செம்பருத்தி 23- 2

“நீ என்ன எதிர்பார்கல? எதை எதிர்பார்த்த?”

“அபிராமைக்  கவனிக்க எந்த விதத்திலும் அவனோட டேஸ்ட்டுக்கு ஒத்து வராத செம்பருத்தியை அனுப்பினேன். அவனோட இந்த தற்கொலை முயற்சியை நான் எதிர்பார்த்தேன். ஏன்னா அவன் அந்த அளவுக்கு அவனைத் தனிமைப் படுத்திக்கிட்டு மன அழுத்தத்தில் இருந்தான். ஆனா பட்டிக்காட்டு செம்பருத்தியோட இந்த ட்ரான்ஸபெர்மஷன் நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. அவினாஷ் இங்க ரூம் ரெடி பண்ணிட்டு இருக்கான். அவங்க அம்மா வருவாங்க போல இருக்கு. இதையும்  நான் எதிர்பாக்கல.”

“அவங்கம்மாவா???” திடுக்கிட்டார் சுகுமாரன். 

“அவங்க இங்க வந்ததே இல்லைல?”

“வந்திருக்காங்க. ஆனா மந்தாகினியோட  கோட்டை ஆனதுக்கு அப்பறம் பாகமங்கலம் குடும்பத்தில் இருந்து யாருமே வந்ததில்லை. இளைய ஜமீன் ஆனந்த் மட்டும் கணக்கு வழக்கு பாக்க வரும்போது கொச்சில ராயல் கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிட்டு அப்படியே போயிடுவான்”

“அப்ப கொஞ்சம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால் அபிராமைப் பாத்துட்டு போக வருவாங்கன்னு நினைக்கிறேன். ஆனால் அபிராம் அவங்களை உள்ள நுழைய விடுவானா?” கிண்டலாய் சிரித்தாள் காவ்யா. 

“இருந்தாலும்… சரி நான் யோசிக்கிறேன்” என்றபடி அலைபேசியை வைத்த சுகுமாரனின் நெற்றியில் சிந்தனை முடிச்சுக்கள். 

நிறைய சொதப்புற காவ்யா. அகந்தைல மட்டும் மந்தாகினி மாதிரியே இருக்க. காரியம் செய்வதற்கு முன் என்னைக் கலந்து ஆலோசிக்க வேண்டாமா? ஆரம்பத்திலேயே திருத்தி இருப்பேனே. இப்போது காவ்யாவும் பட்டுத்தான் பாடம் கற்கவேண்டும் என்றெண்ணிக் கொண்டார். ஆனாலும் மகளாயிற்றே பாழும் மனது அவள் தவறு செய்தாலும் தண்டிக்கப் படக்கூடாது என்று வேண்டுகிறதே!

***

விமானத்திலிருந்து இறங்கியதும் கொச்சியின் கடற்காற்று உடலில் உரசியபோது  மங்கயற்கரசியின் உடல் சிலிர்த்தது. எதையோ உணர்ந்தவரைப் போல அவரது கைகளை அழுத்தமாகப் பற்றிக் கொண்டார் நாகேந்திரன். 

“இப்ப கூட சொல்றேன். நீ அங்க போக வேண்டாம். ஊர் உலகம் என்ன வேணும்னா சொல்லட்டும். நீ மதியாதார் தலைவாசலை மிதிக்காதே. வேணும்னா நான் போயிட்டு வரேன்”

“இல்லங்க இது நீண்ட நாளா பெண்டிங்ல இருக்குற பிரச்சனை. தள்ளிப்போடப் போட பிரச்சனை அதிகமாகும். இந்த தடவை முடிச்சு வச்சுடலாம்”

“இருந்தாலும் அபிராம் உன்னை ஏதாவது சொல்லிட்டான்னா?”

“மன்னிச்சுடலாம்” என்று சிரித்த மனைவியின் கையை அழுத்தமாகப் பற்றிக் கொண்டார். 

அவர்களின் பேச்சு புரியாமல் பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்த ராதிகாவுக்கு அவர்களது அன்பு பிரமிக்க வைத்தது. 

“வாங்கம்மா, வாங்கப்பா” என்று அவர்களை ஏர்போர்ட்டில் வரவேற்று அழைத்துச் சென்ற அவினாஷும் கொஞ்சம் இறுக்கமாகவே இருந்தான். 

“மிஸ்டர். அவினாஷ், அபி இப்ப எப்படி இருக்கார்?” தயங்கி தயங்கி கேட்டாள். 

“உடல்நிலை கவலைப்படுற மாதிரி இல்லை. ஆனால் அவன் மனசு… ஏகப்பட்ட சிக்கலா இருக்கு. அதைத் தான் எப்படி சரி பண்றதுன்னு தெரியல” பெருமூச்சு விட்டான். 

அதன்பின் ராதிகா படிக்கும் காலத்திற்கே சென்று விட்டாள். அந்த விளையாட்டுப் பயிற்சி பள்ளி கல்லூரிக் காலங்களில் கனவுக் கண்ணனான அபிராமைச் சுற்றி பலாப்பழத்தில் ஈ மொய்ப்பதைப் போலப் பெண்கள் கூட்டம் சுற்றும். 

அவள் புதிதாக சேர்ந்த போது அவளது தந்தை பாரஸ்ட் ஆபீசர் என்று தெரிந்ததும் அபிராம் அவளுக்கு ஒரு பட்டப் பெயர் வைத்தான். அவனது பணம், அழகு எல்லாம் அவளை ஈர்த்ததே தவிர காதலில் விழும் அளவிற்கு அதற்கு முக்கியத்துவம் தரவில்லை ராதிகா. 

 ஒரு வாலெண்டைன்ஸ் டே அன்று காலை அவளுக்கு ஒரு கார்ட் வந்தது

வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து 

யாருக்கும் சொல்லாமல் பெண் ஆனோதோ?

அதன் பெயர் ராதிகாவோ!

அப்போது அந்த வரிகளில் விழுந்தவள்தான். சில பல மாதங்கள் கழித்துத்தான் வானவில்லின் ஒரு துண்டான ராதிகா மட்டும் இல்லை மேலும் பல துண்டுகளும் அவனுக்குத் தெரியும் என்பது தெரிந்து மனதில் வலியோடு விலகினாள். 

“என்னை விட்டு விலக நினைச்ச முதல் பொண்ணு நீதான் ராதிகா.எப்போதும் உனக்கு என் வாழ்க்கையில் ஸ்பெஷல் இடம் உண்டு. என்னை பாக்கணும்னா கொச்சில எப்ப வேணும்னாலும் என் வீட்டுக்கு வா… நானா விருப்பப்பட்டு  வீட்டு அட்ரஸ் கொடுக்குற முதல் பொண்ணு நீதான்”

“ஒரே பொண்ணு நீதான்னு உங்களால சொல்ல முடியலைன்னா எனக்கு இந்த விலாசம் தேவை இருக்காது அபிராம்” என்று சொல்லி விலாசத்தை வைத்துவிட்டு ஒரேடியாக விலகி வந்துவிட்டாள். 

இல்லை வந்து விட்டதாக நினைத்தாள். ஆனால் காதலன் என்றோ கணவன் என்றோ வேறு யாரையும் நினைக்க முடியாமல் தவித்தது வஞ்சி மனது. 

கல்யாணம், குழந்தை குட்டி என்று வற்புறுத்தும் பெற்றோர்களிடமிருந்து விலகி எங்கெங்கோ தொடர்கிறது அவளது வாழ்க்கை. வாலண்டியரிங் அது இதுவென்று தன்னைத் தானே ஈடுபடுத்திக் கொண்டு இந்த உலக வாழ்க்கையிலிருந்து தப்பிக்க நினைக்கிறாள். 

இரவு ஆரம்பித்த அந்த நேரத்தில் லங்கையில் இருக்கும் அந்த வீட்டினுள் நுழைந்தபோது அவளை வரவேற்றாள் ஒரு அழகிய பெண். மாநிறம்தான் ஆனால் அவளது செய்கைகளில் ஒரு கம்பீரம், அழகு. 

 

error: Alert: Content selection is disabled!!