசிவிடவேண்டும் என்பதில் நேராகவே ஆரம்பித்தாள் சுதா.
“பல்லவில இருக்கிற கோபம் உங்களுக்கு இன்னும் போகேல்லையா?”
முகம் இறுகியது அவனுக்கு. ஒன்றும் சொல்லாமல் பார்வையைத் திருப்பிக்கொண்டான்.
“சும்மா அடிச்சுப்போட்டாள் எண்டு கோவிச்சுக்கொண்டு திரியாம நீங்களும் கொஞ்சம் விதுரனைக் கவனிங்க அண்ணா. அவன் முந்தி மாதிரி இல்ல. இப்ப இன்னும் சரியான குழப்படி. சொன்னா கவலைப்படுவீங்க எண்டுதான் இவ்வளவு நாளும் சொல்லேல்ல. அண்டைக்கு அவளைக் காலால உதைச்சு, ரோட்டில விழுத்திப்போட்டான், தெரியுமா? அது, புதுசா கலியாணம் கட்டி, இந்த ஊருக்கு வந்தவளுக்கு எவ்வளவு கேவலம் சொல்லுங்கோ?” என்றதும் திகைப்புடன் அவளைப் பார்த்தான் அவன்.
“தெரியாதா உங்களுக்கு? கல்லுக் குத்தித் தலைல காயமும் இருந்தது.”
“என்ன சொல்லுறாய்?” இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவள் சொல்லவில்லையே என்கிற அதிர்வுடன் கேட்டான் அவன்.
அவனை நன்றாக முறைத்தாள் சுதா. “அதுதான்! எதையும் ஒழுங்கா விசாரிக்காதீங்கோ. என்ன நடந்தது எண்டுறதையும் தெரிஞ்சு கொள்ளாதீங்கோ. ஆனா, கோவம் மட்டும் நல்லா வரும் என்ன?” என்றாள் எரிச்சலுடன்.
“இப்ப என்ன? அவள் அடிச்சது சரி எண்டு சொல்லுறியா?”
“அதுல என்ன பிழை இருக்கு? நான் பிள்ளைகளுக்கு அடிக்கிறேல்லையா? இல்ல, ரேகாதான் அடிக்கிறேல்லையா?”
“உங்கட பிள்ளைகளும் அவனும் ஒண்டில்ல(ஒன்று இல்லை) சுதா!” என்றான் அவன் இறுக்கமான குரலில்.
“என்ன அண்ணா வித்தியாசம்?” உடனேயே திருப்பிக் கேட்டாள் அவள்.
பதில் சொல்லப் பிடிக்காமல் நின்றான் அவன்.
“இதுதான் உங்கட பிரச்சினை. இன்னுமே நீங்க அவனைத் தாயில்லாத பிள்ளையாத்தான் பாக்கிறீங்க. அவளை அவன்ர தாயா நினைக்கவே இல்ல. அதாலதான் அவள் அடிச்சது உங்களுக்குப் பிழையா தெரியுது.”
“ப்ச்! விடு சுதா!” என்றான் சலிப்புடன். என்னவோ அவனுக்கு இதைப் பற்றி மேலே பேசுவதே பிடிக்கவில்லை.
“அப்பிடியெல்லாம் விடேலாது அண்ணா.” என்றாள் அவள். “நீங்க முதல் அவளை விதுரன்ர அம்மாவா பாருங்க. அவளை நம்புங்க. அவள் அவனுக்கு நல்லதுதான் செய்வாள் எண்டு நினைங்க. அவனை வளக்கிற பொறுப்பை அவளின்ர கைலயே குடுங்க. நீங்க நடுவுக்க போகாதீங்க.” என்றவளுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றான் அவன்.
பல்லவியைப் பற்றியோ தன் மனதில் இருப்பது பற்றியோ பேச அவன் பிரியப்படவில்லை என்று சுதாவிற்குப் புரிந்தது. ஆனாலும், அவள் சொல்வதைக் கேட்பான், அது பற்றி யோசிப்பான் என்கிற நம்பிக்கையில் இன்னும் சொன்னாள்.
“அண்ணா! அவள் ஒண்டும் பிள்ளை வளக்கிறது எப்பிடி எண்டு பயிற்சி எடுத்துக்கொண்டு வரேல்ல. அனுபவம் இல்லாதவள். சின்ன சின்னப் பிழைகள் நடக்கத்தான் செய்யும். அத நீங்கதான் பாத்து பாத்துச் சொல்லிக்குடுக்கோணும். அத விட்டுப்போட்டு, வீட்டுல நீ தனியா கிட, நானும் என்ர மகனும் எங்கட வழிய பாக்கிறோம் எண்டு இருந்தா எப்பிடி? ரூபாக்குப் பிள்ளைகள் பிறந்ததையும் சொல்லாம விட்டு, எல்லாருமா சேந்து அவள ஒதுக்குறீங்களா அண்ணா?” என்று அவள் கேட்கவும் சுளீர் என்று அவனுக்கு வலித்தது.
உண்மையில் அவன் ஒதுக்கித்தான் அவளை வைத்திருந்தான்.
“அவளும் தாயில்லாப் பிள்ளதான். உங்கட மகனுக்காவது நீங்களும் அவளும் இருக்கிறீங்க. அவளுக்கு நீங்க மட்டும்தான். என்னவோ யோசிச்சு நடவுங்க!” என்றவள் விதுரனும் வந்துவிட விடைபெற்றுக்கொண்டாள்.

