அத்தியாயம் – 16
அன்று மாலை வீடு திரும்பிய திவ்யதர்ஷினிக்கு ஏனோ ஒருவித படபடப்பு சூழ்ந்து கொண்டது. அன்று சசிதரனுக்குச் சதுரங்கப் பயிற்சி இருப்பது அவளுக்குத் தெரியும். அதனால் அவன் கல்லூரி முடித்து நேராகப் பயிற்சிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வருவான்.
ஆனால் எப்போதும் அவன் கல்லூரி முடித்துப் பயிற்சிக்கு செல்லும் பொழுதோ, அல்லது, அங்கே சென்ற பிறகோ திவ்யதர்ஷினியை அழைத்துச் சிறிது நேரமாவது பேசுவான். அதுவே அவனது வழக்கமாக இருந்தது. ஆனால் அன்று சசிதரன் அழைக்கவே இல்லை.
திவ்யதர்ஷினிக்கு அது ஒரு நெருடலாக இருக்க, வீடு வந்து சேர்ந்ததும் சசிதரனை அழைத்துப் பார்த்தாள். அவன் அழைப்பை ஏற்கவில்லை. ‘அப்படி என்ன மறதி அவனுக்கு?’ என அவளுக்கு எரிச்சல் வந்தது.
இது போலெல்லாம் அவன் ஒரு போதும் செய்ததில்லை. ஒருவேளை வேறு ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொண்டானோ என அவள் மனம் பதைத்துப் போனது. இரவு உணவை சமைத்தாலும் அடிக்கடி அலைபேசியையும் வாசலையும் அவளது விழிகள் தழுவித் தழுவி வந்தன.
இரவு ஏழரையானதும் அவளுக்குப் பயம் சூழ்ந்து கொண்டது. அதற்குமேல் இனி அவளால் காத்திருக்க முடியாது. அதனால் முதல் வேலையாக அவன் எப்போதும் பயிற்சிக்குச் செல்லும் இடத்துக்கு அழைத்தாள். அவர்களோ சசிதரன் அன்று பயிற்சிக்கு வரவே இல்லை என்று சொன்னார்கள்.
அவ்வளவு தான். அவளுக்கிருந்த சக்தியனைத்தும் வடிந்தது போலானாள். கடைசி முயற்சியாக அவன் கல்லூரி நண்பனை அழைத்துப் பார்க்கலாம் என அவனை அழைத்தாள்.
அந்த நண்பனும் சசிதரன் அன்று கல்லூரிக்கு வந்திருந்ததாகவும் வகுப்புகள் அனைத்தும் முடிந்ததும் மாலை அவனுக்குச் சதுரங்கப் பயிற்சி இருப்பதால் விரைவிலேயே கிளம்பி விட்டான் என்றும் தெரிவித்தான். இப்போது இறுதி ஆண்டில் இருந்தான் சசிதரன்.
மேலும் சில நண்பர்களை அழைத்துப் பார்க்க அவர்களும் இதே கதையைச் சொன்னார்கள். ஆனால் சதுரங்கப் பயிற்சியாளர் அவன் அங்கு வரவேயில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
அப்படியென்றால் சசிதரன் எங்கே சென்றிருப்பான். அவன் இப்படியெல்லாம் ஒரு போதும் செய்ததில்லையே. யாரை அழைத்துக் கேட்கலாம், என்ன செய்யலாம் என அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
முரளிதரன், தம்பி எங்கே என்று கேட்க, “லேட்டாகும்னு சொன்னான் அப்பா” என மழுப்பிவிட்டாள்.
காவல்துறையினரிடம் புகார் அளிக்கலாமா என எண்ணினாள். ஆனால் அவன் சில மணிநேரங்கள் தானே அழைப்பை எடுக்கவில்லை உடனே அதற்குக் காவல்துறையிடம் புகார் சொன்னால் அவர்களும் காத்திருக்கவே சொல்வார்கள். என்ன செய்வது எனத் தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தாள்.
சந்தோஷை அழைத்தால் அவன் ஏதாவது ஆலோசனை வழங்குவான் என அவனை அழைத்தால் பதிலில்லை. வத்சனை அழைக்கலாம் என எண்ணியதும் அவன் மும்பை செல்லும் விமானத்தில் இருப்பான் என ஞாபகத்துக்கு வந்தது. உடனே அந்த எண்ணத்தைக் கைவிட்டாள்
திடீரென்று மித்ரனின் ஞாபகம் வந்தது அவளுக்கு. அவனை அழைக்கலாமா ? அழைத்தால் உதவுவானா? இப்போதெல்லாம் இணக்கமாகவே நடந்து கொள்கிறான். அவனிடம் கேட்டுப் பார்க்கலாம் என எண்ணி உடனே அவனை அழைத்தாள்.
அழைக்காதவள் அழைக்கிறாளே என்று அவனுக்கு ஜிவ்வென்று உள்ளக்குள் பறந்தது. “சொல்லு திவ்யா” என உடனே அழைப்பை எடுத்தான் மித்ரன்.
“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா மித்ரன்?” என்ற அவளின் இறங்கிப் போயிருந்த குரலில், அவன் மொத்த உயிரும் உருக்குலைந்ததைப் போலானது.
“என்ன ஆச்சு. சொல்லு திவ்யா?” என அவன் கேட்க, “மித்ரன், தப்பா நினைச்சுக்காதீங்க. எனக்கு யார்கிட்ட கேட்கிறதுன்னு தெரியலை. பயமா இருக்கு. என் தம்பியைக் கொஞ்ச நேரமா காண்டாக்ட் பண்ண முடியலை” என அழுதவாறே நடந்ததைச் சொன்னாள்.
“திவ்யா, அழாத. நீ எங்க இருக்க? சொல்லு வர்றேன்” என அவன் உடனே கிளம்ப ஆயத்தமானான். அவனுக்கு மட்டும் பறக்கும் சக்தி இருந்திருந்தால் அந்நேரம் அவளிடம் நேராகப் பறந்து சென்றிருப்பான்.
“நான் வீட்ல இருக்கேன். இன்னும் அப்பாவுக்கு தெரியாது. அதனால இங்க வராதீங்க. நான் ஏதாவது சொல்லிட்டு வெளில வரேன்” என அருகிலிருக்கும் கோவிலுக்கு வரச் சொன்னாள்.
அவனிடம் பேசி முடித்தவள் தன் தந்தையிடம் சென்று மிகவும் இயல்பாக, “அப்பா பக்கத்துல இருக்கிற கோவிலுக்குப் போயிட்டு வந்திடறேன். நீங்க சாப்பிட்டு படுங்க” எனக் கிளம்பிச் சென்றாள்.
அவ்வப்பொழுது நடப்பது என்பதால் அவருக்கு எவ்வித சந்தேகமும் வரவில்லை.
“போயிட்டு சீக்கிரம் வாம்மா” எனத் தொலைக்காட்சியில் கவனத்தைத் திருப்பினார் முரளிதரன். திவ்யதர்ஷினி கோவிலுக்குச் சென்ற வேளையில் மித்ரன் ஏற்கனவே வந்து காத்திருந்தான். பறந்து வந்திருப்பான் போல!
கோவிலின் உள்ளே நடந்து சென்றவாறு சசிதரன் பற்றிய விவரங்களைக் கேட்டான் மித்ரன்.
“நான் ஏற்கனவே எனக்குத் தெரிஞ்ச காவல்துறை அதிகாரிகிட்ட பேசிட்டேன். இந்த விவரங்களை அவர்கிட்ட தர்றேன், அப்புறம் அவங்க என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம். பயப்படாத ஒன்னும் இருக்காது. எங்கேயாவது ஃப்ரெண்ட்ஸ் கூட வெளில போயிருப்பான்” என அவளுக்குச் சமாதானம் சொன்னான்.
மறுநிமிடமே காவல்துறை அதிகாரியைத் தொடர்பு கொண்டு சசிதரன் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டான். அவரும் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு விசாரித்தபின் அவனைத் தொடர்பு கொள்வதாகச் சொல்லி அழைப்பை வைத்தார்.
என்னவோ ஏதோ பயங்கரமாக நடக்கப் போகிறதைப் போல் அவளுக்குப் பயமாக இருந்தது. ‘கடவுளே சசிதரனுக்கு எதுவும் ஆகக்கூடாது. ஆகியிருக்க கூடாது’ என மனதிற்குள் தொடர்ந்து உருப்போட்டுக் கொண்டிருந்தாள்.
மித்ரன் அழைப்பை வைத்ததும் அவனை ஏறிட்டுப் பார்த்த திவ்யதர்ஷினி, “பயமா இருக்கு மித்ரன். அவனுக்கு எதுவும் ஆகியிருக்காது இல்ல” என உடைந்து போய் அழ ஆரம்பித்தாள்.
“ப்ச்.. என்ன திவ்யா இது? அவன் ஒன்னும் சின்னப் பையனில்லை. கவலைப்படாத. அதான் சொல்லியிருக்கோமே. அவங்க கூப்பிடட்டும் ” என அவளைச் சமாதானப்படுத்தினான்.
அவள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாலும் தைரியமாக இருப்பதைப் போல் முகத்தை வைத்துக் கொண்டாலும் அவளது உடலெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்ததை அருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டிருந்த மித்ரனுக்குப் புரிந்தது.
அதன்பின்னர் மித்ரனும் அவளிடம் எதுவும் பேசவில்லை. கைப்பேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தாலும் அவனது பார்வையும் கவனமும் திவ்யதர்ஷினியின் மேலேயே இருந்தன.
நிமிடங்கள் மொழிகளற்று கழிந்தன. அரைமணி நேரத்திலேயே அந்தக் காவல்துறை அதிகாரி மித்ரனை அழைத்தார். அவன் அலைபேசி சப்தத்தைக் கேட்டதும் திவ்யதர்ஷினி அவனருகில் ஓடி வந்தாள். அவர்களை ஒரு மருத்துவமனையின் பெயரைச் சொல்லி, அங்கே வரச் சொன்னார் அந்தக் காவலர்.
மருத்துவமனை என்று கேட்டதுமே திவ்யதர்ஷினி அப்படியே மித்ரனின் மேலேயே சரிந்து அழ ஆரம்பித்தாள்.
அழைப்பை வைத்த மித்ரன், “திவ்யா, ஒன்னுமில்லை. உன் தம்பி பத்திரமா இருக்கான். மயங்கிப் போயிருக்கான். ஒன்னும் பிரச்சனையில்லை. கண்ணைத் துடைச்சிட்டு வா போகலாம்” என அவளைத் தோளோடு தாங்கிப் பிடித்தவாறே தன் காருக்கு அழைத்துச் சென்றான்.
கூடிய விரைவிலேயே குறிப்பிட்ட அந்த மருத்துவமனையை அவர்கள் அடைந்துவிட்டனர். சசிதரன் இன்னுமே மயக்கத்தில் இருந்தான். காவல்துறை அதிகாரி சொன்ன தகவல்களைக் கேட்டு திவ்யதர்ஷினி ஆடிப் போனாள்.
இரண்டு நாட்களில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடக்கவிருக்கிறது. அதில் அவர்கள் பயற்சிப் பள்ளியிலிருந்து நன்கு விளையாடும் ஒருவரை அனுப்பப் போவதாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது.
அதற்குத் தேர்வாகும் சாத்தியம் முழுவதும் சசிதரனுக்கு இருக்கிறது என்று அங்கிருந்த அனைவருக்கும் பரவலாகத் தெரியும். அதனால் எழுந்த பொறாமையில் சசிதரனை அன்றும் மறுநாளும் பயிற்சிப் பள்ளிக்கு வரவிடாமல் தடுத்துவிட்டால் அடுத்த நிலையில் இருக்கும் ஒருவனுக்கு அந்த வாய்ப்புக் கிட்டும்.

