திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு 1- 1

அத்தியாயம் 1

 

 

“நான் காலிக்குப் போறது உறுதி! உறுதி! உறுதி!” சத்தமாக அறிவித்தாள் ஜீவனிதா.

 

பெரிய தொண்டையில் கத்திய மகளை முறைத்தார் அன்னை புஷ்பராணி.

 

“இப்படிக் கத்திக் கதைச்சுப் பழகாத எண்டு எத்தனை தடவை சொல்லிப்போட்டன்? ஒரு பொம்புளப் பிள்ளையா அடக்கமா கதைக்கத் தெரியேல்ல. இந்த சீத்துவத்துல காலிக்குப் போகப்போறாளாம் காலிக்கு! ஏன், அங்கயும் ஏதாவது சண்டையை இழுத்து வைக்கவா?” என்ற அன்னையின் பேச்சில்,

 

‘இது எப்படி அம்மாவுக்குத் தெரியும்?’ என்று அதிர்ந்து விழித்தாள் மகள்!

 

பின்னே, அவர் சொன்னதுபோல ஒரு பழி தீர்க்கும் படலத்துக்குத்தானே அவள் தயாராகிக் கொண்டிருக்கிறாள்!

 

அதுவும் ஒருநாள் இருநாள் பழியில்லை! பத்து வருடப் பழி!

 

‘யாருக்குமே தெரியாத விசயத்த அம்மா எப்படிக் கண்டுபிடிச்சா?’

 

‘அதைப் பிறகு யோசி ஜீவனி! இப்ப எதையாவது சொல்லிச் சமாளி. இல்ல.. கண்டு பிடிச்சிடுவா. உனக்கு அம்மாவா வந்து வாச்சிருக்கிறது ஒரு எமகாதகி!‘ சட்டென்று உசாரானவள் தன் களவை மறைத்துக்கொண்டு அன்னையை முறைத்தாள்.

 

“என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது உங்களுக்கு? சண்டைக்காரி மாதிரியா? ஓரு அம்மா மகளைப் பாத்து இப்படியெல்லாம் கதைக்களா மா?” என்று அவர் மேலேயே பழியைத் தூக்கிப் போட்டாள்.

 

“எதுக்கெடுத்தாலும் கடுகு மாதிரி துள்ளுற உன்ன வேற எப்படிச் சொல்ல? இந்தா இப்ப என்னோட சண்டை பிடிக்கிறியே? இது என்ன? அன்றைக்கு பக்கத்துத் தெருவில இருக்கிற பெடியண்ட(பையன்) மண்டைய கல்லால உடைச்சிட்டு வந்து நிக்கிறாய். போன கிழமை கோயிலுக்குப் போறன் எண்டு சொல்லி ஐயருக்கு வாய் காட்டிப்போட்டு வந்திருக்கிறியே.. எப்ப பார்த்தாலும் வம்பு வளக்கிறதும் வாய் காட்டுறதும்! நீ சண்டை பிடிக்காத ஒரு ஆளக்காட்டு பார்ப்போம் இந்த ஊருல?” என்று அவர் கேட்கவும்,

 

‘அப்படியா ஒருத்தர விடாம சண்டை பிடிச்சிருக்கிறன்..’ என்று நினைத்தவளுக்கு, தன்னை நினைத்தே சற்றுப் பெருமையாக இருந்தது!

 

ஊரில் ஒருவர் விடாமல் சண்டை இழுப்பது என்ன அத்தனை சாதாரண காரியமா?!

 

‘அடியே ஜீவனி! பெருமையை பிறகு படுடி. இப்ப அம்மாவை கவனி..’

 

“அது.. அது.. அவன் என்னை காதலிக்கிறானாம். எனக்கு பின்னாலேயே சுத்திக்கொண்டு திரிஞ்சவன்; அந்தக் கரிமூஞ்சிக்கு நான் கேக்குதாமா? அதுதான் மண்டைய உடச்சனான். இனி என்ட பக்கமும் தல வச்சுப் படுக்கமாட்டான். அந்தக் கிழட்டு அய்யர்.. கோயிலுக்கு போன என்னை கூப்பிட்டு வச்சு புத்தி சொல்றான். நான் கேட்டனானே புத்தி சொல்லு எண்டு.. அதுதான் நல்லா குடுத்திட்டு வந்தனான். நானா சும்மா யாரோடையும் சண்டைக்கு போகேல்ல..” உதட்டைச் சுழித்து ரோசத்தோடு தலையை சிலுப்பினாள்.

 

மகளின் விளக்கத்தில் தலையில் அடித்துக்கொண்டார் அன்னை.

 

“நீயும் உன்ர விளக்கமும்!“ என்றவரை முறைத்தாள் அவள்.

 

“நீங்கதான் எப்ப பார்த்தாலும் என்னோட சண்டை பிடிக்கிறீங்க. மகள் ஆசைப்பட்டுக் கேக்கிறாளே, அவளை அனுப்பி வைப்போமே எண்டு இல்லாம மல்லுக்கட்டிக்கொண்டு நிக்கிறது நீங்கதான். என்னை எங்கதான் விட்டு இருக்கிறீங்க சொல்லுங்கோ பாப்பம்? வேலைக்கு போகக் கேட்டா வேண்டாம்! ஏதாவது கோர்ஸ் போகட்டா என்று கேட்டா வேண்டாம்! பிரெண்ட்ஸ்சோட எங்கேயாவது போகவா என்று கேட்டா வேண்டாம். அப்ப நான் என்னதான் செய்றது? எவ்வளவு நாளைக்குத்தான் உங்கட முகத்தையே பாத்துக்கொண்டு இருக்கிறது? இந்த முறை நீங்க என்ன சொன்னாலும் கேக்க மாட்டன். சித்தி வீட்டுக்கு போயே தீருவன்.” என்று அறிவித்தாள்.

 

அவளின் பேச்சில் உண்மை இல்லாமலும் இல்லை!

 

சிட்டுக்குருவி போல் உற்சாகமாக சுற்றித் திரியும் மகளைப் பார்க்கையில் எந்தளவுக்கு அவர் மனம் குளிருமோ அந்தளவுக்கு நடுங்குவார் அவளின் துணிச்சலையும் துடுக்குத் தனத்தையும் எண்ணி. அதுவும் வாய்.. படபட பட்டாசுதான்! அதனாலேயே அவளை முடிந்தவரை எங்கும் விடாமல் கைக்குள்ளேயே வைத்திருந்தார். அதற்காக அவள் ஒன்றும் சின்னப்பெண்ணில்லை. இருபத்தியிரண்டு முடிந்து இரண்டு மாதமாகிறது.

 

எத்தனை வயதானால் என்ன? எங்கு எப்படி நடக்கவேண்டும் என்கிற நெழிவு சுழிவு தெரியவேண்டுமே? எங்கு சின்னப் பிழையைக் கண்டாலும் பொங்கிவிடுவாள் ஜீவனிதா.

 

காலி வேறு சிங்களவர் அதிகமாய் வாழும் பகுதி. அவளோ அன்றலர்ந்த மலரை விடவும் மனதைக் கொள்ளை கொள்ளும் அழகுக்குச் சொந்தக்காரி.

 

அந்தப் பயத்தில், “எப்படி போகிறாய் எண்டு நானும் பாக்கிறன். அவ்வளவு தூரத்துக்கு உன்னை அனுப்பிப்போட்டு நான் ஒவ்வொரு நாளும் மடியில நெருப்பைத்தான் கட்டிக்கொண்டு அலையவேணும். உன்ன நம்பி ஒரு இடத்துக்கும் அனுப்பமுடியாது!” என்றார் அழுத்தமாக.

 

“ஏன் நம்பேலாது? பெத்த தாயே என்னை நம்பாட்டி வேறயார் நம்புவீனம்? ஆனா ஒண்டு சொல்றன், நல்லா கேட்டுக்கொள்ளூங்கோ, இந்தமுறை காலிக்கு நீங்க என்னை விடேல்லையோ, கட்டாயம் நான் இங்க எவனையாவது இழுத்துக்கொண்டு ஓடிப்போயிடுவன் சொல்லிப்போட்டன்! அதுக்குப்பிறகு பொறுப்பா இருப்பியள்!” என்று விரல் நீட்டி எச்சரித்தாள் பெண்.

 

ஒருகணம் அதிர்ந்துதான் போனார் புஷ்பராணி!

 

பிறகோ, காதலைச் சொன்னவனையே கல்லால் துரத்தித் துரத்தி அடித்தவளா எவனையாவது கூட்டிக்கொண்டு ஓடப்போகிறாள் என்று எண்ணியவருக்கு இப்போது சிரிப்புத்தான் வந்தது. ஓடுகிறவள் பெற்றவளிடம் சொல்லிக்கொண்டா இருப்பாள்?

 

வந்த சிரிப்பை அப்படியே மறைத்துக்கொண்டு, “என்னடி என்னை மிரட்டிப் பாக்கிறியா? ஓடுறதா இருந்தா இப்பவே ஓடிப் போயிடு. எங்களுக்கு உன்ர கல்யாணச் செலவு மிச்சம். நகை வாங்குற செலவு மிச்சம். எல்லாக் காசுக்கும் நகையும் பட்டுமா வாங்கி நான் போட்டுக்கொண்டு திரிவன்!” என்று சரியான இடம் பார்த்து அடித்தார்.

 

“ஆ?” என்று விழித்தாள் ஜீவனி.

 

‘ஓடப்போறன் எண்டு சொல்லுறன் அப்பவும் அசறுதா பார் இந்த அம்மா. சரியான கல்லுளி மங்கி! இதுல நகையையும் சாரியையும் அவ மாட்டிக்கொண்டு திரியப் போறாவாம்! எல்லாத்தையும் இவவுக்கு தார வார்த்துக் குடுத்திட்டு நான் என்ன ஒன்றுமில்லாத பிச்சைக்காரியாவா இருக்கிறது? விடமாட்டன்!’ தலையை சிலுப்பிக்கொண்டாள்.

 

மகளைப் பார்த்தவருக்கோ அவள் எண்ணம் புரிந்து பொத்துக்கொண்டு வந்தது சிரிப்பு. ஆனாலும் அடக்கிக்கொண்டு நின்றார்.

 

தன்னையே பார்த்துக்கொண்டு அசராமல் நின்ற அன்னையை முறைத்தாள் ஜீவனி!

 

“நீங்களெல்லாம் ஒரு அம்மா. பெத்த மகள் அதுவும் ஒரேயொரு மகள் வீட்டை விட்டு ஓடிப்போறன் எண்டு சொல்லுறன். கொஞ்சம் கூட பயப்படாம நகை வாங்கிப் போடுவன் நட்டு வாங்கிப் போடுவன் எண்டு சொல்றீங்க. அப்படியே ஓடினாலும் பேங்க் புத்தகத்தை தூக்கிக்கொண்டுதான் ஓடுவன். இல்ல இல்ல.. பிறகு எனக்கெண்டு வாங்கின நகையெல்லாம் நீங்க மாட்டிக்கொண்டு திருவியல். கல்யாணம் முடிஞ்சு நகை காசு எல்லாம் வாங்கிக்கொண்டுதான் ஓடுவன்..” என்றாள் அவசரமாக.

 

‘கல்யாணம் முடிஞ்சா பிறகு ஏனடி நீ ஓட? எல்லாம் தந்து நாங்களே அனுப்பி வைப்போமே..’ என்று உள்ளே எண்ணம் ஓடினாலும்,

 

அதை மறைத்து, “நீ ஓடுற நேரம் ஓடு. அதைப்பற்றி எனக்குக் கவலை இல்ல. ஆனா, காலிக்கு மட்டும் விடமாட்டன்!” என்றார் மீண்டும் உறுதியாக.

இவ்வளவு சொல்லியும், மிரட்டியும் கூட அம்மா விடுகிறார் இல்லையே என்று கவலையாய் போயிற்று ஜீவனிக்கு.

error: Alert: Content selection is disabled!!