கேட்பார் இன்றிக் காதல் – 36

அத்தியாயம் 36

அன்பினி கொழும்பு வந்து ஒரு மாதமாகியிருந்தது. அதுவரையில் ஒற்றை அறையில்தான் அபயன் தங்கியிருந்தான். அன்பினி வந்தபிறகு விறாந்தை, குளியலறை, குட்டிச் சமையலறை, படுக்கையறையுடன் கூடிய பால்கனி வீட்டுக்கு மாறியிருந்தான்.

தனிமை அவர்களுக்கிடையிலான விலகலை விலக்கி, நெருக்கத்தைக் கூட்டும் என்று பெரியவர்கள் எண்ணியது போன்று எதுவும் நடப்பதாய் இல்லை. அந்தளவில் அன்று காரில் வைத்து அவள் கேட்ட கேள்விகள் அபயனை அசைத்துப் பார்த்திருந்தன. அதில் இருந்த நியாயம் அவளை நெருங்க விடவில்லை.

தினமும் காலையில் அலுவலகம் செல்கிறவன் மாலையில்தான் வருவான். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறாள் என்று தினமும் மாலையில் வெளியே அழைத்துச் செல்வது, கடற்கரைக்குப் போவது, பொருள்கள் வாங்கச் செல்வது என்று தன்னால் முடிந்தவரையில் அவளோடு நேரம் செலவழித்தான்.

இத்தனையும் நடந்தாலும் அன்பினி தன் ஒதுக்கத்திலிருந்து வெளிவருவதாக இல்லை. அவளுக்கும் வாழ்க்கை இப்படியே போகாது என்று தெரியும். அனைத்தையும் கடந்துவரவே பிரியப்பட்டாள். முடியவேண்டுமே.

இந்த ஒரு மாதத்தில் இரண்டு முறை முல்லைத்தீவுக்குச் சென்று வந்திருந்தார்கள். காந்தனின் தலையீடு இல்லாததும், அன்பினி பக்கத்தில் இல்லாததாலும் சுபாங்கியும் பெரிதாய் எதையும் கதைக்க வரவில்லை.

மூன்றாவது முறையாக அவர்கள் சென்றபோது, “குழந்தையை ஒருக்காக் கூட்டிக்கொண்டு வாம்மா. கண்ணுக்கையே நிக்கிறா.” என்று கண் கலங்கினார் இந்துமதி.

இத்தனை நாள்களாக அவர் அவளைப் பார்க்கவேயில்லை என்பதில் தயக்கத்தை உதறி, “தளிரை ஒருக்கா எங்கட வீட்டை கூட்டிக்கொண்டு போகட்டா?” என்று அபயனிடம் கேட்டாள்.

முதலாக இருந்திருக்க மறுத்திருப்பானாக இருக்கும். அன்றைக்கு வீதியில் நின்று வழியனுப்பிய பெரியவர்களின் செய்கைக்குப் பிறகு மறுக்க முடியவில்லை.

ஆனால், தமக்கை நிச்சயம் சம்மதிக்கமாட்டாள் என்று தெரியும். தந்தையோடு பேசினான். அவருக்கும் பெரியவர்களிடம் பேத்தியை விட்டெடுப்பதில் உடன்பாடுதான். அப்படி அவளை அவர்களின் கண்ணில் காட்டாமல் வைத்திருப்பது அவர்களுக்குச் செய்யும் பெரும் அநியாயமாகவே தோன்றிற்று. ஆனால் மகள்?

சற்று யோசித்துவிட்டு, “அவேய எங்கயாவது வெளில வரச்சொல்லு தம்பி. தளிரை நீயே கூட்டிக்கொண்டு போய்க் காட்டு. பிறகு வந்து எதேற்சையாப் பாத்தனாங்க எண்டு அக்காட்டச் சொல்லிவிடு. குழந்தைகளுக்கு எதையும் மறைக்கத் தெரியாது. நீ சொல்லாம விட்டுத் தளிர் சொன்னா அக்காக்குக் கோபம் வரும்.” என்றதும் அப்படியே செய்தான்.

அவர்களுக்கு நடுவில் தான் நிற்க விரும்பாமல், “ஒரு ரெண்டு மணி நேரத்தில வாறன்.” என்று அன்பினியிடம் சொல்லிவிட்டுப் போனான்.

பேத்தியைக் கண்ட இந்துமதி, கோயிலில் நிற்கிறோம் என்பதைக்கூட மறந்து, அவளைக் கட்டிக்கொண்டு அழுது தீர்த்தார். அதுவும் அவரிடம் தாவிய கணத்தில், “அப்பா எங்க அப்பம்மா?” என்றுவேறு தளிர் கேட்டதில் திருநாவுக்கரசுக்கே விழிகள் பனித்துப்போயின.

கையோடு கொண்டுவந்த கொழுக்கட்டையை அவளுக்குக் கொடுத்து, ஆசை தீரக் கொஞ்சி மகிழ்ந்து, அவள் பேசும் மழலையைக் கேட்டு ரசித்து, அவளோடு விளையாடி என்று என்ன செய்தும் பெரியவர்களின் ஏக்கம் தீர்வதாக இல்லை.

அபயன் சொன்ன இரண்டு மணி நேரமும் இரண்டு விநாடியாக முடிந்திருந்தது. இன்று போனால் இனி எப்போது பார்க்கக் கிடைக்குமோ என்கிற எண்ணமே, அவளை இன்னும் கொஞ்சம் தம்மோடு வைத்துக்கொள்ள முடியாதா என்று ஏங்க வைத்தது.

அபயனுக்கும் சொன்னதுபோல் இரண்டு மணி நேரத்தில் போக மனமில்லை. அந்த இரண்டு மணி நேரம் முடியும் தருவாயில் தமக்கைக்கு அழைத்து, கோயிலில் அவர்களைக் கண்டதாகவும், தளிர் அழுததால் கொஞ்ச நேரம் அவர்களோடு இருக்கட்டும் என்று விட்டுவிட்டுத் தான் வந்ததாகவும் சொன்னான்.

அதற்கே சுபாங்கி கோபப்பட்டாள். “எல்லாம் அவள் பிளான் போட்டிருப்பாள். அது தெரியாம நீ எனக்குக் கதை சொல்லிக்கொண்டு இருக்கிறாய்!” என்று அன்பினியைக் குற்றம் சாட்டினாள்.

“அக்கா, நானாத்தான் இதால வந்த இடத்தில கோயிலுக்கு வந்தனான். அதுக்கு ஏன் அவளை இழுக்கிறீங்க?”

“நீ எண்டைக்கடா அவளை விட்டுக்குடுத்திருக்கிறாய் இண்டைக்கு விட்டுக்குடுக்க?” என்று அதற்கும் கோபப்பட்டவள், “அவே பாத்தது, கதைச்சது எல்லாமே போதும். இப்பவே கூட்டிக்கொண்டு வா!” என்று உத்தரவிட்டுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

‘அக்கா என்னடா எண்டா நான் அவளை விட்டுக்குடுக்கிறேல்ல எண்டுறா, அவள் என்னடா எண்டா அவளை விட்டுட்டு இன்னொருத்திக்குப் பக்கத்தில போய் நிண்டுட்டன் எண்டு நிக்கிறாள்…’ தன் நிலையை எண்ணி நொந்துபோனான் அபயன்.

அதன்பிறகும் அரைமணி நேரத்தைச் செலவு செய்துவிட்டுத்தான் கோயிலுக்குப் போனான்.

“பேத்தியக் கொண்டு வந்து காட்டினதுக்கு நன்றி தம்பி, உங்கட அப்பாக்கும் நன்றி சொன்னேனாம் எண்டு சொல்லிவிடுங்க.” என்று திருநாவுக்கரசு நெகிழ்ந்த குரலில் சொன்னார்.

தளிர் அன்று முழுக்க அப்பப்பா, அப்பம்மா என்று மட்டுமே பேசிக்கொண்டிருந்தாள். அடிக்கடி அப்பா எங்கே என்கிற கேள்வியும் வர, கடுத்துவிட்ட முகத்தோடு வாயை இறுக்கி மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள் சுபாங்கி.

சின்னதாய் ஒன்று நடந்தாலும் அவள் பெரிதாக வெடித்துவிடுவாள் என்று தெரிய, அறைக்குள் போகும்படி அன்பினிக்குக் கண்ணைக் காட்டினான் அபயன். அன்பினியும் சுபாங்கியின் கோபத்துக்குப் பயந்து, அன்று முழுக்க அறையை விட்டு வெளியே வரவேயில்லை.

திரும்பவும் கொழும்பு வந்து சேர்ந்தபிறகு பழையபடியே அவர்கள் நாள்கள் நகர்ந்தன. ஒரு சிரிப்பில்லாமல், முகம் பார்த்துப் பேசாமல், ஒதுங்கியே இருக்கும் அவள் குணம் அவனுக்குள் கோபத்தை விதைக்க ஆரம்பித்தது.

அன்று காலையில் அலுவலகம் போனவன் அடுத்தநாள் காலையில்தான் திரும்பி வந்தான். முக்கியமான பிராஜெக்டின் கடைசிநாள் என்பதில் வேலை பிழிந்து எடுத்திருந்தது.

மண்டை சூடாகி, உடலில் மருந்துக்கும் தெம்பில்லை. வயிற்றில் கோரப்பசி. உடல் அலுப்புத் தீரத் தலைக்குக் குளித்துவிட்டு வந்தபோது, அவனுக்கான உணவைத் தயாரித்துக்கொண்டிருந்தாள் அன்பினி.

ஒரு நாள் முழுக்க அவளைக் காணாததா, இல்லை அவன் வேலைப்பளுவை உணர்ந்து அவனுக்காக அவள் செய்த சமையலா, இல்லை அந்த அதிகாலை வேளையில் பளிச்சென்று கிடைத்த அவளின் தரிசனமா தெரியவில்லை. இத்தனை நாள்களாகத் தள்ளியிருந்ததை எல்லாம் மறந்து, அவளைப் பின்னாலிருந்து அணைத்து, கழுத்து வளைவில் தன் உதடுகளைப் பதித்தான் அபயன்.

அதிர்ந்துபோன அன்பினி தன்னிச்சையாய் விலக முயன்றாள். அவன் விடவில்லை. மாறாக அணைப்பின் இறுக்கத்தை இன்னுமே கூட்டி, “கட்டின பிறகு உன்னத் தள்ளி வச்சு வடிவு பாக்கேலாது எண்டு சொன்னவன் நான். எனக்கு ஏன்டி இவ்வளவு பெரிய கொடுமையச் செய்றாய்?” என்றவனின் உதடுகள் ஒரு வேகத்துடன் அவள் இதழ்களில் உரச, அசையாமல் நின்று விழிகளை இறுக்கி மூடிக்கொண்டாள் அன்பினி.

அவள் தேகத்தின் இறுக்கமும், அசையாமல் நின்ற நிலையும் அவனை அவளில் மூழ்க விடவில்லை. “அன்பா!” என்றான் அதட்டலாக. அப்போதும் என்னவாவது செய் என்பதுபோல் அவள் நின்றது அவனை உசுப்பியது.

“என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறாய் உன்ர மனதில? இப்பிடியே இருக்கவா கலியாணம் கட்டினது? எனக்கு உன்னோட வாழோணும்!” என்றான் கோபமாக.

“வேண்டாம் எண்டு நான் சொல்லேல்லையே.” அவன் விழிகளையே பார்த்துச் சொன்னாள் அவள்.

“நீ சொல்லேல்லதான். ஆனா, நீ நடக்கிற விதம் உனக்குப் பக்கத்தில என்ன வர விடுதில்லை.”

அதற்கு நான் என்ன செய்ய என்பதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றாள் அன்பினி.

அவளின் அந்தச் செய்கையில் கொஞ்சம் அவமானமாகக் கூட உணர்ந்தான் அபயன்.

“இவ்வளவு கோவத்தை மனதில வச்சிருக்கிறவள் என்னத்துக்குக் கலியாணத்துக்கு ஓம் எண்டு சொல்லோணும். என்னடி நரகம் இது?” என்று ஆத்திரப்பட்டான்.

விழிகள் இலேசாய்க் கலங்க, “மனதை ஒருத்தனிட்டயும் உடம்ப இன்னொருத்தனிட்டயும் குடுக்கேலாம இருந்தது. அந்த நரகத்துக்கு இந்த நரகம் பரவாயில்ல எண்டு நினைச்சுத்தான் ஓம் எண்டு சொன்னனான்.” என்றதும் அவன் முகம் கறுத்துப்போனது.

கொஞ்ச நேரம் அவனால் பேசக்கூட முடியவில்லை.

“நான் உனக்கு நரகமா அன்பா? கூடப்பிறந்தவள் வாழ்க்கைய துலச்சுப்போட்டு அழுதுகொண்டு நிக்க, நான் என்ன செய்திருக்கோணும் எண்டு நினைக்கிறாய்? உன்னோட வந்திருந்து ரொமான்ஸ் செய்திருக்கோணுமா?”

“அந்தளவுக்கு சுயநலக்காரி எண்டு நினைச்சீங்களா என்னை?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.

“அந்த நேரம் நான் உங்களிட்ட இருந்து எதிர்பார்த்தது ஆறுதல் வார்த்தையை மட்டும்தான். அப்பா, அம்மா, பிரெண்ட்ஸ் எண்டு ஆர்ட்டையும் இதப்பற்றிக் கதைக்கேலாம இருந்தது. உங்களைத்தான் தேடினனான். உங்களை அவ்வளவு எதிர்பாத்தனான். அண்டைக்கு உங்கட வீட்டை வந்தது கூட என்ன செய்றது எண்டு தெரியாமத்தான். வேற ஒண்டுமே வேண்டாம். கொஞ்ச நாளைக்கு அமைதியா இரு அன்பா எண்டு ஒரு வார்த்த சொல்லியிருக்கலாம். இல்ல, இனி எனக்கும் உனக்கும் சரியா வராது எண்டாவது சொல்லியிருக்கலாம். அதுவும் எனக்கு விளங்கி இருக்கும். ஆனா…” என்றவளை வேகமாக இடைமறித்து, “அந்த நேரம் நானும் அதிர்ச்சிலதான் இருந்தான் அன்பா. ஆனாலும் நான் செய்தது பிழை எண்டுதான் சொல்லுறேனே. இன்னும் என்னதான் வேணும் உனக்கு?” என்றான் அவன்.

“எதுவுமே வேண்டாம்.” என்றாள் அவள்.

“நானுமா?” என்றான் அவன் உடனேயே.

அவள் பதில் சொல்லாமல் இருந்தாள்.

“சொல்லு, நானுமா?”

அவன் விடமாட்டான் என்றதும் நிமிர்ந்து, “இப்ப இதுக்கு நான் என்ன பதில் சொல்லோணும் எண்டு நினைக்கிறீங்க?” என்று அவனிடமே கலங்கிய குரலில் வினவினாள்.

ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்தவன் அவளை இழுத்து அணைத்தான். அவளும் விலகாமல் நின்று கண்ணீர் உகுத்தாளே தவிர வாயைத் திறந்தாள் இல்லை.

அந்தக் கோபத்தில், “போடி!” என்று அவளைப் பிடித்துத் தள்ளிவிட்டுப் போனான்.

எப்போதும் விலகிப் படுக்கிறவன் அன்று இரவு விடவில்லை. அவளை இழுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டான். மேலே முன்னேறுவதாகவும் இல்லை என்றதும், “விடுங்க!” என்றாள் அன்பினி.

“விடேலாது. நான் வேண்டாம் எண்டு சொல்லு விடுறன்.”

“அபய் ப்ளீஸ்!” முடியாமல் கெஞ்சினாள்.

“நானும் ப்ளீஸ்!” என்றவன் அவளை இறுக்கி அணைத்து, கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்தபடி விழிகளை மூடிக்கொண்டான்.

error: Alert: Content selection is disabled!!