செம்பருத்தி – 42 – 2

அவன் திட்டுவதை காதல் வாங்கிக் கொண்டே அவினாஷும் அறைக்குள் நுழைந்தான். எதிரில் வந்த அவினாஷை முறைத்துக் கொண்டே செம்பருத்தி படிக்கச் சென்றாள்

அவினாஷ் அபிராமிற்கு எதிரே இருந்த  இருக்கையில் அமர்ந்ததும் ஆரம்பித்தான் தமையன்

“என்ன ராசாளி இந்த பக்கமே சுத்துறாப்புல இருக்கு…”

“அப்படிலாம் இல்லையே… இந்தப்  பக்கம் ஒரு வேலையா வந்தேன். செம்பருத்தி நடந்து வந்துட்டு  இருந்ததைப் பார்த்து லிப்ட் கொடுத்தேன் அவ்வளவுதான்”

புருவத்தை நெரித்தபடி  படி பார்த்தவன் “டேய் நீ எல்கேஜி படிக்கிற ஸ்கூல்ல நான் பிஎச்டி. என் காதுல பூ சுத்தாத”

“சரி, நான் தான் கூட்டிட்டு போய் போயிட்டு வந்தேன் அதுக்கு என்ன இப்ப? ரொம்பத்தான் ஓவரா மிரட்டுற”

“அப்படித்தான் மிரட்டுவேன். இங்க பாரு, செம்பருத்தி இவ்வளவு நாளு வீட்டுக்குள்ளார வளர்ந்த பிள்ளை. இப்பதான் வெளி உலகத்தை பார்த்துட்டு தன்னைத்தானே கண்டுபிடிக்க ஆரம்பிச்சிருக்கா.

இந்த சமயத்துல காதல் கத்திரிக்காய் கல்யாணம்னு  அவளைக் கூட்டிட்டு போயி ஒரு போன்சாய் செடியா மாத்திடாதே”

“அப்படி எல்லாம் கிடையாது நானும் அப்பா மாதிரி அவளுக்கு சப்போர்ட்டா இருப்பேன்” முணுமுணுத்தான் அவினாஷ்

“அதெல்லாம்  சரிப்பட்டு வராது. ஹைபியை  டாக்டரேட் எல்லாம் படிக்க வைக்கணும்னு நான் முடிவு பண்ணி இருக்கேன். இன்னும் கொஞ்ச நாள், ஒரு ஏழெட்டு வருஷம்  கழிச்சு அவளே உன்னைக்  கல்யாணம் பண்ணிக்கிறேன்னு என்கிட்டே சொன்னா அதுக்கப்புறம் யோசிச்சு என் முடிவை சொல்றேன்”

“இதெல்லாம் உனக்கு நியாயமா படுதா அபிராம்? எனக்கு ஸ்ட்ரைட்டா அறுபதாம் கல்யாணம் பண்ணி வைக்க பிளான் போடுறியா?”

“ஃபேர் கேம். உனக்கு எவ்வளவு சாய்ஸ் இருந்துச்சு… ஏன் காவியா கூட உன் பின்னாடி எப்படி சுத்துனா? நாலு பொண்ணுங்களை பாத்துட்டு உனக்கு புடிச்ச மாதிரி செம்பருத்தி சூஸ் பண்ணல. அதே மாதிரி அவளுக்கும் சாய்ஸ் வேண்டாமா?”

“அப்பா…. நியாய புத்தியப்  பாத்து புல்லரிச்சு போயிட்டேன்”

“ராதிகா எங்க ரெண்டு பேருக்கும் டீயும்  ஸ்னாக்ஸும் இங்கேயே கொண்டு வரச் சொல்லு”

திருமணத்திற்கு அவினாஷும் செம்பருத்தியும் அழகான தங்க பூண் போட்ட வாக்கிங் ஸ்டிக் ஒன்றைப்  பரிசாக வழங்கி இருந்தார்கள். பாலன்ஸ் செய்து அவன் நடப்பதே தெரியாதவண்ணம் அதனை ஸ்டைலாகப் பிடித்தபடி அவன் நடையைப் பழக்கிக் கொண்டான். 

பால்கனியில் அமர்ந்து கொண்டு டீ  அருந்தியப்படியே சகோதரர்கள் இருவரும் பேசினார்கள்.

“காவ்யாக்கு பெயில் கிடைச்சதும்  பார்த்துட்டு வந்த போல, ரொம்ப நேரம் பேசிட்டு இருந்ததா கேள்விப்பட்டேன்”

“பேச்சா… ஒரே சண்டை. என்னை விட செம்பருத்தியை  எப்படி உனக்குப்  பிடிச்சது என்னை  விட அவ எதுல பெட்டர்? அப்படின்னு ஏகப்பட்ட கேள்வி”

“என்ன பதில் சொன்ன?”

“நம்ம எல்லாத்தையும் விட அவ எவ்வளவோ பெரியவ…

உலகத்தில் இரண்டே பேர் தான் அபி. சந்தர்ப்பம் கிடைச்சவங்க, கிடைக்காதவங்க. இதில் சந்தர்ப்பம் கிடைக்காமல், தன்னை நிரூபிக்க முடியாமல் இருந்தவ தான் செம்பருத்தி. அவளுக்கு ஒரு சின்ன சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு சின்ன வேலைதான் கொடுத்தேன். ஒரு சாதாரணமான பொண்ணா இருந்தா வேலை, சம்பளத்துல  கொஞ்சம் சேர்த்து வச்சிருப்பா. நிம்மதியா இருந்திருப்பா. ஆனால் இந்த சின்ன வேலையில செம்பருத்தி செய்த சாதனைகள் பெருசு.

என்ன ஆகப்போகுது ஒரு கை பாத்துடலாம் என்று துன்பத்துக்கு அஞ்சாத துணிவு. உண்மையா இருப்பதால யாருக்கும் பயப்படாத மனசு, நேர்மை தடுமாறாத குணம், தாய்மை உள்ளம் இதெல்லாம் உன்கிட்ட பெரிய மாற்றத்தை உருவாக்குச்சு. 

இந்த ரெண்டு வருஷத்தில் அவள் எவ்வளவு கத்துருக்கா தெரியுமா? ஒரு டிகிரி படித்தது மட்டுமில்லாமல் பிசினெஸ்  கம்யூனிகேஷன், புது மொழிகளை பேசும் அளவுக்கு தேர்ச்சி பெற்று இருக்கா. 

நம்முடைய கணக்கு வழக்குகளை பார்த்திருக்கா இதன் மூலம் நம்ம தொழில்களை பத்தின அறிவு… இன்னும் சில வருட பயிற்சியில இதெல்லாம் தானே சமாளிக்கிற அளவுக்கு ஒரு திறமை வாய்ந்த ஆள மாறிடுவா.

நல்லா யோசிச்சு பாரு நம்ம ராஜ குடும்பத்தில் இருக்கிற பள்ளியில் இதெல்லாம் தானே நமக்கு பாடமா சொல்லித்  தராங்க. நம்ம பள்ளில போய் கத்துக்கிட்டது எல்லாமே செம்பருத்தி தன்னால படிச்சிருக்கா… அதுவும் இவ்வளவு குறுகிய காலத்தில்.

ஒரு உயர் பதவியில் இருக்கிறவங்க ரோல் மாடலா இருக்கணும். அந்த வகையில செம்பருத்தி பெண்களுக்கு ஒரு ரோல் மாடல் தான்.

நம்ம கிட்ட இருக்கிற சொத்துகளில்ஒரு சிறு பகுதியை அடுத்தவங்களுக்கு தருவோம். ஆனால் செம்பருத்தி  ஆதாரமா இருக்கிற ஒரே வீட்டைக்  மிகக் குறைஞ்ச  வாடகைக்கு அவளோட தோழிக்குத் தந்தா. அந்த நல்ல மனசு எங்க போயி கத்துக்க முடியும். 

சொல்லப்போனால் இதைவிட ஒரு நல்ல மனைவி எனக்கு எங்க கிடைப்பா?”

“சரிடா அடுக்கி கிட்டே போகாத உன்னைய பார்த்தாலே எனக்கு குளக்கரை  பிள்ளையார் தான் ஞாபகம் வர்றார். அவரால் தான் கண்டுபிடிக்க முடியல. நீயாவது உனக்கு ஒரு பொண்ண கண்டுபிடிச்சிட்டியே சந்தோஷம்”

“நீ என்ன சொல்ற? நான் பிள்ளையார் மாதிரி ஓவர் எக்ஸ்பெக்டேஷன் வச்சிருந்தேன்னு சொல்றியா? இல்ல செம்பருத்திக்கு  எங்க அம்மா மாதிரியே குணம் இருக்குன்னு சொல்றியா”

“ரெண்டும் தாண்டா”

“சரி செம்பருத்தி டாபிக்கை விடு. உனக்கும் எனக்கும் நடந்த அக்னி நட்சத்திரம் வார்லயாரு ஜெயிச்சானு நினைக்கிற”

“இனி வரைக்கும் நீ தான் வாரிசு அப்படின்னு நாங்க எல்லாம் ஒத்துக்குறோம் நீ தான் வேண்டாம்னு சொல்லிட்டஎனக்கு பட்டம் கட்ட சொல்லிட்ட”

“முதல்ல அந்த பட்டத்துக்கு நான் தகுதியானவன் கிடையாது. நீங்கள் எல்லாம் போனா போகுதுன்னு விட்டுக் கொடுத்து கிடைக்கிற பட்டம் எனக்கு வேண்டாம்”

“ஓ அதனாலதான் எனக்கு விட்டுக் கொடுத்துட்டியோ?” என்றான் அவினாஷ்

“இடியட், நான் அந்த கேம்ல இல்லடா. அந்த நாற்காலிக்கு அந்த பதவிக்காக இங்க எவ்வளவு போட்டி, எத்தனை குற்றங்கள், எவ்வளவு மனசு வருத்தம்… அது எனக்கு வேண்டவே வேண்டாம்”

இவனா தந்தையிடம் வாரிசு பட்டம் கேட்டு நீதிப்போராட்டம் நடத்தினான் என்று ஆச்சிரியமாக இருந்தது அவினாஷுக்கு. அது உண்மை தெரிவதற்கு முன். அது தெரிந்ததும் அவனது தாய் செய்தது தவறினை செய்ய முயல்கிறான் என்பது அவனுக்கும் புரியாமலில்லை. 

“இன்னைக்கு என்னோட சிகரெட் கோட்டா… “ என்றபடி சிகரெட்டை பற்றி பற்ற வைத்துக் கொண்டு உள்ளே இழுத்தான் அபிராம். பின்னர் தம்பியைப் பார்த்து கேட்டான்.  

“நீ சிகரெட் பிடிப்ப?”

“அதான் எனக்கும் சேர்த்து ஊரில் இருக்குற கெட்டப்பழக்கம் எல்லாம் நீயே கத்துருக்கியே”

“சரிப்பா ஹீரோ, நான் வில்லனாவே இருந்துக்குறேன். ஆனால் இந்த வில்லன் பாகமங்கலத்தை அவ்வளவு சீக்கிரம் மாட்டான். 

நீதான் பாகமங்கலத்தோட ராஜா அத நானே மனசார ஏத்துக்கிறேன். ஆனால் பாகமங்கலத்தோட ராணியை செதுக்குறது நான்தான். அந்த வகையில பாகமங்கலத்தோட எதிர்காலமே  என் கையில் தான். சோ ஐ அம் தி குயின் மேக்கர்”

“நீதான் குயின் மேக்கர்னு நான் மனப்பூர்வமான ஏத்துக்குறேன். எப்படித்தான் இந்த பொண்ணுங்க எல்லாரும் உன்னைப் போயி  நம்புறாங்களோ தெரியல. கன்னி ராசியா நீ?”

“கண்ணன் ராசி”. 

***

error: Alert: Content selection is disabled!!