அத்தியாயம் – 23
திவ்யதர்ஷினிக்குக் குண்டடிப்பட்ட அடுத்த நிமிடமே மீனாட்சியும் அதிர்ச்சியில் மயங்கி சரிந்து விழுந்தார். வேக நடையுடன் மேடையை நோக்கி வந்த வத்சன் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான். உடனே துரிதமாகச் செயல்பட்டு அவர்கள் இருவரையும் நேராக மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து மற்றவர்களும் அங்கே வந்து சேர்ந்தனர். காவல்துறையினர் வந்து வேண்டிய விசாரணையைச் செய்துவிட்டு அப்பொழுது தான் கிளம்பினர்.
விஷயம் கேள்விப்பட்டு முரளிதரன் ஒரு பக்கம் மூர்ச்சையானர். அவருக்கும் ட்ரிப்ஸ் கொடுத்து வேறொரு அறையில் வைத்திருந்தார்கள். உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.
சசிதரன் தனியாகத் திண்டாடிப் போனான். ஒரு பக்கம் தன் தமக்கை, மறுபக்கம் தந்தை. யாருக்காக அழுவது என்று கூடத் தெரியவில்லை. ஆனால் அவன் தந்தை இப்படி மயங்கியதும் ஒரு விதத்தில் நல்லதே என்று நினைத்தான்.
இல்லையென்றால் அவரைச் சமாளிப்பது பெரும் பாடாகியிருக்கும். முரளிதரன் அன்று மகள் மின்தூக்கியில் மயங்கி விழுந்ததற்கே தன் உயிர் போனதைப் போல் துடித்துப் போனார், இன்று கேட்கவா வேண்டும்? என்ன செய்வார் என்றே அவனுக்குத் தெரியாது.
திவ்யதர்ஷினியின் உயிருக்கு ஆபத்து என்று கேள்விப்பட்டதும் சந்தோஷ் உடனே தன் பெற்றோர்களுடன் விமானத்தில் சென்னைக்குப் பறந்து வந்தான். நேராக அவன் மருத்துவமனைக்குச் செல்ல, அங்கே கிஷோரும் ரதிப்ரியாவும் இருந்தனர்.
சந்தோஷூக்குக் கிஷோரை ஏற்கனவே தெரியும். தொழில் தொடங்க அவன் நடத்தி வரும் ஃபைனான்ஸில் கடனுதவி கேட்டு வைத்திருந்தான். கிஷோரைப் பார்த்த அடுத்த நொடியே அவன் சட்டையைப் பற்றிக் கொண்டு பளார் பளார் என்று அவன் கன்னத்தில் அறைந்தான் சந்தோஷ்,
“ஏன்டா, மித்ரன்கிட்ட பொய் சொன்னா தர்ஷியை எதுவும் செய்யமாட்டேன்… அவள் உயிருக்கு எந்தப் பாதிப்பும் வராதுன்னு சொன்ன. இப்போ என்னடா பண்ணி வச்சிருக்க? அவ என்ன தப்பு பண்ணினா? உங்க மாதிரி பணக்காரங்களுக்கு எல்லாம் எங்களை மாதிரி மிடில் கிளாஸ் குடும்பத்தோட உயிரெல்லாம் துச்சமாப் போச்சு இல்லை?” என அகங்காரத்துடன் கத்தினான் சந்தோஷ்.
சிறு வயதிலிருந்து உடன் வளர்ந்தவள் அவள். அவனுக்கு மிகவும் பிடித்தவள். அவர்கள் இருவரும் வாழ்க்கையில் இன்பத் துன்பங்களை ஒன்றாகக் கடந்து வந்தவர்கள். ஒரே அன்னைக்குப் பிறக்கவில்லை என்றாலும் அவனுக்கு அவள் மேல் அலாதிப் பிரியம் இருக்கிறது. அதற்காக தங்கை என்றெல்லாம் அவன் எண்ணவில்லை.
அதே போல் ஒரு தோழியாக அவளைத் தாங்கினான். அவள் மேல் நேசம் இருக்கிறது. ஆனால் ஈர்ப்பில்லை. அன்பிருக்கிறது! ஆனால் காதலில்லை. அவளுக்காக உயிரையும் கொடுப்பான். அவளுக்கு ஒன்று என்றால் உலகையே எதிர்ப்பான். இந்த உறவை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் இருவரைத் தவிர.
அதனால் தான் கிஷோரின் கைகளில் அவன் தொழில் தொடங்குவதற்குப் பணம் இருந்தும் அதைத் துச்சமெனத் தூக்கி எறிந்தான். திவ்யதர்ஷினியின் உயிருக்கு முன்னால் அவனுக்கு எதுவும் பெரிதாகத் தெரியவில்லை.
அதிர்ந்த விழிகளுடன் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான் மித்ரன்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிஷோர் அவனை அழைத்து அவனுக்குப் பண உதவி வேண்டுமா என்று கேட்டான். சந்தோஷூக்குச் சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை. ‘ஆமாம்’ என அவனது தேவைகளைப் பற்றிக் கிஷோரிடம் பகிர்ந்து கொண்டான்.
அப்படி அவன் பண உதவி செய்வதென்றால் அவன் சொல்லும்படி செய்ய வேண்டும் என சந்தோஷிடம் கட்டளையிட்டான் கிஷோர். அதாவது அவனும் திவ்யதர்ஷினியும் காதலிப்பதாக மித்ரனை அழைத்துச் சொல்லச் சொன்னான்.
அதைக் கேட்ட சந்தோஷூக்குப் பயங்கரமாகக் கோபம் வந்துவிட்டது. ‘யாரைப் பார்த்து மிரட்டுற? எனக்கு அந்தப் பணம் தேவையே இல்லை’ எனக் கத்திவிட்டு அழைப்பை வைத்து விட்டான்.
‘என்ன நடக்கிறது? ஏன் அப்படி மித்ரனிடம் சொல்லச் சொன்னான்?’ என சந்தோஷ் கோபத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்க, அவனை மீண்டும் அழைத்தான் கிஷோர்.
‘இங்க பாரு. என் தங்கச்சியோட வாழ்க்கை எனக்கு ரொம்ப முக்கியம். ரதி மித்ரனை உயிருக்குயிரா விரும்பறா. நடுவுல திவ்யதர்ஷினி வந்து குட்டையைக் குழப்பிட்டு இருக்கா. நீ மட்டும் நான் சொன்ன மாதிரி செய்யாட்டி அப்புறம் திவ்யதர்ஷினியின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை’ என மிரட்டிவிட்டு வைத்தான்.
‘இது என்ன தேவையில்லாத பிரச்சனை?’ என்று எண்ணிய சந்தோஷ் என்ன செய்வது என்று யோசித்தான். அவனுக்கு திவ்யதர்ஷினியின் மேல் எந்தச் சந்தேகமும் எழவில்லை. அந்த மித்ரன் ஆரம்பத்திலிருந்தே அவளுடன் முட்டிக் கொண்டிருக்கிறான்.
இப்போது எந்த நோக்கத்தில் மித்ரன் அவளைப் பின் தொடர்ந்து செல்கிறான் என்றும் தெரியவில்லை. இப்போது தான் அவள் தோழி பவித்ராவால் வந்த பிரச்சனை தீர்ந்தது என்று பார்த்தால் மறுபடியும் பிரச்சனையா?
அத்தோடு தானும் அருகிலில்லை அவளை எந்நேரமும் இக்கட்டிலிருந்து காப்பாற்ற. பேசாமல் கிஷோர் சொல்வதைப் போல் சொல்லிவிட்டால் மித்ரன் தானாக விலகி விடுவான். திவ்யதர்ஷினியும் பாதுகாப்பாக இருப்பாள். அது ஒன்று மட்டுமே அவனுடைய இலக்காக இருந்தது.
அது மட்டுமல்லாமல் சந்தோஷால் உடனே கிளம்பி டெல்லியிலிருந்து சென்னைக்கு வர இயலாது. இப்போது தான் அனைத்தும் சீராகப் போய்க் கொண்டிருக்கிறது. சாதாரணப் பொய். அதுவும் ஏற்கனவே தன் பெற்றோர்களிடம் சொன்ன பொய் அல்லவா? அதை மித்ரனிடமும் அழைத்துச் சொல்லிவிட்டால் போதும்.
அதன்பிறகு நேரில் திவ்யதர்ஷினியைச் சந்தித்து உண்மையை விளக்கிக் கொள்ளலாம் என்று எண்ணி கிஷோரை அழைத்தான் சந்தோஷ்.
மித்ரனிடம் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்டதும் ஆடிப் போனான் சந்தோஷ். மித்ரன் அவளுக்கு முத்தம் தந்தானா? திவ்யதர்ஷினி தன்னிடம் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லையே.
ஒருவேளை மித்ரன் அவளைக் கட்டாயப்படுத்தினானோ? அவனை எதிர்த்து இவளால் எதுவும் செய்ய முடியவில்லையோ? எப்படியோ இந்தப் பணக்காரர்களின் வலைக்குள்ளிருந்து அவளைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்தான் சந்தோஷ்.
கிஷோர் திட்டமிட்டதைப் போலவே அனைத்தும் நடந்தேறின. முதலில் ரயில் நிலையத்துக்குச் சென்ற திவ்யதர்ஷினியின் அலைபேசியைக் காணாமல் போக வைத்தான் கிஷோர். பின்னர் மித்ரனை அழைத்துச் சரமாரியாகக் கத்தினான் சந்தோஷ்.
மறுநாள் திவ்யதர்ஷினி மித்ரனின் கைப்பேசியிலிருந்து அழைத்த பொழுதும் அவன் உடன் இருக்கிறான் என்று புரிந்து கொண்டு அதே கதையைத் தொடர்ந்தான் சந்தோஷ். மொத்தத்தில் பெரிய வலையை விரித்து ஒவ்வொரு இரையாக விழுங்க ஆரம்பித்தான் கிஷோர். அதில் மிகப் பெரிய இரை, மித்ரன்!
சில நொடிகளிலேயே தன்னைச் சுதாரித்துக் கொண்ட கிஷோர் கழுத்தின் மேலிருந்த சந்தோஷின் கையைப் பற்றி உதறினான்.
“என் சட்டையை விடு. நான் உன்னை மிரட்டினது உண்மை. ஆனா அவளோட உயிருக்கு ஆபத்து விளைவிக்க நினைச்சிருந்தா நான் நேரா திவ்யதர்ஷினியையே சுட்டிருப்பேனே. வந்த குண்டு மித்ரனைக் குறி வச்சு வந்தது. அவனுக்குத் தொழில்ல நிறைய எதிரிங்க இருக்கிறாங்க. முதல்ல யார் இந்தக் காரியத்தைச் செஞ்சதுன்னு கண்டுபிடிக்கலாம். அப்புறம் என் மேல கோபப்பட்டுக்கோ” என்றான் கிஷோர்.
அவன் சொல்வதில் உண்மை பொதிந்திருக்க அனைவரும் அமைதியானார்கள். கோபம் சற்று தணிந்ததும் கையை உதறிய சந்தோஷ் அங்கே நின்றிருந்த மித்ரனையும் கிஷோரையும் முறைத்துப் பார்த்தான்.
“என் தங்கை விரும்பினது கிடைக்க மெனக்கெடுவேன். அதற்காக உயிரையெல்லாம் கொல்லற அளவுக்கு நான் ஒன்னும் கொடுமைக்காரனோ, கொலைகாரனோ இல்லை. முதல்ல குற்றவாளியைக் கண்டுபிடிங்க” என்றான் கிஷோர்.
மித்ரன் சத்தியமாக இந்தத் திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. ஆக சந்தோஷ் தன்னிடம் கூறியது அனைத்தும் பொய்யா? அதுவும் எதற்காக? தோழி என்று நம்பிய ரதிப்ரியா தன்னை விரும்புகிறாள் என்ற ஒரே காரணத்திற்காக.
அண்ணன்-தங்கை இருவரையும் ஏமாற்றத்துடன் பார்த்த மித்ரன், “உங்க ரெண்டு பேரையும் எவ்வளவு நம்புனேன்டா. இப்படி ஏமாத்திட்டீங்களே?” என விரக்தி நிறைந்த குரலில் சொன்னான்.
நெஞ்சுக்குள் திகுதிகுவென்று நெருப்பெரிந்ததைப் போல் உணர்ந்தான். இவர்களின் சதியால் தான் உயிருக்கு உயிராக நேசித்தவளை என்னவெல்லாம் பேசிவிட்டான்? அவள் தன்னை மன்னிப்பாளா? கண்டிப்பாக மாட்டவே மாட்டாள். பின்னே விசாரிக்கக் கூடச் செய்யாமல், அவளை நம்பாமல் குற்றவாளி என்று முத்திரை குத்தி தண்டனையையும் வழங்கிவிட்டானே.
மித்திரனுக்குத் துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டு அழுகை பீறிட்டது.

