கலிங்கனின் காவியம் 9.2

“நாங்க ஒண்டும் உங்கள மாதிரி சுயநலப் பிசாசுகளோ, நம்பிக்கைத் துரோகிகளோ இல்லை. அண்ணாவுக்காக உயிரைக் குடுக்கக் கூடத் தயங்காத ஆக்கள். அவர் தந்த சோத்தில உப்புப் போட்டுத் திண்டவங்கள். நன்றி, விசுவாசம் என்னெண்டு தெரிஞ்சவங்கள்!” ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாகச் சொன்னான்.

“உங்களுக்கு இதில சந்தேகம் இருந்தா சோதிச்சுப் பாப்பமா? நான் ஒரு வார்த்தை சொல்லட்டா? அப்ப தெரியும், ஆருக்கு எவ்வளவு பலம் எண்டு!” சூர்யாவுக்கு நேரடியாகவே சவால் விட்டான் ஆதி.

இத்தனை காலமும் தன் ஏவலுக்குக் கட்டுப்பட்டு, தான் சொல்வதைச் செய்துகொண்டு, பின்னால் சுற்றியவன் இன்று தன்னையே எதிர்த்துப் பேசுகிறான் என்ற எண்ணம் அவனுடைய அகங்காரத்தைச் சீண்டியது.

முதலில் இவனை ஒழித்துக்கட்டியிருக்க வேண்டுமோ என்று கூட நினைத்தான்.

ஆனாலும், அவசரப்பட்டு எதையும் செய்துவிடக் கூடாது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, “உனக்கு இளம் ரெத்தம் ஆதி. அதுதான் துள்ளுறாய். கொஞ்சம் நிதானமா யோசி. என்னை மாதிரி நீயும் உன்ர வாழ்க்கையை அழிக்காத. உன்ர நல்லதுக்குத்தான் சொல்லுறன். ராயன் இருந்தா அவனுக்கு அடியாளா, எடுபிடியாத்தான் காலம் முழுக்க இருப்பாய். அதே அவன் இல்லை எண்டு வை, நானும் நீயும் மொத்தத் துறைமுகத்தையும் ஒரு ஆட்டு ஆட்டலாம். ராயனிட்ட இருக்கிற மாதிரி செல்வம் செல்வாக்கு எல்லாம் உனக்கும் கிடைக்கும். உன்னையும் நாலு பேர் மதிப்பினம். உனக்குப் பயந்து நடப்பினம். இதெல்லாம் வேண்டாமா உனக்கு?” என்று ஆசை காட்டினான்.

அதையெல்லாம் கேட்ட ஆதிக்கு அவன் முகத்தில் காரி உமிழ்ந்துவிடுவோமோ என்று பயமாயிற்று. அந்தளவில் அசிங்கமான பிறப்பாக தெரிய, “நீ நல்ல பிறப்பு பிறந்திருக்க சான்ஸே இல்ல.” என்றுவிட்டான்.

நொடியில் கொதித்துப்போனான் சூர்யா. “ஏய்!” என்றபடி அவன் நெருங்க, ஆதி அசையவில்லை. “முடிஞ்சா கையை வை!” என்றான் அலட்சியமாக.

அந்த ஒற்றைச் சவால் சூர்யாவை மேலும் ஆத்திரப்படுத்தியது. அவன் ஏதோ சொல்ல வாயைத் திறப்பதற்குள், ஆதியின் நண்பர்கள் ஒவ்வொருவராக அவனைச் சுற்றி வந்து நின்றார்கள். அவர்கள் பார்வை சூர்யாவை அளவிடுவது போன்று பார்த்தது.

சூர்யா அதிர்ந்துபோனான். பல வருடங்களுக்கு முன்னால் தானும் ராயனும் வரதனுக்கு எதிராக நின்ற காட்சி மின்னலாக வெட்டிப்போனதில் நிலைகுலைந்துபோனான்.

அன்று வரதனுக்கு எத்தனை பெரிய ஆள்பலம் இருந்தாலும், அவனை எதிர்த்து நிற்பதற்கு அவர்கள் இருவரும் தயங்கியதில்லை. அதேபோல் இன்று. அந்த இடங்கள் மாறிவிட்டதைப் போல அவனுக்குத் தோன்றியது.

அன்று வரதனுக்கு ஏற்பட்ட நிலைமை இன்று தனக்கு ஏற்பட்டுவிட்டது என்று நினைத்தான். அதை
ஏற்றுக்கொள்ள அவனுடைய அகங்காரம் இடம் கொடுக்கவில்லை.

ஆனாலும், ஆதியின் பின்னால் அணிவகுத்து நின்றவர்களைப் பார்த்தபோது, ராயன் காணாமல் போனதால் அவனுடைய பலம் குறைந்துவிட்டதாக நினைத்தது பெரும் தவறு என்பதை புரிந்துகொண்டான்.

தன்னை எதுவும் செய்ய முடியாமல் நின்ற சூர்யாவை வெறுப்புடன் பார்த்த ஆதி, தன் நபர்களுடன் விலகி நடந்தான். என்ன பிரச்சனை என்று கெட்டவர்களிடம் ஒன்றும் சொல்லவில்லை அவன். ஆனால், சூர்யா மீதும் ஒரு கண் வைத்துக்கொள்ளும்படி சொன்னான். அவர்கள் அதிர்ந்து பார்த்தார்கள்.

“எங்களால நம்பேலாத விசயங்கள் நிறைய நடக்குதடா. கொஞ்ச நாளில உங்களுக்கே எல்லாம் விளங்கும். அதுவரைக்கும் கவனமா இருங்க.” என்றுவிட்டுப் புறப்பட்டான்.

தன்னை வைத்து மட்டுமே ராயனைப் பிடிக்க முடியும் என்பதில் தன்னைக் கண்காணிக்கவும், பின்தொடரவும் சூர்யாவும் வரதனும் நிச்சயமாக ஆட்களை நியமித்திருப்பார்கள் என்று அவனுக்குத் தெரியும்.

அரை மணி நேரத்தில் போகக் கூடிய வைத்தியசாலையை மொத்த திருகோணமலையையும் சுற்றி, நான்கு வாகனங்கள் மாறிப் போய்ச் சேர்ந்தான்.

தீவிர சிகிச்சைப் பிரிவின் கண்ணாடிக் கதவின் சிறு துளை வழியாக உள்ளே எட்டிப் பார்த்தான் ஆதி. மருத்துவ உபகரணங்கள் இணைக்கப்பட்ட நிலையில், மயக்க மருந்தின் தாக்கத்தாலும் உடல்நிலையாலும் இன்னுமே விழிக்காமல் இருந்தான் காலிங்கராயன்.

மூக்கிலும் வாயிலும் சுவாசத்திற்கான குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன. கையில் ஏற்றப்பட்டிருந்த திரவ மருந்தின் குழாய் வழியாகத் துளித்துளியாக மருந்து ஏறிக்கொண்டிருந்தது.

அருகிலிருந்த கண்காணிப்புக் கருவியில் அவனுடைய இதயத் துடிப்பைக் குறிக்கும் கோடு சீரான இடைவெளியில் அசைந்துகொண்டிருந்தது.

விழித்துவிட மாட்டானா என்கிற ஏக்கத்தோடு அவனையே பார்த்திருந்துவிட்டு உள்ளம் கனக்க விலகி வந்தான் ஆதி.

அடுத்த நாளும் அப்படியெஹான் போனது. ஆதி அவசியமற்று வைத்தியசாலையை விட்டு அகலுவதே இல்லை. மூன்றாம் நாள் இலேசாகக் கண்களைத் திறந்து பார்த்தான் ராயன். அந்த நேரம் அங்கே இருந்த வருணா பரபரப்புற்றுப்போனாள். சில நொடிகளிலேயே மீண்டும் அவன் உறங்கியிருந்தான். ஆனால் அது இயல்பான உறக்கம். மயக்கமில்லை. ஆழமான காயத்தினாலும் அதிகளவு இரத்தப்போக்கினாலும் உடலின் பலகீனத்தாலும் உண்டானது.

ஓடிப்போய்த் தலைமை மருத்துவருக்குத் தெரிவித்தாள். அவரும் வந்து பரிசோதித்துப் பார்த்தார். அவன் உடல்நிலை சீராகத் தொடங்கியிருப்பது தெரிந்து அவருக்கும் மகிழ்ச்சி.

அதன் பிறகு அவன் முன்னேற்றத்தில் எந்தப் பின்னடைவும் இல்லை. அடுத்த நாள் அவனுடைய விரல்கள் மெல்ல அசைந்தன. மூடியிருந்த இமைகளை மெதுவாக அசைத்து, சிரமத்துடன் கண்களைத் திறந்தான்.

அதைக் கவனித்துவிட்டுத் தாதி பெண் ஓடிப்போய் வருணாவிடம் சொன்னாள். விரைந்து வந்தவளுக்கு இன்னும் அவன் விழித்தே இருப்பதில் பெரும் மகிழ்ச்சி. உடனேயே அவனைப் பரிசோதனை செய்தாள். இனித் தேறிவிடுவான் என்கிற நம்பிக்கை உண்டாயிற்று.

கலிங்கராயனுக்கு எதிரே இருந்த அவள் மங்கலாகத் தெரிந்தாள். மெல்ல மெல்ல விழிகளை மூடித் திறந்து பார்வையைத் தெளிவாக்க முயன்றுகொண்டே
அவளிடம் என்னவோ சொல்ல முயன்றான். ஆனால், தொண்டை வறண்டு, குரல் மிகவும் பலவீனமாக இருந்தது.

“கதைக்காதீங்க. நீங்க இப்ப ரிலாக்ஸ்சா இருக்கோணும்.” அவன் கையை வருடிக்கொடுத்தபடி மெதுவாகச் சொன்னாள் வருணா.

அவன் அதைக் கேட்காமல் உதடுகளைச் சிரமத்துடன் அசைத்தான். அவனுக்குச் சுவாசக் குழாய் பொருத்தப்பட்டிருந்தால் பேச முடியவில்லை.

உன்னிப்பாக அவனைக் கவனித்தாள். அப்போதுதான் அவன் உதடுகள் ஆதி என்று அசைவதைக் கண்டாள். “ஓகே ஓகே! ஆதிய வரச் சொல்லுறன். ஆனா நீங்க கதைக்கக் கூடாது. சரியா?” குழந்தைக்குச் சொல்வதுபோல் சொல்லிவிட்டு, தாதிப் பெண்ணிடம் சொல்லி ஆதியை வரவழைத்தாள்.

உள்ளே விரைந்து வந்த ஆதிக்கு ராயன் விழித்திருப்பதைக் கண்டதும் தொண்டை அடைத்துக் கண்களில் கண்ணீர் பெருகியது. அடுத்த அடியை எடுத்து வைக்கக் கூட முடியாமல் நின்றான்.

அவனையும் தன் விரல்களை அசைத்து அருகே அழைத்தான் ராயன்.
“அண்ணா!” என்று அவனருகே ஓடிய ஆதி, ராயனின் கையை இறுகப் பற்றிக்கொண்டான்.

ராயன் ஒருமுறை விழிகளை மூடித் திறந்தான். தான் உயிர் பிழைத்துவிட்டதையும், ஆதி தன்னருகில் இருப்பதையும் உணர்ந்து உள்வாங்கிக்கொள்வது போன்று சில நொடிகள் விழிகளை மூடியிருந்தவன், பின்னர் மெல்லத் திறந்து அவனைப் பார்த்தான்.

அந்தப் பார்வையில் என்ன இருந்தது என்று ஆதியால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், அவன் நெஞ்சில் தேங்கியிருந்த துக்கமெல்லாம் கண்ணீராக வெடித்துப் பெருகியது.

“நீங்க நல்லா இருக்கிறீங்க அண்ணா. உங்களுக்கு ஒண்டும் இல்ல. இனி எழும்பிடுவீங்க!” என்று ராயனுக்குத் தைரியமூட்டும் விதமாக அவனுடைய கையை மெதுவாகத் தட்டிக்கொடுத்தான்.

ராயனும் விழிகளை ஒருமுறை மூடித் திறந்து அவன் சொன்னதை ஆமோதித்தான்.

அந்தச் சிறிய அசைவே ஆதிக்குப் பேரானந்தத்தைக் கொடுத்தது. இத்தனை நாட்களாக நெஞ்சுக்குள் சுமந்திருந்த பயமும் தவிப்பும் அத்தனையும் விலகிப் போயின. பழைய தெம்பு திரும்பி வந்துவிட நிமிர்ந்து அமர்ந்தான்.

error: Alert: Content selection is disabled!!