நீயென் சொந்தமடி 1 – 1

நீ என் சொந்தமடி!

அத்தியாயம் 1.

ஃப்ரான்ஸ் நாட்டின் வடபகுதியில், பார்ப்போரின் மனதையும் உடலையும் சில்லிட வைக்கும் அழகுடனும் குளிர்ச்சியுடனும், நீளமாக வளைந்து நெளிந்து செல்கின்றது செயின் நதி.
இந்நதிக் கரையோரமாக, சில குன்றுகளையும் இரு தீவுகளையும் தன்னகத்தே அரவணைத்து நிமிர்ந்து நிற்கும், ‘விளக்கு நகரம்’ என்றழைக்கப்படும் பாரீஸ் நகரானது, பனிக் குளிரில் சில்லிடும் தை மாதத்தில், மெல்ல மெல்ல தன் அதிகாலை உறக்கம் கலைந்து சோம்பலுடன் கண் விழித்துக் கொண்டிருந்தது.
உதயத்தில் ஆட்சிக்குத் தயாராகிய ஆதவனோ, கார்மேகங்களின் அடாவடியான அணிவகுப்புடன் போட்டி போட்டுக் கொண்டு, கீழ்வானைத் தன் வசப்படுத்த முயன்று கொண்டிருந்தவன்,
திரளாகப் படையெடுத்த கருமேகங்களுள் சிக்கித் தத்தளித்த போதெல்லாம், தன் கோபச் சிவப்பால் அவற்றைப் பயம் கொள்ள வைத்து, எப்படியும் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டிவிட அரும்பாடுபட்டுக் கொண்டிருந்தான்.
அழகிய ‘காதல் கனவு தேசமான’ நகர மையமோ, திரும்பும் திசையெல்லாம் வானை முட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் பல மாடி கட்டிடங்களின் ஆக்கிரமிப்பில் கம்பீரமாகக் காட்சி தந்தது.
அவற்றில், பார்ப்போருக்கு தன்னை பளிச்சென்று வெளிப்படுத்தி நிற்கும் இளம்பச்சை நிறத் தொடர்மாடிக் குடியிருப்பின், ஒன்பதாவது தளத்திலுள்ள வீடொன்றின் தடித்த யன்னல் திரையை, தன் வெண்டைப் பிஞ்சு விரல்களால் மெல்ல விலக்கி, தன் முன்னால் பளீரிட்ட சிணுக்கத்துடன் கூடிய அதிகாலை எழுச்சியைப் படம் பிடித்துக் கொண்டன, அழகிய நயன விழிகளிரண்டு.
வெளிபுறத்தின் சில்லிடும் குளிருக்கு இதமாக கையில் ஆவி பறக்கும் காஃபிக் கப்புடன் யன்னருகில் வந்து நின்ற ஏஞ்சல்,
ஓங்கித் திடகாத்திரமாக நிமிர்ந்து நிற்கும் உலக அதியங்களில் ஒன்றான ஈஃபில் கோபுரத்தையும், அதன் பின்னணியில் தெரியும் கீழ்வானின் அழகையும் தன் விழிகளால் சிறை செய்து மனதுள் நிறைத்துக்கொண்டே காஃபியை அருந்தத் தொடங்கினாள்.
‘எத்தனை தடவைகள் எவ்வளவு நேரமாகப் பார்த்திருந்தாலும் அலுக்காத காட்சி! ஒவ்வொருநாளும் ஒவ்வொரு விதத்தில் ரசிக்க வைக்கின்றதே!’ தன்னுள் வியந்து நின்றவள்,
‘இயற்கை தான் எவ்வளவு அழகு?! இந்தப் புதையலை ஆழ்ந்து அமைதியாக இரசிப்பதற்கு நமக்குத் தான் நேரம் போதவில்லை! நேரம் இருப்பவர்களுக்கோ, அதை இரசிக்கும் வழி தெரியவில்லையோ!’ அங்கலாய்ப்புடன் நினைத்துக் கொண்டாள்.
அப்போது, ‘‘நான் உன் செல்லப் பிள்ளையல்லவா? என்னையும் கவனியேன்.’’ என, அவள் வீட்டுத் தொலைபேசி சிணுங்கியழைத்தது.
தொலைபேசியில் ஒளிர்ந்த இலக்கத்தைப் பார்த்துக் கொண்டே எடுத்தவள், ‘‘குட் மோர்னிங் லூகாஸ். சோஃபி எழுந்து விட்டாளா?’’ என, தன் முன் வீட்டுக்காரனும் தங்கள் குடும்ப நண்பனுமான லூகாஸுடன், தங்கள் மொழியான ஃப்ரெஞ்சு மொழியில் உரையாடத் தொடங்கினாள்.
‘‘ஓ! காரை கராஜில் விட்டுள்ளாயா? அதற்கென்ன! இல்லை இல்லை, எனக்கு கஷ்டமில்லை. சோஃபியின் பாடசாலை நாம் போகும் வழியில் தானே லூகாஸ், அவளை விட்டு விட்டே போவோம். சரி வந்திடுங்க.’’ என்றவாறே தொலைபேசியை வைத்துவிட்டு,
காஃபியை கடைசி சொட்டு வரை அருந்தி முடித்தவள், அந்தக் கப்பில் எஞ்சியிருந்த கதகதப்பையும் வீணடிக்க விரும்பாமல், கப்பைத் தன் கரங்களால் பொத்திப் பிடித்துக்கொண்டே மீண்டும் யன்னலருகில் வந்து நின்று சில கணங்கள் வெளிப்புற அழைகை ரசித்து விட்டு, பின் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
மூன்று படுக்கையறைகளைக் கொண்டதாக மிகவும் கச்சிதமாகவும், அதேவேளை தன் செல்வச் செழிப்பைத் துல்லியமாக காட்டும் வண்ணமும் அமைந்திருந்தது அவள் இல்லம்.
ஏஞ்சலின் தந்தை, அவளுக்கென்றே வீட்டை வாங்கி, பார்த்துப் பார்த்து தயார்ப் படுத்தியிருந்தார். பாரீஸிலிருந்து கிட்டத்தட்ட இரண்டரை மணிநேர பயணத்தில் உள்ள அழகிய ‘ஜூவேணி’ என்ற இடம் தான் இவர்களின் சொந்த இடம். அங்கு பள்ளிப் படிப்பை முடித்த மகள் பாரீஸில் படிக்க வந்ததுமே, இந்த மாடிக் குடியிருப்பை அவளுக்கென்று வாங்கி போட்டு விட்டார் அவள் தந்தை.
படிப்பை முடித்தவள் சுயமாகவே வேலை செய்ய வேண்டும் என்று விரும்பியதும், அதை மறுக்கும் அளவுக்கு பெற்றோர்களுக்கும் மனமில்லை என்பதால், மகள் விருப்பமே அவர்கள் விருப்பம் என்று அவள் விரும்பிய வேலைக்கே அனுப்பியும் வைத்துள்ளனர்.
ஆனால் என்ன, குவிந்து கிடக்கும் சொத்துக்களையும் தம் தொழில்களையுமே பார்த்துக் கொள்வாள் என்ற அவர்கள் ஆசையை அப்படியே மறுத்து, ‘‘இப்போ நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் டாட். உங்களுக்கு என்ன வயதா போய் விட்டது?’’ செல்லமாக நழுவிக் கொண்டவள், இப்படி வந்து வங்கியொன்றில் தொழில் செய்து சம்பாதிக்க வேண்டிய அவசியம் தான் என்ன என்ற வருத்தம் உள்ளூர அவர்களுக்கும் உண்டு தான். ஆனால், தம் செல்ல மகளின் முன் அதைக் காட்டிக்கொள்ள அவர்கள் கொஞ்சமும் விரும்பவில்லை.
சின்னஞ் சிறுவயதில் இருந்தே சுயமாக எதையும் செய்ய வேண்டும் என்று பழக்கி விட்டவர்களால், இன்று எதையும் வற்புறுத்திக் கூற முடியவில்லை.
‘‘சரிடாம்மா… நீ படிக்கும் போதே பாரீஸிலிருந்து படிக்க வில்லையா? அப்படியே இதையும் எண்ணிக் கொள்கின்றோம். ஆனால் தனியே ஏன்மா? கொஞ்சம் யோசித்துப் பார்.’’ இருபத்தியிரண்டு வயதாகியும் மகள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தினுள் தன்னை புகுத்திக் கொள்ளவில்லை என்பது, அந்த கோடீஸ்வரத் தம்பதிகளின் நெஞ்சில் பாறாங்கல்லின் அழுத்தத்தைத் தந்தது.
படிக்கும் காலத்தில் ஆண் நண்பர்களுடன் சகஜமாகப் பழகினாலும், அவள் அவர்களை தள்ளியே வைத்துப் பழகப்பழக கவலை கொண்டவர்கள், மகளுடன் சாடை மாடையாக கதைத்தும் பார்த்தார்கள்.
அதிலிருந்து, தங்கள் சமூக வழக்கப்படி திருமணத்துக்கு முந்திய ஆண் பெண் சிநேகிதத்தில் அவளுக்கு ஈடுபாடு இல்லை என்று புரிந்து கொண்டதும் முதலில் திகைத்து விட்டார்கள்.
கவலையாக தன்னைப் பார்த்த தந்தை தாயிடம், ‘‘நிச்சயம் கல்யாணம் செய்து கொள்வேன் டாட். கணவன் பிள்ளைகள் என்று குடும்பமாக வாழ்வேன். ஆனால், அதற்கு நீங்க கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.’’ பதினெட்டு வயதில் தீர்மானமாகச் சொன்ன மகளை, அவள் அடுத்ததடுத்து அடுக்கிய காரணங்களைக் கேட்டு அதிர்ந்து போய் பார்த்தவர்கள்,
மகள் விருப்பம் அதுவாக இருக்கும் போது, தாம் இதில் கதைப்பதற்கு என்ன இருக்கு என்று நினைத்து அப்போதைக்கு அமைதியாகி விட்டார்கள்.
அவளும் வெள்ளி மாலை வேலை முடிந்த கையோடு பெற்றவர்களை நாடி ஓடிச் சென்று விடுவாள். அதன் பின்னர் திங்கள் காலை வரை அங்கே தான் சிட்டாகச் சுத்திக் கொண்டிருப்பாள்.
பொதுவாகவே படிப்பை முடித்த கையோடு ஒரு தொழிலைத் தேடிக் கொள்ளும் பிள்ளைகள், தனியாச் சென்று விடுவது தான் மேற்கத்தைய வழக்கம்.
‘‘நீ உன் வாழ்வைப் பார்த்துக் கொள். நாங்கள் எங்கள் வாழ்கையை இரசித்து அனுபவிக்க வேண்டும்.’’ என்ற வகையில் இங்கு ஒவ்வொரு தனி மனிதனும் தன் தனிப்பட்ட தேவைகள், இரசனைகள், உணர்ச்சிகளை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவோ தியாகம் செய்யவோ விரும்புவதில்லை. சிறு குழந்தைகளில் இருந்தே அவர்கள் அந்த வாழ்வுக்கு பழக்கப்பட்டு விடுகிறார்கள்.
பெற்றவர்கள் பிள்ளைகள் மேலும், பிள்ளைகள் பெற்றவர்கள் மேலும் அதிகாரம் செய்வதற்கும், ஆதிக்கம் செழுத்துவதற்கும், மிகவும் அழகாக ஒரு வரையறை வைத்திருப்பதையும், அதைப் புரிந்து நடப்பதுமே இவர்கள் வழக்கம். அதற்கென்று அவர்கள் ஒருவர் ஒருவரில் அன்பு செலுத்துவதில்லை என்று மொத்தமாகச் சொல்லி விடவும் முடியாது.

குளியலை முடித்து வெளியில் வந்தவளின் செவ்விதழோ மிக அழகிய பிரெஞ்சுப் பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
அப்படியே அறையின் ஒரு பக்கத்தில் இருந்த அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கண்ணாடி மேசையின் முன்னால் நின்று, வேலைக்குச் செல்வதற்காகத் தன்னை நேர்த்தியாக அலங்கரித்துக் கொண்டவள், தன் பளபளக்கும் பட்டுக் கூந்தலை வாரி முதுகில் புரள விட்டுக் கொண்டாள்.
பின், தன் அலங்காரத்தில் திருப்தியுற்று நேரத்தைப் பார்த்துக் கொண்டே வெளியே வந்தவள், காலையுணவாக சீரியலையும் பாலையும் சாப்பிட்டுக் கொண்டே, தம் ஒருமாத விடுமுறையைக் கழிப்பதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ள பெற்றவர்களுக்கு அழைத்தாள்.
அவர்களுடன் பேசியவாறே சுருக்கமாக காலையுணவை முடித்துக் கொண்டவள், வேலைக்குச் செல்வதற்காக முன் வாயிலைத் திறக்கவும், எதிர் வீட்டிலிருந்து லூகாஸ் தன் ஆறு வயது மகளுடன் வெளிப்படவும் சரியாக இருந்தது.
ஏஞ்சலை கண்டதும் தந்தையும் மகளுமாக முகம் மலர்ந்தவர்கள், காலை வணக்கத்தைத் தம் மொழியில் பரிமாறிக் கொண்டனர் .
‘‘டாக்ஸியில் போகலாம் என்று தான் நினைத்தேன் ஏஞ்சல். நீ அங்கே போகும் போது வீணாக ஏன்? போகும் வழியில் இவளையும் இறக்கி விட்டு விடுவோம். உனக்கு ஆட்சேபனை இல்லையே!’’ மீண்டும் கேட்டான் லூகாஸ்.
ஓடி வந்து தன் கரத்தைப் பற்றிக் கொண்ட சிறுமியைப் பிடித்து கொண்டே லிஃப்டை நோக்கி நடந்தவள், ‘‘அது தான் சொன்னேனே… இதிலென்ன கஷ்டம்? இரண்டு பேரும் ஒரே இடத்தில் வேலை செய்கின்றோம். கார் நம்மைச் சுமந்து கொண்டு போய் விடப் போகின்றது.’’ புன்னகையுடன் சொன்னவள்,
‘‘சோஃபி…சாப்பிட்டாச்சா..’’ சின்னவளைப் பார்த்துக் கேட்டவாறே லிஃப்டினுள் நுழைந்தாள்.
சிறுமியோ, பதில் சொல்லாது உதட்டைப் பிதுக்கிக் கொண்டு தந்தையை வெட்டும் பார்வை பார்த்தவள், அது போதாதென்று ஒரு முறைப்பை அம்பாக்கி விட்டாள்.
‘‘ஹா…ஹா…என்ன காலையிலேயே இரண்டு பேரும் ஆரம்பித்து விட்டீங்க போல!’’ சொல்லிக்கொண்டே தன் கைப்பையினுள் இருந்து ஒரு சிறு ‘ப்ரௌனி கேக்’ பக்கட்டை எடுத்து சிறுமியிடம் நீட்டியவள்,
‘‘என் செல்லத்துக்கு விருப்பமானது இல்லையா? காலையில் சாப்பிடாமல் போனால் வயிறு கோபித்துக் கொண்டு கடிக்கத் தொடங்கிவிடும். அதனால் கொஞ்சமாகச் சரி சாப்பிட வேண்டும்.’’ கொடுக்க, சிறுமியும் வாங்கி ஆசையாகச் சாப்பிடத் தொடங்கினாள்.
தன் மகளுடன் கதைத்துக் கொண்டே காரினுள் ஏறியவளில் நன்றியுடன் நிலைத்த லூகாஸின் விழிகள், பின் இரசனையாக அவளைத் தொட்டு மீண்டன!
இவன் கீழே தான் இந்த ஆறுமாதங்களாக வேலை செய்கின்றாள் ஏஞ்சல். அது மட்டுமின்றி, குழந்தையில் இருந்து ஏஞ்சலை இவனுக்குத் தெரியும். நீண்ட காலமாகப் பழகும் இரு பெரிய குடும்பங்களின் வாரிசுகள் தான் இவர்கள் இருவரும். இருவருக்குள்ளும் எட்டு வயது வேறுபாடு இருந்ததால், சிறுவயதில் இருந்தே இவளின் வழிகாட்டி இவன் தான்.
வேலையிடத்துக் கதைகளைக் கதைத்துக்கொண்டே வந்தவர்கள், வரும் வழியில் சோஃபியை பள்ளியில் இறக்கி விட்டு விட்டுத் தம் வங்கி நோக்கிச் சென்றார்கள்.
****

error: Alert: Content selection is disabled!!