அவர்களது அன்னையைப் பார்க்கவே பாவப்பட்ட பெண்மணி என்று தெரிந்தது. நலிந்து மெலிந்த மேனியும், நரைத்த தலையும், ஒரு பழைய உடையும் என்று பார்க்கவே மனத்தைப் பிசைந்தார்.
இதற்குள் தெரு மூலையில் இருக்கும் கடைக்கு ஓடிப்போய் பிஸ்கட்டும் கேக்கும் வாங்கிக்கொண்டு ஓடிவந்து, அவற்றோடு தேநீரும் ஊற்றிக் கொடுத்து அவனைக் கவனித்தாள் நிலானி.
சீட் போட்ட அந்தக் குட்டி வீட்டினுள், அவித்துக் கொட்டும் வெக்கைக்குள் இருக்க முடியாமல், தேநீர்க் கோப்பையுடன் வெளியே வந்திருந்தான் காந்தன்.
வீடு சின்னதாக இருந்தாலும் காணி சோலையாக இருந்தது. கண்ணுக்கு எட்டிய வரையில் கிணறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
“தண்ணிக்கு என்ன செய்றீங்க?” என்று விசாரித்தான்.
“எங்கட தெரு மூலைல ஒரு கிணறு இருக்கு சேர். இந்த ஏரியால இருக்கிற எல்லாருமே அங்க போய் அள்ளிக்கொண்டு வருவம்.” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் ஓடிப்போய், ஒரு பிளாஸ்டிக் நாற்காலியைக் கொண்டு வந்து போட்டு, “இருங்க சேர்!” என்று உபசரித்தாள்.
அவளுக்கு அவ்வளவு பெரிய பதவியில் இருக்கிற ஒருவன், அவளின் தர்மசங்கடமான நிலையை உணர்ந்து உதவியதும் அல்லாமல், அவர்கள் வீட்டுக்கு வந்து தேநீர் அருந்தி, இயல்பாக உரையாடுவதில் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.
அவன் அமரவில்லை. சத்தம் சந்தடி இல்லாத சூழலும், வெயில் அடங்கிய பொழுதும், ஓங்கி வளர்ந்து நின்ற தென்னை மரங்கள் அசைந்தாடிய அழகும் என்று ரம்மியமான அந்தப் பொழுதை அனுபவிக்கிறவனாக, நின்றுகொண்டே தேநீரைப் பருகியபடி விழிகளைச் சுழற்றினான்.
அங்கே ஒரு மதில் சுவர் இடித்த அடையாளமும் இன்னொரு மதில் புதிதாக எழுந்து நிற்பதையும் கண்டுவிட்டு, “அந்த வீட்டுக்காரரா பிரச்சினைக்கு வந்தது?” என்று விசாரித்தான்.
“ஓம் சேர். உண்மையா உங்களுக்கு எத்தின தரம் நன்றி சொன்னாலும் போதாது. எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் காணி அளக்க வரவே இல்ல. ஆரக் கேக்கிறது, இனி என்ன செய்றது எண்டு ஒண்டுமே தெரியாம இருந்தது. அப்பதான் நான் வேலை செய்ற கடை அக்கா சொன்னவா, நேரா ஒபீசுக்கே போய்க் கதைச்சுப் பார் எண்டு. அப்பவும் நம்பிக்கை இல்லாமத்தான் வந்தனான். ஆனா நீங்க உடனேயே செய்து தந்திட்டீங்க.” என்று அவள் சொன்னதை ஒற்றைத் தலையசைப்புடன் கேட்டுக்கொண்டு புறப்பட்டான் அவன்.
வாகனத்தில் ஏறப்போனவன் நின்று, “சைக்கிள எப்பிடிப் போய் எடுப்பீங்க?” என்று கேட்டான்.
“அது பஸ்ல போவன் சேர்.”
“ஓ, வேணுமெண்டா வாங்க, நான் கொண்டுபோய் இறக்கி விடுறன்.” என்று அழைத்தான்.
“இல்ல சேர். நன்றி சேர். எங்களைக் கொண்டுவந்து விட்டதே பெரிய உதவி சேர். நான் பஸ்ஸிலேயே போய் எடுப்பன்.” என்று அவள் சொல்லவும் அதற்குமேல் அவனும் வற்புறுத்தவில்லை. புறப்பட்டிருந்தான்.
ஆனால், நிசாந்தனின் நினைவு அவனுக்கு அடிக்கடி வந்துபோக ஆரம்பித்திருந்தது. ஒரு யுத்தம் நேரடியாகவும் மறைமுகமாகவும் எத்தனை தலைமுறைகளைப் பாதித்துவிட்டது? இன்னுமே மனத்தளவில் ஊனமுற்ற மனிதர்கள் நிறைந்துதானே கிடக்கிறார்கள்!
இப்படி இயலாதவர்களுக்குக் கிடைக்கும் உதவித்தொகைக்கும் அவள் அலைந்துகொண்டிருக்கிறாள் என்று அறிந்து, தன்னால் முடிந்த உதவியாக அதற்கான ஏற்பாட்டையும் பார்த்துக் கொடுத்ததில் நிலானிக்கு கிட்டத்தட்ட அவன் ஒரு கடவுளாகிப் போனான். அவள் நெஞ்சில் அவன் மீதான நன்றி அளவற்று ஊற்றெடுத்துக்கொண்டிருந்தது.
அதன்பிறகெல்லாம் கேக் சென்டரில் அவளைக் காணும் பொழுதினில் இன்முகமாய் இரண்டு வார்த்தைகள் பேசினான்.
அன்று ருத்ரனோடு அவர்களின் கடைக்கு வந்தவனின் முகம் சோர்ந்து வாடியிருந்தது. அதோடு, ருத்ரனுக்கு கேக்குக்கும் குளிர்பானத்துக்கும் ஏற்பாடு செய்தவன் அவனுக்கு இஞ்சித் தேநீர் மட்டும் கேட்டு வாங்கி அருந்தினான்.
அவன் பணம் செலுத்த வந்தபோது, “சேர், உடம்பு சரியில்லையா?” என்று தன்னை மீறிக் கேட்டிருந்தாள் நிலானி.
மெல்லிய வியப்பு ஒன்று முகத்தில் ஓடி மறைந்தாலும், “ஓம், நேற்று மழைல நனஞ்சதாக்கும், லைட்டா காய்ச்சல்.” என்றான் அவன்.
“காரசாரமா ரசம் வச்சுக் குடிங்க சேர். சுகமாகிடும்.” அவன் குரலும் இலேசாய்க் கரகரப்பதைக் கவனித்துச் சொன்னாள் அவள்.
“அதுக்கு நான் முல்லைத்தீவுக்குப் போகோணும்.” என்று சிரித்தான் அவன்.
“ஏன் சேர், இங்க தனியாவா இருக்கிறீங்க?” என்றவள் கேள்விக்கு ஆம் என்றுவிட்டுப் புறப்பட்டிருந்தான்.
அவளுக்கு மனம் கேட்கவேயில்லை. அலுவலகத்தில் அவன் தன் வேலைகளை முடித்துக்கொண்டு வாகனத்தின் அருகே நெருங்குகையில், “சேர்!” என்றபடி மூச்சு வாங்க ஓடிவந்து அவன் முன்னால் நின்றாள்.
“என்ன, ஏதும் பிரச்சினையா?” அவள் வந்த வேகத்தைக் கண்டுவிட்டு ஒன்றும் விளங்காமல் வினவினான் அவன்.
“இல்ல சேர். அது காய்ச்சல் எண்டு சொன்னனீங்கதானே. அதான் அம்மா இடியப்பமும் ரசமும் செய்து தந்தவா. இரவுக்குச் சாப்பிடுங்க சேர்.” என்று நீட்டினாள்.
அவனுக்கு உண்மையில் அவளின் அந்த அதிகப்படியான செய்கை பிடிக்கவில்லை. “ஏன் இதெல்லாம்? இப்பிடி எல்லாம் செய்யாதீங்க.” என்றான் அதை வாங்காமல்.
“சொறி சேர். பிழையா நினைக்காதீங்க. நீங்க எங்களுக்குச் செய்தது எல்லாம் பெரிய பெரிய உதவிகள் சேர். தம்பிக்குக் கிடைக்கிற ஹெல்ப்பால இப்ப எல்லாம் நல்ல வடிவா, வயிறு நிறையச் சாப்பிடுறோம். அதுக்குப் பதில் எங்களால உங்களுக்கு ஒண்டுமே செய்யேலாது. அதான். நீங்க இங்க தனியா இருக்கிறீங்க எண்டுறதால மட்டும்தான் கொண்டு வந்தனான். குறை நினைக்காதீங்க.” என்றதும் வேறு வழியற்று வாங்கிக்கொண்டான்.
அப்போதும், “இவ்வளவு மெனக்கெட்டுச் சமச்சுக் கொண்டு வந்து தந்தத்துக்கு தேங்க்ஸ். ஆனா, இதுதான் கடைசியும் முதலுமா இருக்கோணும். இனி இப்பிடிச் செய்யாதீங்க.” என்று கண்டிப்போடு சொல்லிவிட்டுப் போனான்.
அதன் பிறகான ஒரு நாளில் சந்தித்துக்கொண்டபோது, “சேர், இப்ப உடம்பு சுகமா?” என்று அவள் இன்முகமாக விசாரித்ததற்கு, “ஓம், அண்டைக்குச் சாப்பாடு நல்ல டேஸ்ட்டா இருந்தது. அம்மாக்கும் நன்றி சொன்னேனாம் எண்டு சொல்லி விடுங்கோ” என்று சொல்லியிருந்தான்.
அடுத்த முறை கண்டபோது, “சேர், நாங்க சாப்பாடு செய்து கடைகளுக்குக் குடுக்கிறனாங்க. அப்பிடியே உங்களுக்கும் கொண்டு வந்து தரவா?” என்று அவள் கேட்டது, அவனுக்கு உண்மையில் பிடிக்கவில்லை.
அவனளவில் அவன் தன் கடமையைத்தான் செய்தான். பிறகு எதேற்சையாகக் கண்டபோது செய்தது ஒரு மனிதாபிமான உதவி. அங்கே அவர்களின் வீட்டு நிலையைப் பார்த்துவிட்டு, நியாயமாக அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உதவி கிடைக்காமல் இருப்பதை அறிந்து, தன் செல்வாக்கை நல்லதற்கு என்றெண்ணிப் பயன்படுத்தி, நிசாந்தனுக்கான உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்திருந்தான். அவ்வளவுதான்.
அதற்கு அவள் அவனைக் கண்டாலே ஓடி ஓடிக் கவனிப்பது ஒரு வகை ஒவ்வாத உணர்வைத் தந்தது. தள்ளி நிற்கச் செய்தது.
இப்போதும் அதிகப்படியான நன்றி உணர்ச்சியில்தான் இப்படியெல்லாம் கேட்கிறாள் என்று தெரியாமல் இல்லை. ஆனாலும் அவன் வேலையில் அவளைப் போன்று பலருக்கு நல்லது செய்திருக்கிறான். அவர்களிடமிருந்தெல்லாம் இப்படியான நன்றிகளை வாங்க ஆரம்பித்தால் அவன் நிலை என்னாவது?
அதில் உறுதியாக மறுத்துவிட்டிருந்தான். அதன் பிறகு அவர்களின் கடைக்குப் போவதைக்கூட நிறுத்தியிருந்தான்.
ஆனால், அவன் மீது நெஞ்சு முழுக்க நன்றிப் பெருக்கில் தளும்பி நின்றவள் விடவில்லை. வாரத்தில் இரண்டு நாள்களாவது அலுவலகத்துக்கே வந்து உணவைக் கொடுக்க ஆரம்பித்தாள்.
“இப்பிடி எல்லாம் செய்யாதீங்க எண்டு உங்களுக்கு ஏற்கனவே சொல்லிட்டேன் நிலானி!” என்று அவன் காட்டிய கண்டிப்புக்குக் கூட அவள் அசையவில்லை.
“பிளீஸ் சேர் கோவிக்காதீங்க. இது எங்களால முடிஞ்ச சின்ன உதவி, அவ்வளவுதான். எனக்கு வெளிச் சாப்பாடு ஒத்து வராது. அல்சர் இருக்கு. அதால அம்மா ஒவ்வொரு நாளும் எனக்குச் சாப்பாடு கொண்டு வருவா. அப்ப அவாதான் உங்களுக்கும் கொண்டுவந்து தாறவா.” என்று சொல்லவும் உடனேயே அவளிடம் நம்பரை கேட்டு வாங்கி, அவருக்கு அழைத்து, இப்படிச் செய்ய வேண்டாம் என்று சொன்னான்.
அவர் அவளுக்கு மேலாக நின்றார்.
“தம்பி, அப்பிடி வேண்டாம் எண்டு சொல்லாதீங்கோ. ஒவ்வொரு நாளும் மகளுக்குக் கொண்டுவந்து குடுக்கிறானான். அதோட ஒரு கைப்பிடி அரிசி உங்களுக்கு எண்டு போடுறதால எனக்குச் சந்தோசம்தான். ஒரு நல்ல பிள்ளைக்கு எங்களால முடிஞ்ச சின்ன உதவியைச் செய்றோம் எண்டு மனதுக்கும் நிறைவா இருக்கு.” என்று அவரும் சொன்னபோது, என்னடா இது என்றுதான் அவனுக்கு இருந்தது.
கடைசியில் இது அவர்களுக்கு ஒரு உழைப்பாக இருக்கட்டும் என்று எண்ணி, அவனுடைய அலுவலகத்தில் அவனைப் போன்று தனியாக இருக்கும் இன்னும் சிலருக்கும் அவர்களிடமிருந்து உணவுக்கு ஏற்பாடு செய்து, பணத்தையும் கொடுக்க ஆரம்பித்தான்.
அதற்கும் அவள் அவனிடம் மட்டும் பணம் வாங்க மாட்டேனென்று நிற்க, “அப்பிடி எண்டா எனக்குச் சாப்பாடே வேண்டாம்!” என்று அவன் முடிக்கவும் குறைத்து வாங்கினாள்.

