சதிராடும் சித்திரமே 4 – 3

மீனாட்சியிடம் என்ன ஏது என்று ராம்பிரசாத் எதுவும் விசாரிக்கவில்லை. எதற்காக இப்படிச் செய்தாய் என்று ஓங்கி ஓர் அறை விட, தரையில் சுருண்டு போய் விழுந்தார் மீனாட்சி. அதைப் பார்த்த மீனாட்சியின் தமக்கைக்கும் தந்தைக்கும் கோபம் வந்துவிட்டது. அவர்களின் கண் எதிரேயே தங்கள் வீட்டுப் பெண்ணை இப்படி நடத்தினால் இனி அவர் வீட்டில் என்னென்ன செய்வார்களோ?

 

‘என்ன ஏது என்று விசாரிக்காமல் அவர் எப்படி தன் தங்கையை அடிக்கலாம்’ எனத் தமக்கையும், வாய் பேச இயலாத மகளை இப்படிக் கொடுமைப்படுத்துகிறான் எனத் தந்தையும் மீனாட்சிக்காகப் பரிந்து பேச,

 

“இவளுக்குக் காசு முக்கியமா போச்சு. என் அம்மா அப்போவே சொன்னாங்க இவ காசுக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு. நான் கேட்டேனா? இனிமேல் அவளுக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. மகனை சொந்தம் கொண்டாடிக் கொண்டு வந்திட வேண்டாம்” என்று கத்திவிட்டு திரும்பினார் ராம்பிரசாத்.

 

மீனாட்சி எத்தனையோ கதறியும், தான் உடல்நிலை தேறி வந்ததால் மட்டுமே அவர் இப்படி நடந்து கொள்கிறார் என்று தவறாக எடை போட்டார் ராம்பிரசாத். அதனால் இனிமேல் தன் முகத்திலேயே முழிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டுத் திரும்பி விட்டார்.

 

அன்றிரவே மீனாட்சியின் தந்தை மாரடைப்பால் காலமானார். அதன்பிறகு மீனாட்சியின் அக்காவும் அக்கா கணவனும் எத்தனையோ முறை நடந்து பார்த்தும் ராம்பிரசாத் மசிவதாக இல்லை. இதில் அவர் அன்னையைக் குற்றம் சாட்டினால் அமைதியாக இருப்பாரா? அதன்பிறகு அவர்களைச் சந்திக்கக் கூட அனுமதிக்கவில்லை.

 

இக்கதையை அறிந்த மீனாட்சியின் அக்கா மகனான வத்சன், பெரியவனானதும் தன் சித்தியை குடும்பத்துடன் ஒன்று சேர்க்கப் போவதாகச் சொல்லிவிட்டே ஒரே கல்லூரியில் படிக்கும் மித்ரனுடன் நட்பு கரம் நீட்டினான்.

 

வத்சனுக்கு மீனாட்சியை மிகவும் பிடிக்கும். அவன் தன் பெற்றோர்களிடம் வளர்ந்ததை விட மீனாட்சியிடமே அதிகநேரம் இருந்தான். அதனால் மீனாட்சியை ஓர் அன்னை போல் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

 

மித்ரனிடம் இருந்து கிடைக்காத பாசமும் அன்பும் வத்சனிடமிருந்து மீனாட்சிக்கு அள்ள அள்ளக் குறையாமல் நிறையக் கிடைத்தது.

 

இளங்கலையில் வத்சனும் மித்ரனும் ஒரே கல்லூரியில் படித்து முடித்தனர். அதன்பிறகும் மித்ரன் சேர்ந்த அதே பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பையும் தொடர்ந்தான் வத்சன்.

 

படித்து முடித்து இருவரும் லண்டனில் வேலையில் இருந்தனர். எப்படி மித்ரனிடம் அவன் அன்னையைப் பற்றிப் பேசுவது என யோசித்துக் கொண்டிருக்கையில் காலமே அதற்கு வழி காட்டியது.

 

என்ன, அந்த வழியில் இழப்பின் வலிகளும் நிறைந்திருந்தன. திடீரென வந்த செய்தி மித்ரனின் தலையில் இடியாய் இறங்கியது. மித்ரனின் தந்தை மாரடைப்பால் இறந்து போனதாகத் தகவல் வர அவனுக்கு உடலெல்லாம் நடுங்கிப்போனது.

 

அதே சமயத்தில் மித்ரன் அன்னை மீனாட்சி அவனை அழைத்து ஓவென்று கதறினார். அவரால் எதுவும் பேச முடியவில்லை. இருக்கும் வரையில் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் இப்போது மட்டும் பாசம் எங்கிருந்து பொத்துக் கொண்டு வந்தது எனக் கோபத்தில் மித்ரன் அழைப்பை வைத்து விட்டான்.

 

உடனே லண்டனிலிருந்து கிளம்பி அவன் இந்தியாவுக்கு வர தன் வீட்டில் மீனாட்சியை முதன்முதலாக பார்த்தான் மித்ரன். கூடவே வத்சனும் அவனுடன் கிளம்பி வந்தான். நண்பன் என்ற முறையில் உடன் வருகிறான் என்று நினைத்துக் கொண்டான் மித்ரன்.

 

ஆனால் இந்தியா வந்த பிறகே அவன் மீனாட்சியின் அக்கா மகன் என்று தெரிய வந்தது. மீனாட்சியினால் வாய் பேசமுடியாது என்பதை அறிகையில் இன்னுமே அதிர்ச்சியில் விழுந்தான்.

 

அதுநாள் வரையில் அவனது பாட்டியும் சரி தந்தையும் சரி மீனாட்சி அவர்களை விட்டுச் சென்றுவிட்டதாக மட்டுமே கூறியிருந்தார்கள். அவரால் பேச இயலாது என்று சொல்லி இருக்கவில்லை.

 

தன் அன்னைக்கு தன்னை பிடிக்கவில்லை என்று எண்ணியிருந்தான் மித்ரன். இல்லையென்றால் தொலைபேசி வழியாகவாவது தன்னைத் தொடர்பு கொண்டிருப்பாரே என அவன் மருகாத நாளில்லை. அவன் அன்னையினால் பேச முடியாது என்ற அதிர்ச்சியைத் தாங்கவே அவனுக்கு பல நாட்கள் ஆகிவிட்டன.

 

மீண்டும் லண்டனுக்குச் சென்று முறையாக முடிக்க வேண்டிய வேலைகளையெல்லாம் முடித்து ஒப்படைத்துவிட்டு இந்தியா திரும்பினான். அதுவரையில் தொழிலைத் தன் சித்தப்பாவைப் பார்த்துக் கொள்ளச் சொன்னான்.

 

சொன்ன மாதிரியே இரண்டு மாதங்களில் வேலையை விட்டுவிட்டு வந்து கட்டடத் தொழிலைக் கையிலெடுத்தான் மித்ரன். அவன் படித்தது கட்டடக்கலை என்றாலும் அவனுக்கு மேலாண்மையில் மட்டுமே அதிக விருப்பம். இருந்தும் குடும்பத்துக்காக அதில் உழைக்க ஆரம்பித்தான். அதள பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்ததை தூக்கி நிறுத்தினான்.

 

அத்தோடு நிற்காமல் தன் அன்னையையும் உடன் அழைத்துக் கொண்டான். அதுவரையில் அவரைத் தவறாக எண்ணி இருந்ததை நினைத்து மனம் வருந்தினான். தன் தந்தை இறந்து போன அன்று மீனாட்சி கதறிய கதறலில் அவர் தன் தந்தை மேல் வைத்திருந்த அன்பு மித்ரனுக்கு நன்றாகப் புலப்பட்டது.

 

அதுவும் தன் தந்தை மாரடைப்பில் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் தன் டைரியில் எழுதியிருந்ததை மித்ரன் பிறகு படிக்க நேர்ந்ததும் முற்றிலும் உடைந்து போனான். அவனும் தன் தந்தையைப் பின்பற்றி அவர் போலவே நடந்து கொள்வான் என்று சத்தியமாய் அப்போது அவனுக்குத் தெரியவில்லை.

 

ராம்பிரசாத்தின் அன்னை சதி செய்து அவரையும் மீனாட்சியையும் பிரித்து விட்டதை அவர் தன் தோழி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்ததும் ராம்பிரசாத் முற்றிலும் உடைந்து போனார்.

 

இந்தத் தொழில்முறை பயணத்தை முடித்துக்கொண்டு போய் மீனாட்சியின் காலில் விழுந்தாவது அவரிடம் மன்னிப்பு கேட்டு அவரை மீண்டும் அழைத்து வர வேண்டும் என்று அதில் எழுதி வைத்திருந்தார்.

 

ஆனால் விதி சதி செய்து அவர்களை ஒன்று சேரவிடாமலேயே பிரித்து விட்டது. மீனாட்சிக்குச் செய்த துரோகத்தை எண்ணி எண்ணியே அவரது இதயம் இயங்காமல் போனது போல.

 

ஆகவே மித்ரன் தன் அன்னையை தன்னுடன் வருமாறு அழைத்துக் கொண்டான். அவன் பாட்டியை அவன் சித்தப்பாவுடன் போய் இருக்கச் சொன்னான். இதுநாள் வரையில் அவனுக்குக் கிடைக்காத ஒரு பொக்கிஷம் கிடைத்திருக்கிறது. அதைக் கெடுக்க வேண்டாம் என்று அவன் பாட்டியிடம் சொல்லிவிட்டான்.

 

தன் தந்தை கட்டிய வீடு கடனில் மூழ்க, ஏற்கனவே சித்தப்பா குடும்பத்தினர் வேறு வீட்டுக்குப் புலம் பெயர்ந்திருந்தனர். ஆனால் அவன் சம்பாதித்த பணத்தை தொழிலில் போடுவதா, இல்லை, வீட்டை மீட்டெடுப்பதில் செலவிடுவதா என்ற குழப்பத்தில் தவித்தான்.

 

அப்போது மீனாட்சி தன் பணம் முழுவதையும் அவனிடம் தந்தார். அதை வைத்தும், தன் கையிருப்பை வைத்தும் தொழிலையும், வீட்டையும் மீட்டெடுத்தான் மித்ரன்.

 

அதன்பிறகு கடந்த இரண்டு வருடங்களாக மீனாட்சி மித்ரனுடன் இருக்கிறார். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆறு மாதங்களுக்கு முன்னர் மித்ரனின் பாட்டி இயற்கை எய்தினார்.

 

மீனாட்சியின் நிலையை அறிந்து அவரை உடன் சேர்த்துக் கொண்ட மித்ரனால் வத்சனின் துரோகத்தை மன்னிக்க முடியவில்லை. நட்பு என்ற போர்வை போர்த்திக் கொண்டு அவனை ஏமாற்றிவிட்டதாகக் கருதினான் மித்ரன்.

 

அவன் தன்னிடம் நட்புடன் பழக வரவில்லை. ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வந்து தன் நட்பை களங்கப்படுத்தி ஏமாற்றிவிட்டான் என்று நினைத்தான். அதனால் இன்று வரையிலுமே வத்சனுடன் அவன் பேசவில்லை.

 

அதற்குத்தான் வத்சன் குறைப்பட்டுக் கொண்டு அப்படிப் பேசிவிட்டுச் சென்றான்.

error: Alert: Content selection is disabled!!