கேட்பார் இன்றிக் காதல் – 2

அத்தியாயம் 2

அவள் தனக்குப் புதிதாய்க் கிடைத்த சொந்தம் என்கிற குறுகுறுப்பா, முறைப்படி அவனுக்கு மச்சாள் என்பதில் அவனையறியாமல் உண்டான உரிமையா தெரியவில்லை. அதுவும் அவனைக் கண்டாலே எங்காவது ஓடி ஒளிந்துகொள்ளலாமா என்று பார்க்கும் அவளின் மிரட்சியே ஏதாவது செய்யடா என்று அவனைத் தூண்டிவிடும்.

அதனால்தான் அவளோடு விளையாடுவான். சில நேரங்களில் சற்றே அதிகமாகத்தான் போகிறோம் என்று தெரிந்தாலுமே கட்டுக்குள் நிற்க முடிவதில்லை.

அதுவே கைப்பேசி எண்ணைப் பிழையாகத் தந்து ஏமாற்றியபோது மெய்யான கோபம் வந்திருந்தது. ஏதோ ஒரு வகையில் அவன் தன்மானத்தைச் சீண்டியிருந்தது. அப்படி என்ன செய்துவிடுவான் என்று இப்படிச் செய்தாளாம் என்கிற கேள்வி எழுந்ததும் வேகமாக அவளுக்கு அழைத்தான்.

யார் என்று தெரியாமல் ஏற்ற அன்பினி, “ஹலோ!” என்றாள் மெல்லிய தயக்கத்துடன்.

“ஆக, நம்பரை வேணும் எண்டே பிழையாத் தந்திருக்கிறீர்!”

செவிப்பறையில் வந்து மோதிய கோபக்குரலில் அவளுக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.

“சொல்லும் அன்பினி, அப்பிடி நான் என்ன செய்திடுவன் எண்டு மாத்தித் தந்தனீர்?”

“இல்ல… அது அண்ணா தெரியாத ஆக்களுக்குக் குடுக்கக் கூடாது எண்டு சொல்லி இருக்கிறார்.” தன்னை மீறிய பயத்தில் சொன்னாள்.

“ஓ! அப்ப தெரியாத ஆக்களின்ர லிஸ்ட்டுலதான் நான் வாறன் உமக்கு? சந்தோசம்! இனி அப்பிடியே இரும்!” இருந்த சினத்துக்குத் தூபம் போட்டது போலானது அவள் தந்த பதில்.

அதன்பிறகு அவள் புறம் திரும்புவதே இல்லை. சின்ன பெண், நீ அவளைப் போட்டுப் படுத்திய பாட்டில் பயந்து செய்திருக்கிறாள் என்று அறிவு எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவனால் சமாதானமாகவே முடியவில்லை.

அன்பினியையும் அவன் ஒதுக்கம் உறுத்தியது. அதுவும் எங்காவது எதேற்சையாக எதிர்ப்பட்டாலும் அவள் ஒருத்தி அங்கே இல்லவே இல்லை என்பது போன்று கடந்து போகிறவனின் செய்கை, தவறு செய்துவிட்டோமோ என்று யோசிக்க வைத்தது.

இன்னும் சுபாங்கி இங்கேயே இருப்பதில் சத்தான உணவு ஏதும் செய்தால் இந்துமதி இவளிடம் கொடுத்தனுப்புவார். அப்படி ஒருமுறை வந்தவள் கொண்டுவந்த உணவைக் குசினிக்குள் சென்று பரமேஸ்வரியிடம் கொடுத்துவிட்டுத் திரும்புகையில், இவன் தனியாக சோபாவில் அமர்ந்திருந்து, டீவி பார்த்துக்கொண்டு இருப்பதைக் கண்டாள்.

அவனிடம் சென்று, “அது பயத்தில… ஆனா பிழைதான். சொறி.” என்று மெல்லிய குரலில் மன்னிப்புக் கேட்டாள்.

திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தானே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை.

“அதுதான் சொறி சொல்லுறேனே.” பார்வை வீட்டுக்குள் சென்று வர மறுபடியும் முணுமுணுத்தாள்.

அவளால் அங்கே நிறைய நேரம் நிற்கவும் முடியாது. உறங்கிக்கொண்டிருக்கும் சுபாங்கியோ, சமையலறைக்குள் நிற்கும் பரமேஸ்வரியோ விறாந்தைக்கு வந்தால் தேவையற்ற கேள்விகள் வேறு வரும்.

“என்னத்தான் உமக்கு முன்னப் பின்னத் தெரியாதே! பிறகு என்னத்துக்கு வந்து கதைக்கிறீர்?” என்றான் அவன் புருவங்களைச் சுளித்துக்கொண்டு.

அவளுக்கு மெலிதாய் முகம் மாறியது. “சொறி!” என்றாள் மீண்டும்.

“ஏய் போடி!” என்றான் அபயன் சினத்துடன். செய்வதை எல்லாம் செய்துவிட்டுச் சும்மா வந்து நின்று மன்னிப்பைக் கேட்பாளா என்று எரிச்சலாயிற்று அவனுக்கு.

அவள் அதிர்ந்துபோனாள். எப்போதும் சீண்டி அவளுக்குப் பயம் காட்டுவானே தவிர்த்து இப்படி மரியாதை இல்லாமல் கதைத்ததே இல்லை. ஆனால் இன்று? முகம் கன்றிச் சிவந்துவிட அதற்குமேல் அங்கே நிற்கவில்லை. ஓடி வந்திருந்தாள்.

அதன் பிறகு அந்தப் பக்கம் போவதே இல்லை. சுபாங்கியும் இவர்கள் வீட்டுக்கு வந்திருந்தாள். இருவர் வீடுகளும் இருப்பது பக்கத்து பக்கத்து ஊரில் என்றாலும் அவன் வவுனியாவில் தங்கிப் படித்துக்கொண்டு வார இறுதிகளில் மட்டுமே ஊருக்கு வந்து போவதிலும், இவள் வீட்டுடனேயே இருந்துகொண்டதிலும் இருவரும் பிறகு சந்தித்துக்கொள்ளவில்லை.

சுபாங்கி பெறுமாதத்தை நெருங்கிய நேரத்தில் அன்பினிக்கு உயர்தரப் பரீட்சையின் பெறுபேறு மிக நல்லதாக வந்திருந்தது. அவள் படிக்க ஆசைப்பட்ட கலைப்பிரிவு கேள்வியே இல்லாமல் கிடைக்கும் என்பதில் அவள் சந்தோசம் இரட்டிப்பாயிற்று.

இதை அறிந்த பரமேஸ்வரி அவளை வீட்டுக்கு வந்துவிட்டுப் போகச் சொன்னார். அந்த அபாயமானவன் இருப்பானே என்று ஒரு கணம் தயங்கினாலும், தேர்ச்சி அடைந்துவிடுவாயா என்று கேட்டவனிடம் ‘நான் மிக மிக நல்ல பெறுபேறுகளைப் பெற்றிருக்கிறேன் பார்!’ என்று காட்ட வேண்டாமா என்கிற ரோசம், அவளையும் அங்கே உற்சாகமாகப் போக வைத்தது.

வாசலில் அவன் பைக்கைக் காணவில்லை. அவன் முன்னால் தம்பட்டம் அடிக்க முடியாதே என்கிற குட்டி ஏமாற்றம் பரவினாலும் அவ்வளவு நேரமாக இருந்த ஒரு பயம் அகன்றிருந்தது. ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, “மாமி!” என்று துள்ளலாய்க் குரல் கொடுத்தபடியே உள்ளே நுழைந்தாள்.

“வாங்கோம்மா வாங்கோ வாங்கோ! பிள்ளை கெட்டிக்காரியாம் எண்டு இண்டைக்கு விடிஞ்சதில இருந்து உங்கட மாமி சொல்லிக்கொண்டே இருக்கிறா.” என்று அவளுக்குத் தன் வாழ்த்தைத் தெரிவித்த குழந்தைவேலு, சட்டைப் பையிலிருந்து ஒரு தொகைப் பணத்தை எடுத்து அவள் கையில் பொத்தினார்.

“அச்சோ மாமா, காசெல்லாம் எனக்கு வேண்டாம்!” வேகமாகக் கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு வாங்க மறுத்தாள்.

அவர் விடவில்லை. “அப்பிடிச் சொல்லக் கூடாது. நானே ஏதாவது வாங்கி, அது உங்களுக்குப் பிடிக்காம இருந்தா என்ன செய்றது எண்டுதான் ஒண்டும் வாங்கேல்ல. இந்தக் காசுல உங்களுக்கு என்ன விருப்பமோ அதை வாங்குங்கோ!” என்றார் அவர்.

அறைக்குள் இருந்து உடைகளை மடித்துக்கொண்டிருந்த பரமேஸ்வரியும், “வாங்குங்கோம்மா. இவ்வளவு நல்ல மார்க்ஸ் எடுத்த பிள்ளைக்கு ஒண்டும் செய்யாம விடுறதோ? இனியும் நல்லாப் படிக்கோணும் என்ன?” என்றபடி வெளியே வந்து அவளை உச்சி முகர்ந்தவர், அவளுக்குப் பிடித்த பருத்தித்துரை வடையோடு தேநீரும் ஊற்றிக் கொடுத்தார்.

குழந்தைவேலு முல்லைத்தீவு டவுனில் சொந்தமாகப் புடவைக்கடை ஒன்று வைத்திருந்தார். அவர் அதற்குப் புறப்பட்டுவிட, “தம்பிய மாதிரி மேத்ஸ் எடுத்திருக்க எஞ்சினியரிங் கிடைச்சிருக்கும் என்னம்மா?” என்றார் பரமேஸ்வரி.

அவனை மாதிரியா என்று உள்ளூர அலறினாலும், “எனக்குத் தமிழ்தான் கூட விருப்பம் மாமி.” என்று சின்ன முறுவலோடு தன் விருப்பத்தைச் சொன்னாள் அன்பினி.

“அதுவும் சரிதான். உங்களுக்குப் படிப்பிச்ச மாதிரி நல்ல டீச்சர்ஸ் இருந்தாத்தான் உங்களை மாதிரிக் கெட்டிக்காரப் பிள்ளைகள் இன்னும் நிறையப்பேர் வருவினம். என்ன படிச்சாலும் பிடிச்சதைப் படிச்சு இன்னும் நல்லா வந்தாக் காணும்.” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கையில் வீட்டுக்குள் வந்தான் அபயன்.

எங்கோ தொலைவுக்குச் சென்று வந்திருக்க வேண்டும். அவன் முகத்தில் அப்பட்டமாகக் களைப்புத் தெரிந்தது. நன்றாக வியர்த்திருந்தான். அதைவிட, இந்த ஆறுமாத இடைவெளியில் தோள்கள் கொஞ்சம் விரிந்து, மீசை அழகாய் நறுக்கிவிடப்பட்டு என்று வித்தியாசமாகத் தெரிந்தான். புஜங்கள் கூட இலேசாகப் புடைக்க ஆரம்பித்திருந்தன. சில கணங்களுக்கு மேல் அவனை நேராக எதிர்கொள்ள இயலாமல் பார்வையை அகற்றிக்கொண்டாள்.

“பாத்தியா தம்பி, பிள்ளைக்கு உன்னை விட நல்ல ரிசெல்ஸ் வந்திருக்கு. ஆள் நல்ல கெட்டிக்காரி.” அவனைக் கண்டதும் சந்தோசமாகச் சொன்னார் பரமேஸ்வரி.

அதைக்கேட்டு அவளுக்கே இலேசாகச் சிரிப்பு வந்துவிடும் போலிருந்தது. அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

முதல் வேலையாக உள்ளே சென்று தண்ணீரை அள்ளி, மடக்கு மடக்கு என்று குடித்துவிட்டு வந்து, அவள் எதிரில் அமர்ந்து, “என்ன ரிசெல்ஸ்?” என்றான் அவன்.

இப்படி நேரடியாகக் கதைப்பான் என்று எதிர்பாராத போதும் பெறுபேற்றைச் சொன்னாள்.

“கெட்டிக்காரிதான்!” என்று பாராட்டினான்.

அவளுக்கு வியப்பாயிற்று. அவனுக்கு எல்லாம் இந்த நல்ல குணம் வராதே! ஆனாலும் அவன் வாயிலிருந்து வந்த அந்தப் பாராட்டு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்ததில், “தேங்க்ஸ்!” என்றாள் அவன் முகம் பார்த்து முறுவலித்தபடி.

அவளையே ஒருகணம் பார்த்தவன் எழுந்து தன் அறைக்குள் நுழைந்துகொண்டான். அவளுக்கு அவன் தோற்ற மாற்றம் பார்த்ததும் தெரிந்தது போன்று அவன் கண்களையும் அவள் கவர்ந்திருந்தாள்.

பெரும்பான்மையான பொழுதுகளில் இரட்டைப் பின்னலும், நெற்றியில் சற்றே பெரிதான கறுப்புப் பொட்டுமாக ‘நான் இன்னுமே பள்ளிக்கூடம் செல்லும் பெண்தான்’ என்று சொல்லாமல் சொல்லும் தோற்றம் மறைந்து, சற்றே மெலிந்து, இடுப்புக்கு கீழ் வரையிலும் நின்ற கூந்தல் தோள்களில் பரவிக் கிடக்க, திருத்தியமைக்கப்பட்ட புருவங்கள், பளிச்சென்று மின்னும் முகம் என்று முழுமையான பெண்ணாய் நின்ற அவளைக் கண்டு அவனிடத்தில் மெல்லிய மாற்றம்தான்.

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு பார்த்தவளைச் சும்மா விட மனம் வராமல், அறைக்குள் இருந்து அவளுக்கு அழைத்தான்.

அவள் அமர்ந்திருந்த சாப்பாட்டு மேசையின் மீதிருந்த கைப்பேசி, அவன் பெயரைச் சொல்லி ஒலியெழுப்பவும் திரும்பி அவன் அறையைப் பார்த்தாள் அன்பினி.

கைப்பேசியை ஒரு பக்கக் காதுக்குக் கொடுத்தபடி தன் அறையின் கதவு நிலையில் சாய்ந்து நின்றிருந்த அபயன், அவள் பார்க்கவும் மேசையில் இருந்த அவள் கைப்பேசியைக் கண்ணால் காட்டி, எடு என்று சைகை செய்தான்.

வேகமாக அழைப்பை ஏற்றுக் காதுக்குக் கொடுத்தவளுக்கு அவள் அருந்தி முடித்த தேநீர்க் கோப்பையையும் தட்டையும் எடுத்துக்கொண்டு போன பரமேஸ்வரி திரும்பி வந்தால் என்னாகும் என்று பயமும் இருந்தது.

“சனி ஞாயிறுல இந்தப் பக்கம் வரமாட்டீர். என்ன இண்டைக்குத் திடீர் எண்டு?” திரும்பவும் அறைக்குள் சென்று நின்றுகொண்டு வினவினான் அவன்.

“அது மாமிதான் வரச் சொன்னவா.”

“அதுக்குக் கிழமை(வார) நாளில வந்திருக்க வேண்டியதுதானே. என்ன, எனக்கு முன்னால பெருமையடிக்க நினைச்சீரோ?”

“இல்ல… அது…”

அவள் இழுத்தத்திலேயே அவளைக் கண்டுகொண்டான் அவன். “அந்தளவுக்குத் தைரியம் வந்திட்டுது! அது கூடாதே! என்ன செய்யலாம்…” என்று இழுத்தான் அவன்.

இதற்குள் அங்கே பரமேஸ்வரி திரும்பி வருவது தெரிய அவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது. வேகமாக யோசித்து, “தேங்க்ஸ்!” என்றாள், தன்னை யாரோ அழைத்து வாழ்த்துகிறார்கள் என்று அவர் நினைக்க வேண்டும் என்பதற்காக.

அவனுக்கும் புரியாமல் இல்லை. ஆனாலும் விடாமல், “என்னத்துக்கு தேங்க்ஸ்? நான் என்ன நீர் வடிவா இருக்கிறீர் எண்டு சொன்னேனா? இல்ல, நீர் ஷேப் பண்ணி இருக்கிற புருவம் ரெண்டும் நல்லா இருக்கு எண்டு சொன்னேனா? என்னத்துக்கு தேங்க்ஸ் எண்டு சொன்னனீர்?” என்றான் வேண்டும் என்றே.

என்ன இது? இதையெல்லாமா கவனித்துக் கேட்பான்? அவர்களுக்கிடையிலான எல்லைக் கோடுகளில் முதல் கோட்டை அவன் தாண்டிவிட்டதாக அறிவு அறிவுறுத்தியது.

“ஒரு ஆறு மாதம் நடுவில பாக்காம இருந்திருப்பமா? அதுக்கிடையில முடி வெட்டி, முகத்துக்கு மேக்கப் எண்டு என்ன இது ஆளே மாறிப்போய் நிக்கிறீர்?”

அவளுக்கு வெளிப்படையாகக் கைகால்கள் எல்லாம் நடுங்கும் போலிருக்க, ஒன்றும் சொல்லாமல் அழைப்பைத் துண்டித்தாள். என்னவோ தான்தான் தவறு செய்துவிட்டது போன்று பரமேஸ்வரியின் முகம் பார்க்க முடியவில்லை.

“மாமி, அது பிரென்ட். வீட்டை வந்து நிக்கிறாளாம். நான் அவசரமாப் போகோணும். இப்ப போயிற்று இன்னொரு நாளைக்கு வாறன்.” அவசரமாகச் சொன்னவள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடி வந்திருந்தாள்.

வீட்டுக்கு வந்த பிறகும் திரும்பவும் அழைப்பானோ என்கிற பயத்தில் கைப்பேசியின் சத்தத்தை முற்றாக நிறுத்திவைத்தாள். அவன் நோக்கம் வேறோ என்கிற சந்தேகம் முதன் முறையாகத் தோன்றிற்று.

அவனுக்கும் தான் செய்தது தெரியாமல் இல்லை. இரண்டு நாள்கள் கழித்து, “ஹாய்!” என்று அனுப்பிவிட்டான்.

அவளுக்கு உண்மையாகவே பெரும் பயம் பிடித்துக்கொண்டது. வேறு நோக்கத்தில்தான் தன்னை அணுக முயல்கிறானா என்று தெரியாமல் வீட்டிலும் என்னவென்று சொல்வது? கடைசியில் இந்தக் குழப்பங்கள் எதுவுமே வேண்டாம் என்று, அவனைத் தன் கைப்பேசியில் முற்றிலுமாகத் தடை செய்தாள்.

அவளின் அந்தச் செய்கை சாம்பல் படிய ஆரம்பித்திருந்த அபயனின் கோபத்தை மீண்டும் விசிறிவிட்டது போலானது. திரும்பவும் மாட்டாமளா போகப் போகிறாள் என்று எண்ணிக்கொண்டு படிப்பில் கவனத்தைச் செலுத்தினான்.

அதன் பிறகு எக்காரணத்தைக் கொண்டும் சனி ஞாயிறுகளில் அவள் அங்குப் போவதே இல்லை. இதற்குள் சுபாங்கிக்குப் பெண் குழந்தை பிறந்திருந்தாள். குழந்தையின் துடக்குக்கழிவும் வந்தது. அதுவும் சரியாக ஒரு சனிக்கிழமையாக அமைந்து போயிற்று.

error: Alert: Content selection is disabled!!