அத்தியாயம் 45
அன்று மாலை களைத்துப்போய் வீடு வந்த அபயன், அங்கே அமர்ந்திருந்த அன்பினியைக் கண்டதும் அப்படியே நின்றுவிட்டான்.
இவ்வளவு தூரம் வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை. உள்ளே மெல்லிய இதம் படர்ந்தது. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் லாப்டாப் அடங்கிய பையை மேசையில் வைத்தான். கைப்பேசி, கை மணிக்கூடு, பேர்ஸ் எல்லாவற்றையும் எடுத்து வைத்தான். சேர்ட்டை கழற்றிப் போட்டான். அங்கே அவள் ஒருத்தி இருப்பதாக அவன் காட்டிக்கொள்வதாகவே இல்லை.
அவ்வளவு நேரமாக அவன் வந்தது, அவளைக் கண்டு திகைத்தது, பின் எதையும் காட்டிக்கொள்ளாமல் சாதாரணம்போல் தன் வேலைகளைப் பார்ப்பது என்று எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள் அன்பினி. அவனின் அந்த ஒட்டாத செயலில் உள்ளுக்குள் வலிக்க, “சொறி!” என்றாள் மெல்லிய குரலில்.
அவனிடம் சத்தமில்லை. உள் பனியனையும் கழற்றிக் கூடைக்குள் போட்டுக்கொண்டிருந்தான்.
“அபய்!”
“…”
“உண்மையா வேணுமெண்டு கேக்கேல்லை. என்னால அத மறக்கேலாம இருக்கு.” கரகரத்த குரலில் தன்னை அவனுக்கு விளங்கவைக்க முயன்றாள் அன்பினி.
“விளங்குது, விடு!” என்றுவிட்டு அவன் குளியலறைக்குள் நுழைந்துவிடவும் அப்படியே தொய்ந்து கட்டிலில் அமர்ந்தாள் அன்பினி. எப்படி அவனைச் சமாதானம் செய்வது என்று தெரியவே இல்லை.
அவன் குளித்து, சாதாரண ஒரு சட்டை, அரைக் காற்சட்டையுடன் வெளியே வந்தான்.
“அதான் சொறி சொல்லிட்டன் தானே.” என்றாள் அன்பினி மீண்டும்.
“நானும் விடு எண்டு சொல்லிட்டன்.”
இப்போதும் அவன் அவளைப் பார்க்கவில்லை. கண்ணாடி முன்னே சென்று நின்று கிரீமை முகத்துக்கு அப்பினான்.
அவளுக்குக் கோபம் வந்தது. இவ்வளவு தூரம் தனியாகத் தேடி வந்திருக்கிறாள் என்றுகூட இரங்கவில்லையே இவன்! அந்தக் கடுப்பில், “விடு எண்டா என்னத்த விடுறது, உங்களையா?” என்றாள்.
சரக்கென்று திரும்பி அவளை முறைத்தான் அவன்.
உள்ளே அவள் உள்ளம் துள்ளியது. அதைக் காட்டாமல், “என்ன பார்வை? நீங்க என்னை விட்டுட்டீங்க தானே? நான் ஒண்டும் சும்மா சொல்லேல்லையே!” என்றதும் கண்களை ஒருமுறை இறுக்கி மூடித் திறந்துவிட்டு, “இன்னும் எத்தின தரம் இதச் சொல்லிக்காட்டப் போறாய்?” என்று கேட்டான்.
விளையாட்டுக்குணம் மறைந்துவிட அவளுக்கும் நெஞ்சை அடைத்தது. “எனக்கும் தெரியேல்ல.” என்றாள் வேதனையோடு.
“உங்களுக்குத் தெரியுமா, நான் உங்களை விட்டாலும் நீங்க என்னை விடமாட்டீங்க எண்டு நிம்மிட்டச் சொல்லி இருக்கிறன். வீட்டுக்குப் பயந்து உங்களை விட்டு விலகிடுவனோ எண்டு எனக்கு எப்பவும் என்னிலதான் ஒரு பயம் இருந்ததே தவிர உங்களில் இல்ல. அவ்வளவு நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தந்தது உங்கட ஆளுமையான காதல். அப்பிடி இருக்க திடீர் எண்டு நீங்க என்னை விட்டுட்டீங்க. அண்ணி, நீங்க எல்லாரும் இந்தக் கலியாணம் நடக்காது எண்டு சொல்லிட்டிங்களாம், மனதில ஆசையா வளக்காத பிள்ளை எண்டு அப்பாவும் அம்மாவும் சொன்ன நேரம் அழுதாலும், ஒரு பயம் இருந்தாலும் நான் நம்பிக்கையை இழக்கவே இல்ல. இந்தப் பிரச்சினை எல்லாம் ஓஞ்ச பிறகு வருவீங்க, கதைப்பீங்க எண்டுதான் நினைச்சனான். அந்தளவுக்கு நீங்க நான் இல்லாம இருக்க மாட்டீங்க எண்டு நினைச்சனான். ஆனா நீங்க…” என்றவளால் மேலே பேச முடியவில்லை.
அபயனும் பேச்சை மறந்தவன்போல் அவளையே பார்த்து நின்றான்.
“கடைசில அந்தப் பெட்டையோட நீங்க நிண்டதப் பாத்ததும்… உண்மையா எனக்குச் சாகோணும் மாதிரியே இருந்தது. நீங்க இல்லாத ஒரு உலகத்தை யோசிக்க ஏலாத இடத்தில என்னை நிப்பாட்டிப்போட்டு நீங்க எனக்குச் செய்தது பெரிய துரோகம். மறக்கத்தான் நினைக்கிறன், நீங்க வேணுமெண்டு செய்யேல்ல எண்டு அறிவுக்கு விளங்குது. அதுவும் இண்டைக்கு நீங்க இல்லாம எனக்கு ஒரு வாழ்க்கை இல்லை எண்டுற நிலைக்குத் திரும்பவும் நான் வந்திட்டன். ஆனா நம்பிக்கை… அது வருதே இல்ல. ஒரு பயம் எப்பவும் நெஞ்சில இருக்கு. என்னால இப்ப வரைக்கும் உங்களுக்கு கோல் பண்ண முடியேல்ல. நீங்க கோல் பண்ணினாலும் இயல்பா ஏற்க முடியேல்ல. அண்டைக்கு நான் திருப்பி திருப்பி எடுக்க எடுக்க நீங்க எடுக்காம இருந்ததுதான் நினைவிலேயே நிக்குது.” என்றதும், அதிர்ந்துபோய் அவளையே வெறித்தவன் கட்டிலில் தொப்பென்று அமர்ந்தான்.
பெரும் கற்பாறையாகக் கனத்த தலையைக் கைகள் இரண்டாலும் தாங்கிக்கொண்டவனுக்கு அப்போதுதான் அவளாக இதுவரையில் அவனுக்கு அழைத்ததில்லை என்பதே புரிந்தது.
இருவராலும் மேலே பேச முடியவில்லை. ஆறிக்கொண்டு வந்த காயம் மீண்டும் கீறப்பட்டிருந்தது. அதன் பிறகு அந்த இடத்தில் கனத்த அமைதி மட்டுமே. அபயன் அசையவே இல்லை. அன்பினி நெஞ்சை அடைக்கும் உணர்வோடு அவனையே பார்த்திருந்தாள். எவ்வளவு நேரம் சென்றதோ! அவன் போய் உணவு வாங்கிக்கொண்டு வந்தான். பெயருக்குக் கொறித்துவிட்டு இருவரும் படுத்துக்கொண்டார்கள்.
அன்பினியால் அவனிடமிருந்து விலகி இருக்க முடியவில்லை. இப்படி ஒரு தனிமைக்காய் அன்று ஏங்கிய ஏக்கம் என்ன, இன்று கிடைத்தும் இப்படி அர்த்தமற்றுக் கழிப்பது என்ன?
மெல்ல நகர்ந்து அவன் வயிற்றைக் இறுக்கி கட்டிக்கொண்டு, அவன் தோளில் முகம் புதைத்தாள். அவன் அசையவே இல்லை. அப்படியே கிடந்தான்.
அது நெஞ்சை என்னவோ செய்ய, மெல்ல முகத்தைத் தூக்கி அவனைப் பார்த்து, “அபய்!” என்றாள்.
பெரிய மூச்சு ஒன்று வெளியேற, “ம்!” என்றான்.
“என்னைப் பாருங்க.”
அவனும் தலையைத் திருப்பி அவளைப் பார்த்தான். “சொறி!” என்றாள். அவன் அதற்கு ஒன்றும் சொல்லவில்லை. பார்வையை அகற்றவும் இல்லை. இருவர் பார்வையும் கவ்விக் கலந்தன. அவள் விழிகள் அவனிடம் என்ன பேசினவோ, அவள் புறம் திரும்பிப் படுத்து, அவளை அணைத்துக்கொண்டான்.
அவளும் அவன் இடுப்பைக் கட்டிக்கொண்டு வாகாக அவன் மார்புக்குள் ஒன்றிக்கொண்டாள். சில நொடிகள் அப்படியே கழிய, முகத்தை மட்டும் நிமிர்த்தி, “கோவமா?” என்றாள்.
“சேச்சே!”
“பேந்து(பிறகு)?”
“தெரியா. என்னவோ ஒண்டுக்கும் மனமில்லை.” என்றான் அவன்.
“சொறி! இனி நான் அப்பிடிக் கதைக்க மாட்டன்.”
“பரவாயில்ல படு. நாளைக்கும் எனக்கு வேலை இருக்கு.” என்றான் அவள் தலையை வருடி விட்டபடி.
மெல்லிய ஏமாற்றம் மனத்தில் படர்ந்தாலும் இப்படி அவன் கைகளுக்குள் இருப்பதே பெரும் ஆறுதலாய் இருக்க, மெல்ல உறங்கினாள் அன்பினி.
அவனால் முடியவில்லை. விழித்தே கிடந்தான். அவள் சொன்ன விடயம் அவன் நெஞ்சை அறுத்துக்கொண்டு இருந்தது. அடுத்த இரண்டு நாள்களும் இப்படியேதான் கழிந்தன. மனம் முழுக்க ஏமாற்றமும் கவலையுமாக அன்பினி புறப்பட, அவனும் வந்தான். அவள் முகம் பளீரென்று மலர்ந்தது.
அவசியம் தாண்டிய எந்தப் பேச்சும் இல்லா மெல்லிய மௌனம். ஆனாலும் அவனருகில் இருக்கிறோம் என்கிற எண்ணம், அவளை நிற்சிந்தையாய் அந்தப் பயணத்தை அனுபவிக்க வைத்தது.
அவன் காரைக் கொண்டுவந்து அவர்கள் வீட்டின் முன்னால் நிறுத்தினான். உள்ளே வா என்று சொல்ல முடியாது. இனி எப்போது அவனைப் பார்க்கக் கிடைக்கும் என்றும் தெரியாது. நெஞ்சு கனக்க, “வாறன்!” என்று முணுமுணுத்தபடி இறங்கினாள். கூடவே இறங்கினான் அவன்.
அவனும் வரப்போகிறானா என்ன? விழிகளை விரித்துப் பார்க்க, “என்ன, ரோட்டிலையே நிக்கிற பிளானா? நட!” என்றான் எழுந்த சிரிப்பை உதட்டுக்குள் மறைத்தபடி.
“வா…வாங்க!” சந்தோசத் தடுமாற்றத்தோடு அழைத்தபடி வீட்டுக்குள் ஓடினாள்.
இவர்களைச் சோடியாகக் கண்ட இந்துமதியும் திக்குமுக்காடிப் போனார். விழிகள் வேறு இலேசாகக் கலங்கிவிட, “வாங்கோ தம்பி, வாங்கோ வாங்கோ!” என்று வாஞ்சையும் சந்தோசமுமாய் வரவேற்று, அவனை உபசரித்தார்.
அவள் திருநாவுக்கரசுக்கு அழைத்துச் சொல்ல, அடுத்த இருபதாவது நிமிடம் அவரும் அங்கே நின்றார்.
அவர்களின் பரபரப்பும் சந்தோசமும் அவன் இங்கே வந்தது சரிதான் என்று சொல்லிற்று.
“நீங்க வாறீங்க எண்டு பிள்ளை சொல்லவே இலை. சொல்லியிருக்கக் கறி வாங்கி வந்து சமைக்கச் சொல்லியிருப்பன்.” தங்களுக்குள் எதுவுமே நடக்கவில்லை என்பதுபோல் இயல்பாகப் பேசினார் மனிதர்.
“அதுக்கு என்ன மாமா. இருக்கிறதைச் சாப்பிடுறதுதானே. நோர்மலா வீக்கெண்ட்தானே வாறனான். இது அன்பா அங்க கொழும்புக்கு வந்தவள். அதான் தனியா விட வேண்டாம் எண்டு நானும் வந்திட்டன்.” கண்கள் மனைவியிடம் சிரிக்க அவளைப் போட்டுக்கொடுத்தான் அவன்.
அன்பினிக்கோ பேயறைந்த நிலை.
அவள் கொழும்பு சென்றதைப் பெரியவர்களிடம் சொல்லவில்லை. தனியாகப் போகாதே என்பார்கள். இல்லையா அபயனிடம் தெரிவித்துவிடுவார்கள். சொல்லாமல் கொள்ளாமல் சென்று நின்று, அவனைச் சமாதானம் செய்ய அவளுக்கு விருப்பமாக இருந்தது. இதை எல்லாம் சொல்லி, வீட்டில் சொல்லாதே என்று சொல்லியிருந்தாள்.
அவனானால் அதைத்தான் முக்கியமாகச் சொல்லியிருந்தான். ‘இவனை… இவன் எல்லாம் திருந்திட்டான் எண்டு நினைச்ச என்னைச் சொல்லோணும்!’ என்று பல்லைக் கடித்தாள்.
அதிருப்தியுடன் மகளை ஒரு பார்வை பார்த்தாலும் திருநாவுக்கரசு அவன் முன் எதுவும் கடிந்து பேசவில்லை. ஆனால், இந்துமதி அவளை வாயில் போட்டு அரை அரையென்று அரைத்தார்.
அவசரச் சமையல் ஒன்றை முடித்து, எல்லோருக்கும் பரிமாறும் வரையிலும் அது தொடர்ந்தது. அன்பினிக்குக் காதுகள் இரண்டாலும் இரத்தம் வடிந்தது.
“நடந்து முடிஞ்சபிறகு பேசி என்ன வரக்கிடக்கு. விடுங்கோ!” என்று திருநாவுக்கரசு சொன்ன பிறகுதான் விட்டார்.
உணவு வேளை முடிந்தபின், “கொஞ்ச நேரம் ஆறுங்கோவன் பிள்ளைகள்.” என்று இந்துமதி சொல்லியும் அவள் அறைக்கு அவன் செல்லவில்லை. விறாந்தையிலேயே அமர்ந்துகொண்டான்.
தாம் இருக்கும்வரை அவன் உள்ளே போகமாட்டான் என்று தெரிந்துவிட, மனைவிக்குக் கண்ணைக் காட்டிவிட்டு எழுந்த திருநாவுக்கரசு, “நீங்க கொஞ்சம் படுத்து எழும்புங்கோ தம்பி. நான் ஒருக்காக் கடையப் பாத்துக்கொண்டு வரப்போறன்.” என்றுவிட்டுப் புறப்பட்டார்.
அதன் பிறகு இந்துமதி விடவில்லை. மகள் மூலம் அவனை அறைக்குள் போக வைத்து, குடிப்பதற்குக் கொடுத்து அவளையும் அனுப்பிவிட்டார்.
“நானும் கொஞ்சம் படுத்து எழும்பப் போறன் பிள்ளை. இப்ப எல்லாம் பகலில குட்டி நித்திரை கொண்டு பழகி, அந்த நேரம் வந்ததும் கண்ணைச் சுழட்டுது.” என்றுவிட்டு அவரும் அவர்களின் அறைக்குள் சென்று மறைந்தார்.
அவளுக்கு இன்னுமே அவன் மீது பொய்க்கோபம் இருந்தது. அறைக்குள் சென்று தண்ணீர் போத்தலை வைத்துவிட்டு வெளியே நடந்தவளை மடக்கிப் பிடித்தான் அபயன். அதே கையோடு கதவையும் சாற்றிவிட்டு அவளைப் பார்த்துச் சிரித்தான்.
“என்னவோ அந்த நாள் நினைவு எல்லாம் வருது அன்பா.” என்று நெற்றி முட்டியவன், “மிச்சத்தையும் இஞ்சையே ஆரம்பிப்பமா?” என்றான் அவள் முகம் பார்த்து.
என்ன கேள்வி இது? அவள் விலக முயல அவன் விடவில்லை. அவள் இடையைத் தன்னுடன் சேர்த்து வளைத்து, “இப்பவும் உனக்கு அந்தப் பயம் இருக்கா?” என்றான் ஒருவிதமான தவிப்புடன்.
அவள் பதில் சொல்லும் முதலே, “ப்ளீஸ் அன்பா, ஓம் எண்டு சொல்லிப்போடாத. இனி எப்பவும் உன்ன விடமாட்டன். அதுக்காக அக்காவையும் என்னால விடேலாது. இந்த விசயத்தில மட்டும் நீ சமாளிச்சுத்தான் போகோணும்.” என்றவனின் உதட்டில் விரல் வைத்துத் தடுத்தாள் அன்பினி.
“அவா என்னை எப்பிடிப் பாக்கிறா எண்டு எனக்குத் தெரியாது அபய். ஆனா அவா என்ர அண்ணி. தளிர் என்ர மருமகள். என்னாலயும் அவேய விடேலாது. நீங்க அண்ணிட்ட எனக்காகக் கதைக்கோணும் எண்டு நான் எதிர்பாக்கவே இல்ல. எனக்காக நீங்க இருக்கிறீங்க, என்ன நடந்தாலும் என்னை விடமாட்டீங்க எண்டுற நம்பிக்கையை மட்டும் தந்தா போதும்.” என்றாள் விழிகள் கலங்க.
அவன் விழிகளும் இலேசாய்ப் பனித்தன. தான் எங்கே தவறினோம் என்றும் புரிந்தது. பேசாமல் அவள் நெற்றியோடு நெற்றியை முட்டி விழிகளை மூடினான். உள்ளத்தில் மட்டும் பெரும் துடிப்பு. அவள் உள்ளம் எத்தனை அழகானது? அதைப் போய்க் காயப்படுத்தினானே!
ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்து தன் ஜீன்ஸ் பொக்கெட்டினுள் இருந்த செயினை வெளியே எடுத்தான். அவள் விழிகளையே பார்த்து, “உண்மையான தாலி கட்டேக்க கூட என்ர மனதில பாரம்தான் இருந்தது. ஆனா இந்தச் செயினை போட்டுவிட்ட அண்டைக்கா இருந்தாலும் சரிதான், இண்டைக்கா இருந்தாலும் சரிதான், நெஞ்சு முழுக்க உன்ர அன்பால நிறைஞ்சு இருக்கு அன்பா. இனி உன்னை அழவைக்கிற மாதிரி நடக்கவே மாட்டன்!” என்றபடி மீண்டும் அவள் கழுத்தில் அணிவித்துவிட்டான்.
சின்ன விம்மல் ஒன்று வெடிக்க அவன் மார்பில் சாய்ந்தாள் அன்பினி. அந்தச் செயினை அவள் இலகுவாய்க் கழற்றவில்லை. கழற்றிய பிறகு அது இல்லாமல் வாழ்வதும் இலகுவாய் இருக்கவில்லை. இதோ இப்போதுதான் என்னவோ மனதின் இண்டு இடுக்கு எல்லாம் நிறைந்த உணர்வு.
அந்த உணர்வு தந்த உந்துதலில் கண்ணீரும் சிரிப்புமாக எம்பி, அவன் உதட்டில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள். மென் சிரிப்புடன் அவளை அள்ளிக்கொண்டான் அவன். கட்டில் அவர்களை ஏந்திக்கொண்டது.

