“அங்கதான் நானும் அண்ணாவும் இருந்து சாப்பிடுவோம். பிறகு திரும்பவும் வந்து குளிப்போம்.” சமாதானப்புறாவை அவள் புறமாக பறக்க விட்டுவிட்டு மீண்டும் நீச்சல்குளத்துக்குள் பாய்ந்தான்.
அவளோ அந்த புறாவை வைத்து ‘புறா பிஃடிஃபைவ்’ போடும் நிலையிலிருந்தாள்.
அவன் சொல்லி வாய் மூடவில்லை, சூடான பஜ்ஜியை கைகளில் ஏந்தியபடி வந்தார் அன்னம்மா.
அவரைக் கண்டதும், “அன்னம்மா..!” என்று ஓடிப்போய் கட்டிக்கொண்டாள்.
“எப்படி இருக்கிறீங்க அன்னம்மா? சயந்தி என்ன செய்றாள்? நல்லா படிக்கிறாளா?” கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனாள்.
தட்டை மேசையில் வைத்துவிட்டு அவரும் அவளை சந்தோசமாக உச்சி முகர்ந்தார். “எல்லாரும் நல்லா இருக்கிறம். நீ எப்படி இருக்கிறாய்? எவ்வளவு பெரியவளா வளந்திட்டாய்.” என்றார் அவரும் வியப்போடு.
“ஹாஹா அப்படியா? ஆனா நீங்க மட்டும் அப்படியே இருக்கிறீங்க? எனக்கே உங்கள சைட் அடிக்கோணும் மாதிரி இருக்கு. என்ன அடிக்கவா?” என்றாள் கண்ணடித்து.
“உன்ன! இன்னும் அந்த சேட்டக்குணம் மாறேல்ல!” என்றவருக்கும் சிரிப்பை அடக்கமுடியவில்லை.
“பார்ரா! அன்னம்மாக்கு வர்ற வெக்கத்தை!” வேண்டுமென்றே அவள் சீண்ட, “அடி வாங்கப்போறாய்!” என்று சிரித்தார் அவர்.
எப்போது வந்தாள், எத்தனை நாட்களுக்கு நிற்பாள், என்ன செய்கிறாள் என்று எல்லாம் கேட்டு கதைபேசிக்கொண்டனர் இருவரும்.
“ஒருநாளைக்கு கட்டாயம் வீட்ட வாம்மா. சயந்தி கண்டா சந்தோசப்படுவாள்.”
“நீங்க கூப்பிடவே வேண்டாம். சாப்பாட்டை மட்டும் கண்ணுல காட்டுங்கோ அவளே ஓடி வருவாள்.” என்றபடி நீருக்குள்ளிருந்து எழுந்து வந்தான் ரதன்.
“என்னை என்ன உன்ன மாதிரி எண்டு நினச்சியா?” என்று அவள் முறைக்க, அதை சட்டையே செய்யவில்லை அவன்.
“வயிறு பசிக்கத் தொடங்குது, எங்க அன்னம்மாவை இன்னும் காணேல்ல எண்டு நினைக்க நீங்க வாறீங்க.” அவரின் ருசியான பஜ்ஜிக்கு நாக்கு ஏங்க, ஆர்வமாக வந்தவனை சட்டென்று பிடித்து மீண்டும் நீருக்குள் தள்ளிவிட்டாள் ஜீவனி.
“என்னையே மிரட்டுவியா நீ?! என்ன தைரியம்டா உனக்கு!”
“அம்மாஆ!” அதை எதிர்பாராதவன் கத்திக்கொண்டே விழுந்தான்.
‘நான் சவுண்டு விடேக்க நீ சத்தமில்லாம போகேக்கையே நான் இதை யோசிச்சு இருக்கோணும்!’ தண்ணீரின் ஆழத்துக்கு சென்ற அந்த நொடியில் அவனுக்குள் ஞானம் பிறந்தது!
“பஜ்ஜிய கண்டதும் பசிக்குதாடா உனக்கு? ஒரு துண்டுகூடத் தரமாட்டன்!” என்றவள் தட்டிலிருப்பதை வேகவேகமாக காலி செய்யத் தொடங்கவும், “எனக்கும் தாக்கா!” என்றபடி வேகமாக எழுந்துவந்தான் அவன்.
“நோடா தம்பிக்குட்டி!” தட்டை கையில் பிடித்துக்கொண்டே அவனுக்கு விளையாட்டு காட்டத் துவங்கினாள் ஜீவனி.
“அக்கா தாடி!” என்றபடி அவன் துரத்த, வாய்க்குள் போட்டுக்கொண்டே அவள் ஓட, பார்த்திருந்தவருக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
“பங்கிட்டுச் சாப்பிடுங்கோ. இன்னும் இருக்கு. கொண்டுவாறன்” என்று அவர் சொன்னதை இருவருமே காதில் விழுத்துவதாயில்லை.
இப்படித்தான் முன்னரும். சயந்தியும் அவளும் கிட்டத்தட்ட ஒரே வயதினர். ரதனையும் இன்னும் நாலைந்து அடிபொடிகளையும் வைத்துக்கொண்டு அவள் செய்யும் கலாட்டாக்களுக்கு அளவே இருக்காது!
இப்போதைக்கு தங்கள் விளையாட்டை நிறுத்தமாட்டார்கள் என்று அறிந்தவர் இன்னும் பஜ்ஜியை எடுத்துவர உள்ளே போனார். இங்கே ஜீவனியோ முழுவதையும் முடித்தபிறகே ஓடுவதை நிறுத்தினாள்.
“ஒன்றுகூட எனக்குத் தரேல்ல நீ!” காலை நிலத்தில் உதைத்து அழத் தயாரானவனிடம், “இதுக்குத்தான் சொல்றது அக்காவை பகைக்கக் கூடாது எண்டு! எவ்வளவு பட்டும் திருந்தாட்டி நான் என்ன செய்ய தம்பிப் பையா..” என்று சொல்லிச் சிரித்தாள் அவள்.
“நீ போ! என்னோட கதைக்காத!” என்று முறுக்கிக்கொண்டு திரும்பி வந்தவனிடம் இன்னொரு தட்டைக் கொண்டுவந்து கொடுத்தார் அன்னம்மா.
சட்டென முகம் மலர, “இப்ப நான் ஒரு துண்டு கூட உனக்குத் தரமாட்டன்!” என்றான் கண்கள் மின்ன.
“நான் கேட்டனானே? நீயே விழுங்கு. எனக்கு வயிறு புள்!” என்று பழிப்புக் காட்டினாள் தமக்கை.
“போடி!” அவளைக் கெஞ்சவைக்க முடியாமல் தான் தோற்றுவிட்ட சினத்தில் சீறினான் அவன்.
“போடா!” அவனுக்கு மேலால் நின்றாள் அவள்.
சாப்பிட்டவன் முகத்தை நீட்டிக்கொண்டு சென்று மீண்டும் நீருக்குள் பாய்ந்துவிட, இருவரும் சாப்பிட்ட தட்டுக்களை எடுத்துக்கொண்டு அன்னம்மாவிடம் நடந்தாள் ஜீவனி.
அவரிடம் கொடுத்துவிட்டு கொஞ்சநேரம் அவரோடு வளவளத்துவிட்டு வந்தவளை கோபத்தில் இருந்த ரதன் திரும்பியும் பார்க்க மறுத்தான்.
எப்படியாவது அந்தக் குடிலுக்குள் போய்விடவேண்டும் என்று குறியாக இருந்தவளுக்கு அது வசதியாகப் போய்விடவே மெல்ல அதற்குள் நுழைந்தாள்.
இருள் கவிழ்ந்திருந்தது. லைட் இருந்தாலும் போடவில்லை. வெளிச்சத்தை உணர்ந்து ரதன் வந்துவிட்டாலும் என்று அந்த மெல்லிய இருளுக்குள்ளேயே குடிலை அலசினாள்.
வெளியே மனதைக் கவர்ந்தது போன்று உள்ளே ஒன்றையும் காணோம்! கொஞ்சம் ஏமாற்றமாக உணர்ந்தாள்.
அந்தக்காலத்தில் போர்த்துக்கேயர் விட்டுவிட்டுப் போனது போன்ற மிகப்பழைய ஒரு மேசை. அதன் பக்கத்தில் ஒரு சோபா. வேறு எதுவுமே இல்லை. அந்த சோபாவில் ஒரு பெட்ஷீட் மட்டும் அனாதையாகக் கிடந்தது.
‘ஒன்றுமே இல்ல. பிறகு எதுக்கு அவன் ஒருத்தரையும் உள்ளே விடுறேல்ல..’
குழப்பத்தோடு திரும்பியவள் கண்களில் ஒரு ‘பேப்பர் பாட்’ இருக்கக் கண்டாள். ஒரு பென்சிலும் கூடவே! எடுத்துப் பார்க்க பெண் ஒருத்தியின் கண்கள்!
‘வாவ்..!’ அவள் உதடுகள் உச்சரித்தன. அத்தனை அற்புதமைய வரைந்திருந்தார்.
இது யாரின் கண்கள்? எங்கோ பார்த்தது போலிருந்தது. நிச்சயம் ஒரு அற்புதமான பெண்ணின் கண்களாகத்தான் இருக்க வேண்டும்! அத்தனை அன்பு அதில்! அள்ள அள்ளக் குறையாததுபோல் பார்க்கப் பார்க்க பார்த்து முடிக்க முடியவில்லை. இன்னும் பார்த்து முடிக்காமல் என்னவோ இருப்பதாகவே சொல்லிற்று! என்னைப்பார் என் அன்பை வாங்கிக்கொள் என்று அழைத்துக்கொண்டே இருக்கும் விழிகள். காந்தமாய் கவர்ந்து இழுத்துக்கொண்டே இருந்தது. உயிரற்ற பேப்பரில் வரைந்த விழிகள் அல்ல அவை! தன் உணர்வுகள் கொண்டே உயிர் கொடுக்கப்பட்ட விழிகள்! உயிர்ப்புடன் உயிரை தனக்குள் ஈர்க்கும் விழிகள்!!
சிலிர்ப்பொன்று ஓடியது அவளுக்குள்!
எத்தனை தத்ரூபமாக வரைந்திருக்கிறான். இப்படி வரையுமளவுக்கு அவன் நெஞ்சில் பதிந்திருக்கிறதா அந்தக் கண்கள்? அந்தளவு தூரத்துக்கு அந்தப் பெண்ணிடம் தன்னை இழந்திருக்கிறானா நிரஞ்சன்? இங்கே இன்னோர் நிரஞ்சனைக் கண்டாள் ஜீவனி.
அந்தப் பெண் பாக்கியம் செய்தவளாய் இருக்கவேண்டும்! ஏனோ தெரியவில்லை, ஒரு பெண் இப்படித்தான் நேசிக்கப்படவேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்!
அவள் நெஞ்சிலும் காதல் மீது ஓர் ஈர்ப்பு உண்டாயிற்று!
இந்தளவு தூரத்துக்கு அவனை ஈர்த்திருக்கும் விழிகள் யாருக்குச் சொந்தமானவை? இரண்டு புருவங்களுக்கு மத்தியில் வீற்றிருந்த பொட்டு அவள் தமிழ் பெண் என்று சொல்லாமல் சொல்லியது!
இதுதானா அவனை இந்த வீட்டுக்குள் இழுக்கும் விடயம்?
மற்றவர்களை உள்ளே விடாமல் தடுக்கும் அவனது ரகசியமும் இதுதானா? புன்சிரிப்பு அவள் இதழ்களில் பூத்தது!! அவள் பார்த்துவிட்டாளே!
அருகிலிருந்த பென்சிலை எடுத்தாள்.
‘உன்னை தொலைத்துக்காட்டாமல் விடமாட்டன்’ இதழ்களில் பூத்துக்கிடந்த புன்னகையோடு எழுதிவைத்தாள்.
அவள் வந்ததை அவன் அறிய வேண்டாமா?
யாரும் புகமுடியாத அவனது அந்தரங்கமான பகுதிக்குள் அவள் நுழைந்துவிட்டாளே!
பொங்கிவந்த சிரிப்பை அடக்கியவளுக்குத் தெரியவில்லை அவனின் அந்தரங்கமே அவள்தான் என்பது!

