செம்பருத்தி 29- 1

“அபி… “ ராதிகாவின் குரல் அபிராமை இந்த உலகிற்கு இழுத்து வந்தது. 

ராதிகாவை நிமிர்ந்து பார்த்தான்.

“மௌனம் போதும் அபி.இதுவரை நடந்தது தப்போ சரியோ எனக்கு தெரியாது. ஆனா நீங்க மங்கை ஆன்ட்டியைப் பத்தி பேசுனது ரொம்ப ரொம்பத் தப்பு”

“உன் கூட ஒரு தடவை பேசுனதுமே நல்லவங்க ஆயிட்டாங்களா? அவங்க எங்க வீட்டை உடைச்சு எங்க அப்பாவ மறுமணம் செஞ்சிக்கிட்டவங்க. அதை நினைச்சாலே என் நெஞ்சு கொதிக்குது. உனக்கு எங்க வீட்டைப் பத்தி என்ன தெரியும் ராதிகா?”

“அப்படிப் பார்த்தா உங்களுக்குமே உங்க குடும்பத்தைப் பத்தி முழுசா தெரியாது போல இருக்கே அபி”

“இவங்க சொல்றதெல்லாம் சுத்த ஹம்பக். நான் யாரையும் நம்ப மாட்டேன்”

‘ஹைபியை கூடவா நம்ப மாட்டீங்க”

ஆத்திரத்தில் பல்லை கடித்தான் “அவ எப்படி அவினாஷோட கூட்டு சேர்ந்தா… நான் பெண்கள் விஷயத்தில் எப்படின்னு உனக்கு நல்லா தெரியும் ராதிகா. உன்னை கூடக் காதலோட தான் பார்த்தேன். 

ஆனா செம்பருத்தியையும்,  ஓவியாவையும்  என் பொண்ணுங்களை மாதிரிதான் ட்ரீட் பண்ணேன்.  நடக்க கூட முடியாமல் இருந்தாலும் என்னோட வெற்றிகளை அவர்கள் மூலமாக தான் பார்த்தேன். அவங்க ஒவ்வொரு தடவையும் வெற்றி பெறும் போது என்னோட வெற்றியா  மனசுக்குள்ள கொண்டாடுனேன் .

என் ஹைபி எப்படி நான் மனசார வெறுக்கிற மங்கை கூட உட்கார்ந்து சாப்பாடு சாப்பிட்டு வந்தா? என் மேல அன்பு இருந்திருந்தால் அப்படி செஞ்சிருப்பாளா? என்னால இன்னமும் நம்ப முடியல….

ஹாங்… இப்ப தெரியுது. அவளோட ஃப்ரெண்ட்ஷிப் சரியில்ல. முதல்ல பார்த்த அவினாஷ் கூட பிரண்ட்ஷிப் ஆயிடுவாளா? என்னை விட அவன் முக்கியம் ஆயிடுவானா? அதனால தான் எனக்கு அவ மேல பயங்கர கோபம்”

அம்மா உனக்கு என்னைய விட அண்ணனைத்தான் ரொம்ப பிடிக்கும் என்று தாயிடம் புகார் சொல்வதைப் போன்ற ஒரு குழந்தைத்தனம் அபிராமிடம் தெரிந்தது கண்டு ராதிகா மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

“நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க அபி.உங்களுக்கு இவ்வளவு நல்லது செஞ்ச அவினாஷ இன்னுமுமா வெறுக்கிறீங்க”

ரொம்ப யோசித்து பதில் சொன்னான்

“இந்த அவினாஷ் மட்டும் அவங்களோட மகனா இல்லாம இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். அவன் கொஞ்சம் நல்லவன்தான். அவனை வெறுக்கிறதுக்கு எந்த காரணமும் இல்லை. 

பல தடவை அவன அவமானப்படுத்தி இருக்கேன். அப்படியும் அவன் அதை பொருட்படுத்தாமல் மறுபடி மறுபடி எனக்கு உதவி செஞ்சிருக்கான். அத நான் கண்டிப்பா ஒத்துக்கணும். இல்லன்னா எனக்கு மனசாட்சியே இல்லன்னு அர்த்தம்”

“சரி இப்ப அடுத்த ஆளு. நம்ம சேச்சி லீலாம்மாவை கூடவா உங்களுக்கு பிடிக்காது”

“அவங்களுக்கு மட்டும் தான் என் மனசுல இடம் இருக்கு”

“எனக்காக ஒன்னே ஒன்னு செய்வீங்களா அபி?”

அவனது மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டாள்.

“சேச்சி என்னமோ ஒரு உண்மையை தெரிந்து வச்சிருக்காங்க. அது கண்டிப்பா நமக்கு தெரியணும். அந்த உண்மை உங்க வாழ்க்கையோட கோணத்தையே மாத்திடும்னு உறுதியா நம்புறேன். உங்களோட வாழ்க்கையை இணைச்சுக்கணும்னு ஆசைப்படுற நான் அந்த உண்மை தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறேன்”

“நிஜம் வேற மாதிரி இருந்து நான் நிறைய தப்பு பண்ணி இருந்தா?நானு முழுசுமா தப்பான ஒரு ஆளா இருந்தா என்ன செய்றது ராதிகா? நீ என் மேல காட்டுற அன்பு மாறிடுமோன்னு கொஞ்சம் பயமா இருக்கு பேபி. என்னை வெறுத்திட மாட்டியே” குரலில் நடுக்கம்.

அவனை ஆறுதலாக அணைத்து கொண்டவள் “உண்மை எத்தனை பயங்கரமானதா இருந்தாலும் எந்த காலத்திலும் உங்களை வெறுக்க மாட்டேன் அபி”

கட்டி அணைத்தபடி அவர்கள் இருந்தது எத்தனை நிமிடமும் தெரியாது. மெதுவாக ராதிகா அவனிடம் கேட்டாள்

“சேச்சியை  வரச்  சொல்லட்டுமா?’

பெருமூச்சு ஒன்று அவனிடமிருந்து எழுந்தது. “சரி, வரச் சொல்லு ராதிகா”

சேச்சிக்கு சமையல் அறையில் முதுகு ஒடியும் அளவுக்கு வேலை இருந்தது. எல்லாம் இந்தக் காவியாவால் வந்தது. வீட்டினர் யாருக்கும் சாப்பிட மனம் இல்லாமல் பட்டினியாய் கிடக்கிறார்கள் ஊரில் இருந்து செம்பருத்தியின் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டு வந்த பேய்கள் மூன்று பேர்  மற்றும் வீட்டிலேயே இருக்கும் பிசாசான காவியாவும் மட்டும்தான் மூக்குப் பிடிக்க தின்கிறார்கள்.

அதுவும் இந்த காவியா இருக்கிறாளே “சேச்சி நீங்க என்னமோ வெளிநாட்டில் எல்லாம் படிச்சிட்டு வந்தீங்களாமே, உங்க கைவண்ணத்தை இன்னைக்கு காமிங்க பாக்கலாம். எனக்கு ப்ரான் டெம்பூரா செஞ்சு எடுத்துட்டு வாங்க” என்று சொல்லியதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.

இப்படியா வீட்டு சூழ்நிலை கூட புரியாமல் ஒரு பெண் இருப்பாள் என்று மனதுக்குள் திட்டியபடியே இறால்கள் எதுவும் சமைக்கும்போது தீயில் பட்டு சுருண்டு விடாதபடி அதனை கவனமாக ஸ்லைஸ் செய்தார். பின்னர் அதற்குரிய மாவில் அவசரத்துக்கு சோடாவை ஊற்றி கலந்து மசாலாவை சேர்த்து பஜ்ஜியைப் போல இறால்களை முக்கி வறுத்து எடுத்தார்.

“ஏ காளியம்மா இங்க வாஅந்த ஸ்வீட் அண்ட் சில்லி சாஸ் கூட இந்த இறால பரிமாறிட்டு வா” 

காளியம்மா எடுத்துக் கொண்டு செல்லும்போது சமையலறையில் நுழைந்த ரமேஷ் “அட, பிரான் டெம்போரா இதெல்லாம் வீட்டிலேயே செய்வீங்களா’ என்றபடி அந்த தட்டில் இருந்து இங்கீதம் இல்லாமல் ஒரு இறாலை எடுக்கப் போனான்.

“இது எங்க காவியா அம்மாவுக்கு. உங்களுக்கு வேணும்னா சேச்சிகிட்ட வாங்கிக்கோங்க” என்றபடி காளியம்மா முறைப்புடன் அவனது கையை தட்டி விட்டு காவியாவிற்கு பரிமாற எடுத்துச் சென்றாள்.

“என்னது காவ்யா அம்மாவுக்கா… நானும் அவங்களப் பார்க்கணுமே” என்றபடி காளியம்மாவைப் பின்தொடர்ந்தான். டேபிளில் வைத்துவிட்டு காளியம்மா சென்றுவிட்டாள். 

டைனிங் டேபிளில் பத்திரிக்கையைப் பார்த்தபடி உணவைக் கொறித்தாள் காவியா.

 

error: Alert: Content selection is disabled!!