“உன்ர மனத்துக்குச் சரி எண்டு படுறதை செய். ஆனா, கோவமா கதைக்காம நிதானமா கதை. ஏன் சும்மா தேவையில்லாம பிரச்சனைகளை வளர்ப்பான்.” என்று அவள் சொன்னதைக் கேட்டுக்கொண்டு வைத்தாள் மயூரி.
மாலையானதும் ஆதிராவின் டென்னிஸ் ட்ரெயினிங்கை முடித்துக்கொண்டு, அம்மாவும் மகளும் சப் வேக்குச் சென்றனர். அங்கே மேசைகள் நிறைந்து வழிவதைக் கவனித்துவிட்டு, “ஆது, அங்க பார் ஒரு மேசை ஃபிரியா இருக்கு. நீ போய் இடத்தைப்பிடி நான் வாங்கிக்கொண்டு வாறன்!” என்றாள் மயூரி.
அதே மேசையைக் குறிவைத்து இரண்டு ஆண்கள் நகர்வதைக் கவனித்துவிட்டு முந்திக்கொண்டு ஓடிப்போய் அமர்ந்துகொண்டாள் ஆதிரா. அவர்கள் வடை போச்சே என்பதாகப் பார்க்க, சிரித்துக்கொண்டு தோள்களை உயர்த்தி, “இட்ஸ் டூ லேட்” என்றாள் உதட்டசைவில்.
அவளின் குறும்பில் முறுவல் அரும்ப, “இட்ஸ் ஓகே!” என்றபடி நகர்ந்துபோனார்கள் அவர்கள்.
மயூரி வரும் வரையில் அங்கிருந்தவர்களை வேடிக்கை பார்த்தவளின் விழிகளில் பட்டான் அவன். அன்று தியேட்டரில் கண்டவன். அவனும் இவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
சட்டென்று அவனை இனம் கண்டுகொண்ட மின்னல் சிரிப்பொன்று அவனுக்காக அவளிடம் அரும்பிற்று! அவனுக்கோ நெஞ்சில் பெரும் துள்ளல். என்னவோ பெரிதாக சாதித்துவிட்டது போல. வேகமாகப் புன்னகைத்து உதட்டசைவில் ஹாய் என்றான். அவளும் மின்னும் விழிகளோடு கையசைத்து ஹாய் என்று முகம் முழுவதுமே சிரிப்பைச் சிந்தவிட்டாள்.
அவனுக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது.
அவர்கள் வரும்போதே பார்த்துவிட்டான் பிரதீபன். ஸ்போர்ட்ஸ் செய்துவிட்டு வருகிறாள் என்பதற்கு அடையாளமாக ஸ்போர்ட்ஸ் ஆடைகளோடு கலைந்து பறந்த கேசமுமாக இருந்தாலுமே ஸ்ப்ரிங் போன்று துள்ளிக்கொண்டு வந்துகொண்டிருந்தாள் ஆதிரா. அவளின் கால்கள் நிலத்தில் நிதானமாகப் பதியவே இல்லை. அத்தனை துடினம். மயூரியிடம் இவன் பார்வை சென்றது. அவன் அணுவணுவாக ரசித்த அதே பூ முகம். வாடிக் கிடந்தது.
வேலை அதிகமோ.. அவளையே பார்த்தான். முழு நாளும் வெளியே சுற்றியதில் நலுங்கிய தோற்றம். நன்றாகவே களைத்துத் தெரிந்தாள். தனி மனுசியாய் ஒற்றை மகளை வைத்துக்கொண்டு வேலைக்குப்போய் வீட்டையும் கவனித்து மகளையும் வளர்ப்பது என்பது சாதாரண காரியம் அல்லவே. தினம் தினம் எத்தனை சிரமங்களை எதிர்கொள்வாள்?
நெஞ்சில் பாரம் ஏற அவர்களையே பார்த்துக்கொண்டு இருந்த வேளையில் தான், இத்தனையும் நடந்தது.
ஆவலாக, ‘எப்படி இருக்கிறாய்?’ என்று கையசைவில் கேட்டான்.
இரண்டு கைகளாலும் தம்ஸ் அப் காட்டி, ‘ம்..ம்ம்..’ என்று தலையை ஒருபுறமாகச் சரித்து அமோகமாக இருப்பதாகச் செய்துகாட்டினாள் ஆதிரா.
பிரதீபனுக்கோ எழுந்துபோய் அவளருகில் அமர்ந்து கதைப்பேச வேண்டும் போல் பெரும் ஆவல் எழுந்துபோயிற்று.
‘சாப்பிடேல்லையா?’ வாயைக் கையருகில் கொண்டுபோய்க் கேட்டான்.
‘அம்மா அங்க வாங்குறா..’ மயூரியைக் கையால் காட்டிச் சொல்லிவிட்டு, நீங்க சாப்பிடுங்கோ என்று சைகையில் காட்டினாள் அவள்.
மனம் நெகிழ்ந்து போயிற்று அவனுக்கு. அப்படியே அவளை அள்ளிக் கொஞ்சிக்கொண்டால் எப்படி இருக்கும்?
பிள்ளைச் சுகம் அவன் இன்னும் அனுபவிக்கவே இல்லையே!
சாப்பிடச் சொல்லி அம்மா சொல்வதில் இருக்கும் அக்கறையைக் காட்டிலும் மனைவி சொல்வதில் இருக்கும் காதலைக் காட்டிலும் மகளைப் போன்றவள் சொன்னதில் இருந்த பாசத்தில் அவனது மனமும் வயிறும் நிறைந்து போயிற்று!
‘பசிக்கேல்ல..’ என்று அவன் சொல்ல, ‘சாப்பாட்டை கொட்ட கூடாது. அம்மா அடிப்பா!’ என்றாள் அவள் உதட்டிலும் விழிகளிலும் குறும்புச் சிரிப்பு வழிய.
பெரும் சேட்டைக்காரிதான் இவள். மனதுக்குள் கொஞ்சிக்கொண்டான் அவன்.
‘படம் பாக்க போக இல்லையா?’ அந்தக் கேள்வியைக் கேட்டதுமே அவளின் மொட்டு இதழ்கள் பிதுங்கின.
மீண்டும் மயூரியைக் கையால் காட்டி, கண்கள் இரண்டையும் பெரிதாக்கி உருட்டிப் பிரட்டி, ‘கேட்டா மொத்துவா!’ என்று தனக்கு அடி விழுவதைப்போல செய்துகாட்டினாள் ஆதிரா.
சத்தமாகச் சிரித்துவிடாமலிருக்க பெரும் பாடுபட்டுப்போனான் பிரதீபன். கள்ளி! தாயையே வில்லி அளவுக்குச் சொல்லுகிறாளே! என்னெண்டுதான் சமாளிக்கிறாளோ? பாவம் மயூரி என்றுதான் தோன்றிற்று!
அதற்குள் மயூரி வருவது தெரிய, ‘ஓகே! அம்மா வாறா சாப்பிடு!’ என்றவன் தன் உணவில் கவனமாவது போன்று காட்டிக்கொண்டான். ஆனால், கவனம் முழுக்க இங்கேயே இருந்தது.
காலையில் ஆதிரா கேட்டதுபோலவே அவளுக்கு ஒரு கிட்ஸ் பேக்கும், தனக்கு ஒரு chicken cheese wrap உம் வாங்கிக்கொண்டு வந்து அமர்ந்தாள் மயூரி.
“ஹஹஹஹஹஹஹஹஹ
கல்யாண சமையல் சாதம்
ஹஹஹஹஹஹ
கல்யாண சமையல் சாதம்
காய் கறிகளும் ப்ரமாதம்” அந்தக்கணமே ஸ்வாகா செய்கிறவள் போன்று பாவம் காட்டிப் பாடியவளிடம் இருந்து விழிகளை அகற்றவே முடியவில்லை அவனால்.
“ஆது!” மயூரியின் அதட்டலுக்கு,
“தெய்வமே… நன்றி சொல்வேன் தெய்வமே..” என்று அவள் பாட, மெல்லிய குரலில் என்றாலுமே காதை இங்கேயே வைத்திருந்தவனுக்கு இதெல்லாம் கேட்காமல் இருக்குமா, சிரிப்பை அடக்குவது பெரும் சிரமமாக இருந்தது.
“அடி வாங்கப்போறாய் ஆது. வெளில இப்படியெல்லாம் செய்யக்கூடாது எண்டு எத்தனை தரம் சொல்லுறது உனக்கு?” என்று அதட்டிய மயூரியின் குரலில் கோபம் மருந்துக்கும் இல்லை. அவளும் சிரிப்பை அடக்குவது தெரிந்தது.
பிரதீபனின் உணவு முடிந்திருந்தது. ஆனாலும் எழுந்துபோக மனமில்லை. தன்னிடம் இரும்பைப்போல இறுகி நின்ற மயூரியின் இயல்பான குரலும், உற்சாகமாய் தாயைச் சீண்டியபடி உணவை உட்கொண்ட சின்னவளின் இளங்குரலும் அவனைப் பிடித்துவைக்க, ஒரு கஃபேக்கும் கேக்குக்கும் ஆர்டர் கொடுத்துவிட்டு அங்கேயே காத்திருந்தான்.
“அம்மா! தியேட்டர்ல பாத்தோமே ஒரு அங்கிள். அவர் இங்கயும் இருக்கிறார்.” ரகசியக் குரலில் அவள் தாயிடம் சொல்வது இவன் காதுக்கும் கேட்க தனக்குள் சிரித்துக்கொண்டான்.
‘ஆக, அண்டைக்கு மகளோட சேந்து தாய்க்காரி என்னை பாத்திருக்கிறாள்.’ மயூரியின் நெஞ்சுரத்தை அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
மயூரியும் மெல்லத் திரும்பி விழிகளால் தேடி அவனைக் கண்டுவிட்டு வேகமாகத் திரும்பிக் கொள்வது தெரிந்தது. இனி என்ன செய்வாள் மயூரி? அவன் இருக்கும் இடத்தில் இருக்கப் பிடிக்காமல் விருட்டென்று எழுந்து போவாளோ?
அவன் நினைத்ததற்கு மாறாக, உணவை முடித்துவிட்டே எழுந்தனர் அன்னையும் மகளும்.
மயூரி முன்னால் நடக்க, சாப்பிட்டு முடித்த தட்டுக்களை அங்கிருந்த ஸ்டான்ட்டில் சொருகிவிட்டு வந்த ஆதிரா, விடைபெறும் விதமான ஒரு சிரிப்புடன் அவனைக் கடக்க முனைந்தபோது சட்டென்று கையை நீட்டினான் பிரதீபன்.
அவன் கையில் ஒரு சாக்லேட் கேக் இருந்தது.
யாரிடமும் எதையும் வாங்கி உண்ணக்கூடாது என்று அன்னை சொல்லி வைத்திருப்பது நினைவில் வர, வாங்காமல் தயக்கத்தோடு அவனைப் பார்த்தாள் ஆதிரா.
முகமே வாடிப்போயிற்று அவனுக்கு. அப்படி என்ன செய்துவிடுவானாம் அவன் ரசிக்கும் பட்டாம் பூச்சியை? கண்களில் எதிர்பார்ப்பும் வலியுமாகப் பார்த்தான் அவன். அதை உணர்ந்தும் அவள் தயங்க கணத்தில் ஊகித்தவனாக, அதில் ஒரு துண்டைப் பிய்த்து தன் வாய்க்குள் போட்டுக்கொண்ட பிறகு மீண்டும் வேகமாக அவளிடம் நீட்டினான்.
ஏக்கத்தோடு அவளை நோக்கிய அவன் விழிகளில் எதைக் கண்டாளோ, அவனுடைய அவசரமான செய்கையில் என்ன உணர்ந்தாளோ, “தாங்க்ஸ் அங்கிள்!” என்றபடி வாங்கிக்கொண்டு ஓடியேபோனாள் அந்த வண்ணத்துப்பூச்சி!

