சதிராடும் சித்திரமே 19 – 1

அத்தியாயம் – 19

 

மறுநாள் காலையில் திவ்யதர்ஷினிக்கு எழும்பொழுதே பரபரப்பு தொற்றிக் கொண்டது. நேற்றிரவு வந்த அழைப்பால் அவள் தன் நல்ல மனநிலையைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. ஆகவே அதை ஒதுக்கிவிட்டு மேற்கொண்டு ஆக வேண்டிய வேலைகளைக் கவனித்தாள்.

 

இன்று சசிதரன் டெல்லிக்குக் கிளம்புகிறான். அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவிட்டு, “சசி, நான் போய் கொஞ்ச நேரம் வேலையை செஞ்சுட்டு மதியம் சீக்கிரம் வந்திடறேன்” என்றாள்.

 

அவனுக்கும் இன்னும் முடிக்க வேண்டிய வேலைகள் இருந்ததால் அவனும் கிளம்பிச் சென்றான்.

 

தம்பியின் முன்னால் அழ முடியாமல் மீனாட்சியிடம் சென்று ஓவென்று கதறினாள் திவ்யதர்ஷினி. தனக்கு அன்னை இருந்திருந்தால் அவர் மடியில் சாய்ந்து அழுதிருப்பாள். இல்லை, இவ்வளவு பலவீனமாக உணர்ந்திருக்கமாட்டாள்.

 

சிறுவயதில் இருந்தே அவள் அவனைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டாள். அதனாலோ என்னவோ அவளுக்கு அவனை விட்டுப் பிரிய மனம் வரவில்லை. எப்படியும் அவன் கூட்டை விட்டுக் கிளம்பப் போகிறான் என்று தெரியும். இருந்தாலும் நடைமுறையில் அது நடக்கையில் அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

 

அழுது முகம் வீங்கி இருந்தவளைப் பார்த்த மீனாட்சி அவளைச் சமாதானம் செய்தார். அன்று மதியம் உணவருந்த வந்த வத்சன் கூட அவளின் முக மாற்றத்தையும், அதற்கான காரணத்தையும் கேட்டு அவளைக் கேலி செய்தான்.

 

“அவன் என்ன இன்னும் சின்னப் பையனா? நாங்க எல்லாம் விட்டா உலகத்தையே வித்துட்டு வந்துருவோம். இந்த பொண்ணுங்களோட தொல்லையைத் தாங்க முடியலை. எப்பப் பார்த்தாலும் பாசம், அது இதுன்னு சொல்லி எங்களைக் கட்டிப் போட்டு முடக்கிடறது” எனச் சொன்னான்.

 

“உங்களுக்கு இப்பப் புரியாது. கல்யாணமாகி உங்களுக்கு ஒரு பொண்ணு வந்தா நீங்க சொல்லற பாசம் பத்தி அப்போ புரியும். குழந்தைங்க பிறந்ததுக்கு அப்புறம் பிரிவோட வலி புரியும்” என திவ்யதர்ஷினி அவனை முறைக்க,

 

“கல்யாணத்துக்கு ஆளு கிடைக்க வலை வீசி தேடிட்டிருக்கேன். சிக்குற மாதிரி இருக்கு. பார்க்கலாம் சிக்குதா, இல்லை சிக்கிட்டு சிங்கி அடிக்கப் போறேனான்னு. ஆனா நீ குழந்தைகள் வரைக்கும் திட்டம் போட்டுட்டியே” எனச் சலித்துக் கொண்டான் வத்சன்.

 

அவர்கள் பேசுவதைக் கேட்டவாறே வீட்டுக்குள் நுழைந்த மித்ரனுக்கு எரிச்சல் சுரந்தது. பின்னே வத்சன் பேசுவதைப் பார்த்தால் உள்ளுக்குள் ஏதோ பொடி வைத்துப் பேசுவதைப் போலிருக்கிறது. அவனுக்குக் கண்டிப்பாக திவ்யதர்ஷினியைப் பிடித்திருக்கிறது என்ற முடிவுக்கு வந்தான்.

 

இதை இப்படியே வளர விடக்கூடாது. திவ்யதர்ஷினி அவனுக்கானவள். அவனுக்கு மட்டுமே சொந்தமானவள். அவனின் உரிமையுணர்வு தலைதூக்க, வத்சனை உறுத்து விழித்தான்.

 

அவன் பார்வையை எதிர்கொண்ட வத்சன், “நான் எனக்கான ஆளைத் தேடுனா உனக்கென்னடா? இப்படி முறைக்கிற. உன் ஆளை ஒன்னும் நான் உன்கிட்ட இருந்து பறிக்கலையே” எனப் பரிகாசமாகச் சொல்ல, மித்ரனுக்கு கண் மண் தெரியாமல் கோபம் வந்துவிட்டது.

 

“அப்படிப் பறிச்சுப் பாரு… அப்புறம் என்ன நடக்குதுன்னு காட்டறேன்” என மித்ரன் சவால் விட,

“யாருக்கு வேணும் அந்த ரதி. நீயே வச்சு சொந்தம் கொண்டாடு” என இடக்காகச் சொன்னான் வத்சன்.

 

“ரதியும் நானும் ஃப்ரெண்ட்ஸ்னு ஆயிரம் தடவைச் சொல்லிட்டேன். உன் புத்திக்கு எட்டாதா?” எனக் கடிந்து கொண்டான் மித்ரன்.

 

பின்னே இத்தனை தடவை திவ்யதர்ஷினியின் முன்னால் ரதிப்ரியா அவன் காதலி என்று சொன்னால் அவள் விலகிப் போகக் கூடும் என்ற பயம் வந்தது மித்ரனுக்கு.

 

“சரி சரி லைட்டா எட்டிடுச்சு… ஆனா ஊரே பேசுதே நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறதா? அவங்க காதுக்கு எட்டற மாதிரி ஏதாவது செய்” என்றான் வத்சன்.

 

உண்மையே. கிஷோர் மெதுவாக யாருக்கும் சந்தேகம் வராத வகையில் தொழில் ரீதியாகப் பேச வருபவர்களிடத்தில் இதைப் பற்றி பரப்பிவிட ஆரம்பித்திருந்தான். விஷயம் காட்டுத் தீயைப் போல் பற்றி எரிந்து பரவினால் மட்டுமே மித்ரனுக்கு உறைக்கக் கூடும்.

 

அதைக் கேட்டுத் திகைத்துப் போனான் மித்ரன். முதலில் இவன் வாயை அடைக்க வேண்டும். “இங்க பாரு, வேலை செய்யற நேரத்துல வெட்டியா வந்து உட்கார்ந்து நீ பேசிட்டு இருக்குறது இல்லாம வேலை செய்யறவங்களையும் கெடுத்துட்டு இருக்குற. வீட்டுக்கு நிம்மதியா சாப்பிட வந்தா அதையாவது செய்ய விடறியா?” என எரிந்து விழுந்தான் மித்ரன்.

 

“எங்கயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறுதுங்கிற மாதிரி, யாரு மேலயோ இருக்குற கோவத்தை எம் மேலே ஏன்டா காட்டுற?” என வத்சன் அவனுடன் மல்லுக்கு நின்றான்.

 

“உனக்குத் தனியா சொல்லிட்டு இருக்கணுமா? சும்மாவா சம்பளம் கொடுக்கிறோம். போய் வேலையைக் கவனி” என அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த திவ்யதர்ஷினியிடமும் முறைத்துவிட்டு தன் அறைக்குள் சென்றான் மித்ரன்.

 

சற்றுநேரத்தில் இம்சை அரசன் நான்காவது புலிகேசி, அதாவது வத்சன் கிளம்பிவிட்டான் எனத் தெரிந்ததும் கீழே இறங்கி வந்தான் மித்ரன். மீனாட்சி தலை வலிக்கிறது என்று சற்றுநேரம் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்.

 

திவ்யதர்ஷினி கீழிருந்த அலுவலக அறையில் அமர்ந்து சித்திரங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள். அடிக்கடி கணினியில் வேறு எதையோ குறித்து வைத்துக் கொண்டாள்.

 

அவள் அங்கே இருப்பாள் என ஊகித்த மித்ரன் அந்த அறையினுள் நுழைந்தான். ஆள் அரவம் கேட்டுத் தலையை உயர்த்தி மித்ரனை ஏறிட்டுப் பார்த்தாள் திவ்யதர்ஷினி.

 

சித்திரங்களுக்கு நடுவில் தானும் ஒரு சித்திரமாய் தரையில் அமர்ந்திருந்தவளை அள்ளி எடுத்துத் தனக்குள் பதுக்கிக் கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் விசித்திரமாய் மித்ரனுக்குத் தோன்றியது.

 

அவனைப் பார்த்த மாத்திரத்தில் அவளுக்கு நேற்று நடந்தது ஞாபகத்துக்கு வர உடல் மொத்தமும் குப்பென்று மலர்ந்தது. அதே சமயத்தில் நேற்று மாலையில் வந்த அலைபேசி அழைப்பும் குறுக்கே புகுந்து அவளை அலைக்கழித்தது.

 

அனைத்தையும் மறைத்தவாறே, “ஆன்ட்டி தலைவலிக்குதுன்னு தூங்கப் போயிருக்காங்க. உங்களுக்கு ஏதாவது வேணுமா?” எனக் கீழே அமர்ந்தவாறே அவனிடம் விசாரித்தாள்.

 

‘சித்திரம் பேசுதடி… என் சிந்தை மயங்குதடி’ என்ற நிலையில் இருந்தான் மித்ரன். அவளுடன் எந்நேரமும் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை கிளர்ந்தது.

 

“வேணும்…” என நிறுத்தி இடைவெளிவிட்டவன், “நான் வேணுங்கறது கேட்டா உடனே கொடுத்துடுவியா திவி?” என அவள் இதழ்களைப் பார்த்தவாறே குறும்புடன் வினவினான்.

 

இமையோரங்களில் கசிந்த குறும்பைக் கண்டுகொண்ட திவ்யதர்ஷினி பதிலளிக்காமல் அவனையே நடுங்கும் நெஞ்சத்துடன் இமைக்காது நோக்கினாள்.

 

“நான் சொல்லற பேச்சு எதையும் கேட்கக் கூடாதுன்னு இருக்கியா திவி” என உரிமையுடன் அதட்டினான். அவன் என்ன சொல்லி இவள் எதைக் கேட்கவில்லை என்று அவளுக்குத் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. அவனே விளக்கினான்.

error: Alert: Content selection is disabled!!