அத்தியாயம் 28
அன்று, தான் அவ்வளவு கேட்டும் ஒரு வார்த்தை கூடச் சொல்லாத அபயன், தந்தை கேட்டபோது நேசித்தோம் என்று சொன்னதே சுபாங்கிக்கு மிகப்பெரிய அடி.
இதில், அவள் அணிந்திருந்த செயினை இவன் எடுத்து வைத்திருக்கிறான் என்று பரமேஸ்வரி மூலம் அறிந்துகொண்டபோது, முற்றிலுமாகத் தளர்ந்து போனாள்.
மனம் பொறுக்காமல், “உனக்கு அவள்தான் வேணுமெண்டா அண்டைக்கு நான் கேக்கேக்கையே(கேட்கும்போதே) சொல்லி இருக்கலாமே தம்பி?” என்றாள் அபயனிடம்.
அவனுக்கோ இன்னும் என்ன சொல்லி அவளுக்கு விளங்க வைப்பது என்று தெரியாத நிலை.
ஒரு நெடிய மூச்சுடன், “நான் எப்ப அவள்தான் வேணும் எண்டு சொன்னனான்? நாங்க ரெண்டு பேரும் விரும்பினனாங்களா எண்டு அப்பா கேட்டார், ஓம் எண்டு சொன்னன். அவளை மறந்திட்டியா எண்டு அம்மா கேட்டா, இல்லை எண்டு சொன்னன். அப்பிடி எப்பிடி அக்கா வருசக்கணக்காப் பழகின ஒருத்திய மறக்கிறது? நீங்க சொல்லுங்க, உங்களுக்கு இவ்வளவு செய்த அந்த ஆளை நீங்க மறந்திட்டீங்களா?” என்று அவளிடமே திருப்பிக் கேட்டான் அவன்.
உள்ளத்தில் உண்டான அதிர்வுடன் அவள் பார்க்க, “பிறகு எப்பிடி அவளை நான் மறக்கிறது? முதல் அவள் எனக்கு என்ன செய்தவள்? சொல்லப்போனா அவளுக்கு நான்தான் நம்பிக்கைத் துரோகம் செய்திருக்கிறன். அது குத்தாதா என்னை?” என்று கேட்கவும் அவள் கண்களிலிருந்து கண்ணீர்தான் வழிந்தது.
“இனி என்ன செய்யப் போறாய்?”
“பயப்பிடாதீங்க. எப்பிடியுமே அவளை நான் கட்டப் போறேல்ல. என்ன இருந்தாலும் என்ர அக்காவை அழ வச்சிட்டு என்னால என்ர வாழ்க்கையை மட்டும் பாக்கேலாது. அதுக்கு நான் அவளுக்குத் துரோகியாவே இருந்திட்டுப் போறன். தயவு செய்து நீங்களும் பொம்பிளை பாக்கிறன் எண்டு வெளிக்கிடாதீங்க. என்னை என்ர பாட்டுக்கு விடுங்க.” என்றுவிட்டுப் போனான் அவன்.
பரமேஸ்வரி அம்மாவுக்குக் கண்ணீரே வந்திருந்தது. மகள் வாழ்க்கைதான் இப்படியாகிற்று என்று பார்த்தால் மகன் காலத்துக்கும் தனியாகவே இருந்துவிடுவானோ என்கிற பயம் பிடித்துக்கொண்டது.
சுபாங்கிக்கும் என்னவோ அவனுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழவிடாமல் தான் நடுவில் நிற்பதுபோல் தோன்றிவிடவும் ஒடுங்கிப்போனாள். மெல்ல மெல்லத் தான் உண்டு, தன் வேலைகள் உண்டு என்று இருக்க முயன்றாள்.
தமக்கை தன்னிடமிருந்து ஒதுங்குகிறாள் என்று விளங்கினாலும் முடிந்தவரையில் அவளுக்கு இதமாய் நடக்க முயன்றான் அபயன்.
*****
அன்றைக்குப் பிறகு என்ன முயன்றும் மகளைப் பாராமல் காந்தனால் இருக்க முடியவில்லை. என்ன செய்வது என்று யோசித்து யோசித்துப் பார்த்தவன் ஒரு கட்டத்துக்குமேல் முடியாமல், சுபாங்கி வேலை பார்க்கும் மாவட்டச் செயலகத்துக்கே வந்து அவளைச் சந்தித்தான்.
வாசலில் காத்திருந்தவனைக் கண்டதுமே அவள் தேகமெல்லாம் பற்றி எரிய ஆரம்பித்தது. கோபத்தில் முகம் சிவந்துவிட, பார்வையாலேயே அவனை எரித்துவிட்டுப் போக முயல, அவன் விடவில்லை. எதிரில் வந்து நின்று மறித்தான்.
“எனக்கு உன்னோட கதைக்கோணும் சுபா.”
அவன் சொன்னது காதிலேயே விழாதது போன்று அவள் நடக்க, “எனக்குத் தளிரைப் பாக்கோணும் சுபா. அண்டுல(அன்றில்) இருந்து கண்ணுக்கையே நிக்கிறாள். ப்ளீஸ்!” என்று கெஞ்சினான்.
அவளோ கொதித்துப்போனாள். “தளிரைப் பாக்கோணுமா? அவ்வளவு பாசம்? எவளோ ஒருத்தியோட கூத்தடிக்கேக்க எங்க போனது இந்தப் பாசம்? வெக்கமா இல்லையா உனக்கு? கட்டின என்னைத்தான் யோசிக்கேல்ல. பெத்த பிள்ளையைக் கூட மறக்க எப்பிடி மனம் வந்தது? எனக்கு உன்ர முகத்திலேயே காறித் துப்போணும் மாதிரி இருக்கு. நீயெல்லாம்… தயவு செய்து என்ர கண்ணுக்கு முன்னால வராத. என்னைக் கொஞ்சமாவது நிம்மதியா இருக்க விடு!” என்றுவிட்டு அவள் நடக்க, முகம் கறுக்க அப்படியே நின்றுவிட்டான் காந்தன்.
உண்மை சுட்டது. அதற்காக மகளை விட முடியாதே! “சுபா, ப்ளீஸ் நில்லு!” இன்னுமே கட்டுப் போட்டிருக்கும் காலோடு அவனால் அவள் வேகத்துக்கு நடக்க முடியவில்லை. அதில் சத்தமாய் அழைத்தான்.
அதில் ஒரு சிலர் திரும்பிப் பார்த்தனர். சுபாவுக்கு இருந்த பொறுமை எல்லாம் பறந்து போயிற்று.
போன வேகத்திலேயே திரும்பி வந்து, “இங்க பார்! எனக்கு எரிச்சலைக் கிளப்பாம மரியாதையாப் போயிடு! என்னால போலீஸ், கேஸ் எண்டு உன்ன நாறடிக்க ஏலும். என்ன, உன்னோட சேந்து நானும் என்ர குடும்பமும் நாறோணும். அதால மட்டும்தான் வாய மூடிக்கொண்டு இருக்கிறன். அதுக்காக நீ ஆடுற ஆட்டத்தை எல்லாம் பாத்துக்கொண்டு இருப்பன் எண்டு நினைக்காத. இதுதான் கடைசி. இதுக்கு மேலயும் எனக்கு முன்னால வந்து நிண்டாய் எண்டு வை, உன்ர மொத்தக் குடும்பத்தையும் சேர்த்து வச்சுக் கேவலப்படுத்தி விட்டுடுவன்!” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டுப் போகவும் மொத்தமாய்ச் சோர்ந்து போனான் காந்தன்.
*****
ஒரு வழியாகக் கடைசிப் பரீட்சைகளை எல்லாம் எழுதி முடித்துவிட்டு, மொத்தமாக முல்லைத்தீவுக்கே வந்து சேர்ந்திருந்தாள் அன்பினி. திருநாவுக்கரசும் இந்துமதியும் மிகுந்த ஆறுதலாக உணர்ந்தனர்.
கூடவே, திருநாவுக்கரசு என்ன சொல்லியும் கேட்காமல் அவருக்கு உதவியாகக் கடைக்குச் சென்று வரவும் ஆரம்பித்தாள்.
“இங்க எல்லாம் ஏன் பிள்ளை? உங்களுக்குப் படிப்பிக்கத்தானே விருப்பம். அதுக்கு என்ன வழி எண்டு பாருங்கோவன்.” என்று அவர் சொன்னதை அவள் காதில் விழுத்தவில்லை.
சும்மாவே வயதுபோன காலத்தில் யாரும் இல்லாமல் தனித்துப்போயிருக்கிறார்கள். இதில் காந்தனால் உண்டான காயங்கள் வேறு அவர்களுக்கு நிறைய. அவள் ஆசிரியையாகப் பணியில் அமர்ந்தால் நிச்சயம் முதல் மூன்று வருடங்களுக்கு எங்காவது கிராமப்புறமாக, அதுவும் பெரும்பாலும் வேறு இடங்களாகத்தான் தருவார்கள்.
அப்படி அவளும் அங்குப் போய்விட்டால் அவர்களின் நிலை என்ன? இனி அவள்தானே அவர்களுக்குப் பொறுப்பு! அதைவிட, அவர்களோடே வந்து இருப்பது அவளுக்கும் ஆறுதல் என்பதில் அவள் அசையவில்லை.
*****
இரண்டு நாள்கள் கொழும்பு சென்று வந்ததில் அபயனின் கையை விட்டு இறங்கவே மாட்டேன் என்று நின்றாள் தளிர். அதில் அவளைக் கூட்டிக்கொண்டு டவுனுக்கு வந்திருந்தான்.
அவள் திடீரென்று, “அத்தை!” என்று கத்தவும் வேகமாகத் திரும்பிப் பார்த்தான்.
அன்பினியும் அந்தக் குரலில் திரும்பினாள். அங்கே அபயனைக் கண்டது ஒருவித அதிர்ச்சி என்றால், தளிரைப் பார்த்ததும் அழுகை வந்தது.
ஓடிப்போய் அவளை அள்ளியணைத்துக் கொஞ்ச வேண்டும் போலிருந்தது. அவன் நிற்கிறானே! முதலில் தளிரை அவளிடம் தருவானா? அவன் முன்னால் நிற்கவும் பிடிக்கவில்லை. பழைய நினைவுகள் வந்து சுழற்றியடிக்க முயன்றன.
தளிர் வேறு, “அத்தை அத்தை அத்தை…” என்று இவளிடம் வரத் துடித்தாள்.
என்ன செய்வது என்று தெரியாது அவள் தடுமாற, “உங்கட அத்தை உங்களைத் தூக்க மாட்டாளாமா?” என்று, பார்வை இவளிடம் இருக்கத் தளிரிடம் கேட்டான் அவன்.
அப்படியானால் தூக்கச் சொல்கிறானா என்ன? ஒருவிதத் துடிப்புடன் அவர்களை நெருங்க, அவனும் தளிரை அவளிடம் நீட்டினான்.
தாவி வந்த தளிரினி, இவள் கழுத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டு, “அத்த.” என்று அழுதாள்.
அவளின் அந்த அணைப்பிலும் தவிப்பிலும் இவளும் உடைந்தாள். அவள் முகம் முழுக்க முத்தமிட்டாள். கண்ணீர் கன்னத்தை நனைத்தது.
அவள் இங்கே வீட்டில் இருந்தால் அவர்கள் இருவரும்தான் ஒன்றாக உறங்குவதே. அப்படி இருந்த நிலை மாறி, இன்று யாரோவாகி நிற்கிறாள். அவளைக் கொஞ்சுவதற்குக் கூட இன்னொருவரின் அனுமதி வேண்டியிருக்கிறது.
“நாங்க ரோட்டுல நிக்கிறம்!” பார்வை எங்கோ இருக்க அதட்டினான் அவன்.
அப்போதுதான் அவளும் சுயம் வரப்பெற்றாள். வேகமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டு தளிருக்கும் துடைத்துவிட்டாள்.
“எங்கட செல்லக்குட்டி வளந்திட்டாவே. நேசரிக்கு போறனீங்களா?” அவளிடம் கதை கொடுத்தபடி அங்கே இருந்த பெட்டிக் கடைக்குச் சென்று, அவர்கள் இருவருக்கும் பிடித்த ஜெல்லி வாங்கிக் கொடுத்தாள்.
அவள் அதைச் சாப்பிடுவதைப் பாசத்தோடு பார்த்தபடி அவள் கேசத்தைக் கோதிவிட்டாள். கன்னம் வருடி, முத்தமிட்டுக் கொஞ்சினாள். என்ன செய்தும் மனத்தின் தவிப்பு அடங்கவே இல்லை. இனி எப்போது பார்க்கக் கிடைக்குமோ என்று நினைக்கையிலேயே அழுகை வந்தது.
வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போக ஆசையாக இருந்தது. அம்மா பார்த்தால் நிச்சயம் கட்டிக்கொண்டு அழுவார். ஆனால்… திரும்பி அவனைப் பார்த்தாள். நிறுத்தியிருந்த பைக்கில் சாய்ந்து அமர்ந்திருந்தவன் கைகளைக் கட்டிக்கொண்டு இவளைத்தான் பார்த்திருந்தான்.
அவன், அவனோடான நாள்கள், அதன் பிறகு அவன் தந்த காயம், கடைசியில் கசக்கிய பேப்பராக அவன் அவளைச் சுழற்றி எறிந்தது எல்லாம் நினைவில் வந்தன. நெடிய மூச்சு ஒன்றை இழுத்துத் தன்னைச் சமன் செய்தவள், அவன் ஒரு வார்த்தை சொல்லும்படி நடந்துவிடக் கூடாது என்கிற முடிவுடன், பேசாமல் சென்று தளிரை அவனிடம் நீட்டினாள்.
சின்னவளுக்கு என்ன விளங்கிற்றோ. “அத்தை! அப்பாட்ட போவம். அப்பா அப்பா…” என்று மீண்டும் அவள் கழுத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.
இதை எதிர்பாராத அன்பினி என்ன செய்வது என்று தெரியாது அவனைத்தான் பார்த்தாள். தாடை இறுக, “இன்னொரு நாளைக்கு உங்கட அத்தையைப் பார்க்க வரலாம் தளிர். வாங்கோ!” என்று அவளை வாங்க முயன்றான் அபயன்.
அப்போதும் தளிர் மறுக்க, ஒரு நெடிய மூச்சை இழுத்துவிட்ட அபயன், “என்னோட வா!” என்றுவிட்டு இரண்டு கடைகள் தள்ளி இருந்த கூல் பாருக்கு நடந்தான்.
மறுக்க வழியில்லாமல் பின்னால் சென்றாள் அன்பினி.
அங்கே, ஒரு மேசையில் எதிரெதிர் இருக்கையில் அமர்ந்துகொண்டனர். தனக்கானதோடு சேர்த்து அவளைக் கேளாமலேயே அவளுக்குப் பிடித்த ஐஸ்கிறீமுடன் கூடிய பழ சாலட் கலவைக்குச் சொன்னான் அவன்.
இலேசாக முகம் மாறப் பார்த்தாலும் காட்டிக்கொள்ளவில்லை அன்பினி. தளிரைக் கவனிப்பதுபோல் இருந்துகொண்டாள்.
இந்தச் சந்திப்பை அவனும் எதிர்பார்க்கவில்லை. என்ன பேசுவது என்று தெரியவுமில்லை. அவள் வேறு முற்றிலுமாக அவனைப் பார்ப்பதைத் தவிர்க்கவும் அவன் பார்வை சுதந்திரமாக அவளில் நிலைத்தது.
நன்றாகவே மெலிந்திருந்தாள். முகம் வாடியிருந்தது. அழுததில் சிவந்து, பார்க்க மனத்தை என்னவோ செய்தாள்.
இருவருக்குமான ஐஸும் வந்தது. தன்னுடையதில் இருந்தே தளிருக்கும் கொடுக்கலாம் என்று பார்க்க, சின்னவள் அழுததாலோ என்னவோ சோர்ந்து உறங்க ஆரம்பித்திருந்தாள்.
ஐஸை விட்டுவிட்டு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து, அவளைத் தன் மார்பில் சாய்த்து, தலையை மெதுவாக வருடிக்கொடுக்க ஆரம்பித்தாள். அபயனுக்குச் சில நொடிகளுக்கு அவளிடமிருந்து பார்வையை அகற்ற முடியாமல் போயிற்று.
“எக்ஸாம்ஸ் முடிஞ்சுதா?” முடிந்திருக்கும் என்று தெரிந்தே கேட்டான்.
அவன் பேசவே இல்லை என்பதுபோல் அமர்ந்திருந்தாள் அவள்.
“அவா படுத்திட்டா. நீ அவாவை என்னட்டத் தந்திட்டு ஐஸ குடி!” என்றான் அவன்.
“இல்ல. என்னட்டையே இருக்கட்டும்.” அவனைப் பாராது சொன்னவள் பெயருக்கு இரண்டு வாய் அருந்திவிட்டு, “போதும்.” என்றபடி அவளின் ஐஸுக்கான பணத்தை எடுத்து மேசையில் வைத்துவிட்டு எழுந்தாள்.
அவளை முறைத்தான் அபயன். அவன் பார்வையே பணத்தை எடுத்து உள்ளே வை என்று அதட்டியது. அவள் அசையவில்லை. அவளை ஒரு பார்வை பார்த்தவன் அவள் பக்கம் வந்து, தானே பணத்தை எடுத்து அவளின் கைப்பைக்குள் திணித்துவிட்டான்.
அதிர்ந்து நின்றவளை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போய்
அங்கே கவுண்டரில் பணத்தைச் செலுத்திவிட்டு வெளியே நடந்தான்.
தன்னைச் சமாளித்துக்கொண்டு அவளும் தளிரோடு வெளியே வந்தபோது, புறப்படுவதற்கு ஏதுவாக பைக்கை திருப்பி, ஸ்டார்ட் செய்து வைத்துக்கொண்டு காத்திருந்தான் அவன்.
உறங்கிவிட்ட குழந்தையோடு எப்படிப் போவான் என்கிற கேள்வி எழுந்தாலும் தளிரை அவனிடம் கவனமாகக் கொடுத்தாள்
பக்குவமாக வாங்கி, உறக்கம் கெட்டுவிடாதபடிக்கு ஒரு பக்கத் தோளில் அவளைக் கிடத்தி, அந்தக் கையாலேயே அவளைப் பிடித்துக்கொண்டவன், மற்றக் கையால் பைக்கை நிதானமாகச் செலுத்தினான்.
அவன் மறையும்வரை பார்த்திருந்துவிட்டுப் புறப்பட்டவளுக்கு அவளின் கட்டுப்பாட்டையும் தாண்டி, அவன் பார்த்த பார்வைகள் தொந்தரவு செய்தன.
இங்கே கவனமாக வீடு வந்து சேர்ந்த அபயன், உறங்கிவிட்ட தளிரைச் சுபாங்கியிடம் கொடுக்கையில் ஏதோ கீழே விழுந்தது. என்ன என்று பார்த்தான். அங்கே ஐஸ் கடையில் வைத்து அன்பினி தந்து, அவன் திருப்பிக்கொடுத்த அதே பணத்தாள் அவனைப் பார்த்துச் சிரித்தது.

