சதிராடும் சித்திரமே 21 – 2

‘ஏன் இத்தனை மூர்க்கமாக நடந்து கொள்கிறான்?’ என எழுந்து திரும்பி வெற்று விழிகளுடன் அவனை வெறித்தாள். அவன் முதுகு காட்டி நின்று கொண்டிருந்தான்.

 

“போதுமா, உங்க ஆத்திரம் தீர்ந்திடுச்சா? நம்ம வாழ்க்கையில் முதல் கோணல், முற்றிலும் கோணல் இல்லையா?” என அவனிடம் கேட்க, அதுவரையில் திரும்பி நின்றிருந்தவன் மெல்ல அவளைப் பார்த்தான்.

 

அவள் நெற்றியிலிருந்து ரத்தம் கசிவதைப் பார்த்து, “திவி” எனப் பதறியவாறே அவளருகில் மித்ரன் வர,

 

வலது கையை முன்னால் நீட்டி அவனைத் தடுத்து நிறுத்தியவள், “அங்கேயே நில்லுங்க. இதுக்கு மேல நீங்க என்னைத் தொட்டுப் பேசறதை நிறுத்திக்கோங்க. உங்களுக்கு அந்த அருகதை கொஞ்சமும் கிடையாது” எனப் படபடவென்று பட்டாசாய் வெடித்தாள்.

 

‘அருகதை இல்லையா? இவள் யார் அதைச் சொல்வதற்கு?’ என வெந்நீர் ஊற்றைப் போல் உள்ளே கொதித்தான் மித்ரன்.

 

“இத்தோடு நம்ம பேசிக்கவே வேண்டாம். நீங்க யாரோ, நான் யாரோ” எனப் பொரிந்துவிட்டு அதற்குமேல் அவள் அங்கே நிற்கவில்லை. விடுவிடுவென்று கதவைத் திறந்து கொண்டு வெளியேறிவிட்டாள்.

 

எப்போது ரதியைத் திருமணம் செய்து கொண்டிருப்பேன் என்று சொன்னானோ அப்போதே அவள் மனம் சுக்கு நூறாக உடைந்து போனது. இதற்குமேல் அதை ஒட்ட வைத்து என்ன செய்யப் போகிறாள்?

 

ஆனால் உடைந்த துண்டுகளை இவன் முன்னால் கடைபரப்பி வைத்துக் காட்டிக் கொண்டு நிற்கக் கூடாது என்றே அங்கிருந்து கிளம்பினாள்.

 

அவ்வளவு தானா? இவள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள்? சும்மா வருவாளாம். காதல் என்று சொல்வாளாம். பின்னே உண்மைத் தெரிந்ததும் ஒன்றுமே நடக்காததைப் போல் கிளம்பிவிடுவாளாம். அவனைச் சமாதானம் கூடச் செய்ய முயற்சிக்கவில்லையே.

 

அப்படியென்றால் இவளுக்கு ஒன்றுமேயில்லையா? தன் மேல் சிறிதும் காதல் இல்லையா?

 

ஆனால் அதையும் விட முக்கியம், அவனால் அவளுக்கு அடிபட்டிருக்கிறது. போய் என்னவென்று பார்ப்போம் என அவன் வெளியில் வர, மீனாட்சி பதட்டதுடன் திவ்யதர்ஷினியின் நெற்றியின் மேல் கை வைத்து அழுத்திக் கொண்டிருந்தார்.

 

“ஆன்ட்டி, பெருசா ஒண்ணுமில்லை… தெரியாம இடிச்சுட்டேன். போய் முதல்ல கழுவிட்டு வரேன்” என அவள் அங்கிருந்த குளியலறையை நோக்கி நகர ஆரம்பித்தவள் நின்று,

 

“சாரி ஆன்ட்டி, நீங்க ப்ரூஃப் பார்க்கச் சொன்ன அந்த ஓவியத்துல லைட்டா இரத்தம் பட்டிடுச்சு” எனச் சைகையில் சொல்ல, அவரோ அதைப் பற்றிச் சற்றும் அக்கறை கொள்ளவில்லை.

 

நிற்காமல் ஒழுகிக் கொண்டிருக்கும் இரத்தத்தை எப்படி நிறுத்துவது என்ற யோசனையே முதன்மை பெற்றிருந்தது அவருக்கு. எப்பொழுதும் போல் மதியநேரத்தில் அங்கு வரும் வத்சன் அங்கே வந்தான்.

 

அவள் நெற்றியிலிருந்து ரத்தம் வழிவதைப் பார்த்ததும் பதறிப் போனவன், “ஹேய் தர்ஷ் என்ன ஆச்சு?” எனத் தன் ‘பேன்ட் பாக்கெட்டி’ல் இருந்த கைக்குட்டையை எடுத்து அவள் நெற்றியில் ஒற்றினான்.

 

அதைப் பார்த்ததும் மித்ரன் எரிமலையாய் வெடித்தான். அவன் தொடுவதற்கு அருகதை இல்லையாம். இவன் அவளைத் தொட்டுப் பேசலாமா? இவனுக்கு மட்டும் என்ன அருகதை இருக்கிறது?

 

குபுகுபுவென்று நெஞ்சில் பற்றிய தீ, பிழம்பை வார்த்தைகளாய்க் கக்கியது. “ஒரு சின்னக் காயத்துக்குப் போய் மண்டை உடைஞ்ச மாதிரி இத்தனை ஆர்ப்பாட்டமா? எதுக்குத் தேவை இல்லாம சீன் கிரியேட் பண்ணிட்டிருக்கீங்க?” என மித்ரன் சுள்ளென்று வினவினான்.

 

எவ்வித சலனமுமில்லாமல் நேருக்கு நேராக அவனை ஏறிட்டுப் பார்த்தாள் திவ்யதர்ஷினி.

 

வத்சனோ வேற்றுக் கிரகவாசியைப் பார்ப்பது போல் பார்த்து, “கொஞ்சமாவது மனிதாபிமானத்தோட நடந்துக்கோ. ஏன் இப்படிக் கல் மனசுக்காரனா இருக்க?” என மித்ரனைச் சாடினான்.

 

“ஆமா நீங்க எல்லோரும் மனுசங்க. நான் மட்டும் மனுசனே இல்ல” என ஆத்திரத்தில் மீண்டும் கத்திவிட்டு விறுவிறுவென்று தன் அறையை நோக்கி மேலேறினான்.

 

இதற்கு மேல் அங்கேயே நின்றால் அவனே தன் கோபத்திற்கான காரணத்தை அவர்களிடம் பறைசாற்றிவிடுவான் என்ற அச்சம் பிறந்தது. அதனாலேயே அங்கிருந்து அகன்றான் மித்ரன்.

 

அதற்குள் திவ்யதர்ஷினி யாரும் பார்க்காத வண்ணம் அகன்று குளியறைக்குள் புகுந்து கொண்டாள். மீனாட்சிக்கு என்ன நடக்கிறதென்றே புரியாமல் மேலே செல்லும் மகனையும் கீழே நின்றிருந்த வத்சனையும் மாறி மாறி கலக்கத்துடன் பார்த்தார்.

 

“விடுங்க சித்தி அவன் குணம் உங்களுக்குத் தெரியுமே. சின்ன விசயத்துக்கு எல்லாம் சீன் போடுவான்னு. நான் போய்ப் பார்க்கிறேன்” எனச் சைகையில் சொன்னவன் மித்ரனை விடக் கூடாது எனக் கங்கணம் கட்டிக் கொண்டு அவனைப் பின் தொடர்ந்து மேலேறிச் சென்றான்.

 

அறையின் கதவைத் தட்டக் கூட இல்லை. படாரென்று திறந்து கொண்டு உள்ளே செல்ல, மித்ரன் இருப்பதற்கான அரவமே இல்லை. மித்ரன் சொந்த உபயோகத்துக்கான கைப்பேசி படுக்கையில் கிடக்க, திரை ஒளிர்ந்து கொண்டிருந்தது.

 

அதன் மேல் கண்களை ஓட்டிய வத்சன் அதில் தெரிந்த புகைப்படத்தைப் பார்த்து நெற்றியைச் சுருக்கினான்.

 

சில மாதங்களுக்கு முன்னால் திவ்யதர்ஷினி மித்ரனின் வீட்டில் பரதநாட்டியம் ஆடிய பொழுது எடுத்தப் புகைப்படம் போலிருந்தது. அதில் அபிநயம் பிடித்துக் கண்களில் அவள் காட்டிய பாவத்தை ரசித்துக் கொண்டிருக்கலாம் போலிருந்தது.

 

சற்றுமுன்னர் வரையில் அந்தப் புகைப்படத்தை மித்ரன் பார்த்துக் கொண்டிருந்தான் என்று புரிந்து கொள்ள வத்சனுக்குப் பெரிதாக மூளை தேவையில்லை. ஆனால் ஏன்?

 

சிந்தனையைக் கலைக்கும் வகையில், “என்னை எல்லாத்துக்கும் தொந்தரவு செஞ்சிட்டு இருந்தீங்கன்னா நீங்க எதுக்கு வேலைக்கு இருக்கீங்க? நான் வந்து எல்லா வேலையையும் செஞ்சு கொடுக்கறதுக்கா சம்பளம் வாங்கறீங்க?” என மித்ரனின் குரல் பால்கனியில் இருந்து கேட்டது.

 

திவ்யதர்ஷினியின் புகைப்படத்தைத் தன் சொந்த கைபேசியில் பார்த்துக் கொண்டிருந்த பொழுது அலுவல் சம்பந்தமாக அலுவலக கைபேசியில் அழைப்பு வந்திருக்கிறது என்று வத்சனுக்குப் புரிந்தது. நடுவில் தொந்தரவு செய்வதால் கோபப்படுகிறான் என்று நினைத்தான் வத்சன். ஆனால் திவ்யதர்ஷினியின் மீதும் கோபப்பட்டானே.

 

“அந்த ப்ராஜக்ட் எப்படியும் நமக்கு வேணும். அதற்கான வேலையைப் பாருங்க” என மித்ரன் எதிர்முனையில் இருந்த உதவியாளரைப் பிடிபிடி என்று பிடித்துக் கொண்டான்.

 

‘அப்படியென்றால் இத்தனை நாட்கள் அவன் திவ்யதர்ஷினியை மனதிற்குள் வைத்து பூஜித்துக் கொண்டிருக்கிறானா என்ன?’ என வத்சன் யோசித்தான். உலகின் எட்டாவது அதிசயமாக அதை நினைத்த வத்சன், கைப்பேசியை அப்படியே படுக்கையில் போட்டுவிட்டு அரவமில்லாமல் அறையை விட்டு வெளியேறினான்.

 

கீழே இறங்கிச் சென்ற வத்சனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. திவ்யதர்ஷினியை அவன் விரும்பினால் அதை அவளிடம் சொல்ல வேண்டியது தானே? எதற்காக இப்படிக் கோபப்படுகிறான்?

 

ஒருவேளை இருவருக்குள்ளும் ஏதாவது சண்டை மூண்டுவிட்டதோ? குழப்பத்துடன் கீழே இறங்கிச் சென்றவனுக்கு திவ்யதர்ஷினி அலுவலக அறைக்குள் நுழைவது தெரிந்தது.

 

அவன் சித்தி எங்கே இருக்கிறார் என நோட்டம் விட்டுவிட்டு அவளைப் பின் தொடர்ந்து சென்றான் வத்சன். அறையின் கதவின் மேல்சாய்ந்து கைகளைக் கட்டிக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

error: Alert: Content selection is disabled!!