கலிங்கனின் காவியம்4.1

அத்தியாயம் 4

கலிங்கராயனின் குடோனுக்கு வெளியே காவல்துறை வாகனங்கள் வரிசையாக நின்றிருந்தன. தீயணைப்புப் படையினர் ஏற்கனவே வந்து தீயை அனைத்துவிட்டுப் போயிருந்தார்கள். ஆனாலும் எரிந்து கருகிப்போன கண்டெய்னர் லொறிகளும், அவற்றிலிருந்து எழுந்துகொண்டிருந்த மெல்லிய புகையும் அந்த இடத்தில் நடந்த அழிவுக்குச் சாட்சியாக நின்றன.

குடோனின் நுழைவாயிலில் காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை. தடயவியல் நிபுணர்கள் எரிந்த லொறிகளைச் சுற்றிப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

தீ எப்படித் தொடங்கியது, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் தீப்பற்றியதற்கான அறிகுறிகள் இருக்கின்றனவா, யாராவது வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்திருக்கிறார்களா என்று ஒவ்வொன்றாக ஆராய்ந்துகொண்டிருந்தார்கள்.

குடோனில் வேலை செய்பவர்களிடம் விசாரணை ஒருபுறம் நடந்துகொண்டிருந்தது. அன்று பணியில் இருந்தவர்கள், தீயை முதலில் கண்டவர்கள், காவலுக்கு நின்றவர்கள் என ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

குடோனின் உரிமையாளர் யார் என்பதிலிருந்து, எரிந்த லொறிகளில் என்ன சரக்குகள் இருந்தன, அவற்றின் மதிப்பு என்ன, அவற்றுக்கான ஆவணங்கள் எங்கே இருக்கின்றன என்பதுவரை கேள்விகள் நீண்டுகொண்டே சென்றன.

அந்த நேரத்தில்தான் அங்கே வந்து இறங்கினான் கலிங்கராயன். அவனுடைய ரேஞ்ச் ரோவரைப் போலவே பளபளக்கும் கறுப்புச் சட்டையின் கைகளை மடித்துவிட்டபடி காரிலிருந்து இறங்கி உள்ளே வந்தான்.

அதற்காகவே காத்திருந்தாற்போல் அவனுடைய ஆட்களில் ஒருவன் ஓடி வந்து, அதுவரை காவல்துறை நடத்திய விசாரணைகளைப் பற்றிச் சொன்னான்.

அந்த நேரத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் அவர்களை நோக்கி வந்தார்.

“கலிங்கராயன்?” என்றார் கேள்வியாக.

தான்தான் என்று சொல்வதுபோல் அவர் புறமாகக் கையை நீட்டினான் கலிங்கன். அதைப் பற்றிக் குலுக்கிவிட்டு, “உங்களிட்டக் கொஞ்சம் விசாரிக்கோணும்.” என்று சொன்னார் அவர்.

சிறு தலையசைப்பில் அதற்கான அனுமதியை அவருக்கு கொடுத்துவிட்டு, ஒரு சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்தித் தீயை மூட்டினான் கலிங்கன்.

பார்த்த காவல்துறைக்குப் பற்றிக்கொண்டு வந்தது. எவ்வளவு தைரியமிருந்தால் அவர் முன்னேயே புகைப்பான்? ஆனால், அங்கே வர முதலே அவனைப் பற்றிய அறிவுறுத்தல்கள் அவருக்கு வந்திருந்தன. முக்கியமாக மேலிடம் கவனமாக இருக்கச் சொல்லிக் கடுமையாக எச்சரித்திருந்தது. அதில் அடக்கி வாசிக்கவேண்டியிருந்தது.

ஒருமுறை புகையை நன்றாக இழுத்து, மூக்கால் வெளியேற்றியபடி, அவரைப் பார்த்தான் அவன்.

ஆரம்பி என்கிறான்.

“இந்தக் குடோன், எரிஞ்சபோன லொறி எல்லாம் உங்கடயா?”

ஆம் என்று தலையை அசைத்தான்.

“இதுக்கு முதல் உங்களுக்கு ஆரோடயாவது முட்டல் மோதல் இருந்ததா?”

அவருக்குப் பதில் சொல்லாமல் அவரைக் கூர்ந்து பார்த்தான் கலிங்கன். அதிகாரியின் முகத்தில் மெல்லிய மாற்றம் ஏற்பட்டது. அதைத் துல்லியமாகத் தன் விழிகளுக்குள் உள்வாங்கியபடி மருத்துத் தலையசைத்தான்.

“உங்களுக்கு ஆர்லயாவது சந்தேகம் இருக்கா?”

ஒரு கணம் வரதனின் முகம் கண் முன்னே தோன்றிற்று. விரலிடுக்கில் கிடந்த சிகரெட்டின் சாம்பலைத் தரையில் தட்டிவிட்டபடியே இல்லை என்று தலையசைத்தான்.

அதிகாரி அவனைச் சில நொடிகள் உற்றுப் பார்த்தார்.
இந்த மாதிரியான ஆட்களிடம் விசாரணை நடத்தும்போது, அவர்களின் கோபத்தைவிட அவர்களின் மௌனத்தையே அதிகம் கவனிக்க வேண்டும் என்பது அவருடைய அனுபவம்.

அவனுடைய அமைதியும் சுருக்கமான பதில்களும் கூட ஆழம் நிறைந்தவையாக அவருக்குப் பட்டன. அவனுக்கும் வரதனுக்கு இடையில் இருக்கும் பிரச்சனைகள் கூட லேசுபாசாக அறிந்துதான் இருந்தார். என்ன, அதையெல்லாம் தெரிந்ததுபோல் அவராலும் காட்டிக்கொள்ள முடியாது.

“உங்கட குடோன்ர பாதுகாப்பு ஏற்பாடுகள், வேலை ஆக்களின்ர விவரங்கள், லொறிகளின்ர டொக்கிமெண்ட்ஸ், இருப்பில இருந்த சரக்குகளின்ர டீடெயில்ஸ் எல்லாம் எனக்கு வேணும்.” என்றதும் திரும்பிப் பார்த்தான் கலிங்கன்.

அவனுடைய அந்தப் பார்வைக்காகவே காத்து நின்ற ஆதி ஓடி வந்தான். “இவர் கேக்கிறதுகள எடுத்துக் குடு.” என்று அவனுக்கு உத்தரவிட்டுவிட்டு வேறு என்ன என்று பார்த்தான் கலிங்கன்.

“சிசிடிவி புட்டேஜ் ஒண்டும் இல்லையாம்.” அப்படி இருக்கச் சாத்தியமே இல்லை எனும் குரலில் சொன்னார் அவர்.

“என்ர பாதுகாப்பைத் தாண்டி இதுக்க நுழையிறது எண்டுறது ஈஸி இல்ல. அப்பிடி இருக்க உள்ள வந்து என்ர ஆக்களில கைய வச்சது காணாது எண்டு, சூர்யாவையும் அடிச்சிட்டுப் போயிருக்கிறாங்கள். இந்தளவு வேலைகளையும் துணிஞ்சு செய்தவங்கள் சாட்ச்சியை விட்டுட்டுப் போவங்கள் எண்டு நினைக்கிறீங்களா?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.

ஒரு நொடி அமைதி காத்துவிட்டு, “நீங்க விசாரணைக்கு வர வேண்டியிருக்கும்.” என்றார்.

“தாராளமா!” என்றுவிட்டு நடந்தான் கலிங்கராயன்.

அங்கே எரிந்துபோன லொறிகளைப் பார்த்தபோது, அவனுடைய தாடை இறுகியது. ஒன்றுக்கு மூன்று லொறிகள். அவை வெறும் வாகனங்கள் அல்ல. அவனுடைய தொழிலின் ஒரு பகுதி. அவற்றை மீண்டும் வாங்குவது பணத்தால் முடிந்துவிடும். அதற்குள் இருந்த சரக்குகளுக்குச் சொந்தக்காரர்களைக் கூட சமாளித்துவிடுவான்.

ஆனால், அவற்றை எரித்தவன் அவனுக்குச் சொல்ல நினைத்த செய்தி என்ன என்று எண்ணித்தான் கொதித்துக்கொண்டிருந்தான். ‘என்னால உன்னத் தொடேலாது எண்டு நினச்சியா, ராயா? உன்ர இடத்துக்கே வந்து உன்னை அடிக்கிறன்.’ என்று வரதன் சொன்னதாகவே நடந்ததை எடுத்தான் கலிங்கன்.

அதீத கோபத்தில் சிவந்தன அவன் விழிகள். ஆத்திரத்தை அடக்கியவனின் புஜங்கள் புடைத்துக்கொண்டு நின்றன.

அவனுக்குப் பின்னால் வந்த அதி, அவனுடைய முகத்தைப் பார்த்துவிட்டுப் பேசத் தயங்கினான்.

“சொல்லு.”

“வரதன்ர ஆக்கள்தான். நான் பாத்தனான்.” மற்றவர்களுக்குக் கேட்டுவிடாத குரலில் முணுமுணுத்தான்.

இதை பார்க்க வேறு வேண்டுமா? ஒன்றும் சொல்லாமல் தன் கோடவுனைச் சுற்றி விழிகளைச் சுழற்றினான் ராயன்.

“எல்லா காமராக்களையும் ரிமூவ் பண்ணியாச்சு.”

“எப்பிடி உள்ளுக்கு வந்தவங்கள்?”

“நீங்க சொல்லி வீடியோ புட்டேஜ் எல்லாம் டிலீட் பண்ணிட்டதால செக் பண்ணேலாம இருக்கு. ஆனா, அந்த நேரம் நானும் சூர்யா அண்ணாவும் உள்ளுக்க நிண்டனாங்க. காவலுக்கு நிண்ட எங்கட ஆக்களின்ர கண்ணை மறைச்சிட்டு வர சான்ஸே இல்லை அண்ணா. ஆனா, உள்ளுக்கு வந்த லொறிக்குள்ள மறைஞ்சு வந்திருக்கலாம். நேற்று மட்டும் ஏழு லொறி வெளி ஆக்களின்ர வந்து போயிருக்கு. போலீஸ் கெடுபிடி இருக்கிறதால வேகமா விசாரிக்கேலாம இருக்கு.”

“ரெண்டு நாள் விட்டு விசாரி. எவனும் எங்கயும் போகப்போறேல்ல.” என்றுவிட்டு, நடந்த சண்டையிலும் தீயை அணைக்க முயன்றதிலும் காயம் பட்டு, உடலில் சில பாகங்களில் தீக்காயங்களை சுமந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களைப் பார்க்கப் போனான்.

அன்று போலவே இன்றும் கண்ணில் நீரும் முகம் முழுக்கச் சுமந்த வேதனையுமாக நின்ற அவர்களின் குடும்பத்தினரைக் கண்டு ஒரு நொடி அப்படியே நின்றான் கலிங்கன்.

அன்று போன்று இன்று அவனால் ஆறுதல் சொல்ல முடியவில்லை. ஏதோ ஒன்று அவனை விரட்டியதில் வேகமாக வைத்தியசாலைக்குள் உள்ளிட்டான்.

அங்கே நிலாவினி கூடவே நின்று அத்தனை பேரையும் கவனித்துக்கொண்டிருந்ததில் மெல்லிய ஆறுதல்.

இவனைக் கண்டுவிட்டு வந்து, “கோடவுன் டொக்கிமெண்ட்ஸ் எல்லாம் வேணுமாம் எண்டு ஆதி கேட்டவன். போலீஸ் கேட்டதாம். அனுப்பவா?” என்று கேட்டாள் அவள்.

அன்று காலையில் இருந்த கோபம் அவளிடத்தில் இப்போது மருந்துக்கும் இல்லை. அவன் சூழ்நிலை அறிந்து நடக்கிறாள்.

இதுதான் அவள். என்னதான் கோபதாபம் இருந்தாலும் இக்கட்டான நிலையில் கைகொடுக்கத் தவறவே மாட்டாள். அன்றைய நாளில் முதன் முறையாக இதமான புன்னகை ஒன்று உதட்டில் மிளிர, “என்ன கேட்டாலும் யோசிக்காமக் குடு.” என்றான் அவன்.

“அவ்வளவு தைரியா?”

உதட்டோரம் முறுவல் அரும்ப, சிறிதாய்க் கண்ணைச் சிமிட்டிவிட்டுப் போனான் கலிங்கன். அதன் பிரதிபலிப்பதை நிலாவின் முகம் முழுவதும் மலர்ந்த முறுவல்.

சூர்யா அங்கே எழுந்து அமர்ந்திருந்தான். அவன் உடல் நலத்தைப் பற்றி இவன் கேட்டுக்கொண்டிருக்கையில் அந்த அறைக்குள் வந்த நிலாவின் கையில் மூவருக்குமான உணவிருந்தது.

அங்கிருந்த மேசையை சூர்யாவின் கட்டிலுக்கு அருகே இழுத்துப் போட்டான் கலிங்கன். சூர்யா கட்டிலில் இருந்தே சாப்பிட, மற்ற இருவரும் நாற்காலிகளை இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்து உண்டனர்.

“என்னவாம் போலீஸ்?” சூர்யா விசாரித்தான்.

“வழமையான விசாரணைதான்.”

“இந்த முறையாவது செய்தவனைப் பிடிப்பாங்களா?”

“தேடிப் பிடிக்கிறதுக்கு செய்தது ஆர் எண்டு அவங்களுக்கு தெரியாதா என்ன?” சிறு சிரிப்புடன் கேட்டான் கலிங்கன்.

“அது எண்டா சரிதான்.”

“அவே தெரியாத மாதிரி விசாரிக்கிறதும் நாங்க எதுவுமே நடக்காத மாதிரி நடக்கிறதும் எப்பவும் நடக்கிறதுதானே.” அவன் இலகுவாகச் சொல்லிக்கொண்டிருந்தபோது யாரோ கதவைத் தட்டினார்கள். மூவரும் திரும்பிப் பார்க்க, அவர்களின் ஆட்களில் ஒருவன் நின்றிருந்தான்.

“வரதன் மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.”

மூவர் புருவங்களும் சுருங்கின. அவன் எதற்கு இவர்களுக்கு செய்தி அனுப்ப வேண்டும்? இவர்கள் மூவர் பார்வையும் சந்தித்து மீள, “என்ன மெசேஜ்?” என்றான் கலிங்கன்.

வந்தவன் பார்வை நிலாவினியைத் தொட்டு நின்றது.

“என்னை ஏன் பாக்கிறாய்?” என்றாள் அவள் ஒன்றும் புரியாமல்.

“அது உங்கட ஃபோன்ல…”

error: Alert: Content selection is disabled!!