கேட்பார் இன்றிக் காதல் 53 – 1

அத்தியாயம் 53

அன்று யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படுகையிலேயே அன்பினி அபயனுக்கு அழைத்து அன்னையின் நிலையைப் பற்றிச் சொல்லியிருந்தாள். அவனுக்கும் கவலையாகிப்போனது. உடனேயே புறப்பட்டு வருகிறேன் என்று அவன் சொன்னபோது, வீண் அலைச்சல் எதற்கு என்று எண்ணி, முதலில் தான் சென்று பார்த்துவிட்டுச் சொல்வதாக அன்பினி தடுத்திருந்தாள்.

திருநாவுக்கரசுடன் பேசியபோதும் அவரும் அப்படித்தான் சொல்லியிருந்தார். அவசரம் என்றால் எதைப்பற்றியும் யோசிக்காமல் சொல்லச் சொல்லிவிட்டு வைத்தாலும் அவனுக்கு அங்கேயே இருக்க மனதில்லை.

மகன் என்று ஒருவன் இருந்தும் இல்லா நிலையில் இருக்கிறார்கள். அந்த இடத்திலிருந்து அவன்தான் கவனித்துக்கொள்ள வேண்டும். அதில் இரவுக்குப் புறப்பட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு, அன்றைய மீட்டிங்கில் கலந்துகொண்டிருந்தான்.

அதை முடித்துக்கொண்டு அவன் வந்தபோது பரமேஸ்வரி பலமுறை அழைத்திருந்தார். ‘மாமிக்கு எதுவுமோ?’ மனம் அதிர வேகமாக அன்னைக்கு அழைத்தான். அவர் சொன்னவற்றைக் கேட்டவனுக்குத் தலை சுற்றியது.

தமக்கை காந்தனுக்கு அடித்ததைக் குறித்து அவனுக்கு ஒன்றுமில்லை. ஆனால், பொது இடத்தில் வைத்து அப்படி நடந்து, அவள் தன் தரத்தைக் குறைத்துக்கொண்டிருக்க வேண்டாம் என்று நினைத்தான்.

அதே நேரம் அவனுக்கு அவன் மீதுதான் கோபம் வந்தது. அவன் வராதே என்று சொல்லி, அன்பினியும் அதைக் கேட்டு வராமல் இருந்ததால்தானே அக்காவுக்கு அப்படிச் சொல்லும் துணிச்சல் வந்தது.

ஆனாலும் கூட அதனை மிக நிதானமாகக் கையாண்ட திருநாவுக்கரசு ஐயா மீது பெருமதிப்பு உண்டாயிற்று. கூடவே தமக்கையின் திருமணம் பற்றியும் பேசியிருக்கிறார் என்று அறிந்துகொண்டதில் நெஞ்சடைக்கும் உணர்வு.

உண்மையில் அதை உடைத்துப் பேச அவனும் திணறிக்கொண்டுதான் இருந்தான். அதை அவர் இலகுவாகச் செய்து முடித்துவிட்டாரே.

இன்னும் அன்பினி அவனுக்கு அழைக்கவே இல்லை. அதுவே அவள் மனநிலையைச் சொல்வது போலிருக்க உடனேயே அவளுக்கு அழைத்தான்.

*****

அங்கே கண்ணீரை அடக்கியபடி அன்னையின் அருகில் அமர்ந்திருந்தாள் அன்பினி. அபய் வீட்டுக்கு அப்பா போயிருக்கிறாரே, என்னாகுமோ என்கிற பயம் ஒரு பக்கம் என்றால், நடந்து முடிந்த சம்பவங்கள் அவளை மிக அதிகமாகப் பாதித்திருந்தன.

அப்போதுதான் அபயன் அழைத்தான். எழுந்து வெளியே வந்து அழைப்பை ஏற்று, “அபய்” என்றவளுக்குக் குரல் எழும்பவே இல்லை.

“அன்பா சொறியடி. எல்லாம் என்னால என்ன? ஒவ்வொரு முறையும் உன்னக் காயப்படுத்திக்கொண்டே இருக்கிறன்.” என்றான் வேகமாய்.

“இல்ல. அது பரவாயில்ல…” என்றவளைப் பேச விடாமல், “இப்பிடியே சொல்லிக்கொண்டு இரு நீ. என்னோட சேர்த்து எல்லாரும் உன்ன ஏறி மிதிக்கட்டும்!” என்று தன் மீதிருந்த கோபத்தில் சீறினான்.

அவள் கன்னத்தில் கண்ணீர் இறங்கியது. அதைத் துடைத்துக்கொண்டு, “நீங்க என்னை நம்புறீங்கதானே அபய்? அவர் வந்தது எனக்குத் தெரியாது. நான் அம்மாக்காகத்தான் தளிரைத் கூட்டிக்கொண்டு வந்தனான்.” என்று தழுதழுத்தவளை இப்போதும் இடைமறித்து, “இப்பிடி எல்லாம் விளக்கம் சொல்லாத அன்பா. எனக்கு உன்னைத் தெரியும்.” என்றவனின் வார்த்தைகளில் அவள் மனத்தின் பாரமெல்லாம் இறங்கிய உணர்வு.

*****

திருநாவுக்கரசு ஐயா புறப்பட்ட பிறகும் தன்னைச் சமாளித்துக்கொள்ள முடியாமல் அமர்ந்திருந்தார் குழந்தைவேலு. வைத்தியசாலையில் வைத்துத் தன் மகள் நடந்துகொண்ட முறையும், திருநாவுக்கரசு கேட்டுவிட்டுப் போன கேள்விகளும் அவரை இன்னுமே உலுக்கிக்கொண்டிருந்தன.

“அப்…பா.” தகப்பனின் அந்தத் தொடர் அமைதி இன்னுமே குத்த, மெல்ல அழைத்தாள் சுபாங்கி.

“தயவு செய்து எதுவும் கதைக்காத பிள்ளை!” பட்டென்று சொன்னவரின் முகத்தில் அப்படி ஒரு கோபம். “அந்த மனுசனுக்கு முன்னால தலை குனிஞ்சு நிக்க வச்சிட்டியே என்னை. உன்னட்ட இத நான் எதிர்பாக்கவே இல்ல. ஆனா ஒண்டு, அவர் சொன்ன மாதிரி உனக்காகத்தான் நாங்க எல்லாரும் ஒவ்வொண்டையும் யோசிச்சு யோசிச்சுச் செய்றம். அதுக்காக நீ செய்றது எல்லாம் சரி எண்டு நினைச்சுக்கொண்டு அளவுக்கு அதிகமாக் கோவப்பட்டு, மோசமா நடந்து, தேவையில்லாமக் கதைச்சு உன்ன வெறுக்க வச்சிடாத. அவ்வளவுதான் சொல்லுவன்.” என்றதும்,

“அப்பா என்னப்பா?” என்றாள் கண்ணீருடன்.

இத்தனை நாள்களும் தாங்கிய தந்தை இன்று இப்படிக் கதைக்கவும் அவளால் தாங்க முடியவில்லை.

“பின்ன என்ன சொல்லச் சொல்லுறாய்? உன்னில வச்ச பாசத்துக்காக விரும்பின அந்தப் பிள்ளையை விட்டுட்டு, நீ காட்டின ஒருத்தியக் கட்ட ரெடியா இருந்தவன் உன்ர தம்பி. அது அவனால ஈஸியா முடிஞ்சிருக்கும் எண்டு நினைக்கிறியா? ஆசைப்பட்ட பிள்ளையைக் கைவிடுறோமே, மனதில ஒருத்திய வச்சுக்கொண்டு இன்னொருத்தியோட எப்பிடி வாழுவன் எண்டெல்லாம் அவன் யோசிச்சிருக்க மாட்டானா? ஆனாலும் எதையும் காட்டாம உனக்காக நிண்டவன். அப்பிடியானவனுக்கு நீ என்ன செய்திருக்கிறாய் எண்டு யோசி. நீ இப்ப வீட்டுக்கு வராத எண்டு சொல்லிப்போட்டு வந்தது காந்தன்ர தங்கச்சிய இல்ல, அவன்ர மனுசிய.”

“அது கோவத்துல அப்பா…”

“அப்பிடி என்ன கோவம்? உன்ன உன்னாலேயே கட்டுப்படுத்தேலாத கோவம் உன்னையே அழிச்சிடும். கவனமா இரு!” என்றவருக்கு மனம் ஆறவே இல்லை.

“கோவம் எப்பவும் மனதில வைராக்கியத்தைத் தரோணும். என்னை ஏமாத்திப் போட்டுப் போனவனுக்கு முன்னால நல்லா வாழ்ந்து காட்டோணும் எண்டு நினைக்க வைக்கோணும். உன்னையும் அழிச்சு, உன்னைத் சுத்தி இருக்கிறவையும் நோகடிக்கிற கோவம் எண்டைக்கும் நல்லதில போய் முடியவே முடியாது.” என்றார் அழுத்தம் திருத்தமாய்.

அப்படியே அங்கே வாயைத் திறக்கக் கூடப் பயந்துகொண்டு நின்ற பரமேஸ்வரியிடம், “ரெண்டு பேரும் வெளிக்கிடுங்கோ. ஆஸ்பத்திரிக்குப் போயிற்று வருவம்!” என்றார் மறுக்க முடியாத குரலில்.

*****

இந்துமதி அம்மாவின் நோயைத் தீர்க்க மருந்து மாத்திரைகள் தேவையாகவே இல்லை. தளிர் போதுமாக இருந்தாள். பேத்தியைக் கண்டதும் அவர் முகத்தில் அவ்வளவு பிரகாசம். கண்ணீரும் சிரிப்புமாக அவளைக் கொஞ்சித் தீர்த்தார்.

அவளும் அப்பம்மா, அப்பப்பா, அத்தை என்று தன் சொந்தங்களை எல்லாம் சேர்த்துக் கண்டதில் குதூகலமாகிப்போனாள்.

திருநாவுக்கரசும் அன்பினியும் அவரிடம் எதையும் பெரிதாகச் சொல்லவில்லை.

சற்று நேரத்தில் வந்த அபயன் குடும்பத்தைக் கண்டதும் மூவருக்கும் மெல்லிய அதிர்ச்சி. திருநாவுக்கரசு குழந்தைவேலுவைத்தான் உடனே பார்த்தார். பயப்படும் விதமாக எதுவுமில்லை என்ற அவரின் மெல்லிய தலையசைப்பில் கலக்கம் அகன்று, அவர்களை வரவேற்றார்.

அன்பினிக்கு யாரிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. மெல்லிய குரலில் வரவேற்றுவிட்டுத் தந்தையின் அருகில் நின்றுகொண்டாள்.

அவளின் அந்த ஒதுக்கம் குழந்தைவேலுவைப் பாதித்தது. நேராக அவளிடம் சென்று, “உங்கட அண்ணிதானேம்மா. கோவத்துல அவா கதைச்சதைப் பெருசா எடுக்காம, இனி வீட்டுக்கு வரோணும் சரியா?” என்றதும் கலங்கவிட்ட விழிகளோடு தந்தையைத்தான் பார்த்தாள்.

“ஓம் எண்டு சொல்லுங்கோ பிள்ளை.” என்று ஊக்கினார் அவர்.

“சரி மாமா.” என்றாள் அவள் கரகரத்த குரலில்.

இந்துமதிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவர்கள் வந்ததே அவருக்குப் பெரும் அதிர்ச்சி. இதில் என்ன என்னவோ கதைக்கிறார்களே. எல்லோரையும் குழப்பத்துடன் மாறி மாறிப் பார்த்துவிட்டு, “என்னப்பா, ஏதும் பிரச்சினையா?” என்றார் கணவரிடம்.

அதுவே அவருக்கு ஒன்றும் சொல்லப்படவில்லை என்று சொல்லிவிட, “அப்பிடி என்ன பிரச்சினை வரக்கிடக்கு? தம்பி சொன்னதைக் கேட்டுக்கொண்டு மருமகள் வீட்டுப் பக்கமே வரேல்ல. அதான் இவர் இனி அப்பிடி இருக்கக் கூடாது எண்டு சொன்னவர். அத விடுங்கோ, நீங்க எப்பிடி இருக்கிறீங்க?” என்று அவர் அருகில் சென்று அமர்ந்துகொண்டு, இதமாய்ப் பேசினார் பரமேஸ்வரி.

error: Alert: Content selection is disabled!!