தன் தந்தையின் புறம் திரும்பி, “அப்பா, அன்புவை நான் அப்பிடிச் சொன்னது வேணுமெண்டா பிழையா இருக்கலாம். அவனைப் பாக்காம இருந்திருக்கத் தளிர் இப்பிடி அவனுக்காகத் துடிக்கமாட்டாளே எண்டுற கோபத்தில சொன்னது. அதுக்காக என்ர பிள்ளையை அங்க விட மட்டன். விடவே மாட்டன்.” என்றாள் பயமும் பதற்றமுமாக.
“ஏனம்மா உங்களுக்கு எங்களில இவ்வளவு கோவம்? அப்பிடி உங்களுக்கு நாங்க என்ன செய்தனாங்க? நீங்க அண்டைக்குக் கூப்பிட்டு வச்சு அவமானப்படுத்தினதுக்குப் பிறகு இந்த வீட்டுப் படி ஏறவே கூடாது எண்டுதான் இருந்தனான். இண்டைக்கு அதையெல்லாம் தூக்கிப் பிடிக்காம வந்து இருக்கிறன் எண்டா காரணம் நீங்க. உங்களை இப்பிடியே விடக் கூடாது, இதில இருந்து வெளில கொண்டு வரோணும் எண்டுதான்.” என்று பொறுமையாகவே எடுத்துச் சொன்னார் அவர்.
“உங்கட மகன் செய்த வேலைக்கு வேற என்ன செய்திருக்கோணும் எண்டு நினைக்கிறீங்க? அவனால வாழ்க்கைய இழந்து நிக்கிறது நான்.” என்று கொதித்தாள் அவள்.
“என்னட்ட வந்திருக்கோணும் நீங்க. ஏன் நீங்க அதைச் செய்யேல்ல? நான் உங்களுக்கும் அன்புக்கும் வேற்றுமை காட்டி இருக்கிறனா? இல்ல, உங்கட மாமி பொல்லாதவளா நடந்திருக்கிறாவா, இல்ல அன்பு ஏதாவது அதிகாரம் செய்து இருக்கிறாவா? அந்த வீட்டை நீங்க வேற வீடா எண்டைக்காவது உணந்து இருக்கிறீங்களா? பிறகும் ஏன் நீங்க என்னட்ட வரேல்ல?” என்றவரின் சராமாரியான கேள்விகளில் தந்தை, மகள் இருவருமே திகைத்துப்போயினர்.
“இது என்ர சம்மந்தி வீடு, எங்கட மருமகளின்ர வீடு எண்டு நம்பித்தானே அண்டைக்கு இஞ்ச ஓடி வந்தனான். அப்பிடி வந்ததுக்கு எல்லாருமாச் சேர்ந்து என்ன செய்தனீங்க? அந்தளவுக்கு நானும் என்ர மனுசியும் என்ன பிழை செய்தனாங்க? அதுக்கு ஆர் நியாயம் செய்றது? இல்ல, இவ்வளவு காலமும் எங்கட பேத்தியைப் பிரிஞ்சு இருந்தோமே இதுக்கு ஆர் நியாயம் வாங்கித் தாறது?” திருநாவுக்கரசுக்கும் கோபம் வந்ததில் சூடாகவே கேட்டார்.
குழந்தைவேலுக்கு முகத்தை நிமிர்த்தவே முடியவில்லை. அன்றைக்கு இவர்களுக்கு எல்லாம் மரியாதை ஒரு கேடு என்று தோன்றிய அதே விசயம், இன்று எவ்வளவு சின்னத்தனமாக நடந்திருக்கிறோம் என்று எண்ணிக் குன்ற வைத்தது.
“அங்க ஒருத்தி பேத்தியைப் பாக்காத ஏக்கத்தில ஆஸ்பத்திரில கிடக்கிறா. இன்னுமா உங்களுக்கு மனம் இரங்கேல்ல? அவாக்கு உயிர் போற அளவுக்கு ஒண்டும் இல்ல. ஆனா, தான் செத்திடுவனோ எண்டு மனதளவில நல்லாப் பயந்துபோய் இருக்கிறா. அந்த நேரத்தில கூட மகனை அவா திரும்பியும் பாக்கேல்லை. இப்ப நான் உங்களுக்குச் சொல்லுறன், என்ர உடம்பில உயிர் இருக்கிற வரைக்கும் நான் அவனைச் சேர்க்க மாட்டன். எங்கட பிள்ளையும் அவனோட ஒரு வார்த்த கதைச்சது இல்ல. இன்னும் நாங்க உங்களுக்கு என்ன செய்யோணும்? என்ன செய்தா பயமில்லாமத் தளிரை விடுவீங்க?”
அவளிடம் இதற்குத் தகுந்த பதில் இல்லை. அதற்கென்று மகளை அனுப்பவும் ஒப்ப முடியவில்லை.
“உங்களுக்கு நடந்தது பெரும் துரோகம் தானம்மா. நியாயமே இல்லாம நீங்க பாதிக்கப்பட்ட பிள்ளைதான். உங்கட காயம் பெருசுதான். அதாலதான் நீங்க கோபப்பட்டாலும், ஒண்டு ரெண்டு வார்த்தைகளை விட்டாலும் சமாளிச்சு, உங்களுக்கு ஆதரவா இருக்கோணும் எண்டு உங்களைச் சுத்தி இருக்கிற நாங்க எல்லாரும் நினைக்கிறம். அதே நேரம் ஒவ்வொருத்தரும் அவே அவேன்ர வாழ்க்கையை வாழவும்தானம்மா வேணும். அதுதான் நியதி. உங்கள மட்டுமே பாத்துக்கொண்டு இருக்கேலாது. அப்பிடித்தான் அபயன் அன்பு கலியாணம் நடந்ததும். உங்களுக்கு வலிச்சாலும் இதுதான் உண்மை.” என்றதும் அழுகை வந்தது அவளுக்கு.
அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
“தளிர் எங்களிட்ட வாறதும் அப்பிடித்தான். அதுக்காக உங்கட மகளை உங்களிட்ட இருந்து பிரிச்சிடுவமோ எண்டு பயப்பிடுறதில என்னம்மா நியாயம் இருக்கு? நடந்தது நடந்து போச்சு எண்டு காந்தனை வீட்டுக்க எடுக்க எனக்கு எவ்வளவு நேரமாகும் எண்டு நினைக்கிறீங்க? இல்ல, என்னதான் அவன் கேடுகெட்டு நடந்திருந்தாலும் பெத்த அப்பன் என்ர கண்ணுக்கு முன்னால அவனைச் செருப்பால அடிச்சீங்களே, எனக்கு அது வலிச்சிருக்காது எண்டு நினைக்கிறீங்களா?” என்றதும், “என்ன?” என்று அதிர்ந்து எழுந்துவிட்டார் குழந்தைவேலு.
முகம் கன்ற அமர்ந்திருந்தாள் சுபாங்கி.
குழந்தைவேலுக்குத் திருநாவுக்கரசிடம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. “கடவுள் சத்தியமா இப்பிடி எல்லாம் நடப்பா எண்டு நான் நினைக்கவே இல்லை.” என்றார் மன்னிப்புக் கோரும் குரலில்.
“அப்பிடி நிறைய நீங்க யோசிக்க வேண்டாம். நான் சொல்ல வந்தது, அப்பிடி இவா நடந்தும் நான் இவாட்ட ஒரு கேள்வி கேட்டுக்கொண்டு வரேல்ல எண்டுறதைத்தான். ஏன், இது வரையில எப்பயாவது நடந்தது நடந்து போச்சு, தளிருக்காக எண்டாலும் அவனோட சேர்ந்து வாழுங்க எண்டு கேட்டிருக்கிறனா? ஏன் எண்டால் என்னாலையே அவனை மன்னிக்கேலாது. அவன் இனி ஆருக்குமே வேண்டாம் எண்டுறதில நான் அவ்வளவு உறுதியா இருக்கிறன். அப்பிடியான நானா தளிரை உங்களிட்ட இருந்து பிரிப்பன்?” என்றவரின் கேள்விக்கான பதில், அப்பா, மகள் இருவரிடமும் இல்லை.
“முதல் நீங்க எனக்குச் சொல்லுங்க. காந்தனுக்கு என்ன செய்தா உங்கட இந்த ஆத்திரம் தீரும்? என்ன செய்தா நீங்க பட்ட, பட்டுக்கொண்டிருக்கிற இந்த வேதனைக்கு எல்லாம் நியாயம் கிடைக்கும் எண்டு நினைக்கிறீங்க?”
அவளும் அதைத்தானே தினம் தினம் யோசிக்கிறாள். பதில்தான் கிடைக்க மாட்டேன் என்றது.
“என்ன செய்தாலும் தீராதம்மா. அவனுக்கு என்ன நடந்தாலும் நீங்க படுற இந்த வேதனைக்கு அது நிகராகாது. அவன் செத்தாக் கூட, செய்த பாவத்துக்கெல்லாம் அனுபவிக்காமச் செத்திட்டான் எண்டு நினைப்பம். அவன் விலகி நிண்டா இதான் சாட்டு எண்டு விட்டுட்டான் எண்டு சொல்லுவம். திருப்பி திருப்பி உங்களிட்ட வந்தா, செய்றதை எல்லாம் செய்துபோட்டு நல்லவனுக்கு நடிக்கிறான் எண்டுவம்.” என்றதும் அவள் மௌனமாய் உடைந்து அழுதாள்.
எழுந்துபோய் அவளுக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த குழந்தைவேலு, “என்னம்மா இது? அழக் கூடாது.” என்று தேற்றினார்.
திருநாவுக்கரசுக்கும் மகளைப் போன்று பாவித்த பெண் அழுவதைப் பார்க்க முடியவில்லை.
“சும்மா சும்மா அழக் கூடாது சுபா. அதுவும் தகுதியே இல்லாத ஒருத்தன் செய்ததை எல்லாம் நினைச்சு அழவே கூடாது. அழுதது, கவலைப்பட்டது, கண்ணீர் வடிச்சது எல்லாம் போதும். இனி நீங்க தைரியமா இருக்கோணும். எல்லாத்தில இருந்தும் வெளில வரோணும். தளிரைச் சந்தோசமா வச்சுக்கொள்ளுங்கோ. உங்கட மனதை அமைதியா வச்சிருக்கப் பாருங்கோ. உங்களைச் சுத்தி இருக்கிற நல்ல மனுசரோட நல்ல மாதிரி இருங்கோ.” என்று நல்ல விதமாகவே எடுத்துச் சொன்னார்.
“சில விசயங்கள் வாழ்க்கைல ஆருக்குமே நடக்கக் கூடாது. நடந்திட்டா கடந்து வாறது ஈசியே இல்ல. அது எனக்குத் தெரியும். ஆனா, வாழ்க்கை எண்டுறதே போராட்டம் தானே. என்ன நடந்தாலும் எனக்குத் தேவையானதை நோக்கி ஓடுறதுக்குப் பெயர்தானே வாழ்க்கை. எனக்கும்தான் கவலை. எனக்கு ஒண்டு நடந்தாக்கூட என்ர மனுசிக்கும் மகளுக்கும் துணையா இருப்பான் எண்டு நான் நம்பின மகன் செய்தத என்னாலயும்தான் தாங்கேலாம இருக்கு. அதுக்காக அப்பிடியே இடிஞ்சுபோய் இருந்தாச் சரியா? இனி நான் இல்லாத காலத்திலையும் என்ர மகளும் மனுசியும் தைரியமா இருக்க என்ன செய்யலாம் எண்டும் நான்தானே யோசிக்க வேண்டி இருக்கு. அப்பிடித்தானம்மா இனி நீங்களும் இருக்கோணும்.” என்றதும் குழந்தைவேலுவே நிலைகுலைந்துபோய் அவரைப் பார்த்தார்.
எப்போதும் நிமிர்ந்தே நிற்கும் மனிதர். அவரே வாய்விட்டுத் தன் மனவேதனைகளைச் சொன்னபோது அவருக்குத் தொண்டை அடைத்தது.
சுபாவால் முடியவேயில்லை. என்ன முயன்றும் முடியாமல் மௌனமாய்க் கண்ணீர் உகுத்தாள்.
“அதே மாதிரி இன்னொரு விசயத்தையும் இப்பவே உங்களிட்டச் சொல்லி வைக்கிறன். காலத்துக்கும் உங்களை இப்பிடித் தனியாவே விடேலாது. எந்தப் பிழையும் செய்யாம நீங்க தனியா இருக்கவும் கூடாது. இன்னும் ரெண்டு வருசம் உங்களுக்கு நான் டைம் தாறன். அதுக்கிடைல எல்லாத்தில இருந்தும் வெளில வந்து, இன்னொரு கலியாணத்துக்கு நீங்க தயாராகோணும். அது நீங்க பாக்கிற பெடியனா இருந்தாலும் சரிதான், நாங்க பாக்கிற ஆளா இருந்தாலும் சரிதான். ஒண்டுக்கு ரெண்டு அப்பாக்களா நிண்டு, நானும் உங்கட அப்பாவும் அந்தக் கலியாணத்தைக் கட்டாயம் செய்து வைப்பம்.” என்றதும், “என்ன கதைக்கிறீங்க? இனியும் வாழ்க்கைல ஒருத்தனை நான் நம்புவன் எண்டு நினைக்கிறீங்களா? நடந்த கலியாணமும் போதும். நான் பட்ட பாடும் போதும்.” என்றாள் சுபா கசப்பும் வெறுப்புமாக.
ஆனால், அவளுக்கு மாறாக நெகிழ்ந்து உடைந்துபோன குழந்தைவேலு, ஓடிப்போய்த் திருநாவுக்கரசை இறுக்கி அணைத்துக்கொண்டார்.
“இவ்வளவு நாளும் என்ர நெஞ்சுக்க கிடந்த விசயம் இது. எப்பிடி என்ர பிள்ளையின்ர மனம் நோகாமக் கதைக்கப்போறன் எண்டு நான் தவிக்காத நாள் இல்ல. ஆனா நீங்க இண்டைக்கு என்ர மனப்பாரத்தையே இறக்கி வச்சிருக்கிறீங்க. நீங்க சொன்ன இந்த விசயம் மட்டும் நடந்ததோ காலத்துக்கும் மறக்கமாட்டன்.” என்றார் உடைந்த குரலில்.
அவர் முதுகைத் தட்டிக்கொடுத்து, “ஏன் நடக்காது? அது நடக்கும். நீங்க கவலைப்படாதீங்க.” என்று அவரைத் தேற்றிய திருநாவுக்கரசு, “பிழையான ஒருத்தன எந்தக் காலத்திலையும் முன்னுதாரணமா எடுக்கக் கூடாது சுபா. உங்கட அப்பா, நான், உங்கட தம்பி எண்டு உங்களைச் சுத்தி இருக்கிற மற்ற ஆம்பிளைகளைக் கவனிச்சுப் பாருங்க. கெட்ட மனுசரின்ர எண்ணிக்கை சரியான குறைவு.” என்றவர் அதற்குமேல் அதைப் பற்றிப் பேசப் போகவில்லை.
முதல் அதிர்ச்சி நீங்கி அவள் தெளியட்டும் என்று விட்டவர் சொன்னது போலவே தளிரையும் தூக்கிக்கொண்டு புறப்பட்டபோது, அவரைத் தடுப்பார் அங்கு யாருமில்லை.

