“திரும்பவும் என்னையும் ஆதுவையும் தனியா விடுறீங்களா தீபன்?”
நலிந்து ஒலித்த அவளுடைய கேள்வியில் திகைத்தான் அவன். தீபன் என்றா சொன்னாள்? நம்பமுடியாமல் அவளை நோக்கினான்.
“உங்கள விட்டா எங்களுக்கு எண்டு இந்த உலகத்தில யார் இருக்கினம் தீபன்?” கேட்கும்போதே கண்ணீர் வழிந்தது.
அவன் உதட்டினில் வறண்ட புன்னகை ஒன்று தோன்றிற்று. “உனக்குத்தான் நான் தேவையில்லையே மயூரி. பிறகு எதுக்கு இந்தக் கேள்வியை கேக்கிறாய்? உயிரோட இருக்கிறவரை ஆதுக்கு நல்ல அப்பாவா இருப்பன். அந்தளவும் போதும் தானே உனக்கு.” என்றான் அவன்.
இப்போது அவன் முறை போலும்! நன்றாகவே திருப்பி அடிக்கிறான். அவளின் கண்ணீர் கன்னங்களை நனைத்துக்கொண்டு போயிற்று! “நானுண்டு என்ர மகள் உண்டு எண்டு நிம்மதியா இருந்தனான் தீபன். நீங்கதான் திரும்ப வந்தனீங்க. பின்னாலையே வந்து தாலியையும் கட்டினீங்க. என்ர தீபன் இனி என்னை விட்டு எங்கயும் போகமாட்டார் எண்டு நினைக்க, திரும்பவும் அனாதையா வாழு எண்டு சொல்லுறீங்களா? ஏன் இப்படி ஒவ்வொரு முறையும் என்னை ஏமாத்துறீங்க?” அழுகையோடு ஆரம்பித்தவள் ஆவேசமாய் கேட்டுக்கொண்டே அவனை நெருங்கினாள்.
அதிர்ந்து நின்றான் பிரதீபன். கல்லைப்போல் இறுகிப்போய் நிற்கிறாள் என்று அவன் நினைத்துக்கொண்டிருக்க அவளுக்குள் இத்தனை மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறதா என்ன? மேலே சிந்திக்க முடியாமல் அவள் அறைக்குள் வருவது புரிய, “உள்ளுக்க வராத! வெளில போ!” என்று பதறினான் அவன். “வெளிலையே நிண்டு கதை. ரெண்டு மீட்டர் இடைவெளி.” என்றவனை கேட்கவே இல்லை அவள்.
“வந்தா என்ன? எனக்கும் தொத்துமா? தொத்தட்டும். நீங்க இல்லாம வாழுறதை விட அது பரவாயில்ல! உங்களோட சேர்ந்து நானும் சாகிறன்.”
“விசரி மாதிரி கதைச்சியோ அறைஞ்சு விட்டுடுவன் பிடிச்சு. வீட்ட போடி! நாளு நாள்ல வந்து கதைக்கிறன் உன்னோட!” கோபத்தில் உறுமினான் அவன்.
“நான் போகமாட்டன். நீங்க இல்லாம போகவே மாட்டன். ஆதுவ பாக்கச் சொல்லி மாமிட்ட சொல்லிப்போட்டுத்தான் வந்தனான்.”
“அம்மாக்கு என்னத்தை சொல்லி வச்சிருக்கிறாய்?” பதட்டத்துடன் கேட்டான் அவன். இப்படி எதையாவது செய்வாள் என்றுதான் சத்தமில்லாமல் டெஸ்ட் செய்ய நினைத்தான். அதற்குள் அவசரப்பட்டு.. கடவுளே..
“சொல்லுறதை கேளு மயூ. எனக்கு ஒன்றுமே இல்ல. நல்லா பாரு. இருமல் இல்ல. தலையிடி இல்ல. நடுக்கம் இல்ல. லைட்டான காய்ச்சல் தான். மருந்து போட்டதும் அதுவும் இறங்கிட்டுது. நானாத்தான் செக் பண்ண சொன்னனான். அதுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்றாய்?” என்றான் அவன்.
“நான் பதறுறது உங்களுக்கு ஆர்ப்பாட்டமா தெரியுதா? இதுவே எனக்கு வந்திருந்தா இப்படித்தான் என்னையும் தனி அறை எடுத்து தங்க வச்சிருப்பீங்களா நீங்க?”
“உளறாம போடி!”
“நான் கேட்டதுக்கு பதிலை சொல்லுங்கோ.” கன்னங்களை வேகமாகத் துடைத்துக்கொண்டு பிடிவாதம் பிடித்தாள் அவள்.
“இல்ல. அப்படி உன்ன விடமாட்டன்.” பதில் சொல்லாமல் விடமாட்டாள் என்று தெரிந்து சொன்னான்.
“நான் மட்டும் எப்படி விடுவன்? வாழ்ந்தா ரெண்டுபேரும் சேர்ந்து வாழுவோம். இல்ல ரெண்டுபேரும் சேர்ந்தே சாவோம். ஆதுவ மாமியும் மாமாவும் பாக்கட்டும்.” என்றவளைத் திகைத்துப்போய்ப் பார்த்தான் அவன்.
இதே ஆதிராவைக் காப்பாற்றுவதற்காகவே பிரிந்துபோனவள் இந்த மயூரி! அவளுக்கு அப்பாவாக மட்டும் இரு எண்டவள். எல்லாவற்றுக்கும் மேலாக அவனைப் பழைய காதலன் என்றவள். இன்றைக்கு என்ன சொல்கிறாள். திருப்பிக் கேட்கக்கூட வார்த்தைகளற்று நின்றான் அவன்.
“நீங்க இல்லாம நான் இருக்கமாட்டன் தீபன். என்னை விட்டுட்டு எங்கயும் போகாதீங்க. இப்படி என்னை தள்ளி வைக்காதீங்கோ தீபன். வலிக்குது. என்னால தாங்கேலாது.” கையில் முகம் புதைத்துக் கதறியவளை வேதனையோடு பார்த்தான் அவன்.
இவ்வளவு அன்பையும் வைத்துக்கொண்டு இப்படித் துடிக்கிறவளா அவனைப்போட்டுப் பந்தாடினாள்?
மயூரியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இவ்வளவு சொல்லியும் அசையவில்லையே அவன். ஓடிவந்து அணைக்கவில்லையே. அவளின் கண்ணீர் அவனைப் பாதிக்கவே இல்லையா? வேதனையோடு அவள் நிமிர்ந்தபோது, அவளை நோக்கிக் கைகளை விரித்தான் அவன். ஒரு கேவலுடன் ஓடிவந்து அவன் மார்பில் அடைக்கலமானாள் அவள்.
ஆவேசம் வந்தவனைப்போல் முகம் முழுக்க முத்தமிட்டவன், “என்னடி கதைப்பேச்சு இதெல்லாம்?” என்றான் கோபமாய். “போனா மண்ணுக்க போவனே தவிர உன்ன விட்டுட்டு போறதுக்கு எனக்கும் வேற இடம் இல்ல.” என்றான் உணர்ச்சிப் பெருக்கில் கரகரத்துவிட்ட குரலில்.
அவளுக்கு அவன் கோபம் இனித்தது. அவனிடம் முகத்தைக் கொடுத்துவிட்டு கண்ணீருடன் சிரித்தாள். “அப்படித்தான் கதைப்பன். என்னை தள்ளிவைச்சா இன்னும் கதைப்பன். எவ்வளவு தைரியமிருந்தா என்னை தனியா விட்டுட்டு இங்க வந்து இருப்பீங்க!” என்று இன்னும் சண்டைக்குப்போனாள்.
“விசரி! உன்ன விட்டுட்டு எங்கயடி போனனான்? நாலு நாள் தனியா இருக்க நினைச்சன். அவ்வளவுதான்.” என்றான் அவன். “உன்னோட நிறையக்காலம் வாழாமா நானும் போய்ச்சேர மாட்டன் மயூ. இன்னும் ரெண்டு பிள்ளைக்காவது உன்னை அம்மாவாக்கோணும். ஆதிராவ நல்லா படிப்பிச்சு கட்டிக்குடுத்து அவா சந்தோசமா வாழுற வாழ்க்கையை பாக்கோணும். கிழட்டு வயசிலையும் நீ தாற முத்தத்துக்கு கிறங்கிச் சாகவேணும்.” அவன் சொல்லச் சொல்லக் கேட்டவள் அழுகையும் சிரிப்புமாக அவன் முகத்தைப் பற்றியிழுத்து முகம் முழுக்க முத்தமிட்டாள்.
“கிட்ட வராத மயூ.” அவன் சொன்னதும்தான் இன்னும் அவனை இழுத்து இதழ்களில் தன் இதழ்களைப் பதித்தாள். விடுபட முயன்றவனை விடவே இல்லை.
“இனி நீ அடிதான் வாங்கப் போறாய்.” என்றவனின் பேச்சை அவள் காதில் விழுத்தவே இல்லை.
ஆனால், அவனை முத்தமிட்டபோது இதழ்களில் மெல்லிய சூட்டை உணர்ந்தவள் அவன் நெற்றி கழுத்து எங்கும் கையை வைத்துப்பார்த்தாள். “காலம(காலையில்) ஒண்டும் இருக்கேல்லையே தீபன்.”
“திடீர் என்றுதான் என்னடா தேகம்(உடல்) சுடுதே எண்டு பாத்தன். பயப்பட ஒண்டும் இல்லை எண்டுதான் சொன்னவே. எதுக்கும் செக் பண்ணிட்டா நல்லம் எண்டு நினைச்சன். அம்மா, அப்பா, ஆது மூண்டுபேரையும் வச்சுக்கொண்டு ரிஸ்க் எடுக்கப் பயமா இருந்தது. அதுக்குப்போய் என்னடி செய்து வச்சிருக்கிறாய்?” சாதாரணமாக சொல்லிக்கொண்டு வந்தவன் கடைசியில் பல்கலைக் கடித்தான்.
அவளுக்கு அப்போதும் கண்கள் கலங்கிற்று. “பயந்துபோனேன் தீபன். அம்மாவை இழந்து அப்பாவை இழந்து உங்களையும்..” என்றவள் அதற்குமேல் சொல்லமாட்டாமல் விம்ம, “போதுமடி சாமி. நிப்பாட்டு!” என்று அதட்டினாலும் அவன் கைகள் மனைவியைத் தன்னோடு அணைத்துக்கொண்டன.
உடனேயே அவன் என்ன சொல்லியும் கேட்காமல் அவனை இழுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள் மயூரி. வந்தவனை இருக்க நிற்க விடவில்லை. என்னதான் அவன் பிரயத்தனம் செய்து மறைத்தாலும் சோர்ந்திருந்த முகமும், காய்ந்த உதடுகளும், அவனிடமிருந்து வந்த வெப்பமும் அவனுக்கு நல்ல காய்ச்சல் இருப்பத்தைச் சொல்லிற்று.
“எனக்கு கிட்ட வராத மயூ.” என்றவனின் பேச்சைக் காதிலேயே விழுத்தவில்லை. இந்த வைரசுக்கு இதுதான் வைத்தியம் என்று எதுவுமே கண்டுபிடிக்கப்படாதபோதும், சுடுதண்ணீர் வைத்து இளம் சூட்டில் அவனைக் குளிக்க வைத்தாள். சூடான தண்ணீரில் விக்ஸ் போட்டு நன்றாக ஆவி பிடிக்க வைத்தாள். உடனேயே தேசிப்புளியும் தேனும் விட்டு அருந்தவும் கொடுத்தாள். காரசாரமாகச் சமைத்து ரசமும் வைத்து உண்ணக்கொடுத்தவள் வைத்தியர் கொடுத்திருந்த மாத்திரையும் கொடுத்து உறங்கவிட்டாள்.
தன்னால் முடிந்ததாய் அவள் அவனுக்கு என்னவெல்லாம் தந்தாளோ அத்தனையையும் அவளையும் அருந்த வைத்தான் பிரதீபன். சிலவேளை அவனுக்கு கொரோனா இருந்து அவளுக்குத் தொற்றினாலும் அவளைப் பாதிக்காமல் இருக்கட்டுமே.
பம்பரமாய் சுழன்று தனக்காவே பார்த்துப் பார்த்து எல்லாம் செய்த மனைவியையே நேசம் பொங்கப் பார்த்திருந்தான் பிரதீபன். இவ்வளவு பெரிய மாற்றத்தை அவளிடம் அவன் எதிர்பார்க்கவே இல்லை. கொரோனா பீதி வந்ததும் நல்லதுக்குத்தான் என்று எண்ணிக்கொண்டான். இல்லாவிட்டால் இவளாவது தன் பிடியிலிருந்து இறங்கி வருவதாவது.
அன்று மட்டுமல்ல அதற்குப்பிறகு வந்த நான்கு நாட்களுமே அவள் அவனைத் தனியே விடவேயில்லை. மருந்து மாத்திரைகளைக் கவனித்துக்கொடுத்தாள். அவன் தேகத்தில் மெல்லிய சூடு இருந்தாலும், இருமல், தடுமல், சுவாசப்பிரச்சனை, நாவில் சுவையறியாத தன்மை என்று அடுத்த கட்டத்துக்கு அது நகரவில்லை. மயூரியும் இஞ்சி மிளகு இடித்துக் கொடுப்பதாகட்டும், சீரகத் தண்ணி கொடுப்பதாகட்டும் என்று அவனை கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டாள்.
“எனக்கு ஒன்றுமில்லை. சுகமாயிற்று.” என்று அவன் சொல்லியும் கேட்கவேயில்லை. பின்னே, கனடாவில் மூன்று பெண் பிள்ளைகளின் அம்மாவும் அப்பாவும் கோரோனோ வைரசுக்கு உள்ளாகி இறந்த செய்தி, பிரான்சில் நான்கு பிள்ளைகளின் தகப்பன் இறந்த செய்தி, நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த வைத்தியர்களுக்கே அது தொற்றி அவர்கள் இறந்தது, தாதிகளின் இறப்பு என்று தினமும் பல்லாயிரக்கணக்கில் நிகழ்ந்துகொண்டிருந்த மரணங்களால் நடுங்கிக்கொண்டு இருந்தாள்.
டெஸ்ட்டுக்குகொடுத்தது, ‘அவனுக்கு ஒன்றுமில்லை. வந்தது சாதாரண காய்ச்சல் தான்’ என்று வந்தபிறகுதான் அமைதியானாள்.

