அத்தியாயம் 7
அண்ணனும் தங்கையும் வீடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர். என்றுமில்லாத வகையில் அமைதியாக வந்தாள், கமலி. அதைக் கவனித்துவிட்டு, “அவனோட உனக்கு ஏதும் சண்டையா?” என்று வினவினான், அரவிந்தன்.
இதைக் கமலி எதிர்பார்த்தாள். எனவே, “இதென்ன திடீர்க் கேள்வி?” என்று, தயக்கமற்று வினவினாள்.
“வழமையா அவனோட சண்டைக்கு நிப்பாய். இண்டைக்குச் சத்தமே இல்ல. அவனும் உன்ன உன்னப் பாத்த மாதிரி இருந்தது. இப்ப, அவன் எங்கட வீட்டை வாறதும் இல்ல. என்னட்ட இருந்தும் ஒதுங்கிற பீல். ஏன் எண்டு கேட்டா மழுப்புறான். உனக்குத் தெரியுமா? அவன்ர மாமா குடும்பம் அவனோட கதைக்கிறதே இல்ல. அதச் சொன்னதே அவன் தான். இண்டைக்கு மாமா வந்தவராம், இவன் போனவனாம் எண்டு பொய் சொல்லுறான். என்ன எண்டாலும் மறைக்காமச் சொல்லு, கமலி.” மிதமான வேகத்தில் வண்டியைச் செலுத்தியபடி விசாரித்தான், தமையன்.
“அவனோட எனக்கு என்ன சண்டை வரக் கிடக்கு? அப்பிடியே வந்தாலும் நான் என்னத்துக்குப் பயப்பிட? என்னால ஏலாத ஒரு நிலை வந்தா உன்னட்டையும் அப்பாட்டையும் தானே வருவன்.” என்று, பதில் சொன்னாள், கமலி.
“இப்ப நீ கேக்கிற மாதிரி நான் அமைதியா இருந்ததாலயே அவனும் என்னை என்னைப் பாத்திருக்கலாம். அவனுக்கு ஒருத்தரும் இல்லை எண்டது எனக்குத் தெரியும் தான் அண்ணா. எண்டாலும் அங்க, அப்பிடித் தனியா அவனைப் பாத்தது மனதுக்குச் சரியில்ல. அதுவும், நிலத்தில விரிச்சுக் கிடந்த சாப்பாட்டு பார்சலை பாத்தது ஒரு மாதிரி இருந்தது. என்ன இருந்தாலும் கடவுள் ஒருத்தரையும் இப்பிடித் தண்டிக்கக் கூடாது!” என்றாள், மனதில் இருந்து.
அமைதி, கூச்ச சுபாவம், யாருடனும் கலகலப்பாகப் பழக மாட்டான், பாவம் என்று தான் அதுவரை எண்ணியிருந்தாள். யாருமில்லை என்பதில் ஒருவிதப் பரிதாபமும் இருந்தது. அப்படியிருக்க, அன்று, அவன் அப்படிக் கேட்டதில் கமலிக்கும் மிகுந்த கோவமே. வரட்டும் கிழித்து அனுப்புகிறேன் என்று கருவிக்கொண்டு இருக்க, அவன் வரவேயில்லை.
நாட்கள் வேகமாக நகர்ந்து, வாரமாகி, மாதமாகி அதுவும் நகர்ந்துகொண்டு இருக்கையில் சற்றே நிதானத்துக்கு வந்து இருந்தாள். ‘அறிவுகெட்டவன் கேட்டா நான் ஏன் அதைத் தூக்கிச் சுமக்கவேணும்’ என்று, அதை ஒதுக்கியும் இருந்தாள். கூடவே, அவளிடம் அப்படிக் கேட்டுவிட்டு அதிர்ந்து நின்ற அவன் தோற்றமும், கேட்டது பிழை என்று புரிந்து உடனேயே அவன் கேட்ட மன்னிப்பும், நடந்ததை ஒதுக்க உதவிற்று. அவனே உணர்ந்துவிட்ட ஒன்றை மீண்டும் எதற்குப் பேச என்று விட்டுவிட்டாள்.
இருந்தபோதிலும், அவன் காதலைச் சொல்லவில்லை; கலியாணத்துக்குத் தான் கேட்டான் என்கிற விடயம், மனதின் ஏதோ ஒரு மூலையில் நின்று நிரடிக்கொண்டே இருந்தது. ‘எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு’ என்றோ, ‘நான் உன்ன விரும்புறன்’ என்றோ சொல்லவில்லை. அநாதரவான குழந்தை ஒன்று, என்னை ஏந்திக்கொள்ளேன் என்று இறைஞ்சுவது போல், ‘என்னைக் கலியாணம் கட்டுகிறாயா’ என்று தானே கேட்டான். அது நினைவு வருகிற போதெல்லாம் அவள் மனது பிசைந்தது.
இன்றைக்கும், கடைக்குப் போய்விட்டு வருகிற போது, ‘ஃபோனை குடுத்திட்டுப் போவோம்’ என்று அரவிந்தன் சொன்னபோது, ஓடி ஒளிந்தவனைச் சும்மா பார்த்துக்கொண்டு வருவோம் என்று விளையாட்டாகத் தான் எண்ணினாள். தன்னைக் கண்டதும் என்ன செய்கிறான் என்று பார்க்கலாம் என்கிற குறுகுறுப்பும் இருந்தது.
ஆனால், கதவைத் திறந்தவனின் அளவுக்கதிகமான மெலிவில், அவள் தான் அதிர்ந்து போனாள். அவன் வேறு கிளீன் ஷேவ் செய்திருக்க, கன்னமெல்லாம் ஒட்டி, முகத்தில் கண் மட்டுமே தெரிந்தது. அதுவும், அந்த விழிகளில் தென்பட்ட பரிதவிப்பில், அவளுக்கு வாயைத் திறக்கவே முடியாமல் போயிற்று.
நாட்கள் அதன் பாட்டில் நகர்ந்தன. கமலியின் சிந்தனையின் ஒரு பகுதியை, அவ்வப்போது, கிருபன் பறித்துக்கொண்டு இருந்தான். அவர்கள், அவன் வீட்டுக்குப் போய் வந்த பிறகும் கூட, அவன் இங்கே வருவதில்லை.
“கிருபனுக்கு எங்களோட ஏதும் கோவமாமோ? இந்தப் பக்கம் வாறதே இல்ல.” என்று, சுகுணாவே விசாரிக்கும் அளவில் இருந்தது அவனது ஒதுக்கம்.
“எத்தனையோ தரம் கூப்பிட்டாச்சு, அம்மா. அவனுக்கு என்னவோ பேயடிச்சிட்டுது போல. இந்தப் பக்கம் வாறானே இல்ல.” எரிச்சலுடன் பகிர்ந்தான், அரவிந்தன்.
இப்போதெல்லாம், அவளுக்கும் அந்தக் கோபம் மெல்ல மெல்ல எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. அத்தனை நாட்களாக, அவள் ஏதாவது செய்தால் அவனுக்கும் அரவிந்தன் கொண்டுபோய்க் கொடுப்பான் என்பதில், டயட் என்று சொல்லிவிட்டு ஒன்றுமே செய்யாமல் இருந்தவள், அன்று, சனிக்கிழமை என்பதில் மோதகம் செய்தாள்.
அரவிந்தனும் வெளியே செல்லத் தயாராவதைக் கவனித்துவிட்டு, “உன்ர நண்பர் இண்டைக்காவது வருவாரா?” என்று, வினவினாள்.
“இல்ல. அவனுக்கு நேரமில்லையாம்!” ஷேர்ட்டை எடுத்து மாட்டியபடி பதில் சொன்னான், அரவிந்தன்.
சினம் தான் வந்தது அவளுக்கு. “முதல் எல்லாம் எப்பிடி நேரம் வந்ததாம்? எங்கட வீடு கடந்து தானே ஒவ்வொரு நாளும் போகவேணும். போற வழியில உன்ன ஏத்திக்கொண்டு போறதுக்கும் நேரம் இல்லையாமோ?” என்று படபடத்தாள்.
ஏற்கனவே, இதையெல்லாம் கேட்டு ஒழுங்கான பதில் கிடைக்காத எரிச்சலில் இருந்த அரவிந்தன், “இப்ப என்ன பிரச்சினை உனக்கு? அவன் வந்தா என்ன, வராட்டி என்ன?” என்று, எரிந்து விழுந்தான்.
“இவ்வளவு நாளும் வந்த ஒருத்தன் இப்பிடி ஒரேடியா வராம விட்டாக் கேக்கிறேல்லையா? அண்டைக்கு நீ மட்டும் என்னத்துக்கு அவனோட சண்டையா எண்டு என்னட்டக் கேட்டனி? நீ வேற சிடு மூஞ்சி. ரெண்டு பேருக்கும் சண்டையோ என்னவோ எண்டு நினைச்சன். நிறைய நாளைக்குப் பிறகு மோதகம் செய்தனான். ஆரும் இல்லாம இருக்கே அந்த எரும, குடுத்துவிடுவம் எண்டு நினைச்சன். விருப்பம் எண்டாக் கொண்டேக் குடு. இல்ல, தூக்கிக் குப்பைல போடு.” அவன் மீதிருந்த எரிச்சலைத் தமையன் மீது காட்டிவிட்டுப் போனாள், கமலி.
அரவிந்தனுக்குத் தன் தவறு புரிந்தது. கூடவே, பிள்ளையார்ப் பந்து விளையாடிய நாளில், ஏதும் நடந்திருக்குமோ என்கிற சந்தேகம் இருந்ததில் தான் சற்றே கூடுதலாகக் கோபமும் பட்டிருந்தான். “சரியடி தங்கச்சி, கோவிக்காத. நீ துருவி துருவிக் கேக்கவும் டவுட் வந்திட்டுது.” என்றான் சமாளிப்பாக.
“அப்பிடி என்ன டவுட் வந்தது உனக்கு?” மீண்டும் சமையலறைக்குள் இருந்து வெளிப்பட்டுக் கேட்டாள், அவள்.
“அவனை சைட் ஏதும் அடிக்கிறியோ எண்டு.”
“அப்பிடி அடிச்சாத் தான் என்ன? எனக்குப் பிடிச்சிருந்தா அடிக்கப் போறன். அப்ப வந்து நீ தடுத்தாலும் கேப்பன் எண்டு நினைக்கிறியோ?” என்று, திருப்பிக் கேட்டாள், அவள்.
பயந்து போனான், அரவிந்தன். விளையாட்டுப் பேச்சு இப்படித் திரும்பும் என்று அவன் நினைக்கவில்லை. “ஏய்! என்னடி சொல்லுறாய்?” என்றான் அதட்டலாக.
“நீ சொன்னதுக்கப் பதிலச் சொன்னனான்.” அப்போதும் அசராமல் சொன்னாள், அவள். கூடவே, “அதுசரி, உன்ர தங்கச்சிக்குக் கட்டிக் குடுக்கிற அளவுக்கு அவன் நல்லவன் இல்லையா?” என்று விசாரித்தாள்.
“கமலி, இது விளையாட்டு இல்ல. நீ சின்னப்பிள்ளையும் இல்ல. உண்மையைச் சொல்லு, அவனை உனக்குப் பிடிச்சிருக்கா?” அவளின் பேச்சில் பயந்துபோய் விசாரித்தான், அரவிந்தன்.
அவளும் சற்று அமைதியானாள். கொஞ்சமாய் யோசித்தாள். பின், “இன்னும் இல்ல அண்ணா. பிடிச்சாச் சொல்லுறன்” என்றுவிட்டுப் போனாள்.
“அடியேய்! என்னடி பதில் இது?” அவனுக்குச் சிரிப்பு வந்தது. அப்படி ஏதும் என்றாலும் நண்பன் நல்லவன் என்பதில் அவனுக்குப் பெரிதாகக் கவலையும் இல்லை.
*****
அரவிந்தன் கொண்டு வந்து தந்த மோதகப் பையைத் திறக்கவே பயந்தான், கிருபன். திரும்பக் கொடுத்து விட்டிருக்கிறாள் என்றால் மன்னித்துவிட்டாள் என்று அர்த்தமா? அவன் மீதிருந்த கோபம் போய்விட்டதாமா? அரவிந்தன் போன பிறகும் அதைப் பார்த்தபடியே நேரத்தை ஓட்டினான். ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் வேகமாகப் பிரித்தான்.
இரண்டு நாட்களுக்குப் போதும் என்கிற அளவுக்கு வைத்திருந்தாள். அதுவும், வாழையிலையில் வைத்து, அதை, ஒரு பேப்பரில் கட்டிக் கொடுத்திருந்தவளின் அக்கறை, அவனை என்னவோ செய்தது. தொண்டை அடைக்க எடுத்துச் சாப்பிட்டான். அற்புதமான இனிப்புச் சுவையுடன் மனதையும் வயிற்றையும் நிறைத்த மோதகம், அவன் விழிகளையும் நிறைத்த மாயம் என்ன என்று புரியவே இல்லை அவனுக்கு.
இந்த இனிப்போடு இனிப்பாக அவளும் அவனுக்குக் கிடைத்துவிட மாட்டாளா? மனம் ஏங்கித் தவிக்க, அந்த வீட்டில், தன்னந் தனிமையில் தவித்திருந்தான், கிருபன்.

