அத்தியாயம் 56
அன்றே கணவரோடு மகளைப் பார்க்கப் புறப்பட்டுவிட்டார் இந்துமதி. ஏங்கிப்போய் இருந்தவராயிற்றே.
ஒரு இடத்தில் பஸ் நின்றபோது, ஒரே விதமான மேலாடை அணிந்து கும்பல் ஒன்று ஏறியது. அருகில் இருக்கும் பண்ணை ஒன்றில் வேலை செய்கிறார்கள் என்று அந்த மேலாடையில் பொறித்திருந்த பெயரே சொன்னது.
சும்மா அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இந்துமதி அம்மா, அந்தக் கும்பலில் ஒருத்தியாக, ஒன்று ஒன்றரை வயது மதிக்கத்தக்க ஆண் பிள்ளையோடு ஏறிய நிலானியைக் கண்டதும் அதிர்ந்துபோனார். அவள்தானா என்று உற்றுக் கவனித்தார்.
அவளேதான். நெஞ்சு படபடவென்று அடித்துக்கொள்ள வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டார். அப்படியானால் அவள் கையில் இருப்பது அவரின் மகனின் மகனா? நெஞ்சில் சுளீர் என்று ஒரு வேதனை.
அவள் குழந்தையுடன் நின்றிருந்ததால் ஒரு ஆண் அவளுக்குத் தன் இருக்கையை விட்டுக்கொடுத்தான். அதில் நிலானி இவரைக் கவனிக்க வழியில்லாமல் போனது.
ஆனால், பின் பக்கமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த குழந்தை, ‘நான் உங்கள் பேரன் அப்பம்மா!’ என்று தகப்பனின் உருவை அப்படியே கொண்டு பிறந்து, அடித்துச் சொல்லிக்கொண்டிருந்தான்.
பார்க்க பார்க்கக் கண்ணீர் பெருகியது அவருக்கு. அந்தளவில் லட்டுப்போல் இருந்தான் அவன். கணவரிடம் சொல்வோமா என்று ஒரு கணம் நினைத்தார். இல்லை, வேண்டாம், இரு குடும்பங்களும் பட்டதெல்லாம் போதும், இனிப் புதிதாக எதுவும் வேண்டாம் என்று எண்ணிக்கொண்டவர் அசையவே இல்லை. பிடித்துவைத்த சிலைபோல் அமர்ந்திருந்தார்.
நான்கைந்து நிறுத்தங்கள் கழிய அந்தக் கும்பலில் பாதிப்பேர் இறங்கினர். அதில் ஒருத்தியாக நிலானியும் இறங்கினாள். அவளின் தோள் வளைவுக்கால் எட்டிப் பார்த்துக் கையசைத்துச் சிரித்தான் அவன்.
அவருக்குத்தான் கையசைத்து விடைபெற்றானா, இல்லை மீண்டும் சந்திக்கலாம் அப்பம்மா என்று சொன்னானா தெரியவில்லை, அவருக்கு நெஞ்சு வெடிக்கும் போலாயிற்று. கொண்டு வந்த தண்ணீரை அருந்தித் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டார்.
தன் குடிலை நோக்கி மகனோடு நடந்துகொண்டிருந்த நிலானியின் நெஞ்சிலும் இன்னதென்று அறியாத ஒரு பதற்றமும் நடுக்கமும். பஸ்ஸில் ஏறும்போதே இந்துமதியைப் பார்த்திருந்தாள்.
ஒருகணம் ஆடிப்போனாலும் தைரியமாகவே அந்தச் சூழ்நிலையைக் கையாண்டிருந்தாள். என்ன பயம்? இல்லை எதற்குப் பயப்பட? அவள் தவறியவளாக இருக்கலாம். தப்பானவள் இல்லையே!
அவர் இவளைக் கண்டாரா, இல்லையா என்றெல்லாம் தெரியாது. இவள் காணாதது போலவே இறங்கி வந்திருந்தாள்.
அந்தத் தெரு முழுக்க அவர்களின் பண்ணை முதலாளி அவர்களுக்காகவே அமைத்துத் தந்த குடில்கள்தான் வரிசையாக இருந்தன. அதில் ஒன்றின் படலையைத் திறந்துகொண்டு உள்ளே சென்றாள்.
அவள் வருகைக்காகவே வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த நிசாந்தன், “அக்கா, தம்பியத் தாங்கோ!” என்றபடி ஓடி வந்து சின்னவனை வாங்கிக்கொண்டான்.
“சாப்பிட்டியா?”
“ஓ! அம்மா இண்டைக்கு ராசவள்ளிக் கஞ்சியும் காச்சினவா.” என்றதும் அவள் நெஞ்சு ஒருமுறை குலுங்கி அடங்கிற்று.
தலையை உதறிக்கொண்டு அவள் வீட்டுக்குள் நுழைய, “சின்னவனைத் தாய்யா. உடம்பு கழுவிக்கொண்டு வருவம்.” என்றபடி வெளியே சென்றார் சிவகாமி அம்மா.
மண் சுவரினால் எழுப்பப்பட்டு, ஓலையால் வேயப்பட்ட ஒரு அறையும் குட்டி விறாந்தையும் மட்டுமே கொண்ட குட்டிக் குடில்தான் அது. ஒரு பக்கமாகப் பத்தி இறக்கி அதில் சமைக்கிறார்கள்.
வசதி என்று எதுவுமேயில்லை. ஆனால், நிம்மதியான வாழ்க்கை. படுத்தால் உறக்கம் வந்தது. உண்பது உடலில் சேர்ந்தது. வியர்வை சிந்தி உழைப்பது தைரியத்தைத் தந்தது.
மாற்றுடைகளை எடுத்துக்கொண்டு குளிக்கப் போனாள்.
என்று காந்தன் அவளைத் தேடிக்கொண்டு திரும்பவும் அங்கே வவுனியா வீட்டுக்கு வந்தானோ, அன்றே அவள் மனத்தில் அவனைப் பாராத தூரம் போய்விட வேண்டும் என்கிற வைராக்கியம் உருவாக ஆரம்பித்திருந்தது.
எங்குப் போவது? அதுவும் அவள் இருக்கும் நிலையில். இனியும் தீர விசாரிக்காமல், அவசரப்பட்டு, பேராசைப்பட்டு, முட்டாள்தனமாக நடந்து, எதையும் இழக்கும் நிலையில் அவள் இல்லை.
அதில் தெளிவாக யோசித்து, அறிந்தவர் தெரிந்தவர் மூலம் பேசி, பிள்ளை பிறந்ததும் அவர்களே வந்து அழைத்துப் போவதுபோல் ஏற்பாடு செய்து, காந்தனின் கண்ணில் படாமல் இங்கே வந்து சேர்ந்திருந்தாள்.
முதல் இரண்டு மாதங்கள் அரைவயிற்று வாழ்க்கைதான் என்றாலும் அயலட்டை மனிதர்களின் தயவால் காலத்தை ஓட்டியிருந்தாள். மூன்றாம் மாதத் தொடக்கமே வேலையில் சேர்ந்திருந்தாள். குழந்தைகளைப் பார்ப்பதற்கும் அந்தப் பண்ணையில் ஏற்பாடுகள் இருந்தது வசதியாயிற்று.
சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை வந்து விளையாடிவிட்டுப் போவதற்கு ஏற்ப விளையாட்டுகளும், அந்தக் காலத்துத் தமிழ் மன்னர்கள் தொடங்கி இந்தக் காலத்து மறவர்கள் வரையிலான அனைவர் பற்றிய உருவங்கள், நிகழ்வுகள் எல்லாமே காட்சிப்படுத்தப்பட்டு எழுத்துவடிவில் இருப்பதும், இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு, பறவை வகைகள், நீச்சல் தடாகங்கள் என்று பெரும் நிலப்பரப்பை உள்ளடக்கிய பண்ணை அது. விதவிதமான உணவகங்கள் கூட ஆங்காங்கே அமைந்திருந்தன.
சுற்றிப் பார்க்கவும் பொழுதினைப் போக்கவும் நம் இனம் எத்தகையது என்று தெரிந்துகொள்ளவும் என்று தினமும் மக்கள் வருகை தந்துகொண்டே இருப்பர்
அப்படி ஒருமுறை வந்த அநாதை இல்லத்துக் குழந்தைகளில் ஒருவனாக நின்ற நிசாந்தனைக் கண்டுவிட்டுத் துடித்துப்போனாள் நிலானி.
தம்பியைக் கண்டுகொண்டோமே என்று மகிழ்வாளா, இல்லை அக்கா அவள் உயிருடன் இருக்க அநாதை என்று சொல்லிக்கொண்டு அவள் முன்னால் நிற்கிறானே என்று அழுவாளா?
அந்த இல்லத்தினரோடு பேசி, அவர்கள் மூலம் சிவகாமி அம்மா இருந்த வயோதிபர் மடத்துக்குச் சென்றவள் அவரைப் பார்த்ததும் அவரைக் கட்டிக்கொண்டு கதறியிருந்தாள்.
அப்போதும் அவர் அசையவேயில்லை. அவள் தனக்கு யாருமில்லை என்றுதான் நின்றார்.
கடைசியில் நெஞ்சைக் கல்லாக்கிக்கொண்டு, “நான் உங்களுக்கு ஆருமில்லைதானே? அப்ப இவனும் உங்களுக்குச் சொந்தமில்லை தானே? தம்பிய அநாதையாக்கின மாதிரி இவனையும் ஏதாவது ஒரு கடல்லையோ குளத்திலையோ வீசி விடுங்கோ!” என்று அவர் காலில் மகனைக் கிடத்திவிட்டு, விறுவிறு என்று அங்கிருந்து நடக்கத்தொடங்கியிருந்தாள்.
அதன் பிறகுதான் அசைந்தார் சிவகாமி. அன்றிலிருந்து மகளோடு வந்து இருக்கிறார். அன்னை மகள் இருவரும் பேசிக்கொள்வதில்லை. அவள் உழைக்கிறாள். அவர் வீட்டைக் கவனித்துக்கொள்கிறார்.
நிசாந்தன் எந்த நேரம் எப்படி மாறுவான் என்று தெரியாததால் மகனை அன்னையிடம் விடுவதில்லை. இன்னுமே மெலிந்து, ஓடாகிப்போயிருந்தவரின் உடல் நிலையும் இன்னொரு காரணமாகிப் போனதில் பண்ணையில் இருக்கும் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் இடத்திலேயே விட்டெடுக்கிறாள்.
அவள் உடைகளைத் தோய்த்துப்போட்டு, குளித்து உடை மாற்றிக்கொண்டு வந்தாள். அவள் மகனும் குளித்து, புது உடைக்கு மாறி, அம்மம்மாவின் மடியில் படுத்திருந்து பாலருந்தியபடியே மாமனோடு விளையாடிக்கொண்டு இருந்தான்.
எளிய உணவுதான். ஆனாலும் வயிறார உண்டாள். வேலை பார்த்த களைக்குப் பாயில் சரிந்துகொண்டவளின் பார்வை அவர்கள் மூவரிலும். முக்கியமாகச் சிரித்துக்கொண்டிருக்கும் மூவர் முகங்களிலும்தான்.
என்னவோ வேறு ஒன்றுமே வேண்டாம் போலிருந்தது. கலைந்துபோன கூட்டைப் படாத பாடெல்லாம் பட்டு மீண்டும் கட்டிக்கொண்டிருக்கிறாள். கடைசிவரைக்கும் அவர்களுக்காகவே வாழ்ந்துவிட வேண்டும். அது போதும்.
*****
அடுத்த நான்கு மாதங்களும் அபயனுக்கு அலைச்சலான மாதங்கள்தான். ஆனாலும் சமாளித்துக்கொண்டான். பாதி நாள்களுக்கு மேல் அவன் யாழ்ப்பாணத்திலிருந்து வேலை பார்ப்பதற்கான வசதிகளைத் திவாகரும் செய்து கொடுத்திருந்தான்.
அதன் பிறகு முற்றிலுமாக வேலையை விட்டுவிட்டுக் கணவனோடு கொழும்பில் வந்து இருந்துகொண்டாள் அன்பினி. அதில் அபயனுக்கு மிகுந்த மனவருத்தம்.
“நானே யாழ்ப்பாணம் வாறன் எண்டு சொன்னனான்தானே. நீ ஏன் இவ்வளவு அவசரப்பட்டு வேலைய விட்டனி?”
“பரவாயில்ல. எனக்கு இப்ப உங்களோடயே இருக்கோணும் அபய். அடுத்த ரெண்டு வருசத்தில இன்னொரு பிள்ளை. அவே ரெண்டுபேரும் நேர்சரி போற காலத்தில என்னோட நீங்களும் முல்லைத்தீவுக்கு வந்திடோணும். ஸ்கூல் போகத் தொடங்கினதும் நான் ஏதும் வேலைக்குப் போறன். இல்லையா, டியூஷன் செண்டர் மாதிரி ஏதாவது சொந்தமாப் போடப்போறன். அதுக்கும் காசு நீங்கதான் தரோணும்.” என்று முடித்துக்கொண்டாள் அவள்.
இந்தப் பக்கம் காந்தன் விவாகரத்துக்கு எந்த மறுப்பும் தெரிவிக்காததில் சமூகமாகவே அந்த வேலை நடந்துகொண்டிருந்தது. அதே நேரம், தகப்பனின் கடைக்குச் சென்றுவர ஆரம்பித்தாள் சுபாங்கி.
அவளுக்கு என்னவோ புதிதாக ஒரு தொழிலை ஆரம்பிப்பதை விட, அவரின் தொழிலையே விரிவு படுத்தினால் என்ன என்கிற யோசனை வந்திருந்தது.
இன்னொரு திருமணத்தைப் பற்றி இன்னும் அவள் யோசிக்கவில்லை. அவளிடம் அதன் பிறகு யாரும் அதைப் பற்றிப் பேசவும் இல்லை. பட்ட காயம் ஆறி, முதலில் அவள் ஆசுவாசமாகிக்கொள்ளட்டும் என்று அவளுக்கு உறுதுணையாக இருந்தனர்.
நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மீது நம்பிக்கை பிறக்கையில்தான் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்கிற உணர்வு வரும். நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்கிற அந்த எண்ணம், அர்த்தமற்ற நம்முடைய பயங்களைப் போக்கி, நமக்கு அமைதியைத் தரும். அந்த நிலையில்தான் இருந்தாள் சுபாங்கி.
அதற்குப் பெரும் காரணமாக இருந்தவர் திருநாவுக்கரசு. அவர் மறைமுகமாக அவளை உந்தித் தள்ளிக்கொண்டே இருந்தார். ஒரு நாள் அவர்கள் வீட்டுக்கு வந்த தளிரை அவளையே வந்து அழைத்துப்போகும்படி சொன்னார். அவள் தயங்கியும் விடவில்லை.
முதல் என்பதற்கு மட்டும்தானே பயமும் பதற்றமும். முதல் முறை போனபோது பழையவை எல்லாம் நினைவில் வந்து அவளைச் சுழற்றியடிக்காமல் இல்லை. ஆனாலும் நாளடைவில் தேறிக்கொண்டாள். பிறகு பிறகு அவளே தளிரைக் கொண்டுவந்து விட்டு அழைத்துப்போகும் நிலைக்கு மாறினாள்.
நீ எங்கள் வீட்டுப் பெண் என்கிற உணர்வை இந்துமதியும் திருநாவுக்கரசும் அழுத்தமாய் அவளுக்குள் பதிய வைத்தனர். அதில் தனக்கு ஒன்றுக்கு இரண்டு குடும்பங்கள் துணையாக இருக்கிறார்கள் என்கிற எண்ணம், அவளுக்குள் அதிக தைரியத்தை விதைத்தது.
அதுவே வெளியுலகில் யாராவது அவள் வாழ்க்கை குறித்துக் கேள்வியெழுப்பினால் கூடத் தைரியமாக எதிர்கொள்ள வைத்தது.
தளிர் எல்லோருக்குமே செல்லப் பிள்ளையாகிப்போனாள். எதற்கும் ஏங்கும் நிலை இல்லாததாலோ என்னவோ தந்தையை அவள் அதன்பிறகு பெரிதாகத் தேடவில்லை. தேட அவளைச் சுற்றியிருந்த உறவுகள் விடவில்லை. உண்மையில் கண்ணின் மணியாகவே பார்த்துக்கொண்டனர்.
நாள்கள் மாதங்களாகி விரைந்ததில் அன்பினி ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். இந்துமதி அம்மாவுக்கு அவனைப் பார்த்த கணம் அந்தப் பேரனின் நினைவு வந்தது. கசிந்த விழிகளைத் துடைத்துக்கொண்டார்.
பஸ்ஸில் வைத்து அவனைப் பார்த்ததைப் பற்றி இன்றுவரை யாரிடமும் வாயைத் திறக்காத போதிலும் தன் மூன்று பேரப்பிள்ளைகளுக்காகவும் தினமும் கடவுளை வேண்டிக்கொண்டார்.
மகனுக்கு ஆறுமாதம் கடந்த நிலையில், அவர்கள் நிறுவனத்தின் இன்னொரு பிரிவை முல்லைத்தீவில் ஆரம்பித்து, அங்கேயே இருக்கும் நோக்குடன் மொத்தமாக முல்லைத்தீவுக்கே வந்து சேர்ந்தான் அபயன்.
இரு அன்னைகளினதும் கவனிப்பிலும், கவலைகள் இல்லா வாழ்க்கை தந்த நிறைவிலும் பூரித்து மலர்ந்திருந்த மனைவி, அவனை அதிகமாய் வசீகரித்தாள்.
அவன் பார்வை அடிக்கடி அவளில் பட்டு விலகுவதைக் கவனித்த அன்பினிக்கும் நிறைய நாள்களுக்குப் பிறகு மெல்லிய குறுகுறுப்பு. கணவனின் பார்வையை எதிர்கொள்ள இயலாமல் ஓடி ஒளிந்துகொண்டிருந்தாள்.
இரவு வந்து, உணவை முடித்துக்கொண்டு, மகனைத் தன் தோளில் போட்டுத் தட்டிக்கொடுத்தபடி அன்பினியின் அறையில் அங்குமிங்குமாக நடந்துகொண்டிருந்தான் அபயன்.
வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு இலகு இரவுடையுடன் அறைக்குள் வந்தவளுக்கு, இப்படி அவன் தளிரைப் போட்டுக்கொண்டு நடந்த நாள்கள் நினைவில் வந்து போயின. சின்ன சிரிப்புடன் மகனின் தொட்டிலைத் தட்டிப் போட்டாள்.
அதில் மகனைக் கிடத்தி, போர்வையால் போர்த்தி விட்டுத் திரும்பியவனின் பார்வை, இப்போது மனைவியில் நிலைத்தது.
என்னவோ புதிதாய்த் திருமணமான உணர்வு தாக்கியதில் அன்பினியால் அவன் பார்வையை எதிர்கொள்ள இயலவில்லை. சரியாக இருந்த கட்டிலை மீண்டும் தட்டிப்போட்டாள். முறுவல் விரிய பின்னிருந்து அவளைக் கட்டிக்கொண்டான் அபயன்.
அப்படியே அவளைத் திருப்பி, ஆசையாக அவள் முகத்தை நிமிர்த்திப் பார்த்தான். சிவந்திருந்த கன்னங்களும், மூடியிருந்த விழிகளும், வெட்கச் சிரிப்பில் மின்னிய இதழ்களும் அவனுக்கு அழைப்பு விடுக்க, கழுத்தில் கிடந்த அந்தச் செயினுக்கு முதல் முத்தத்தைக் கொடுத்தான்.
அவளுக்கு அவன் இதைத்தான் முதலில் செய்வான் என்று தெரியும். உதட்டோரம் சின்ன முறுவல் வழிய விழிகளைத் திறந்து அவனைப் பார்த்தாள்.
“என்ன சொல்லு, இந்த அறை தாற அந்த பீல் வேற எங்கயும் கிடைக்கிறேல்ல அன்பா.” என்று அவள் இதழ்களில் அழுத்தி முத்தமிட்டவன் மொத்தமாய் அவளை அள்ளிக்கொண்டான்.
முற்றும்.

