“டபிள் ஓகே சேர்!” என்றுவிட்டுப் போனாள் அவள்.
அதன் பிறகுதான் தன் நிலைக்கு மீண்டான் காந்தன். ‘கடவுளே, என்ன செய்துகொண்டு இருக்கிறன் நான்’ என்று தனக்குள் அலறினான். இல்லை, இது கூடவே கூடாது என்று மனத்தில் உறுதி எடுத்தவன் சொன்னது போன்று அந்தச் சனிக்கிழமை அவள் வீட்டுக்குச் சாப்பிடப் போகவில்லை. அவசர வேலை ஒன்று வந்திருப்பதாகச் சொல்லி நின்றுகொண்டான்.
ஆனால், நிலானி விடவில்லை. அவளின் பிறந்தநாள் விருந்தை அவனுக்கு எப்படியாவது கொடுத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்.
ஒரு மாதத்துக்கும் மேலாகத் தள்ளிப் போட்டவனால் ஒரு கட்டத்துக்குமேல் முடியவில்லை. அவளும் பார்க்கிற பொழுதுகளில் எல்லாம் வருந்தி அழைத்துக்கொண்டிருந்தாள். கடைசியில் ஒரு சனிக்கிழமை பழங்கள் வாங்கிக்கொண்டு போனான்.
அங்கே சிவகாமி அம்மா இல்லை. சொந்த ஊர்க் கோவிலில் என்னவோ நேர்த்திக்கடனாம் என்று முதல்நாளே யாழ்ப்பாணம் சென்றுவிட்டாராம். அடுத்த நாள்தான் வருவாராம் என்றதும், “அப்ப இன்னொருநாள் பாத்திருக்கலாமே நிலானி.” என்றான் வீட்டுக்குள் செல்லாமல்.
“சேர், நீங்களே வாறன் வாறன் எண்டு சொல்லி இப்பதான் வாறீங்க. இதுல நான் வேற வேண்டாம் எண்டு சொல்லவா? தம்பி இருக்கிறான் சேர், நீங்க வாங்க!” என்று வீட்டுக்குள் அழைத்துப்போனாள் நிலானி.
நிசாந்தனும் நல்ல மனநிலையில் இருந்து, “வாங்க சேர்.” என்று சிரித்த முகமாய் வரவேற்றான். அதன் பிறகு சிரிப்பும் பேச்சுமாக மூவருக்கும் பொழுது நன்றாகவே கழிந்தது.
அவள் சமையல் கட்டில் நிற்க, அவனும் நிசாந்தனும் கூட அங்கேயே சென்று அமர்ந்துகொண்டனர். ஒரு கட்டத்தின் பின் எப்போதும்போலப் பேச்சுப் பேச்சாய் இருந்தாலும் அவன் விழிகள் அவளை வட்டமடிக்க ஆரம்பித்தன.
அவனுக்கென்று பிரத்தியேகமாக அவள் சமைக்கும் சமையலும், ‘இது பிடிக்குமா சேர்’, ‘அது பிடிக்குமா சேர்’ என்று கேட்டு கேட்டு அவன் நலனை மட்டுமே அவள் பிரதானமாகக் கவனித்ததும் அவனுக்குள் போதையேற்ற ஆரம்பித்திருந்தன.
மனைவியை, மகளை, கூடப்பிறந்த தங்கையை, தன்னை நம்பி இருக்கும் இரண்டு குடும்பப் பெரியவர்களை எல்லாம் மறந்து போனான்.
முதலில் அவன் பார்வையைக் கவனிக்காத நிலானி, பிறகு பிறகு கண்டுகொண்டபோது அவளுக்குள் இரகசியச் சந்தோசம். அவனைப் போன்ற ஒருவனின் ரசனைக்குரியவளாகத் தான் இருக்கிறோம் என்பதே அவளை மகிழ்வித்தது.
தெரியாததுபோல் அவளும் அவனைக் கவனிக்க ஆரம்பித்தாள். இருவருக்கும் நடுவில் நிசாந்தன் இருந்தாலும் அவனறியாத பார்வைப் பரிமாற்றம் ஒன்று இருவருக்குள்ளும் நடக்க ஆரம்பித்தது.
நல்லபடியாகவே விருந்து முடிந்தது. என்ன, கடைசியில் அவள் காய்ச்சி வைத்திருந்த இராசவள்ளிக் கிழங்குக் கஞ்சியைக் குடிக்கையில்தான் நிசாந்தனின் மனநிலை மாறிப்போயிற்று. கையில் இருந்த கஞ்சிச் சட்டியை கோபத்தோடு விசிறி அடித்தான். அது அப்படியே வந்து காந்தனின் முகத்தில் மோதியது.
எதிர்பாராமல் நிகழ்ந்ததில் காந்தன் வலியில் துடித்துப்போனான் என்றால், அவனுக்கு இப்படியாகிற்றே என்று நிலானி தவித்துப்போனாள். “டேய் தம்பி! என்னடா செய்றாய்?” என்று அதட்டியபடி காந்தனிடம் ஓடி வந்தவள், “சொறி சேர் சொறி சேர். அவன் தெரியாமச் செய்திட்டான்.” என்று பதறியபடி, அவன் முகத்தில் இருந்த கஞ்சியை வேகமாகக் கையால் வழித்து எடுக்கவும் அவன் அசைவுகள் எல்லாம் நின்று போயின.
அவள் கரம் பற்றி நிறுத்தி, “எனக்கு ஒண்டும் இல்ல. நீ முதல் அவனைப் பார்!” என்றான் கரகரத்த குரலில்.
அவளும் நிசாந்தனைச் சமாளித்து, அவனுக்கு உடை மாற்றி, மருந்து கொடுத்து, மடியில் வைத்துத் தட்டிக்கொடுத்து உறங்க வைத்துவிட்டு, அறையை விட்டு வெளியே வந்தபோது, வெளியே வாளியில் இருந்த தண்ணீரில் தன்னைக் கழுவித் துடைத்துக்கொண்டு, ஈர உடையுடன் அங்கேயே அமர்ந்திருந்தான் காந்தன்.
அவனுக்குள் மிகப்பெரிய போராட்டம் ஒன்று நடக்க ஆரம்பித்திருந்தது. இந்த நிமிடமே அங்கிருந்து புறப்பட்டுவிடு என்று அறிவு அறிவுறுத்தியது; வாழ்வில் திருத்தவே முடியாத தவறைச் செய்துவிடாதே என்று எடுத்துச் சொன்னது. ஆனால், அவனால் முடியவில்லை. உணர்வுகள் கட்டவிழ்ந்துகொண்டிருந்தன. என்ன செய்வது என்று தெரியாது நின்றான்.
அப்போது தயக்கத்துடன் அவள் வந்தாள். அவன் முகத்தில் சூடான கஞ்சி பட்ட சிவப்பு அப்பட்டமாகத் தெரியவும் விழிகள் கலங்கின. “சேர், எரியுதா?” என்றபடி அவன் கன்னத்தைத் தொட வரவும் வேகமாக அவள் கையைப் பற்றி நிறுத்தியவன், “என்ன செய்றாய் எண்டு தெரியுதா?” என்றான் கோபமாக.
“சேர் கன்னம் சிவந்து போச்சு.” அவள் குரல் தழுதழுத்தது.
“பரவாயில்ல விடு.”
“பொறுங்க ஒயில் கிறீம் இருக்கு, கொண்டு வாறன். தம்பி அடிக்கடி இப்பிடிச் செய்றதால வாங்கி வச்சிருக்கிறன்.” என்றபடி அவள் உள்ளே போகப் பார்க்கவும், “எனக்கு ஒண்டும் வேண்டாம். நான் போகோணும் நிலானி.” என்றான் அவன் அவளைப் பாராமல்.
இவ்வளவு நடந்த பிறகு அவனை அப்படியே அனுப்ப அவளுக்கு மனமில்லை. “ஒரு தேத்தண்ணி ஊத்தித் தரட்டா?” என்று மெல்ல வினவினாள்.
“சரி போடு!”
அவள் சமையல்கட்டுக்குச் செல்ல அவனும் போனான்.
“இது ஆபத்து இல்லையா நிலானி. எனக்கே இப்பிடி இருக்கு. உனக்கோ உன்ர அம்மாக்கோ இப்பிடி நடந்தா எப்பிடிச் சமாளிப்பீங்க?”
“சமாளிக்காம வேற என்னதான் சேர் செய்றது? நல்ல நிலைல இருந்தா அவன் எவ்வளவு அருமையான பிள்ளை எண்டு பாத்தனீங்கதானே. நித்திரையால எழும்பி அவனே மன்னிப்புக் கேட்டு அழுவான் சேர்.” மெலிதாகப் புன்னகைக்க முயன்றபடி சொன்னவள் விழிகள் கலங்கி இருந்தன.
அந்த விழிகளையே பார்த்தவனுக்குள் என்னவோ உடையும் சத்தம். அவள் தேநீரை நீட்டினாள். அவளையே பார்த்தபடி வாங்கிப் பருகினான். அவளால் அவன் பார்வையை எதிர்கொள்ள இயலவில்லை.
இருவர் மனநிலையும் மாற ஆரம்பித்தது. நெஞ்சங்கள் தடதடக்க ஆரம்பித்தன.
மெல்ல விழிகளை உயர்த்தி அவன் கன்னத்தைப் பார்த்துவிட்டு, “கிறீம் பூசி விடவா?” என்றாள் தவிப்புடன்.
அதைச் செய்தால் மட்டுமே அவள் மனம் ஆறும் என்று தெரிந்துவிட, “சரி, கொண்டு வா!” என்றான் அவன்.
அவள் கொண்டுவந்து கிறீமை தன் ஒற்றை விரலில் எடுத்துக்கொண்டு நிமிர்ந்து, அனுமதிக்காக அவனைப் பார்த்தாள். அவன் ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்திருந்தான். ஒரு கட்டத்தில் அவனை நெருங்கி, அந்த கிறீமை அவன் கன்னத்தில் மிக மிக மென்மையாய்ப் பூச ஆரம்பித்தாள்.
அவளிடமிருந்து பார்வையை அகற்றித் தன்னை அடக்க முயன்றும் முடியாமல் போனவனின் கை, அவள் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டது. அவன் பார்வையா, அவனுடைய பற்றுதலில் இருந்த ஏதோ ஒன்றா அவளுக்குச் சுவாசம் நின்று போயிற்று.
முதல் இரண்டு சேர்ட் பட்டன்களை கழற்றிவிட்டு, நெஞ்சுப் பகுதியைக் காட்டி, “இங்கயும் சிவந்து இருக்கு.” என்றான் அவன்.
அவள் வெட்கித் தலை குனியப்போக அவன் விடவில்லை. அதன் பிறகு நடந்தவைகளுக்கு யாரைப் பொறுப்புச் சொல்வது?
நிசாந்தன் நல்ல உறக்கத்தில் இருந்ததும், சிவகாமி அம்மா இல்லாத நிலையும் அவர்களுக்கு வசதியாகிப்போனது.
மனதில் உறுதி வேண்டும். சாதாரணமாகப் பார்த்தால் மூன்றே மூன்று சொற்கள்தான். ஆனால், அந்தச் சொற்கள் சொல்வது மொத்த வாழ்க்கையின் சூத்திரத்தையும். உறுதி தளர்ந்து, எந்த இடத்தில் தடுமாறுகிறோமோ அங்குச் சறுக்க ஆரம்பிப்போம். அந்தச் சறுக்கல் வாழ்வில் பெரும் அனர்த்தங்களை நிகழ்த்திவிடும். இங்கே அதுதான் காந்தனுக்கு நடந்தது.
அன்று இரவும் அவன் அங்கேதான் தங்கினான். அடுத்தநாள் வந்த சிவகாமிக்கு முதல்நாள் பெய்த அடைமழை அவன் அங்குத் தங்கியதற்கான காரணமாயிற்று.
குவார்ட்ஸுக்கு வந்து சேர்ந்த பிறகுதான் மீண்டும் அவன் புத்தி விழித்துக்கொண்டது. நடந்ததை எண்ணி விதிர்விதிர்த்துப்போனான். என்ன செய்து வைத்திருக்கிறோம் என்று தலையில் அடித்துக்கொண்டான். மனைவி, தன் வீட்டினர், தங்கை யாரினதும் முகத்தில் விழிக்க முடியாமல் கூசி, அங்கேயே இருந்துகொண்டான்.
ஆனால், என்னதான் உள்ளுக்குள் இத்தனையும் அவனைப் போட்டு உலுக்கினாலும் முதல் என்பதற்கு இருக்கிற பயமும் பதற்றமும் பிறகு பிறகு இருப்பதில்லையே. தவறு என்று தெரிந்தே செய்தான். துரோகம் என்று அறிந்தே நடந்தான். கடைசியில் சுபாங்கியிடம் மாட்டிக்கொண்டான்.

