செம்பருத்தி 17 – 1

“பேரே தெரியாம வேலைக்கு சேர்ந்தவளே! இன்னைக்கு நான் பிரீ, உனக்கு நேரமிருந்தா உங்கய்யா கதையை, பெரிய வீட்டு ஹிஸ்டரியைச் சொல்லேன் கேட்போம்”

ஜலப்பிரியா அன்று பெரிய குடும்பத்தைப் பற்றிக் கேட்டதும் 

“நம்ம செய்யுற தப்பெல்லாம் ஆர் சி மேம் சொல்ற மாதிரி ‘புத்திக் கொள்முதல்’டி. அபிராம் பேரைக் கண்டுபிடிக்க கஷ்டமா இருந்த மாதிரி இனிமேல் இருக்கக் கூடாதே. என்னால முடிஞ்ச அளவுக்கு மத்தவங்க கிட்ட பேசினது மூலம் அவங்க வரலாறை கண்டுபிடிச்சேன். இப்பயே டிஸ்கிளைமர் போட்டுடுறேன். இதெல்லாம் மத்தவங்க சொன்னதுதான். எவ்வளவு தூரம் உண்மைன்னு பகிர்ந்துக்கிட்டவங்களுக்கே தெரியாது. ஏன்னா குடும்பம் பெருசாக பெருசாக உண்மைகள் எல்லாம் கண்டுபிடிக்க முடியாதபடி மற்ற தகவல்கள் மறைச்சுடும்”

வீட்டினரிடம் குறிப்பாக சேச்சியிடம் பேசியதும், மற்றவர்களின் வாயிலாக செம்பருத்தி  அறிந்து கொண்ட பெரிய குடும்பத்தின் ஹிஸ்டரியைச் சொன்னாள். 

மந்தாகினி தனது செல்வ புத்திரன் அபிராமின் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். கல்லூரிப் பேரழகியான மந்தாகினி தேவியின் கடைக்கண் பார்வை வீரபாகுவின் மேல் பட, வீரபாகுவும் அன்பை வட்டியுடன் திரும்பிச் செலுத்த, அவர்களின் காதலுக்கு  இடையில் நின்றது அந்தஸ்து. 

மந்தாகினி சாதாரண வீட்டுப் பெண். வீரபாகுவோ  ஜமீந்தார் பரம்பரை. அந்தக்காலத்தில் இருந்த சிவகங்கை, ராமநாதபுரம் ஜமீன்களுடன் நல்ல நட்புடன் இருந்தனர் பாகமங்கலம் நிலச்சுவான்தார்கள். 

திருவிதாங்கூர் கொச்சி அரசக்குடும்பங்களும், 1800 களில் மதராஸ் ப்ரெசிடென்சியில் முக்கியத்துவம் பெற்றிருந்த ராமநாதபுரம் சிவகங்கை ஜமீன்களும் அடிக்கடி விஜயம் செய்யும் இடம். அரச குடும்பங்களுடன் அவர்களுக்கு இருக்கும்  நட்பே இருநூறு ஆண்டுகள் என்று சொன்னால் பாகமங்கலம் குடும்பத்தினரின் செல்வாக்கு புரியும். 

ஆனால் தமிழர்களுக்கு என்று ஒரு அடிப்படை குணம் உண்டு. அதுதான் அடக்கம். எவ்வளவு செல்வாக்கு இருந்தாலும் அதனை வெளிச்சம் போட்டு விளம்பரம் தேடிக்கொள்ளாமல், சுய ஆதாயம் தேடாமல் இன்று வரை இருப்பதால் இப்போது கூட இவர்களுக்கு செல்வாக்கு உண்டு. 

வெள்ளைத் தாளில் இருக்கும் கறுப்புப் புள்ளியைப் போன்ற அவர்களது சறுக்கல்தான் பாகமங்கலத்தின் அடுத்த வாரிசான வீரபாகுவின் காதல் திருமணம். 

பாகமங்கலம், நாகமங்கலம் இவையெல்லாம் மிக நெருக்கமான ஜமின்கள். தங்களுக்குள் சம்பந்தம் செய்துக் கொள்வார்கள். இரட்டை ஜமீன்கள் என்று கூட சொல்லலாம். 

 

பாகமங்கலம் ஜமீன் மஹாபாகேஸ்வரன் அந்த காலத்தில் பல ஜமீன்கள்  தங்களது நோக்கம் அறியாமல் மக்களின் வரிப்பணத்தைத் தங்களது வருமானமாக நினைத்துக் கொண்டு அதனை   மது மாது என்று களியாட்டங்களில் ஈடுபட்டு  அழிந்ததைக்  கண்டு மிகவும் யோசித்தார். 

வெள்ளையன் அவர்களது பலவீனத்தில் தானே அடித்துப் பிடுங்குகிறான். நாம் நமது வாரிசுகளை இந்த பலவீனங்கள் இல்லாமல் வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார். 

அவரது இங்கிலாந்து விஜயத்தில் அங்கிருக்கும் அரசியல் வாதிகளை குறிப்பாக பிரதமர்களை உருவாக்கும் ஈட்டன் பள்ளி, கிங்ஸ் பள்ளிகளை  சென்று பார்வையிட்டார். 

அதே வெள்ளையர்கள் மூலம் தங்களுக்கான அரசியல் மற்றும் நிர்வாகம், இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் சம்பந்தமான பாடத்திட்டத்தை உருவாக்கச் செய்தார். பள்ளிப்பருவம் முழுவதும் ஹாஸ்டலில் தங்கி குருகுலக் கல்வியைப் போன்று அந்த பாட திட்டத்தில் பயில வேண்டும் என்பதே அவரது கட்டளை. 

மற்ற குடும்பத்தினர் அந்தப் பள்ளியில் பயில ஆர்வம் காட்டவில்லை. நன்றாக யோசித்தவர், ஆர்வமுள்ள அவரது உறவினர் குடும்பத்து மக்களுக்கும், ஜமீனில் நன்றாகக் படிக்கும் புத்திசாலிகளையும் அதில் சேர்க்க வழி செய்தார். 

“எனக்கு ஏன் பாடமெல்லாம் வித்யாசமாக இருக்கு? மத்தவங்க கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் இவ்வளவுதான் படிக்கிறாங்க. அதைத்தவிர இங்கிலிஷ், தமிழ்” என்றனர் ராஜ வாரிசுகள்.

“மத்தவங்க படிச்சு அதில் எந்த துறைல போகுற அளவுக்குத் தகுதி இருக்கோ அதில் தங்களோட வாழ்க்கையை அமைச்சுக்குவாங்க. ஏன்னா சாதாரண மக்களுக்கு எதிர்காலத்தில்  என்னவாகப் போறோம்னு அவங்களுக்கே தெரியாது. எல்லாத்தையும் படிப்போம் எந்தத் துறையில் அப்போதைக்கு வேலைவாய்ப்பு இருக்கோ அதில் செட்டிலாவோம்னு எண்ணம்தான் அதிகம். 

நீங்க அப்படி இல்ல. உங்களுக்குன்னு கடமைகள் இருக்கு. அந்தக் கடமையை நிறைவேத்த உங்களைத் தயார் படுத்துறதுதான் எங்க வேலை. அதுக்காக ஸ்பெஷலா உருவாக்கப்பட்டதுதான் உங்க பாடத்திட்டம். 

உங்களுக்கு பல மொழிகள் தெரிஞ்சிருக்க வேண்டியது கட்டாயம். தமிழ் , ஆங்கிலம் மட்டுமில்லாம பக்கத்து சமஸ்தானத்து குடும்பங்களோடு பேச வசதியா தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உருது இதெல்லாம் சரியான உச்சரிப்போட பேசக் கத்துத் தரோம். 

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கோ இல்லையோ அது தனிப்பட்ட விஷயம். ஆனால் உங்களோட கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் முதல் மரியாதை உங்களுக்குத்தான். அதனால நீங்க சார்ந்த சமயத்தைப் பத்தி தெரிஞ்சுக்கணும். தேவாரம், திருவாசகம், திருப்புகழ் எல்லாத்திலும் பரிட்சயம் வேணும். 

உங்க ஜமீனில் எல்லா மதத்து மக்களும் இருக்காங்கல்ல அவங்களைப் பத்தி புரிஞ்சுக்க ஒரு சமயம் பத்தின அறிவு மட்டும் எப்படிப் போதும்? அதுக்காகத்தான் பைபிள் கிளாஸ், இஸ்லாமிய சமூகம் பத்தி சொல்லித்தர வாத்தியார்கள். நம்ம ஊரில் நடக்கும் பல சமயத் திருவிழாக்கள். அதுக்கு என்ன செய்யணும் என்ற முறைகள் எல்லாம் சொல்லித் தருவோம். குறிப்பிட்ட வயசுக்குப் பிறகு நீங்களும் உங்க வீட்டுப் பெரியவங்க கூட போயி கலந்துக்கணும். 

 கலைஞர்களை ஊக்குவிக்கிறது கடமைகளில் ஒன்னு. போட்டிகள் நடத்துவிங்க, பரிசுகள் தருவிங்க. கலையைப் பத்தின புரிதல் இல்லாம தேர்வு செய்யுறது சாத்தியம் இல்லையே. தேர்வுக் குழு சொல்றதை பரிசீலிக்க உங்களுக்கும் அடிப்படை அறிவு வேணும். அதுக்காகத்தான் கலைகள் பாடம். 

இது தவிர பொருளாதாரம், அரசியல், நாட்டோட வரலாறு மட்டும் இல்லாம ராயல் ஹிஸ்டரி, கம்யூனிகேஷன் ஸ்கில், நீங்க வரிவசூல் பண்ணி வாழ்க்கை நடத்தல, உங்களுக்கு சொந்தமான தொழில்கள் ஏராளமா இருக்கு. அதை நடத்தி அதில் வரும் வருமானத்தில்தான் ஜமீனை நடத்திட்டு இருக்கீங்க. அந்த சேவையைத் தொடர பிசினெஸ் அறிவு ரொம்ப முக்கியம். 

error: Alert: Content selection is disabled!!