கேட்பார் இன்றிக் காதல் 25 – 2

“ப்ளீஸ் அபய்! எனக்கு ஒரே ஒருக்கா என்ர பிள்ளையைத் தூக்கோணும்.” என்றவனின் கெஞ்சலில் சுபாங்கிக்கு ஒருவித அகங்காரம் சட்டென்று முளைத்தது.

அவனை வார்த்தைகளாயே கூறு போட்டுவிடும் வேகத்துடன் வாயத் திறக்க, வேகமாக அவள் கையைப் பற்றி அடக்கினார் பரமேஸ்வரி.

“விடுங்கம்மா என்னை. நாக்கப் பிடுங்கிற மாதிரி அவனை நாலு கேள்வி கேட்டுக்கொண்டு வாறன்.” என்று திமிறியவளை விடாமல் இழுத்துக்கொண்டுபோய் அறைக்குள் விட்டார்.

“என்ன செய்யப் போறாய் பிள்ளை? அவரோட சண்டைக்குப் போகப் போறியா? எங்கட வீட்டு மானம்தான் இன்னும் போகும். அதுவும் பொம்பிளை வீட்டுக்கு முன்னால வச்சு என்ன கதைச்சாலும் எங்களுக்குத்தான் கேவலம். வெளில என்ன நடந்தாலும் நீ வரக் கூடாது. முதல் பிள்ளையைப் பார்.” தகப்பனுக்காக அழும் தளிரைக் காட்டிச் சொல்லிவிட்டுப் போனார் அவர்.

மனைவியும் மகளும் மறைந்ததும் தவித்துப் போனான் காந்தன். “மாமா ப்ளீஸ், எனக்குத் தளிரைப் பாக்கோணும்…” என்றவனின் கெஞ்சலில் பெரும் ஆத்திரம் வந்துவிட, “விடுங்கப்பா என்னை! இவனுக்கு வாங்கினது காணாது போல. இன்னும் ரெண்டு போட்டு அனுப்பினாத்தான் சரியா வருவான்!” என்று உறுமிய மகனைத் தடுத்துப் பிடித்த குழந்தைவேலுக்கு இதை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவே இல்லை.

உடனேயே திருநாவுக்கரசுக்கு அழைத்து, “எங்களை நிம்மதியா இருக்க விடவே மாட்டீங்களா?” என்றார் சீற்றத்துடன்.

திருநாவுக்கரசு திகைத்துப்போனார். “என்ன நடந்தது? நான் ஒண்டும் செய்யேல்லையே!” என்றார் ஒன்றும் விளங்காமல்.

“நீங்க இல்ல, உங்கட மகன். உங்களிட்ட முறையாச் சொல்லிப்போட்டுத்தானே எங்கட மகனுக்கு வேற இடத்தில சம்மந்தம் பேசினனாங்க. இப்ப வந்து நிண்டு சண்டை பிடிச்சுக் கேவலப்படுத்திறான். அவனால நாங்க பட்டதெல்லாம் போதாதா?” என்றதும் கொதித்துவிட்டார் திருநாவுக்கரசு.

“இந்தா, இப்ப நான் வாறன்!” அப்போதுதான் சாப்பாட்டில் கையை வைத்தவர் உதறிக்கொண்டு எழுந்தார்.

அவர் பேச்சிலேயே அங்கே நடப்பதை ஊகித்த அன்பினி, “அப்பா, நானும் வாறன்.” என்றாள் அவசரமாய்.

“இல்லையம்மா. வேண்டாம். அவனால நீங்களும் அங்க வந்து பரிசுகெட(அவமானப்பட) வேண்டாம்.” விறுவிறு என்று பைக் நிறுத்தியிருந்த இடம் நோக்கி நடந்தவாறே சொன்னார் அவர்.

கணவர் இருக்கிற கோபத்தில் மகனுக்குக் கையை நீட்டி, ஏதாவது அசம்பாவிதமாக நடந்துவிடுமோ என்று பயந்த இந்துமதி, “சும்மா ஒரு துணைக்குக் கூட்டிக்கொண்டு போங்கோப்பா.” என்றார் கண்ணீருடன்.

“எனக்கு என்னத்துக்குத் துணை…” என்று ஆரம்பித்தவர் மகள், மனைவியின் பயந்த முகங்களைக் கண்டுவிட்டு, “சரி வாங்கோ!” என்று அவளோடு புறப்பட்டார்.

இங்கே குழந்தைவேலு தன் தகப்பனிடம் சொன்னதைக் கேட்ட காந்தன், “பெரிய பிழை செய்றாய் அபய். உனக்கு விளங்கேல்ல. நீ இந்தப் பிள்ளையின்ர கழுத்தில தாலி கட்டின பிறகு, நீ நினைச்சாக்கூட எதையும் மாத்தேலாது. இதச் சொல்லுறதுக்கு எனக்குத் தகுதி இல்லைதான். ஆனா, நான் சொல்லுறதைக் கேளு ப்ளீஸ். இத நான் உனக்காகவும்தான் சொல்லுறன். உன்னால உன்னையே மன்னிக்கேலாம இருக்கும் அபய். ப்ளீஸடா, இந்தக் கலியாணம் வேண்டாம்.” என்று மன்றாடினான்.

“வேண்டாமா? இந்தக் கலியாணம் கட்டாயம் நடக்கும். உன்னை அழ வைக்கிறதுக்காகவே நடக்கும்.” என்றான் அபயன் ஆத்திரத்துடன்.

இனியும் அவனோடு கதைக்க முடியாது என்று தெரிந்துவிட, “சுபா! வெளில வா! இதுக்கெல்லாம் நீதான் காரணம் எண்டு எனக்குத் தெரியும். நீ சொல்லாம அவன் இந்தக் கலியாணத்துக்கு ரெடியாகி இருக்க மாட்டான். வெளில வா முதல்!” என்றான் சத்தமாக.

அவளும் கோபத்தோடு எழுந்துகொள்ள பரமேஸ்வரி விடவில்லை. வீட்டுக்குள்ளேயே பிடித்து வைத்துக்கொண்டார்.

“தளிர் என்ர பிள்ளை தானேடி. அவளை வெறுப்பியா நீ? இல்லை, அவளை வேண்டாம் எண்டு ஒதுக்கி வைப்பியா? இல்லைதானே. பிறகு எப்பிடி அன்புவை மட்டும் ஒதுக்கிறாய்? சுபா!” என்று கத்தினான்.

குழந்தைவேலுக்கு மானமே போனது. “உன்னைக் கும்பிடுறன் தம்பி. தயவு செய்து எங்களைக் கேவலப்படுத்தாம இங்க இருந்து போ!” என்று அவனிடம் கெஞ்சினார்.

“மாமா, நான் போறன். ஆனா, உங்கட மகள் செய்றது கொஞ்சமும் நியாயம் இல்லை. அவள் அன்புவை மட்டும் தண்டிக்கேல்ல. உங்கட மகனையும் சேர்த்துத்தான் தண்டிக்கிறாள். இவனால அவளை மறந்து இன்னொருத்தியோட வாழவே ஏலாது. அத மறந்துடாதீங்க!” என்றுவிட்டுத் திரும்பியவன், அங்கே வேகமாய் வந்து நின்ற தந்தையைக் கண்டதும் அப்படியே நின்றுவிட்டான்.

வந்ததும் வராததுமாகத் தன் ஆத்திரத்தை எல்லாம் ஒன்று திரட்டி, பளார் என்று அவன் கன்னத்தில் ஒன்று போட்டார் திருநாவுக்கரசு.

“அப்பா…” தடுமாறி, அவன் வந்த வாகனத்திலேயே மோதுண்டு நின்றான் காந்தன்.

“உன்னை ஆரு இஞ்ச எல்லாம் வரச் சொன்னது? எங்களைக் கேவலப்படுத்தினது உனக்குக் காணாதா?” ஆத்திர மிகுதியில் சீறினார் திருநாவுக்கரசு.

“அப்பா! சொறி அப்பா.”

“சீ! என்னை அப்பிடிக் கூப்பிடாத! முதல் போ நீ இஞ்ச இருந்து.”

“அப்பா ப்ளீஸ், இது அன்புன்ர வாழ்க்கை. என்னில இருக்கிற கோபத்தில நீங்களும் பிழையா நடந்திடாதீங்க பிளீஸ்.”

“அவள் என்ர பிள்ளை. பெத்தவன் எனக்கு அவளின்ர வாழ்க்கையப் பாக்கத் தெரியும். அவளைப் பற்றி நீ கதைக்காத!”

அதற்குமேல் தந்தையோடு வாதாட முடியாமல், “இது உன்ர வாழ்க்கை அன்பு. கதைக்கிற இடத்தில கதைச்சிடு ப்ளீஸ். இஞ்ச இருக்கிறவேக்கு வேணுமெண்டா எதுவும் தெரியாம இருக்கலாம். ஆனா நீயும் அபயனும் விரும்பினது எனக்குத் தெரியும். தயவு செய்து அத எல்லாரிட்டையும் சொல்லு.” என்று தங்கையிடம் கெஞ்சலாய்ச் சொன்னவன் அதற்குமேல் அங்கு நிற்கவில்லை. புறப்பட்டிருந்தான்.

என்னவோ புயலடித்து ஓய்ந்த நிலை. கடைசியாக அவன் சொல்லிவிட்டுப் போனது அங்கிருந்த எல்லோரையுமே பெரும் அதிர்வாய்த் தாக்கியிருந்தது.

திருநாவுக்கரசுவும் அதைக் கொஞ்சமும் எதிர்பாக்கவில்லை. ஆனாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல், “தயவுசெய்து திரும்பவும் என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கோ. அவன் இப்பிடி வந்து குழப்பம் செய்வான் எண்டு நான் எதிர்பாக்கவே இல்ல. இனி வரமாட்டான்.” என்று பொதுவாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

“ஒரு நிமிசம் அங்கிள்.” என்று அவரை வேகமாகத் தடுத்தான், அந்தப் பெண்ணின் தமையன்.

திரும்பிப் பார்த்தவரிடம், “இங்க என்ன நடக்குது எண்டு எனக்கு ஒண்டும் விளங்கேல்ல. ஆனா, என்ர தங்கச்சின்ர வாழ்க்கையும் இதுக்க இருக்கிறதால கேக்கிறன். உங்கட மகன் உங்கட மகளும் இவரும் விரும்பினதா சொன்னவர். அது உண்மையா? எனக்கு இந்தக் கேள்விக்குப் பதில் தெரியோணும்.” என்றான் தெளிவாக.

“அப்பிடி எல்லாம் இல்லை தம்பி. கலியாணம் பேசினது உண்மை. அவன் செய்த வேலையால அது எல்லாம் குழம்பிப் போயிற்று. இவேயும் இனி அந்தக் கலியாணம் நடக்காது எண்டு எங்களிட்ட முறையாச் சொல்லிப்போட்டுத்தான் உங்கட வீட்டில சம்மந்தம் பேசினவே. அவ்வளவுதான். மற்றும்படி அவன் சொன்னதெல்லாம் உண்மை இல்ல.” தம்மால் அபயனின் திருமணம் கேள்விக்குறியாகிவிட வேண்டாம் என்றெண்ணிச் சொன்னார் திருநாவுக்கரசு.

“அத உங்கட மகள் சொல்லட்டும் அங்கிள்.” என்றான் அவன் உடனேயே.

“சொறி சிஸ், உங்களச் சங்கடப்படுத்திறனா எண்டு எனக்குத் தெரியேல்ல. ஆனா எனக்கு உண்மை வேணும். அதுவும் உங்கட வாயால.” என்றான் அவன் அன்பினியிடம் நேரடியாக.

அவ்வளவு நேரமாக அபயனைப் பார்த்துவிடவே கூடாது என்கிற பிடிவாதத்துடன் நின்றிருந்த அன்பினி, திரும்பி அபயனைப் பார்த்தாள்.

கோபத்தில் சிவந்த முகமும் இறுகிய தோற்றமுமாக அவளையேதான் பார்த்து நின்றிருந்தான் அவன். தளராத அந்தப் பார்வையே அவளைக் கடந்து செல்வதற்கு அவன் தயார் என்று சொல்லிற்று.

விழிகள் நிறைந்தாலும் அவள் உதட்டோரத்தில் மெலிதாய் ஒரு முறுவல். “இல்ல! பேசின கலியாணத்தைத் தவிர வேற எதுவும் எங்களுக்க இல்ல. எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்ல.” விழியசையாது அவனையே பார்த்துச் சொல்லிவிட்டுத் திரும்பியபோது, இத்தனை நாள்களாக அவள் கழுத்தில் கிடந்த செயின், இழுத்து அறுக்கப்பட்டிருந்தது.

error: Alert: Content selection is disabled!!