செம்பருத்தி 38 – 1

சுகுமாரனுக்கு மந்தாகினியை பார்க்கவே பயமாக இருந்தது. 

“சுகுமாரண்ணா! சுகுமாரண்ணா!” என்று தன்னை சுற்றி வரும் அந்தக் கள்ளம்  கபடம் இல்லாத குழந்தை அல்ல இவள். பணத்தாசை, பதவி ஆசை, ராணி ஆசை என்று தனது ஆசையினாலேயே கொஞ்சம் கொஞ்சமாய் அழிவிற்குச் சென்று கொண்டிருக்கும் ஒரு பரிதாபமான பிறவியாக தோன்றினாள்.

அவளது யோசனைகள் திட்டங்கள் எல்லாம் அநியாயம் என்பதற்கு அடுத்தபடியாக கொடூரமாகவே தோன்றின அவருக்கு. இப்பொழுதெல்லாம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள எந்த நிலைக்கும் செல்லத்  தயாராக இருந்தாள்.

மந்தாகினியின் மகன் அபிராமை நினைத்தால் இன்னமும் பாவமாக இருந்தது. அவனை பாகமங்கலத்தின் வாரிசாக்க வேண்டும் என்ற வெறியில் யாரோ மந்திரவாதி சொன்னான் என்று  அவனை பூஜையறையில் இரவு முழுவதும் வாழை இலையில் படுக்க வைப்பதும். பூஜை அறைக்குள்ளே வலுக்கட்டாயமாகத் தள்ளி  அடைத்து வைப்பதும், இன்று அவளது போக்கே ஒரு மனநோயாளியைப்  போல தோன்றியது.

நாகேந்திரன் தொழில் விஷயமாக ஊர் சுற்றுவது இவளுக்கு வசதியாகிவிட்டது. சமீப காலமாக இவளைத் தவிர்க்கவே அவர் வீட்டை விட்டு கிளம்பி விடுகிறாரோ என்ற சந்தேகம் அவருக்கு இருக்கிறது. 

சென்ற முறை சுகுமாரனுக்கு ஒரு இக்கட்டான நிலை. நாகேந்திரனின்  திருநெல்வேலி சொத்து ஒன்றின் லீஸைப் புதுப்பிக்க வேண்டியிருந்தது. வழக்கமாக பாகமங்கலத்தில் இளைய ஜமீன் மகேந்திரனின் பொறுப்பில்தான் இவை நடைபெறும். இந்த முறை பொறுப்பு இவரிடம் ஒப்புவிக்கப் பட்டிருந்தது. 

பாகமங்கலம் குடும்பத்தினரைப் பார்க்கும்போதே அவருக்கு மனதில் குத்துகிறது. மனசாட்சியை அடக்கி வைத்துவிட்டு வேலை செய்து வருகிறார். மந்தாகினியின் தயவு இல்லையென்றால் இன்னமும் பஜாஜ் ஸ்கூட்டரில்தான் சுற்றிக் கொண்டிருப்பார். 

இப்போது கடனெல்லாம் அடைத்துவிட்டு சொந்த வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். அதனால் இப்போதைக்கு அவளுக்குத் துணையாக நிற்போம். அவளைத் தப்பு செய்யாமல் முடிந்த வரை தடுப்போம். 

மனதை சமாதானப் படுத்திவிட்டு சென்றவருக்கு வக்கில் வீட்டில் பார்த்த பத்திரங்கள் தலையில் இடியை இறக்கியது. என்ன இந்த மங்கையின் பெயர் மங்கையற்கரசி வீரபாகு வா?

வக்கில் வேறு நக்கலாக “உங்க மந்தாகினியை சந்தித்ததா சொல்றதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே மங்கையற்கரசி  சட்டப்படி மனைவி ஆயிட்டாங்க. இதை சொல்லி உங்க தங்கை கல்யாணம் செல்லாதுன்னு சொல்ல ஒரு நிமிஷம் போதும். இன்னமும் இந்த குடும்பத்தில் பெண் பாவம் அது இதுன்னு நம்பிட்டு இருக்காங்க”

“அவங்க மட்டும் இரக்கப்படலைன்னா  மந்தாகினியோட நிலமை என்னாயிருக்கும்னு நினைச்சுப்பாருங்க. மங்கையோட கல்யாணம் நடந்தது யாருக்கும் தெரியாது. ஆனால் என் தங்கையின் மானம் பத்திரிகை வரை வந்துருச்சே. அவளை நீங்க இப்ப உயிரோட பார்த்திருக்க முடியாது”

“என்னவோ நடந்தது நடந்துருச்சு. செலவுக் கணக்கை பாக்கும்போது உங்க தங்கை கூட இந்த புது பணத்தையும் பதவியையும் என்ஜாய் பண்ற மாதிரித்தான் தெரியுது. அதுக்கு அடுத்தபடியா பாகமங்கலத்துக்கு அடி எடுத்து வைக்கிறதா வர்ற செய்திதான் சரியில்லை.  ஏன்னா அதுக்கு ஆசைப்படும் தகுதி உங்க வீட்டில் யாருக்குமே இல்லை.  நீங்க மங்கைக்கு விடுதலை தந்துட்டு வேற நல்ல வாழ்க்கையா அமைச்சுத் தாங்க. உங்க வீட்டில்  மனசாட்சின்னு ஒன்னு இருந்தா அதை மட்டும் செய்ங்க” என்று சொல்லி அனுப்பினார். 

மகேந்திரன் இந்த செய்தியைத் தெரிவிக்கத்தான் தனக்கு இந்த வேலையைத் தந்து வலுக்கட்டாயமாக வக்கீலை சந்திக்க வைத்திருப்பார் போலிருக்கிறது. ஐயோ இந்த வக்கீல்களும் டாக்டர்களும் இருக்கிறார்களே, பயங்கரமான உண்மையைக் கூட வாழைப்பழத்தில் ஊசியைப் போல இறங்குகின்றனர். 

இப்போது இந்த உண்மையை மந்தாகினியிடம் சொல்லி மங்கையை அவளது ஆட்டத்திலிருந்து விலக்கி வைக்க சொல்ல வேண்டும். இவள் பணத்திற்கு ஆசைப்பட்டாள், நல்ல பணக்காரனைக் கட்டிக் கொள்ள நினைத்தாள். ராஜவாழ்க்கையே கிடைத்திருக்கிறது. 

கஷ்டப்பட்டதை சொல்லிக் காட்டக்கூடாது இருந்தாலும் மந்தாகினி விஷயத்தில் முன்பு உணவுக்கே கஷ்டம். இப்போது இவ்வளவு கிடைத்தும் இன்னும் இன்னும் என்று கேட்பது பேராசை அல்லவா?

பதமாக மந்தாகினியிடம் சொல்லி முடிப்பதற்குள் அவருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. 

மங்கைதான் நாகேந்திரனின் முதல் மனைவி. இவர்களது திருமணம் செல்லுமா என்பது கூட சந்தேகம்தான் என்று சொல்லி முடிக்கும் வரை உணர்ச்சிகளைக் காட்டாமல் அமர்ந்திருந்த மந்தாகினி அதன் பின் சுகுமாரன் அங்கிருப்பதையே மறந்து சிந்தனையில் ஆழ்ந்தாள். 

யோசிக்கும்போது அவளது முகம் எத்தனையோ பாவனைகள் காட்டின. கண்களை சுருக்கினாள், கையால் நெற்றியைக் குட்டிக் கொண்டாள். கண் மூடி சாய்ந்து கொண்டாள். அரை மணி நேரம் ஆனது. முள்ளின் மேலே நிற்பது போல சுகுமாரன் அவதிப்பட்டார். 

“ஹா…ஹா…. ஹா….” பயங்கரமாக சிரித்தாள். 

“மந்தாகினி உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா?” 

“பைத்தியம் இல்லை சுகுமாரண்ணா… சந்தோஷம்…  இது சந்தோஷ சிரிப்பு”

“உன் வீட்டுக்காரன் இன்னொருத்தியைக் கல்யாணம் பண்ணிருக்கான். எப்படி உன்னால சிரிக்க முடியுது?”

“என்ன சொல்றிங்க… இவ்வளவு நாள் இந்த மங்கை யாரைக் கல்யாணம் பண்ணிக்குவாளோ? சொத்து கை விட்டுப் போயிருமோன்னு எவ்வளவு பயந்தேன் தெரியுமா? 

நாகேந்திரன் நான் மங்கை பொண்ணு பாக்கப் போக விடாம மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள தடுத்து  நிறுத்தின தகவல் தெரிஞ்சும் வந்து அடிக்கல, திட்டல ஆனால் என்கிட்டே, ‘நம்பிக்கை துரோகம் செஞ்சுட்டம்மா… இனிமேல் உன்கிட்ட எதையும் பகிர்ந்துகிறதா இல்லை’ன்னு சொல்லிட்டார். அதிலிருந்து மங்கை என்ன ஆனாள்? பாகமங்கலம் என்னாச்சுன்னு நினைச்சு  எவ்வளவு பயந்துட்டு இருக்கேன் தெரியுமா. இப்பத்தான் தெரியுது அவளோட வாழ்க்கை பிடி என் கையில்”

“என்ன சொல்ற? அவதான் முதல் பொண்டாட்டி”

“இருக்கலாம். ஆனால் எனக்குத்தான் பிள்ளை இருக்கு. என் அபிராம்தான் இந்தக் குடும்பத்துக்கு வாரிசு”

“மங்கை?”

“மங்கைக்கும் இவன்தான் வாரிசா இருக்கணும்”

“நாகேந்திரன் அவளை அப்படியே விட்டுட மாட்டார். விடுதலை தந்து வேற வாழ்க்கை அமைச்சுத் தருவார்”

“அது நடக்கக் கூடாது. அவ கடைசி வரையிலும் ஒன்னு கல்யாணமாகாம இருக்கணும். இல்லை நாகேந்திரன் மனைவியா இருக்கணும்”

error: Alert: Content selection is disabled!!