கேட்பார் இன்றிக் காதல் – 42

அத்தியாயம் 42

என்றைக்கு அண்ணி என்று சொல்லாதே என்று சுபாங்கி பேசினாளோ அன்றிலிருந்து அவள் இருக்கிற பக்கமே அன்பினி போகமாட்டாள். அப்படித்தான் அந்த வீட்டில் இருந்தாள். இன்று மட்டும் ஏன் இப்படியானது?

சுபாங்கியின் மனக்காயத்தையும் பயத்தையும் மிக நன்றாகவே விளங்கிக்கொள்ள முடிந்தாலும் அதற்காகத் தளிரையும் சேர்த்து அழவைப்பதில் நியாயமில்லை என்றுதானே சொன்னாள்.

அதற்குப்போய் அவளைத் தள்ளிவிட்டு, வார்த்தைகளை விட்டு என்று எவ்வளவு பெரிய அவமானம்? அண்ணி சற்றுக் கண்டிப்பானவர் என்று அவளுக்குத் தெரியுமே தவிர்த்து, இத்தனை கடுமையானவராக இருப்பார் என்று ஒரு காலத்திலும் எண்ணியதில்லை.

எல்லாம் அவளுக்கு முதலில் பிறந்தவனால் வந்தது. என்றாவது ஒருநாள் அவனைக் கூட்டிக்கொண்டு வருவாள் என்று அண்ணியால் எப்படி நினைக்க முடிந்தது? அவள் அப்படியானவளாக இருந்தால் அவனுக்கே அழைத்து, மகளைக் கேட்டுக்கொண்டு இங்கே வராதே என்று சொல்வாளா?

அவள் கணவன் இன்னொரு திருமணத்துக்கு மனத்தளவில் தயாராகி, அந்தப் பெண்ணின் தோள்களைப் பற்றிக்கொண்டு நின்றான் என்பதையே கடந்துவர முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் அவள், இன்னொருத்தியோடு தகாத உறவு வைத்து, குழந்தையே உண்டான தமையனை எப்படி மன்னிப்பாள்?

எல்லாவற்றையும் விடத் தனித்து வாழும் பெற்றோரைப் பற்றிச் சுபாங்கி பேசிய வார்த்தைகள்தான் அவள் இதயத்தை இன்னுமே தைத்தது. அறிந்தால் துடித்துப்போவார்கள். அதனால் அவள் எதையும் சொல்லப்போகவில்லை.

ஆனால், முகம் காட்டிக் கொடுத்துவிடுமோ என்று பயந்தாள். காரை மெதுவாகக் கொண்டுபோய் வீட்டின் முன்னால் நிறுத்திவிட்டுக் கண்ணாடியில் முகத்தை ஆராய்ந்தாள்.

அது இன்னுமே கன்றிச் சிவந்துதான் இருந்தது. மூச்சை இழுத்து வாயால் வெளியேற்றி, இமைகளைப் பலமுறை மூடித் திறந்து முகத்தை இயல்புக்கு மாற்ற முயன்றாள்.

அதற்குள் குடுகுடு என்று ஓடி வந்தார் இந்துமதி. வந்ததும் வராததுமாகக் காருக்குள் பேத்தியைத்தான் தேடினார். அவள் இல்லை என்றதும் முகம் வாடிப்போனது. அதன் பிறகுதான் ஓட்டுனரின் இருக்கையில் இருக்கும் மகளைக் கண்டு விழிகளை விரித்தார்.

“அம்மாச்சி, நீயாம்மா ஓடி வந்தனி? கார் உள்ளுக்க வர அபயனும் வந்திருக்கிறார் எண்டு நினைச்சிட்டன்.” என்றார் ஆர்வப் பரபரப்போடு.

கண்ணாடி யன்னலை இறக்கி விட்டுவிட்டுப் பொய்யாக அவரை முறைத்தாள் அன்பினி. “அதென்னம்மா நீயா எண்டு கேவலமாக் கேக்கிறீங்க? நான் ஓடமாட்டனா என்ன? இப்ப என்னட்ட லைசென்ஸ் இருக்குத் தெரியுமோ?” என்று, தன்னை அவர் கண்டுபிடித்துவிடக் கூடாது என்றே அதிகமான உற்சாகத்தைக் காட்டினாள்.

“நான் எங்க கேவலமாக் கேட்டனான். தம்பியும் வந்திருக்கிறார் எண்டு நினைச்சிட்டன்.” என்றவரை இடைமறித்து, “உங்கட தொம்பி மட்டும்தான் கார் ஓடுவாரோ? வர வரச் சேட்டை கூடுது உங்களுக்கு!” என்றுவிட்டு, “சரி சரி வாங்க, ஒரு ரவுண்ட் போயிட்டு வருவம்.” என்று அவரையும் அழைத்தாள்.

“நான் மாட்டன்! நான் உன்ன நம்ப மாட்டன்!” என்றுவிட்டு வீட்டுக்குள் நடந்தவரைக் கண்டு உண்மையாகவே பல்லைக் கடித்தாள் அன்பினி.

“இதுக்காகவே உங்களை விடுறேல்ல.” வேகமாகக் காரைவிட்டு இறங்கிப் போய், அவர் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு வந்து, மற்றப்பக்கம் இருத்திக் கதவைச் சாற்றிவிட்டு வந்து காரை எடுத்தாள். அவர் என்ன அலறியும் கேட்கவில்லை.

அவள் ரிவெர்ஸில் எடுக்கவும், “பாத்து பாத்து, அந்தப் பக்கம் என்ர குரோட்டன்ஸ் நிக்குது.” என்று பதறினார் அவர்.

ஒரு வழியாக அவள் வீதிக்கு எடுத்துக் காரைச் செலுத்தினால், “சைக்கிள் போகுது. விட்டா போய் அவரையே இடிப்பாய் போல. விலகிப் போ!” என்று அதட்டினார். வேகமாகப் போனால், “பிரேக்க பிடி, பிரேக்க பிடி!” என்று பதறினார்.

சிரிப்பும் கோபமும் சேர்ந்து வந்தது அன்பினிக்கு. “கொஞ்ச நேரம் பேசாம வாங்கம்மா. ஓடுற எனக்குத் தெரியாதா? உங்களை ஏத்தினதுதான் பிழையாப் போச்சு!” என்று அதட்டினாள்.

அவள் பேச்சை அவர் காதில் விழுத்துவதாக இல்லை. விட்டால் அவளின் மடியில் ஏறி அமர்ந்திருந்து, அவளை வழிநடத்திவிடுவார் போன்று பதறினார்.

“மெல்லப் போ பிள்ளை. ஏன் இவ்வளவு வேகம்? லைட் போஸ்ட்ல கொண்டுபோய் மோதப்போறாய். ஓடினது காணும். பேசாமக் காரைத் திருப்பு!” என்றதும் திரும்பி முறைத்தாள் மகள்.

அதற்கும் பதறினார் அவர். “ரோட்டப் பாத்து ஓடுறதை விட்டுப்போட்டு என்னை ஏன் பாக்கிறாய்?” அவர் முகத்தில் அவ்வளவு பயம்.

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார் என்று விளங்கிவிட, காரை நிறுத்திவிட்டு விழுந்து விழுந்து சிரித்தாள் அன்பினி.

“என்னம்மா?” என்றவருக்கும் முகத்தில் முறுவல்தான்.

“பின்ன என்னம்மா, அண்டைக்குக் கொழும்பில இருந்து வரேக்க பாதித் தூரத்துக்கு மேல நான்தான் ஓடினான். நல்லா ஓடுறன் எண்டு அபயே சொன்னவர். யாழ்ப்பாணம் போகேக்கையும் ஓடத் தந்தவர். ஆனா நீங்க…” என்று இன்னும் சிரித்தாள்.

சின்ன முறுவலோடு மகளைப் பார்த்த இந்துமதிக்கு மகனின் நினைவு தானாய் வந்தது.

அவனுடைய ஜீப்பிலும் அடிக்கடி பயணித்திருக்கிறார். அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் மகனின் அரசாங்க வாகனத்தில் போகிறோமே என்று அப்போதெல்லாம் ஒரு பெருமை. கடைசியில் என்னாகிப்போனது? எத்தனையோ பெருமைகளைத் தேடித் தந்தவன்தான் தீராத அவமானத்தையும் தந்துவிட்டான். நெஞ்சு அடைத்து, கண்கள் கலங்கவா என்றன.

வீடு திரும்பியபோது இந்துமதி தன் மனத்தைச் சமன்படுத்திக்கொண்டார் என்றால், அன்பினி கணவன் வீட்டில் நடந்த நிகழ்வின் பாதிப்பிலிருந்து ஓரளவுக்கு வெளியே வந்திருந்தாள்.

இருவரும் சேர்ந்து சாப்பிட்டனர். அவளின் பள்ளிக்கூடக் கதையிலிருந்து இங்கே தந்தையின் கடைவரை என்ன என்றில்லாமல் பேசினார்கள். வந்த தலைப்பாரம் கூட இந்துமதிக்குக் காணாமல் போன உணர்வு.

அன்பினி தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க, சோபாவை விட்டுவிட்டுத் தரையில் அமர்ந்து, அப்படியே தரையிலேயே உடலைச் சரித்தார் இந்துமதி. ஒரு தலையைணையைக் கொண்டுவந்து போட்டுக்கொண்டு அவரருகில் தானும் படுத்தாள் அன்பினி.

“அண்ணி தளிரை விடேல்லையோ பிள்ளை?”

அன்பினியால் உடனேயே பதிலிறுக்க முடியவில்லை. அவர் கேட்ட விதமே இதைக் கேட்பதா விடுவதா என்று இவ்வளவு நேரமாகத் தனக்குள் போராடியிருக்கிறார் என்று சொல்லிற்று.

கொஞ்சம் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “இன்னும் கொஞ்ச நாள் பொறுங்கம்மா. கட்டாயம் எல்லாம் சரியாகும். பிறகு தளிரும் வருவா.” என்றாள் ஆறுதலாக.

“அதுவரைக்கும் நானும் உயிரோட இருக்கோணுமே.”

“அம்மா!” என்று பதறிக்கொண்டு எழுந்து அமர்ந்தாள் அன்பினி. “என்னம்மா கதைக்கிறீங்க? உங்களுக்கு எத்தின வயசாயிட்டுது எண்டு இப்பிடிச் சொல்லுறீங்க?” என்றவளுக்கு நெஞ்சுக்கூடு உலர்ந்துபோன நிலை.

“வயசுக்கும் சாவுக்கும் என்ன பிள்ளை சம்மந்தம்? என்னவோ இப்ப இப்ப ஒண்டுமே பிடிக்கேல்ல. எண்டைக்காவது ஒரு நாள் மன்னிக்கலாம், மறக்கலாம் எண்டுற பிழைய அவன் செய்யவும் இல்ல. உங்கட அண்ணியும் எங்களை விளங்கிக்கொள்ளுற மாதிரி இல்ல. ஒரு வருசத்துக்கு மேல ஆச்சு. பேத்தியும் இல்லாம, நீங்களும் இல்லாம, நெஞ்சு முழுக்கக் கவலையோட படுத்தா நித்திரையும் வருதில்ல. நீங்களாவது ஒரு பிள்ளையைப் பெத்துத் தருவீங்க, கொஞ்சம் ஆறுதலா இருக்கும் எண்டு பாத்தா நீங்க அங்க, அபயன் கொழும்பு எண்டு இருக்கிறீங்க. இனி உங்க மூலம் வரப்போற பேரப்பிள்ளைக்கும் இன்னும் மூண்டு, நாலு வருசம் வெய்ட் பண்ணோணுமே.” என்றார் அவர் விரக்தியுடன்.
அவளின் பிள்ளை வரைக்கும் யோசித்துக் கலங்குவார் என்று அவள் யோசிக்கவே இல்லை. வேலைக்கு என்று யாழ்ப்பாணம் போனது தவறோ?

“என்னோடயே அங்க வந்து இருக்கிறீங்களா அம்மா.” இது நடைமுறைக்கு ஒத்தே வராது என்று தெரிந்தும் அடைத்த குரலில் வினவினாள்.

“அங்க வந்து நான் என்ன செய்ய? அப்பாவும் பாவம்.”

இப்படி மனத்தில் இருப்பதை எல்லாம் அவளிடம் கொட்டியபடியே கண்ணயர்ந்தார் இந்துமதி.

அவருக்கு உடலில் நோய் இல்லை. மனத்தில்தான். அதுவும் தனிமைதான் அவரைக் கொல்கிறது என்று புரிந்துகொண்டவளின் விழிகள் நிறைந்துபோயின.

ஒரு பழைய நைட்டி. அவரின் வயதை விடவும் மூத்துத் தெரியும் முகம், தளர்ந்துபோன மேனி என்று அவர் உடலளவிலும் உருக்குலைந்திருப்பது அப்போதுதான் அவள் கண்ணில் பட்டது. உறங்கிவிட்ட அவரின் நரைத்திருந்த கேசத்தைக் கனிவுடன் கோதிவிட்டாள்.

“குடிக்க ஏதும் தரவோ பிள்ளை.” என்றார் அந்த உறக்கத்திலும்.

“எனக்கு ஒண்டும் வேண்டாம். நீங்க படுங்கம்மா.” என்று தட்டிக் கொடுத்தாள்.

என்னவோ அவர் தனக்குக் குழந்தையாகிப் போனது போலொரு மாயை.

error: Alert: Content selection is disabled!!