அத்தியாயம் 14
நண்பன் என்ன சொல்லுவானோ என்கிற தயக்கம் இருந்தாலும் சொல்லத் தயங்கவில்லை, கிருபன். அடுத்த நாளே தன் மனதை, அதன் விருப்பை, தன் குடும்பப் பின்னணியை என்று எதையும் மறைக்காமல் சொன்னான்.
ஏதோ ஒரு வகையில், அரவிந்தனின் உள்ளுணர்வு இதை எதிர்பார்த்துத் தான் இருந்தது. நண்பனின் திடீர் ஒதுக்கம், தங்கையின் நடவடிக்கைகள் என்று, அவனும் எதையும் கவனிக்காமல் இல்லையே. அதில், அவன் பெரிதாக அதிரவில்லை. அவன் மூலம் அவன் வீட்டுக்குச் செய்தி போனது. அவனும் அவன் வீட்டினரும் கமலிக்குக் கிருபனைப் பிடித்திருக்கிறதா என்பதை மாத்திரமே பிரதானமாய்க் கவனித்தனர்.
பரந்தாமன் கிருபனை அழைத்துப் பேசினார். அவர் கிராமசேவையாளர் என்பதில், அவனின் பிறந்த ஊரான யாழ்ப்பாணத்தில், அவன் குடும்பத்தைப் பற்றி இலகுவாகவே விசாரித்துத் தெரிந்து கொண்டார். சோமசுந்தரத்தைப் பற்றியும் விசாரித்தவருக்குத் திருப்திதான்.
அதில், கிருபன் கமலி திருமணம் பற்றி, சோமசுந்தரத்தோடும் கலந்துபேச விரும்பினார்.
கமலி வீட்டினரிடம் கூட இலகுவாகத் தன் விருப்பத்தைச் சொல்ல முடிந்த கிருபனுக்கு, சொந்த மாமாவிடம் பேசுவது இலகுவாய் இருக்கவில்லை. என்ன சொல்லுவார்? அவனுக்காகக் கதைக்க வருவாரா? மனம் நோக எதையாவது பேசிவிடுவாரோ என்று மிகவுமே தயங்கினான்.
முதலில், ‘எனக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது’ என்பதை, எப்படி அவரிடம் சொல்வது என்று வார்த்தைகளைத் தேடினான்.
கமலியிடம் பேசவேண்டும் போலிருக்க அவளுக்கு அழைத்தான்.
“என்ன சிம்ரன் இது ஆச்சரியம்? நீங்களாத் தேடி எடுத்திருக்கிறீங்க?” வீட்டினர் தம் திருமணத்துக்குச் சம்மதித்துவிட்ட சந்தோசம், அவள் பேச்சினில் அப்படியே தெறித்தது.
“அது சும்மா தான். உன்னோட கதைக்கோணும் மாதிரி இருந்தது.”
அவன் இழுத்துப் பேசியதிலேயே அவனை ஏதோ ஒரு விடயம் அலைக்கழிக்கிறது என்பதைக் கண்டுகொண்டாள், கமலி.
“கிருபன்?”
“ம்?”
“என்ன?” இதமான குரலில் விசாரித்தாள்.
“இண்டைக்குக் கிளிநொச்சிக்குப் போகோணும்.”
“ஓ!”
இப்போது, அவன் மனநிலை நன்றாகவே விளங்கிற்று. அதில், அவனுக்குத் தெம்பூட்டும் விதமாகப் பேச ஆரம்பித்தாள்.
“ஒண்டுக்கும் யோசிக்காதீங்கோ, கிருபன். ஒட்டாமப் பழகுறது அவரின்ர குணமா இருக்கலாம். ஆனாலும், உங்களை வளத்து ஆளாக்கிவிட்டது அவர் தானே. அத நாங்க மறக்கக் கூடாது. அதைவிட, நீங்க எந்த உதவியும் அவரிட்டக் கேக்கப் போகேல்ல. சொந்தம் எண்டு வந்து நில்லுங்க எண்டு தான் சொல்லப் போறீங்க. அவர் வருவார், சரியா? இப்பிடி எல்லாத்தையும் நீங்க தனியாப் பாக்கிறது இந்தக் கலியாணம் நடக்கிற வரைக்கும் தான். அதுக்குப் பிறகு நான் இருப்பன். என்ர கிருபானோட எப்பவும் எல்லாத்திலையும். அதுக்காகத்தான் இதெல்லாம் எண்டு நினைச்சுக்கொண்டு போங்கோ.”
அவளின் பேச்சைக் கேட்டு, கிருபனுக்கு நொடியில் மனம் நெகிழ்ந்து போனது. தனித்துப்போய் நிற்கிறோம் என்கிற உணர்வே அகன்று போயிற்று. அவன் அவளின் கிருபன். அவனுக்கென்று அவள் இருக்கிறாள். அந்த உணர்வின் கிளர்வில் பட்டென்று முத்தம் ஒன்றை அனுப்பி வைத்தான்.
“கிருபன்!” அதை எதிர்பாராமல் அதிர்ந்து அதட்டியவளின் குரலில் வெட்கச் சிரிப்பு.
அப்போது தான், என்ன செய்தோம் என்று அவனுக்கும் புரிந்தது. உதட்டிலும் சிறு சிரிப்பு மலர்ந்தது. தன் ஆழ்ந்த குரலில், “பிடிக்கேல்லையா?” என்றான்.
“பிடிக்கேல்லை எண்டு சொன்னா என்ன செய்வீங்க?”
“திருப்பித் தரச் சொல்லிக் கேப்பன்.” சன்னச் சிரிப்புடன் சொன்னான், அவன்.
“ஆக, அமுக்கினி மாதிரி இருந்தாலும் பொல்லாத கள்ளன் நீங்க, என்ன?”
அவன் மனதினில் உல்லாசம். முகம் மலர்ந்து விகசித்தது. “ஆரம்பத்தில இருந்தே நீ எண்டு வந்திட்டா நான் நானா இருக்கிறேல்ல கமலி. நீ என்னை என்னவெல்லாமோ செய்ய வைக்கிறாய்.” என்றான், நேசம் மிகுந்த குரலில்.
அவளுக்கு மனம் நிறைந்தது. “எப்பவும் என்னட்ட அப்பிடியே இருங்க கிருபன். எனக்கும் அது தான் பிடிச்சிருக்கு. இப்ப நீங்க உங்கட மாமாவோட கதைக்கப் போறதும் எங்கட சந்தோசமான எதிர்கால வாழ்க்கைக்காக. அதால எதைப் பற்றியும் யோசிக்காமப் போயிட்டு வாங்கோ.” என்று தேற்றிவிட்டு, அழைப்பைத் துண்டித்தாள்.
இருந்தாலும், மனம் கேட்க மறுத்தது. அவன் புறப்படுவதற்கு முதல் அவனைப் பார்த்து விட எண்ணி, அவன் வீட்டுக்கே சென்றாள்.
தனியே வந்து நின்றவளைக் கண்டு அதிர்ந்து நின்றான், கிருபன்.
“அரவிந்தனையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாமே?”
அவனை முறைத்தாள், கமலி. “ஏன், தனியா வந்தா என்ன?” என்றபடி, அவன் முன்னே வந்து நின்றாள்.
கிருபனுக்குள் மெல்லிய தடுமாற்றம். அவன் திறந்து வைத்த வீட்டுக் கதவைக் கூட அடித்துச் சாத்தியிருந்தாள். என்ன செய்யப் போகிறாளோ என்கிற பயம் வந்தது. அவன் கால்கள், அவையாகவே பின்னோக்கி நகரத் துவங்கின.
“உன்ர அம்மா, அப்பா குறையா ஒரு சொல்லுச் சொல்லுற மாதிரி நாங்க நடக்கக் கூடாது தானே?” தன்மையாக அவளுக்கு எடுத்துரைக்க முனைந்தான்.
“அப்பிடி அவே குறை சொல்லுற மாதிரி இப்ப இங்க என்ன நடந்தது?” சுவரில் மோதி நின்றவனின் முன்னே வந்து நின்று கேள்வி கேட்டாள், அவள்.
கிருபனுக்குப் பேச்சு நின்று போனது. நெருக்கத்தில் நின்ற அவளும் அவளின் கேள்வியும் அவன் வாயை அடைத்தது.
“என்ன சிம்ரன்? பேச்சக் காணேல்ல? போன்ல கிஸ் எல்லாம் வந்துது. அத இப்ப தரவேண்டியது தானே!”
அவன் உதட்டினில் மெல்லிய முறுவல் அரும்பிற்று. விழிகள் வேறு கட்டுப்பாட்டை மீறி அவளின் இதழ்களுக்குச் சென்றன. அதன் ஈரலிப்பில் மனம் தடுமாற, வேகமாகப் பார்வையை அகற்றிக் கொண்டான்.
அவன் தாடையைப் பற்றித் தன்னைப் பார்க்க வைத்தாள், கமலி. “என்ன? பார்வை எல்லாம் பலமா இருக்கு?”
‘கடவுளே…’ அவளின் ஒவ்வொரு அதிரடியான செயலிலும் கிருபன் அதிர்ந்து நின்றான். மனம் வேறு தன் கட்டுக்களை உடைக்க முயன்றது. நெருக்கத்தில் தெரிந்த அந்த அழகிய முகத்தின் மீது, அவன் விழிகள் படிந்தன. மனம் எதற்கெல்லாமோ ஆசை கொண்டது. அது தவறு என்று மூளை அறிவுறுத்த, “பிளீஸ் மா. வீட்டுக்குப் போ!” என்றான் கெஞ்சலாய்.
“ஏன்? அப்பிடி என்ன நடந்திடும் எண்டு பயப்பிடுறீங்க? இப்பிடிக் கட்டிப் பிடிச்சிடுவன் எண்டா?” என்றவள், அவனை இறுக்கி அணைத்தாள். அவன் அதிர்ந்து நிற்கையிலேயே, “இல்ல, நீங்க போன்ல தந்தத நான் நேர்லயே தந்திடுவன் எண்டா?” என்றவள் எம்பி, அவன் கன்னத்தில் இதழ்களைப் பதித்து எடுக்க, கிருபன் நிலைகுலைந்தே போனான்.
அவளைக் கட்டி அணைத்துக்கொள்ள அவன் கைகளும் பரபரத்தன. அதற்குமேலும் முன்னேறச் சொல்லி மனம் உந்தியது. அது தவறாயிற்றே. அவன் ஒரு அடி எடுத்து வைத்தால் அவள் பத்து அடிகள் தாவுவாளே.
திருமணம் ஆகிறவரைக்கும் இந்த இராட்சசியிடம் மிகுந்த கவனமாய்த்தான் இருக்க வேண்டும். தடுமாறிய மனதை அடக்கியபடி தன் மார்பில் தலை சாய்த்திருந்தவளைப் பார்த்தான்.
“என்ன சிம்ரன் வெக்கப் படுறீங்களா? சத்தத்தையே காணேல்ல.”
எந்தச் சேதாரமும் நிகழாமல் அவளை எப்படி வீட்டுக்கு அனுப்புவது என்று அவன் யோசிக்க, அவள் என்ன கேட்கிறாள்? சின்னதாய்ச் சிரித்தான்.
“இந்தச் சிம்ரனை விடவே மாட்டியா?” கை ஒன்று உயர்ந்து வந்து ஆசையோடு அவள் கன்னம் வருடக் கேட்டான்.
அவள், மாட்டேன் என்று மறுத்துத் தலையை அசைத்தாள். கூடவே, இதழ்களை அவன் மார்பினில் அழுத்தமாய் ஒற்றி எடுத்தாள்.
வருடிக்கொண்டிருந்த கிருபனின் கை, அப்படியே நின்றது. “கமலி!” அவன் கட்டுப்பாடுகள் உடைய ஆரம்பித்தன.
“கமலிக்கு என்ன?” அவளின் உதடுகள், இன்னுமொரு முறை அவன் மார்பினில் பதிந்து மீண்டன. கைகள் அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டன.
“பிளீஸ் மா, இதெல்லாம் இப்ப வேண்டாமே. வீட்டுக்கு போ.” என்றான், மீண்டும் கெஞ்சலாய்.
“நான் என்ன இதையெல்லாம் எனக்காகவா செய்றன்? உங்களுக்காகத் தான். நீங்க தைரியமாப் போய் உங்கட மாமாவோட கதைக்கோணும் எண்டுறதுக்காகத்தான் செய்றன்.” என்றவளின் உதடுகள், அவன் மார்புக்கு முத்தமிடுவதை நிறுத்தவே இலை.
அதற்குமேல் அவனால் முடியவில்லை. இதுவரையில், அவன் பயணித்த பாதை நெடுகிலும் கொடும் பாலைவனம் தான். சாரலாக மனம் நனைத்தவள் கமலி. இபோது, திடீரென மழையெனக் கொட்டினால் என்னாவான்? நனைந்து தான் போவான்.
“நானும் கட்டிப் பிடிக்கவா?” மிகுந்த ஆசையோடு ரகசியக் குரலில் அவளின் காதோரமாக வினவினான்.
“சுண்டுவிரல் நகம் கூடப் படக்கூடாது. பட்டுதோ அடி வெளுப்பன்!”
அவன் உதட்டு முறுவல் விரிந்தது. அவள் அணைப்பாளாம்; முத்தமிடுவாளாம்; என்ன வேண்டுமானாலும் செய்வாளாம். ஆனால், அவன் தொடக் கூடாதாம். பொல்லாத சேட்டைக் காரி! ஆசையோடு அவள் முகம் பார்த்தான்.
அழகான தனிமை. கூடவே, மிகுந்த நெருக்கத்தில் அவள். காந்தமாக அவனைக் கவரும் விழிகள். செய்யாதே என்றுவிட்டு செய்யத் தூண்டும் பார்வை. மினுமினுத்து அவனை அழைக்கும் செவ்விதழ்கள். அவன் பார்வை மாறிற்று. ஆவலோடு அவள் விழிகளைப் பார்த்தான். அப்போதும், பொய்க் கோபமும் வெட்கமும் கலந்து கிடந்து அவனை அழைத்தன, அவை. தயக்கம் அகன்று மெல்ல அவள் இதழ்கள் நோக்கிக் குனிந்தான். ஆர்வமும் எதிர்பார்ப்புமாக அவள் விழிகள் மூடிக்கொண்ட அதே கணத்தில், ஈரலிப்பான அவள் இதழ்களை அவன் உதடுகள் அணைத்துக் கொண்டன.
கிருபனின் விழிகள் கிறங்கி மூடின. முத்தங்கள் பரிமாறப் பட்டன. மிக மென்மையான இதழ்களின் உறவாடலில் மோகம் முளை விட்டது. நெருக்கம் அதிகரித்தது. விலகும் எண்ணம் இருவருக்குமில்லை. தடையற்ற தனிமையும் இருவரின் ஏகோபித்த ஒத்துழைப்பும் எவ்வளவு நேரத்தை இழுத்துச் சென்றதோ!
அவன், அவள் இதழ்களை விடுவித்த போது அவள், பார்வையைத் தழைத்துக் கொண்டாள். சிவப்புச் செவ்வந்திப் பூவாகச் சிவந்திருந்த அவள் முகத்தை ஆசையோடு பார்த்தான். அவன் விழிகளில் அவள் முத்தம் தின்ற மிதமிஞ்சிய கிறக்கம். ஆசை அடங்கவில்லை. சுவை விடவில்லை. மீண்டும் அவள் முகம் நோக்கிக் குனிந்தான். அவளும் மறுக்கவில்லை. அவனளவு வேகத்தை அவளும் காட்டினாள். அவனுக்கு இசைந்து கொடுத்தாள்.
கிருபனின் கைகளும் குட்டிக் குட்டியாகத் தடைகள் உடைத்தன. படபடத்துப் போனாள், கமலி.
“ம்ஹூம்!” அவளின் மறுப்புக் கூட அவனுக்கு அழைப்பையே விடுத்தது. அதற்குமேல், கமலி சுயத்தில் இல்லை. இருக்க அவன் விடவில்லை. தனக்கு ஏதுவாக அவளை வாகாகக் கொண்டுவந்து உதட்டு முத்தம் கொடுத்துப் பெற்றான். அவனாக அவளை விட்டபோது, உடலும் மனமும் கிறங்கி, அவன் தோளிலேயே முகத்தைப் புதைத்துக் கொண்டாள், கமலி.
அவன் முகம் மலர்ந்து விகசித்தது. “இதுக்குத்தான் தனியாச் சந்திக்க வேண்டாம் எண்டு சொன்னனான். கேட்டாத் தானே?” மயக்கம் தீராக் குரலில் காதோரமாகக் கிசுகிசுத்தான்.
அப்படி, அவள் கேட்காமல் விட்டதில் அவனுக்குச் சந்தோசமே என்று, துள்ளும் அந்தக் குரல் சொல்லிற்று.
அவள் ஒன்றும் சொல்லவில்லை. இன்னுமின்னும் அவன் கழுத்துக்குள் தன் முகத்தைப் புதைத்தாள்.
வாயாடி அவள். அவளையே வாயடைக்கச் செய்துவிட்ட சந்தோசத்தோடு சிரித்தான், கிருபன்.
“பிடிச்சிருந்ததா?”
முதல் முத்தம். முதல் தொடுகை. முதல் நெருக்கம். எல்லாமே முதலாகிப் போனதில் அவளின் விருப்பம் அறிய விரும்பினான், அவன். “நான் இந்த உலகத்திலேயே இல்ல.” அவன் குரலில் மிகுந்த உற்சாகம்.
வெட்கத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு, முகத்தை மட்டும் நிமிர்த்தி அவனைப் பார்த்தாள், கமலி. மலர்ந்திருந்த முகமும், விழிகளின் வெளிச்சமும், உதட்டு முறுவலும் கடந்த நொடிகள் அவனுக்குக் கொடுத்த இன்பத்தைப் பறை சாற்றினை. ஆசையோடு எம்பி அவன் தாடையில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள். சந்தோசமாகச் சிரித்தான், கிருபன்.
இருவருக்குமே உள்ளம் நிறைந்து தளும்பியது.
அதுவும் கிருபன், இந்த ஒற்றை நாளுக்காகவே இத்தனை வருடங்களாக வாழ்ந்து வந்ததாக உணர்ந்தான். இவளைச் சந்தித்திராவிட்டால் என்ன ஆகியிருப்பான்? அவன் வாழ்க்கை என்ன ஆகியிருக்கும்? உப்புச் சப்பில்லாமல் போயிராதா? நினைத்துப் பார்க்கவே பயமாய் இருந்தது.
அதைப் போக்குகிறவனாக அவளை இறுக்கி அணைத்து, நெற்றியில் தன் உதடுகளை அழுத்தி எடுத்தான்.
“தேங்க்ஸ் என்ர வாழ்க்கையில வந்ததுக்கு. என்ன விரும்பினதுக்கு. இந்தளவுக்கு என்னை நம்புறதுக்கு. இனி என்னோட வாழப்போற வாழ்க்கைக்கு. எல்லாத்துக்கும்!” என்றவனின் குரல், கடைசியில் கரகரத்துப்போனது.

