செம்பருத்தி 27- 2

“எத்தனை பேர் உங்கம்மாவுக்கு பைத்தியம்னு சொல்லிருக்காங்க தெரியுமா?” அவனது கேள்விக்கு என்ன பதில் சொல்வது. இருந்தாலும் முயற்சித்தார். 

“இல்ல மோனே… நிஜ சூழ்நிலை அப்படி இல்லவே இல்லை… “

“என்ன இல்லை… நீங்க என்ன சொல்லப்போறிங்க? அந்தம்மா நல்லவங்க எங்கம்மாதான் கெட்டவங்கன்னு நீங்க வாங்கின காசுக்குக் கூவப் போறிங்களா?”

அத்தனை நேரம் அங்கு அமைதியாக நின்றிருந்த செம்பருத்தி “மன்னிச்சுக்கோங்க சேச்சி பாத்ரூம் போறேன்னு சொல்லிட்டு இதை உங்களுக்குத் தெரியாம எடுத்துட்டு வந்துட்டேன். அபிராம் சார். இதெல்லாம் சேச்சி சமையல் துறையில் வாங்கின செர்டிபிகேட்ஸ். அவங்க நினைச்சிருந்தா வெளிநாட்டில் ஒரு ரெஸ்டாரண்ட் ஆரம்பிச்சுட்டு உக்காந்திருக்கலாம். ஆனால் இங்க உங்க வீட்டில் ஒரு சாதாரண சமையல்காரியா உக்காந்திருக்கிறதுக்குக் காரணம் நீங்க நீங்க நீங்க மட்டும்தான். அவினாஷைப் பிடிச்சிருந்தா அவரு கூட ஸ்டே பண்ணிருக்கலாமே?”

தன் கண்முன் இருந்த சான்றிதழ்களைக் கண்டு அவன் மனதில் குழப்பம். 

“உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் குழப்பத்துக்கெல்லாம் விடை இங்கேயே சுத்திகிட்டு  இருக்கு. யோசிங்க சார். நாங்க எல்லாரும் இந்த வீட்டில்தான் இருப்போம். உங்களோட அழைப்புக்காகக் காத்துகிட்டு இருப்போம்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டாள் செம்பருத்தி. 

தன்னைக் கடந்து செல்ல முயன்ற அவினாஷின் கைகளை பற்றி இழுத்து பக்கத்து அறைக்கு சென்றாள் செம்பருத்தி. 

கண்கள் கலங்க நின்றிருந்தவனைப் பார்த்து “ஆன்ட்டி சாப்பாடு கொடுத்து விட்டாங்க” என்று கையில் இருந்த டிபன் பாக்ஸைத் தந்தாள். 

“பச்.. வேண்டாம் மூடில்லை”

கிளம்பும்போது அங்கிருந்த காப்பி பிளாஸ்கை கேட்டு எடுத்து வந்திருந்தாள். அதில் இருந்த காப்பியை மூடியில் ஊற்றித் தந்தாள். 

“இது ஹோட்டலில் வாங்கினதுதான். குடிங்க” வறுபுறுத்தி குடிக்க வைத்தாள். 

“நான் இன்னமும் இங்க இருக்கணுமா செம்பருத்தி?”

“கண்டிப்பா இருக்கணும். ஒரு கலகம் பொறந்திருக்கு. இது தெளியும்போது பிரச்சனைகள் தீரும்”

“வேண்டாம்”

“ஏன் வேண்டாம்?”

“உயிருக்கு உயிரானவங்க செய்யுற தப்பைப் பத்திக் கேள்விப்படும்போது அபி துடிச்சுடுவான். அவன் கண்மூடித்தனமான நம்பிக்கையும் பிரியமும் வச்சுருவான். அது கலையும்போது அவனால் தாங்கவே முடியாது”

அவினாஷின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் செம்பருத்தி. 

“வேலைக்கு ஆளுங்களைப் போட்டு அவனைக் கட்டுப்படுத்துறதா நினைச்சுட்டு இருக்கான் பைத்தியக்காரன். அவன் அம்மாவோட அன்புக்கு ஏங்கும் சவலைப் பிள்ளை செம்பருத்தி. அதனாலதான் அவனுக்குத் தேடித் தேடி அம்மாவா அனுப்பினேன்”

கண்ணில் ஒரு வலி இருந்தால் அதில் கனவுகள் வருவதில்லை என்று சொல்வார்கள். இதயத்தில் ஒரு காயம் இருந்தால் அங்கு யார்மேலும் நம்பிக்கை வருவதில்லை. அபிராமின் காயத்தை ஆற்ற தேடித் தேடி அன்னையின் பரிவோடு அவனை கவனிக்க ஒரு கூட்டத்தையே தயார் படுத்தி இருக்கிறான்அவினாஷ். இவனைப் போய் காயப்படுத்துகிறானே அபிராம், செம்பருத்தியின் மனம் வலித்தது. 

பாலனிடமிருந்து அவினாஷுக்கு அழைப்பு வந்தது. “சொல்லு பாலன்”

“என்ன செம்பருத்தியோட சொந்தக் காரங்களா? இதென்ன புது குழப்பம்?”

“என்னாச்சு அவி?”

“உன்னோட சொந்தக்காரங்கன்னு ஒரு பாமிலி வந்து வாசலில் நின்னு சத்தம் போடுதாம்”

“சொந்தக் காரங்களா?”

“போட்டோ எடுத்து அனுப்ப சொல்லிருக்கேன்” 

சில வினாடிகளில் வாசலில் இருப்பவர்களின் புகைப்படம் வாட்ஸப்பில் வந்தது. 

“இது என் அத்தை பாமிலி. இவங்க எப்படி இங்க…” செம்பருத்திக்கும் குழப்பம். 

“உங்க சொத்தை எழுதி வாங்கிட்டு, உனக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டு ஜகா வாங்கின குடும்பம்தான?”

“எஸ் அவி. ஆனா என் அட்ரஸ் எப்படித் தெரியும்?”

“உன் பிரெண்ட்ஸ் யாராவது தந்திருப்பாங்களோ?”

“வக்கிலைத் தவிர வேற இந்த விலாசம் யாருக்கும் தெரியாது”

யோசித்தவன் “சுகுமாரன், காவ்யா இவங்களுக்கு உன்னோட விலாசம் தெரியுமே”

“ஆமாம். வீட்டு விலாசம் இருக்கும். ஆனால் அத்தையோட விலாசம். இப்ப நினைவு வருது. அத்தை வீட்டில் அட்ரஸ் தேடிட்டு இருந்ததா ஜலப்பிரியா சொன்னா… வக்கிலைக் காண்டாக்ட் பண்ண சொல்லி இருக்காங்க. ஒரு வேளை ஆபிஸ்ல அவங்களைப் பாத்து”

“அதே தான் ஒன்னும் ஒன்னும் ரெண்டு. சுகுமாரன் குடும்பம் உதவி செய்யுறேன்னு சொல்லிட்டு செய்யுற குழப்பம் இருக்கே போதும்டா சாமி” என்றான். 

“சொல்லு… இப்ப என்ன செய்யுறது செம்பருத்தி. உன் ஆசை அத்தானை வர சொல்லலாமா இல்லை அனுப்பி விட்டுடலாமா?”

“பிரச்சனையை ஏன் தள்ளிப் போடணும். கையோட பைசல் பண்ணிடலாம்”

***

வீட்டைக் கண்களை விரித்து பார்த்துக் கொண்டே வந்தனர் அத்தையின் குடும்பத்தினர். எவ்வளவு பெரிய வீடு? இந்த வீட்டலயா வேலை செய்யுறா? எங்கிருந்து இப்படி ஒரு வேலை கிடைச்சது? இங்க இருக்குற விளக்கையும் அலங்காரப் பொருள்களையும் சுருட்டிட்டுப் போயி வித்தாலே ஒரு வருசம் உக்காந்தே சாப்பிடலாம் போல இருக்கே. 

அவர்கள் வீட்டில் நுழைந்து வரவேற்பறையில் இருக்கும் பொருட்களை ஆசையோடு தடவி விலையை மதிப்பீடு செய்ய முயல்வதை காமிரா வழியாகப் படம் பிடித்து வந்ததைக்  கண்டு ‘காசாசை’ என்றான். 

“பேராசை” என்றாள் செம்பருத்தி. 

அதற்குள் மற்றொரு அழைப்பு வர, அதனை எடுத்தான் அவினாஷ். அவன் என்ன சொன்னானோ

“சரி, எனக்கு கனெக்ட் பண்ணு” என்றான். 

மறுமுனையில் இருப்பவர்களிடம் பேசினான். “எதிர்பார்த்தேன். ஆனால் உண்மையை அபியே சொன்னா நல்லாருக்கும்” 

….

மறுமுனையில் பேசியதைக் கேட்டுவிட்டு “நீங்க உங்க பார்மாலிட்டியை ஆரம்பிச்சுடுங்க”

பேசி முடித்து அலைபேசியை வைத்தான். 

“என்னாச்சு அவி” என்று கேட்டாள் செம்பருத்தி கவலையான குரலில்.

சொன்னால் தாங்குவாளா? ஆனால் அவள் வருங்காலத்தில் நடக்கப் போவது பூ மேடையில் இல்லை. என்னுடன் அவள் பயணிக்க வேண்டும் என்றால் இத்தகைய முள் பாதையில்தான் செம்பருத்தியின் பயணம் இருக்கும்.அவள் இதைத்  தாங்கித்தான் ஆக வேண்டும். 

“ட்ரக் ட்ரேஸ்  நீ வச்சிருந்த கூல் ட்ரிங்க்ஸ்ல இருக்கிறதா கண்டு பிடிச்சிருக்காங்க” என்றான். 

அவளது அதிர்ச்சியைப் படம் பிடித்தவாறு “இன்வெஸ்டிகேஷனுக்காகப் போலீஸ் டீம் வந்துட்டு இருக்காங்க” என்று மற்றொரு குண்டைப் போட்டான். 

error: Alert: Content selection is disabled!!