கேட்பார் இன்றிக் காதல் – 30

அத்தியாயம் 30

குழந்தைவேலுவைப் பார்க்க நேராக அவர் கடைக்கே வந்திருந்தார் திருநாவுக்கரசு. இதைக் கொஞ்சமும் எதிர்பாராத குழந்தைவேலு, ‘நீ யார் என் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க’ என்று கேட்டு, ஏடாகூடமாக எதையாவது சொல்லப் போகிறாரோ என்றுதான் நினைத்தார்.

அதற்கு மாறாக, “நான் வந்ததால உங்களுக்குச் சங்கடம் ஒண்டும் இல்லையே?” என்று நயமாகவே வினவினார் திருநாவுக்கரசு.

சட்டென்று ஆசுவாசமாகியபடி, “சேச்சே! அப்பிடி எல்லாம் இல்ல. திடீரெண்டு நீங்க வரவும் என்னவோ ஏதோ எண்டு கொஞ்சம் பயந்திட்டன். அவ்வளவுதான்.” என்று சமாளித்தார்.

“அது… நீங்க சொன்னனீங்களாம் எண்டு சம்மந்தம் பேச வந்தவே. கோபதாபம் இல்லாம பிள்ளையைப் பற்றி நல்ல மாதிரிச் சொன்னனீங்களாம் எண்டும் சொன்னவே. சந்தோசமா இருந்தது. அதுதான் உங்களைப் பாத்து, கதைச்சிட்டுப் போவம் எண்டு வந்தனான்.”

நெருங்கிய உறவுகளே என்னென்னவோ கதைத்துக்கொண்டிருக்கையில் அவர் தன் மகளைப் பற்றி நல்லதாகச் சொன்னதில் மிகவுமே நெகிழ்ந்திருந்தார் திருநாவுக்கரசு.

“அன்பு உண்மையாவே அருமையான பிள்ளைதான். காந்தனில எனக்குக் கோவம் இருந்தாலும் அதை அன்புட்டக் காட்டுறதில என்ன அர்த்தம் இருக்குச் சொல்லுங்க?”

சிறு புன்னகையுடன் அவரிடமே குழந்தைவேலு கேட்டபோது, வார்த்தைகள் கைகொடுக்கும் என்கிற நம்பிக்கை இல்லாமல், விழிகள் பனிக்க ஆம் என்பதுபோல் தலையை அசைத்தார் திருநாவுக்கரசு.

குழந்தைவேலுவுக்கும் அந்தத் தகப்பனின் மன உணர்வுகளை விளங்கிக்கொள்ள முடிந்ததில், “அன்பு என்னவாம்?” என்று விசாரித்தார்.

“காரணம் சரியாச் சொல்லுறா இல்ல. ஆனா இப்போதைக்கு வேண்டாம் எண்டு மட்டும்தான் சொல்லுறா. கொஞ்சக் காலத்துக்கு எங்களுக்கு மகளாவே இருக்கப் போறாவாம்.”

அதன் காரணம் என்னவாக இருக்கும் என்று குழந்தைவேலுவாலேயே ஊகிக்க முடிந்ததில், உள்ளுக்குள் சங்கடப்பட்டார். “என்ன செய்யலாம் எண்டு இருக்கிறீங்க?” என்று கேட்டு, பந்தை அவர் பக்கமே தள்ளிவிட்டார்.

“அவே நல்ல குடும்பம் எண்டா எனக்குத் தவற விட மனமில்லை. நீங்க சொன்ன மாதிரிக் காந்தன் செய்த வேலைக்குப் பிள்ளை பொறுப்பாக மாட்டாதான். எண்டாலும் எல்லாரும் அப்பிடியே நினைப்பினமா தெரியாது. அது பிள்ளைக்கு எண்டைக்குமே ஒரு கரும்புள்ளிதான். அதையெல்லாம் தெரிஞ்சு அவே வரேக்க எனக்கு விட விருப்பம் இல்ல. அதான் அவே எப்பிடி, நல்ல குடும்பமா எண்டு உங்களிட்டக் கேக்க நினைச்சன். நல்லம் எண்டா பிள்ளையை எப்பிடியாவது ஓம் எண்டு சொல்ல வச்சு, கட்டி வைக்கத்தான் இருக்கிறன்.”

அதுதான் நல்ல முடிவு என்று குழந்தைவேலுவுக்குமே தோன்றிற்று. காந்தனின் முறைகேடான நடத்தைக்கு எந்த விதத்திலும் சுபாங்கி காரணமே இல்லை.

ஆனாலும் கூட, இவள் சரியில்லை போலும், இவள் அவனை நன்றாகக் கவனித்திருக்க அவன் ஏன் வேறு தேடப் போகிறான், இவளில் என்ன பிரச்சனையோ என்கிற பேச்சுகள் இப்போதெல்லாம் மெல்ல மெல்ல அவர்களின் காதுகளுக்கு எட்ட ஆரம்பித்திருந்தன.

அதுவும் முக்கியமாக இவள் அவனோடு சென்று வாழாமல், வேலைதான் முக்கியம் என்று முல்லைத்தீவிலேயே இருந்துவிட்டதால்தான் அவன் அங்கே வேறு தேடிவிட்டான் என்று, அவன் தவறியதற்கும் அவளையே காரணமாக்குகையில், அவனோடு கூடப்பிறந்தவள் அவனைப் போல்தான் இருப்பாள் என்கிற பேச்சு அன்பினிக்கு வராமல் போகாது.

“எனக்குத் தெரிஞ்சவரைக்கும் அவேயும் நல்ல குடும்பம்தான். நிறையக் காலமாத் தகப்பனைப் பழக்கம் எனக்கு. எண்டாலும் பெடியனைப் பற்றி நானும் கொஞ்சம் விசாரிச்சுப்போட்டுச் சொல்லுறன்.”

திருநாவுக்கரசும் அவரால் முடிந்த வழிகளில் எல்லாம் அவனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். அவர் பெற்று வளர்த்த மகனே தடம் மாறி நிற்கையில் யார் என்ன சொன்னாலும் திருப்தியுற முடியாமல், இன்னுமின்னும் அவனைப் பற்றி அறிய முனைந்தார்.

*****

இந்த ஒரு வாரமாகவே நிலானியின் முகம் சரியில்லை. குழந்தை பிறந்துவிடுமோ என்கிற பயம் காந்தனுக்கு வந்திருந்தது. முதல் குழந்தை, துணைக்கு யாருமே இல்லை, எப்படித் தனியாகச் சமாளிப்பாள்? தன்னால் இந்த நிலைக்கு ஆளானவளை அப்படியே விட முடியாமல், இங்கேயே இருந்துவிடவா என்று அவன் கேட்டபோது ஒரேயடியாக மறுத்திருந்தாள் அவள்.

ஏற்கனவே வயிற்றில் இருக்கும் குழந்தையின் தந்தை யார் என்கிற கேள்வி அவளைத் துரத்த ஆரம்பித்திருந்தது. அவள் நடத்தை சரியில்லை என்றுதான் அவளின் அன்னையும் தம்பியும் அவளை விட்டுவிட்டுப் போய்விட்டார்களாம் என்கிற பேச்சும் வந்தாயிற்று.

இவன் வந்து போவது வேறு பலர் பார்வையை உறுத்த ஆரம்பித்திருந்தது. அன்று அவளிடமே, “அடிக்கடி வந்து போற அந்தத் தம்பியோ பிள்ளைக்கு அப்பா?” என்று தண்ணீர் அள்ளப் போனபோது ஒரு அம்மா கேட்டிருந்தார்.

அவமானத்தில் முகம் கறுத்துப் போனாலும், “ஐயோ இல்ல, அவரை ஏற்கனவே காணிப் பிரச்சினைல தெரியும். இப்ப அம்மா, தம்பியத் தேடுற விசயமா நான்தான் உதவி கேட்டனான். துணைக்கு ஒருத்தரும் இல்லாம, வயித்தில பிள்ளையோட அலையிறன் எண்டுற கரிசனைல உதவி செய்றவர இப்பிடிப் கதைக்காதீங்கோ.” என்று, ஏதோ சொல்லிச் சமாளித்துவிட்டு வந்திருந்தாள்.

இதில், இவன் வந்து தங்கினால் வேறு வினையே வேண்டாம்.

ஆனால், நாள் நெருங்க நெருங்க வயிற்றில் சின்னதாய் மாறுதல் தெரிந்தாலும் பயம் வந்தது. பிள்ளைப்பேற்று வலி எப்படி இருக்கும், எப்போது வைத்தியசாலைக்குப் போக வேண்டும் என்று ஒன்றும் புரியமாட்டேன் என்றது.

என்னென்ன ஆயத்தங்கள் செய்து வைக்க வேண்டும் என்பதிலேயே அவளுக்கு ஆயிரம் சந்தேகங்கள். ஆயிரம்தான் வைத்தியர் சொன்னாலும் அருகிருந்து அரவணைத்துச் சொல்லித்தரும் ஒற்றை உறவை உள்ளம் தேடிற்று.

இரவுகளில் உறங்கவே முடியவில்லை. எப்படி இந்த வயிற்று வலியைத் தாங்கி, குழந்தையைப் பெற்றெடுக்கப் போகிறோம் என்று நினைத்தாலே அவளுக்கு இதயத் துடிப்பு அதிகரித்தது.

தப்பித்தவறி பிள்ளை பிறக்கையில் தனக்கு ஒன்று நடந்துவிட்டால் குழந்தையின் நிலை என்ன என்று யோசிக்கவே முடியவில்லை. அன்னையின் அண்மையை மிக அதிகமாய்த் தேடினாள். பக்கத்தில் இருந்தே தண்டித்திருக்கக் கூடாதா என்று அழுதாள்.

இத்தனை போராட்டங்களும் அவளுக்குள்ளே நடந்தாலும் கூட அவனை வீட்டில் தங்க அவள் அனுமதிக்கவில்லை.

அவனும் அவள் சூழ்நிலையை உணர்ந்தவனாக ஒரு அம்மாவைக் கொண்டுவந்து விட்டான். “நான் நிக்கிறதுதானே கூடாது. இந்த அம்மா உனக்குத் துணையா இருப்பா.” என்று சொல்லிவிட்டுப் போன அடுத்த நாளே அவளுக்கு வயிற்றுவலி வந்திருந்தது. அவரின் துணையுடன் வைத்தியசாலைக்குச் சென்று சேர்ந்திருந்தாள்.

விடயமறிந்து ஓடி வந்தவனை அந்த நிலையிலும் இங்கே நிற்காதே என்று விரட்டினாள் நிலானி.

அடுத்த இரண்டு நாள்களும் இந்த உலகத்தின் இன்னொரு கோர முகத்தைப் பார்த்தாள் நிலானி.

குழந்தையின் தந்தையைக் கொண்டுவந்து அவர்கள் முன் நிறுத்தாதது அவள் மீதான அவர்களின் பார்வையையே மாற்றியிருந்தது. முதல் மூன்று மாதங்களும் அவன் அழைத்து வந்திருந்த போதிலும் கூட, அவன் பதவி கருதி அவள் உள்ளே அழைத்துச் சென்றதில்லை. தன்னால் அவனுக்கு ஒரு இழுக்கு வந்துவிட வேண்டாம் என்று எண்ணினாள்.

கணவன் வெளியூரில் வேலை பார்ப்பதாகவும், வருவான் என்றும் சொல்லியிருந்தாள். அதை அவனும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்கிறான் என்று இப்போதுதானே புரிகிறது.

தகப்பனில்லாப் பிள்ளையைத் தாங்கி, வயிற்று வலியில் துடித்தவளுக்கு அங்கே நல்ல மரியாதை கிடைத்தது. காது கூசும் பேச்சுகளும், இரக்கமற்ற நடத்தைகளும் என்று உண்மையில் கூசியே போனாள்.

ஒழுக்கம் தவறிப் போவாயா, முறையற்ற உறவு கொள்வாயா என்று கேட்டு கேட்டு சவுக்கால் விளாசியதுபோல் வலித்தது.

தலைப்பிரசவம் என்பதே மறுபிறப்புக்கு ஒப்பானது. இங்கே அவள் அதோடு சேர்த்து தீயிலும் விழுந்து எழுந்துதான் ஆண் பிள்ளையைப் பெற்றெடுத்தாள்.

மகன் பிறந்திருக்கிறான் என்று அறிந்த பிறகும் தள்ளி நிற்க முடியாமல் ஓடி வந்தான் காந்தன். மகனைக் கையில் வாங்கியபோது, சுபாங்கி தளிரைப் பெற்றெடுத்ததும், கண்ணில் நீருடன் அந்தச் சந்தோசத்தை இருவருமாகப் பரிமாறியதும் என்று அந்த நாள் நினைவுகள் தானாய் வந்து போயின.

மூன்றாம் நாள் அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். காலையிலேயே அவன் வைத்தியசாலைக்கு வந்தபோது, அங்கே அவள் இல்லை. மாறாக, அவளைப் பார்த்துக்கொள்ள என்று நியமித்திருந்த அந்தப் பெண்மணி, நடுக்கத்துடன் ஒரு கடதாசியை அவனிடம் நீட்டினார்.

ஏதோ ஒரு பயம் நெஞ்சைக் கவ்வ அதைப் பிரித்தான்.

“இவ்வளவு நாளும் யோசிச்சு யோசிச்சுப் பாத்தனான். நான் ஒரு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டது உண்மைதான். ஆனால், கேவலமான வாழ்க்கைக்கு இல்லை. நல்லா இருந்த ஒரு குடும்பத்தை நாசமாக்கிட்டியேடி எண்டு என்ர மனச்சாட்சியே என்னைக் கொல்லுது.

எனக்கு ஏனோ உங்களில மட்டும் குறை சொல்ல விருப்பம் இல்ல. என்னதான் ஒருத்தர மனதுக்குப் பிடிச்சிருந்தாலும், அவருக்கு அளவுக்கதிகமா இடம் குடுத்திருக்கக் கூடாது. குறைஞ்ச பட்சமா முறையில்லாம உடம்பக் குடுத்தே இருக்கக் கூடாது. அதோட கலியாணம் நடந்திட்டுது எண்டு நீங்க சொன்னனீங்கதான். நான்தான் நம்பேல்ல. அந்தளவுக்கு உங்களக் கண்மூடித்தனமா நம்பினதும் என்ர பிழைதான்.

சரிபாதிப் பிழைய நானும் செய்துபோட்டு உங்களிட்ட நியாயம் கேக்கிறதில அர்த்தம் இல்லை. அதாலதான் விலகிப் போறன். என்ர அம்மாக்குத்தான் நல்ல மகளா இருக்கேல்ல. என்ர மகனுக்காவது நல்ல ஒரு அம்மாவா இருக்க ஆசைப்படுறன். நாளைக்கு அவன் வளந்து வந்த பிறகு, அம்மா வாழ்க்கைல தவறினவள்தான், ஆனா தவறானவள் இல்லை தம்பி எண்டு நான் அவனிட்டச் சொல்லோணும். அதால போறன்.

நான் உங்களிட்டக் கேக்கிறது எல்லாம் ஒண்டே ஒண்டுதான். தயவு செய்து உங்கட மனுசி, மகளோட போய்ச் சேர்ந்திடுங்க. அவேன்ர கண்ணீர் என்னை வாழவிடாது. இத மட்டும் எனக்காகச் செய்திடுங்க, ப்ளீஸ்!” என்று முடிந்திருந்தது அந்தக் கடிதம்.

அப்படியே இடிந்துபோய் அமர்ந்துவிட்டான் காந்தன்.

*****

கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்திருந்தது. திருநாவுக்கரசிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்றதும் மாப்பிள்ளை வீட்டினர் திரும்பவும் குழந்தைவேலுவைத்தான் தொடர்புகொண்டு விசாரித்தனர்.

அவருக்கும் ஒன்றும் தெரியவில்லை. அன்று எப்படியாவது இந்தச் சம்மந்தத்தை முடித்துவிட வேண்டும் என்று சொன்ன மனிதர், ஏன் அமைதியாக இருக்கிறார்? இடையில் அவர் வேறு அழைத்து, தான் விசாரித்த வரையில் பெடியன் நல்லவன்தான் என்று சொல்லியிருந்தார்.

ஒன்றும் விளங்காமல் அவரே திருநாவுக்கரசுக்கு அழைத்தார்.

“நீங்க ஒண்டும் சொல்லேல்லையாம் எண்டு விசாரிச்சவே…”

“என்ன சொல்லுறது எண்டு தெரியாததில பேசாம இருக்கிறன்.” என்றார் அவர் சோர்ந்த குரலில்.

“ஏன், ஏதும் பிரச்சினையா?” அந்தக் குரல் மனத்தைத் தொட உடனேயே விசாரித்தார்.

“என்ன சொன்னாலும் மகள் வேண்டாம் எண்டு நிக்கிறா.”

“ஓ!”

“நீங்க கட்டி, பிள்ளை குட்டி எண்டு வந்திட்டா எங்களுக்கும் சந்தோசமா இருக்கும் பிள்ளை எண்டு சொன்னதுக்கு அண்ணாவே இப்பிடி மாறிட்டார், எனக்கு வாறவர் மட்டும் நல்லவரா இருப்பார் எண்டு என்னப்பா நம்பிக்கை எண்டு கேக்கிறா? எனக்கு என்ன பதில் சொல்ல எண்டே தெரியேல்ல. என்னவோ எனக்கும் இப்ப இப்ப எல்லாமே வெறுத்த மாதிரிப் போகுது. ரெண்டே ரெண்டு பிள்ளைகள். அந்த ரெண்டு பிள்ளைகளும் சந்தோசமா வாழாம நிக்குதுகள். இதைப் பாக்கவா இவ்வளவு காலமும் வாழ்ந்தனான் எண்டு இருக்கு. நானும் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இருப்பனோ தெரியாது. அதுக்கு முதலே அவாக்கு ஒரு நல்லதைச் செய்ய ஆசைப்படுறன். எங்க, நடக்கோணுமே?” என்றதும் குழந்தைவேலுவால் தாங்கவே முடியாமல் போயிற்று.

ஒரு தந்தையின் துடிப்பு. அதை இன்னொரு தந்தையால் உணரமுடியவில்லை என்றால் எப்படி? “பேசாம தம்பிக்கே அன்புவைத் தாறீங்களா?” என்று தன்னை மீறிக் கேட்டிருந்தார்.

கேட்ட பிறகு கேட்டவருக்கே அதிர்ச்சி என்றால் அதை உள்வாங்கியவருக்கு?

“என்ன? என்ன சொல்லுறீங்க?” என்றார் நம்ப முடியாமல்.

“உண்மையா இத நான் கேக்க நினைக்கவே இல்ல. கேட்டது எனக்கே கொஞ்சம் அதிர்ச்சிதான். ஆனா யோசிச்சுப் பாத்தா இதுதான் சரியோ எண்டு இருக்கு. இங்க தம்பியும் கலியாணத்துக்குப் பிடி குடுக்கிறானே இல்ல. எனக்கு என்னவோ அவே ரெண்டு பேரையும் பிரிச்சு வைக்கிறது பிழையோ எண்டு படுது. அதுதான்…”

திருநாவுக்கரசுக்கும் ஒருவிதமான தவிப்புத்தான். அவரும் மகளைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார். “இது சரியா வரும் எண்டு நினைக்கிறீங்களா? உங்கட மகள் இருக்கிறாவே.”

“உண்மைதான்…” என்று யோசித்தவர், “பேசாம ரெண்டு பேரையும் கலியாணத்துக்குப் பிறகு தனியா வச்சா என்ன?” என்று அவரிடமே கேட்டார்.

அது நல்ல யோசனையாகத்தான் தோன்றிற்று. ஆனால், இதெல்லாம் நடைமுறைக்குச் சரியாக வருமா, மகள் என்ன சொல்வாள், முக்கியமாகச் சுபா என்ன சொல்வாள், அபயனின் முடிவு என்ன என்றெல்லாம் தெரியாமல் மனத்தில் ஆசையை வளர்க்கப் பயந்தவர், “நான் மகளோட கதைச்சுப்போட்டுச் சொல்லுறன். நீங்களும் உங்கட வீட்டில கதைங்கோ.” என்றுவிட்டு வைத்தார்.

error: Alert: Content selection is disabled!!