சிறகு 06

அத்தியாயம் 06

திண்டுக்கல் காந்திகிராமத்தில் உள்ள கல்லூரியில் பிபிஎ படித்து முடித்த பின்னர், அடுத்து எம்பிஎ படிக்க வேண்டும் என்ற திட்டம் ஸ்ரீதருக்கு ஆனால் அதற்கு சிறந்த இடம் சென்னை என்று தோன்றியது. 

ஆனால் மூன்று பெண்களையும் தனியாக விட்டுவிட்டு அங்கு சென்று படிக்க அவனுக்கு விருப்பமில்லை. எனவே தான் மேற்கொண்டு தான் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தள்ளிப் போட்டான். 

ஆனால் இப்போது வீட்டை விட்டு தள்ளி இருக்க வேண்டும் என்று தோன்ற, அவ்வளவு தூரம் போக பிடிக்காமல், கோயம்புத்தூரில் ஒரு கல்லூரியில் சேர்ந்து கொள்ள அப்ளிகேஷன் போட்டு இருந்தான். 

அன்று காலை என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதுவதற்காக அழைப்பு வந்திருந்தது அதை வாங்கி வைத்தது பத்மினி தான். 

காலை நேரத்திற்கு வயலுக்கு சென்று விட்டு பத்து மணி போல் வீட்டுக்கு வந்த ஸ்ரீதரிடம் “தம்பி உனக்கு தான் இந்த போஸ்ட் வந்துச்சு…” என்று சொல்லி குடுக்க 

அதை வாங்கி அவன் வாசிக்கும் போதே 

“என்னது?…” என்று பத்மினி கேட்க 

சமையலறையில் இருந்து கமலமும் வெளியே வந்தார். 

“அது எம் பி ஏ படிக்க கோயம்புத்தூர் காலேஜ்ல அப்ளிகேஷன் போட்டிருந்தேன்.. என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுத வரச்சொல்லி இருக்காங்க…” என்று சொல்ல 

“என்னடா சொல்ற இங்க இருந்து போகவே நாலு மணி நேரமாகும்.. எப்படி போய் படிச்சிட்டு திரும்பி வருவ.. அப்போ அங்கேயே தங்க போறயா?…” என்று கேட்க 

“ம்ம் ஆமா.. சனி, ஞாயிற்றுக்கிழமைல வீட்டுக்கு வந்துட்டு போறேன்…” என்று சொல்ல 

“என்னடா விளையாட்டுரியா.. வீட்டுல மூணு பொம்பளைங்க இருக்கிறது நினைவு இருக்கா இல்லையா..? நீ பாட்டுக்கு விட்டுட்டு படிக்கிறதுக்கு வெளியூருக்கு போறேன்னு சொல்ற.. எதுவா இருந்தாலும் நீ ஏற்கனவே படிச்ச காலேஜ்லயே படிச்சிக்க…” என்று சொல்ல 

“அக்கா எம் பி ஏ பண்ண சென்னை தான் பெஸ்ட் .. ஆனாலும் மொத்தமா அங்க போக பிடிக்காமதான் கோயம்புத்தூர் போகணும்னு முடிவு பண்ணுனேன்.. இப்ப அங்கேயும் போக வேணானா எப்படி க்கா…” 

“அப்படித்தான்டா.. இந்த வீட்டுக்குன்னு இருக்கிற ஒரே ஒரு ஆண் துணை நீ தான்.. நீயும் போயிட்டா எங்க நிலைமை என்ன.. காயத்ரி பத்தி யோசிச்சியா.. பாவம்டா அவ அப்பா இல்ல, இப்போ தாய் மாமன் நீயும் இல்லனா ஊர்ல உள்ள காவாலி பசங்க வம்பு பண்ண தயங்க மாட்டானுங்க.. இப்போ நமக்கு என்ன குறைச்சல் தோப்புல, விவசாயத்துல வார வருமானம் போதும் தானே.. எங்க கூடவே இருந்துடுடா…” என்று பத்மினி சொல்ல 

“அது இல்லக்கா.. நான் இங்க இருந்து போனாலும் என் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க.. அவங்கள பாத்துக்கொள்ள சொல்றேன்…” என்று தமக்கையை சமாதானம் செய்ய 

“பாதுகாப்பு அவங்க குடுப்பாங்க.. தகப்பன் இல்லாத என் பொண்ணுக்கு பாசத்த யார் குடுப்பா?…” என்று பத்மினி கேட்க 

என்ன பதில் சொல்வான், தமக்கையை சமாதானம் செய்ய வார்த்தைகளை யோசிக்க 

“ஸ்ரீ என்னாச்சு உனக்கு.. குடும்பத்த விட்டுட்டு போய் படிக்கணும் என்ற அளவுக்கு எப்போ யோசிக்க ஆரம்பிச்ச.. இந்த வீட்டோட ஆணிவேரே நீதான்.. நீ போயிட்டா துணைக்கு எத்தன பேர் இருந்தாலும், உறுத்தான ஆம்பள வீட்டுல இருக்கிற மாதிரி வராது புரிஞ்சுக்க…” என்று கமலமும் சொல்ல 

அதற்கு மேல் அவனால் கண்டிப்பாக நான் வீட்டை விட்டு செல்ல வேண்டும் என்று சொல்ல முடியவில்லை. உறுதியான காரணம் என்னவென்று கேட்டால் எப்படி சொல்ல 

அவனுக்கு மட்டும் விருப்பமா என்ன, அவன் உலகமே அவர்கள் மூன்று பேரும் தானே. ஆனால் இப்போது அவர்களில் முதன்மையானவளை விட்டு தள்ளி இருக்க வேண்டிய கட்டாயம், கண்ணில் படாதது கருத்தில் படாது என்று நினைத்து விட்டான் போலும்.

ஆனால் அவள் கண்ணில் உறுத்தும் காட்சி அல்லவே அவன் உயிரில் கலந்த உறவு அல்லவா. 

சரி போகல என்று சொன்னவன் தன் அறைக்கு சென்று விட்டான்.

மாலை பள்ளி விட்டு வந்த காயத்ரிக்கு காஃபியும் வடையும் சாப்பிட கொடுத்த பத்மினி, அவள் சாப்பிட்டு முடித்த பின்னர் ஒரு தட்டில் வடையும் காஃபியும் வைத்து அவளிடம் கொடுத்தவர் “இந்தா, இத மாமாக்கு கொண்டு போய் குடு.. மதியமும் சரியா சாப்பிடல…” என்று சொல்ல 

“என்ன மாமா இப்போ ரூம்லயா இருக்காங்க.. ஏன் மதியம் சரியா சாப்பிடல?…” என்று கேட்க 

“உன் மாமன் நம்ம எல்லாரையும் விட்டுட்டு வெளியூர்ல தங்கி இருந்து படிக்க போறேன்னு சொன்னான்.. போக வேணாம்னு நாங்க ரெண்டு பேரும் தடுத்திட்டோம்.. அதுதான் வருத்தம் போல…” என்று பத்மினி சொல்ல 

தன் மாமன் தங்களை விட்டு செல்ல இருந்தான் என்ற செய்தியை கேட்டதும் காயத்ரிக்கு கஷ்டமாக இருந்தது. அழுகை வேறு முட்டிக்கொண்டு வந்தது, தாயிடம் அதை காட்டிக் கொள்ளாமல், அவர் தந்ததை வாங்கிக் கொண்டு மாடிக்கு தன் மாமனை தேடிச் சென்றாள்.

ஸ்ரீதரோ காயத்ரியை பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருந்தான். இனிமேல் அவன் என்ன செய்ய வேண்டும், அவளிடம் இருந்து விலகினால், கோபப்பட்டால் அவன் பிரியசகி தான் காயப்படுவாள் அது அவனால் முடியாது.

அதே சமயம் அவளிடம் தன் நேசத்தை மறைத்து பழகவும் முடியாது. ஒருவேளை மறைத்து வைத்தால் மாறி போகுமா இந்த நேசம், நாளுக்கு நாள் நிமிஷத்துக்கு நிமிஷம் கண்ணுக்கு தெரியாமல் மண்ணுக்கு அடியில் ஊடுருவும் மூங்கிலைப் போல் வளர்ந்து கொண்டே செல்லும் அல்லவா. 

இப்போது அவள் மீது முகிழ்த்து இருக்கும் இந்த நேசத்தை வளர விடுவதா? இல்லையா?, அந்த நேசம் முறையானதா? இல்லையா? இப்படி பல யோசனைகள். 

அவனது அதிகப்படியான யோசனைகளை தடுத்தது அவன் செல்லக்கிளியின் கண்ணீர் குரல். “மாமா!…” என்று அழைத்த காயத்ரிக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை. 

அவளிடம் மட்டும்தானே விலகி நிற்கின்றான். சில நேரம் எரிந்து விழுகின்றான், ஆக தன்னை பிடிக்காமல் தான் எல்லோரையும் விட்டுவிட்டு செல்ல முடிவெடுத்து விட்டானோ என்று அத்தனை வேதனையாக இருந்தது. 

“மா..மாமா! என்ன பிடிக்கலையா மாமா.. என் கூட இருக்க பிடிக்காம தான் வெளியூருக்கு படிக்கப் போக போறீங்களா?.. நான் இனிமேல் உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன் மாமா.. ப்ளீஸ் எங்கயும் போகாதீங்க.. உங்கள விட்டுட்டு என்னால இருக்க முடியாது.. எனக்கு எல்லாமே நீங்க தானே.. நீங்க விட்டுட்டு போயிட்டா நா.. நான் என்ன பண்றது…” என்று கண்ணீர் சிந்த கூறியவள் 

அவனுக்காக எடுத்து வந்த காஃபி வடையை அங்கு வைத்துவிட்டு அழுகையினோடே ஓடி விட்டாள்.

திகைத்துப் போய் அப்படியே நின்று விட்டான் ஸ்ரீதர். என்ன அவனுக்கு அவளை பிடிக்காதா! அவனது பிடித்தம் எவ்வளவு என்று தன்னை மீறி காட்டி விடுவோமோ என்ற பயத்தில் தானே உயிர் வேதனை என்றாலும் அதை சுமந்து கொண்டு வெளியூர் செல்ல சித்தம் கொண்டான். 

அவளை வருத்தக் கூடாது என்று நினைத்தவன் இப்போது அழ வைத்து விட்டான். அவன் கண்மணி கண்களில் கண்ணீர், அவள் தந்தை இறந்த போது அழுதது. அதற்கு பிறகு அவளின் கண்ணில் தூசு விழுந்து கலங்குவதை கூட அனுமதிக்காதவன் இன்று அவனே அழ வைத்து விட்டான். 

அவளது கண்ணீரைப் பார்த்த பின் நெஞ்சு கூட்டிற்குள் யாரோ கையை விட்டு இதயத்தை அழுத்திப் பிசையும் வலி, தாங்க முடியவில்லை.

பைக் சாவியை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவன், என்றும் இல்லாத வேகத்தில் பைக்கை ஓட்டிக்கொண்டு வந்து நின்றது என்னவோ ஐங்கரனை தேடித்தான். 

ஐங்கரன் தனது தந்தையின் உரக்கடையை பார்த்துக் கொள்கின்றான். தன் கடையின் முன்பு வேகமாக வந்து வண்டியை நிறுத்திய ஸ்ரீதரை ஆச்சரியமாகத்தான் பார்த்தான். 

ஏனென்றால் அத்தனை வேகத்தில் என்றுமே வண்டியை அவன் ஓட்டியது கிடையாது. அவன் வந்த வேகத்தை வைத்தே எதுவோ சரியில்லை என்று புரிந்து கொண்டவன் “வாடா!…” என்று அழைத்து கடையின் பின் இருந்த கதிரையில் அமர வைத்துவிட்டு, 

அருகில் இருந்த டீ கடைக்கு சென்று இரண்டு டீ வாங்கி வந்தவன், கடையின் ஷட்டரை பாதி வரை இழுத்து மூடி விட்டு, நண்பனின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.

ஸ்ரீதர் எதுவுமே பேசவில்லை, ஐங்கரன் நீட்டிய டீயை வாங்கியவன் அதை குடிக்காமல் அதற்கும் அவனுக்கும் ஜென்ம பகை என்பது போல் அதை முறைத்து பார்த்துக் கொண்டிருக்க 

“போதும்டா.. ஏற்கனவே அது சூடா தான் இருக்கு.. நீ பார்வையில கொதிக்க வைக்க ட்ரை பண்ணாத…” என்று சொல்ல 

இப்போது டீயின் இடத்தில் ஐங்கரன் இருந்தான்.

“என்ன பாசமா பாத்தது போதும்.. என்ன ஆச்சுன்னு சொல்லு…” என்று கேட்க 

ஒரு பெரு மூச்சை இழுத்து விட்டவன், “நான் சரியில்லடா…” என்று சொல்ல 

“அதுதான் தெரியுதே.. அதுக்கு காரணம் என்ன?…” என்று ஐங்கரன் கேட்க 

“அது இல்லடா.. நான்.. நான் இப்பல்லாம்.. இப்பலாம் காயத்ரிய தப்பா பாக்கறேண்டா…” என்று தயக்கமாக சொல்ல 

அதிர்ந்து விழிகளை விரித்த ஐங்கரன் “என்னடா சொல்ற?.. இதுக்கு காலேஜ்லேயே ஒருத்தி உன்ன லவ் பண்றேன்னு சுத்துனாளே அவளுக்கு ஓகே சொல்லி இருந்தா இப்படி எல்லாம் வயசு கோளாறுல தப்பு தப்பா தோணுமா…” என்று கேட்க 

“அடேய் நீ நினைக்கிற மாதிரி தப்பா இல்ல.. அவளை சைட் அடிக்கிறேன்டா…” 

“அதுதான்டா தப்பு.. அவ சின்ன பொண்ணுடா…” 

“தப்புனு புரியுதுடா.. ஆனா நீ சொன்னல்ல.. காலேஜ்ல விஜி என்கிட்ட லவ் சொல்லும்போது எதுவும் தோணலடா.. போன வருஷம் வரைக்கும் காயத்ரிய.. காயத்ரிய நான் அப்படி பாத்ததில்ல.. ஆனா இப்போ எனக்கு பொண்டாட்டினா அது அவதான்னு தோணுது.. இது தப்புனு எவ்வளவோ என்னோட நானே போராடிட்டேன்.. முடியல, அதோட வெளிப்பாடு தான் நான் காயத்ரி கிட்ட கோவப்பட்டது, தள்ளி நின்னுது.. கடைசியா வெளியூர் போய் படிக்கலாம்னு முடிவு எடுத்தது.. ஆனா இப்போ அதுவும் முடியாது, போகாதீங்க மாமான்னு என் முன்னாடியே அழுதுட்டு போற டா.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல…” என்று சொல்லி தலையை பிடித்துக் கொண்டான். 

“டேய் இதுல என்னடா இருக்கு…” என்று சாதாரணமாக ஐங்கரன் கேட்க 

நிமிர்ந்து அவனைப் பார்த்தவன் “என்னடா சொல்ற.. இது தப்பு இல்லையா?…” என்று கேட்க 

“நீ ஆரம்பத்துல தெளிவா சொல்லல அதனால தப்புன்னு சொன்னேன்.. இப்போ தெளிவா சொல்ற, காயத்ரிய உன் பொண்டாட்டியா பாக்குற இதுல என்ன தப்பு இருக்கு.. அக்கா பொண்ண கட்டிக்கிறது இல்லையா என்ன…” என்று கேட்க 

“இல்லடா.. அது சரியா வராது.. எனக்கும் காயத்ரிக்கும் ஒன்பது வயசு வித்தியாசம்…” 

“ஏன் பத்து பன்ரெண்டு வயசு வித்தியாசத்துல யாருமே கல்யாணம் பண்ணலையா என்ன.. காதல் வந்துட்டா இதெல்லாம் பார்க்க முடியாது மச்சான்…” ஐங்கரன சொல்ல 

“சரிடா வயச விட்டாலும்.. அம்மா அக்கா கிட்ட காயத்ரிய எனக்கு கட்டி வைங்கன்னு எப்படி கேப்பேன்…” ஸ்ரீதர் சங்கடமாக கூற 

“ஹா, வாயால தான்…” 

“கடுப்பேத்தாத.. கொன்னுடுவேன்…” 

“பின்ன என்னடா.. காயத்ரி உனக்கு கட்டிக்கிற முறை தானே.. உன்னோட கல்யாண விஷயம் பேசும் போது வெளியில பொண்ணு பாக்க வேணாம் நான் காயத்ரிய கட்டிக்க போறேன்னு சொல்லிடு…” 

“டேய் உனக்கு புரியுதா இல்லையா.. இதுவரைக்கும் காயத்ரிக்கு வேற மாப்பிள்ள பாக்கணும்னு தான் அக்கா சொல்லிட்டு இருக்கு.. அம்மாவும் எனக்கு வேற பொண்ணு பாக்கணும்னு தான் பேசுறாங்க.. அப்போ அவங்க மனசுல எங்கேயுமே காயத்ரிய நான் அப்படி பாப்பேன்னு தோனல தானே.. அவங்களோட நம்பிக்கைய உடைச்சு எப்படி என்னால கேட்க முடியும்…” ஸ்ரீதர் கவலையாக சொல்ல 

“அட போடா நம்பிக்கை அது இதுன்னுட்டு.. இதுவரைக்கும் காயத்ரி கிட்ட நீ அந்த மாதிரி பழகுனது இல்ல.. அதனால உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைப்போமா அப்படி என்ற யோசனை வந்திருக்காது.. இதுக்கு பிறகு காயத்ரிய உன் அக்கா மகளா மட்டும் பார்க்காம நீ கட்டிக்க போற பொண்ணா பாரு.. அந்த உரிமையோட பழகு.. உன்னோட மாற்றத்த பாத்து உனக்கு காயத்ரிய கட்டிக்க விருப்பம்னு அவங்களுக்கு புரியுற மாதிரி செய்.. அவ்வளவுதான்.. சொந்த தம்பிக்கு பொண்ண கட்டி கொடுக்க அக்கா யோசிக்கவா போறாங்க.. வலுக்கட்டாயமா உங்க மனசுல எதையுமே திணிக்க வேண்டாம்னு கூட அவங்க அமைதியா இருக்கலாம்ல.. நீயும் அதிகப்படியா யோசிச்சு விலகி நடக்காம உன் மனசுல என்ன தோணுதோ அத அப்படியே வெளிப்படுத்து.. கண்டிப்பா சந்தோஷமான விஷயம் நடக்கும்…” என்று ஐங்கரன் அடித்துக் கூற 

சிவாவிற்கும் ஒரு தெளிவு கிடைத்தது.

சிலவற்றை யோசித்தவன் முகம் பூவாக மலர, “கரெக்ட்டு டா நான் இதுவரைக்கும் காயத்ரிய குழந்த மாதிரியே ட்ரீட் பண்ணிட்டேன்.. இனிமே அவதான் என் எதிர்கால பொண்டாட்டி என்ற மாதிரி நடந்துக்க போறேன்…” என்று சொல்ல 

“ரைட்டு.. அப்போ இப்பவே என் ஃபோன் நம்பர டெலிட் பண்ணிடு…” என்று ஐங்கரன் சொல்ல 

“ஏன்டா?…” புரியாமல் ஸ்ரீதர் கேட்க 

“காட்டுவாசிகளோட கூட சகவாசம் வச்சுக்கலாம்.. காதலிக்கிறவங்க கூட சவகாசம் வெச்சுக்க கூடாது.. அதுக்கு தான்…” என்று சிரிக்காமல் சொல்ல 

அவன் கழுத்தை வளைத்து பிடித்த ஸ்ரீதர் “அத நீ சொல்லாத.. அமுதினி பின்னாடி நீ சுத்துறியாமே…” என்று கேட்க 

“அடேய் புரளிய கிளப்பாத.. நம்ம காயத்ரி பிரெண்டாச்சேனு ரெண்டு வாட்டி பாத்தபோ நாலு வார்த்த பேசினேன் டா.. வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறா.. அந்த வாயாடிலாம் நமக்கு செட் ஆகாது மச்சான்…” என்று சொல்ல 

“நம்பற மாதிரி இல்லையே…” என்று ஸ்ரீதர் கேட்க 

“நம்பு மச்சான்.. நம்பு.. அத விடு எப்போ இருந்து உனக்குள்ள இந்த காதல் தீ பத்திக்கிச்சு…” என்று கேட்க 

தன் மனதை சிறுக சிறுக ஆக்கிரமிப்பு செய்யவளை பற்றி ரசனையாக சொல்ல ஆரம்பித்தான் சிவா.

error: Alert: Content selection is disabled!!